December 31, 2007

திருவெம்பாவை - 11

திருச்சிற்றம்பலம்

உய்யும் வழி செய்தோம்

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.


'செந்தழல் நிறத்தவனே! மேனியெங்கும் வெண்மையான திருநீறு பூசிய செல்வனே! அழகுநிரம்பிய பொய்கையில் முகேரென்று பாய்ந்து, கைகளால் துழாவித் துழாவிக் குளிக்கிறோம். வழிவழியாக நின் அடியவரான நாங்கள் உனது திருப்பாதங்களைப் போற்றிப் பாடி நல்ல வாழ்வு எய்தினோம்.

'சிறிய இடையைக் கொண்டவரும், தமது பெரிய கண்களிலே அஞ்சனம் இட்டிருப்பவருமான உமையம்மையின் கணவனே! தலைவா! அடியாருக்கு அருளைத் தந்து முக்தியளிக்கும் உன் விளையாட்டுக்கு ஆட்படும் பொருட்டு அவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அவற்றையெல்லாம் நாங்கள் செய்துவிட்டோம். பிறப்பு-இறப்புச் சுழலில் சிக்கி நாங்கள் நலிந்துவிடாமல் காப்பாயாக.'

சிறப்புப்பொருள்: மொய் என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். 'தேனீ' என்று பொருள் கொண்டு, 'தேனீக்களால் மொய்க்கப்பட்ட பொய்கை என்று பொருள் கூறுவாரும்' உண்டு. இன்னும் சுற்றி வளைத்து தேனீக்கள் மொய்க்கும் பூங்காவால் சூழப்பட்ட பொய்கை என்பாரும் உண்டு. செந்நெருப்பு குளிரும்போது மேலே சாம்பல் படரும். அவ்வாறே, செந்தழல் மேனிச் சிவன் தன்மீது வெண்ணீறாடியிருக்கிறான். 'விபூதி' என்பதே செல்வம். எனவே அவன் செல்வன்.

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே


என்று பாடும் ஞானசம்பந்தப் பெருமானின் திருநீற்றுப் பதிகம் திருநீற்றையே செல்வம் (அருத்தம்) என்கிறது. அதை அணிந்தவர் செல்வர்தாமே! (திருநீற்றுப் பதிகம் ஓதி உணர்ந்து சுவைக்கத் தக்கது. படிக்கப் படிக்கப் பேரின்பம் தருவது.)

(அருஞ்சொற்பொருள்: மொய் - அழகு, தேனீ; தடம் - அகலமான; முகேர் - தண்ணீருக்குள் பாயும்போது ஏற்படும் ஒலி; ஆர் - அடர்ந்த; செய்யா - சிவந்தவனே; மருங்குல் - இடை; எய்யாமல் - நலிந்து போகாமல், வறுமையடையாமல்)

இன்னும் வரும்...

1 comment:

Srikanth said...

//
சிறிய இடையைக் கொண்டவரும், தமது பெரிய கண்களிலே அஞ்சனம் இட்டிருப்பவருமான உமையம்மையின் கணவனே! தலைவா! அடியாருக்கு அருளைத் தந்து முக்தியளிக்கும் உன் விளையாட்டுக்கு ஆட்படும் பொருட்டு அவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அவற்றையெல்லாம் நாங்கள் செய்துவிட்டோம்.
//
என்று படித்தவுடன், உமையம்மையை சொல்கிறதா, அடியார்களை சொல்கிறதா என்று கொஞ்சம் குழம்பி விட்டேன். அடியார்கள் செய்ததை எல்லாம் செய்துவிட்டோம் என்று சொல்வதாகத்தான் இருக்கவேண்டும் என்று புரிந்து கொண்டேன். :)