திருச்சிற்றம்பலம்
படுக்கையின்மீது நேசம் வைத்தாயோ?
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.
மற்றொரு வீட்டுக்கு வந்தனர் இளம்பெண் குழுவினர். அங்கேயும் அதே கதைதான். மார்கழி மாதத்துக் குளிரில் போர்த்திப் படுத்துத் தூங்கச் சுகமாக இருக்கிறது.
அழைக்க வந்தவர் கூறுகின்றனர்: 'செம்மையான நகைகளை அணிந்தவளே! ராப்பகலாக நாம் பேசிக்கொண்டிருப்போமே, அப்போதெல்லாம் 'பரஞ்சோதியான ஈசனின் மீதுதான் நான் அன்பு வைத்திருக்கிறேன்' என்று கூறினாய். அந்த அன்பை எப்போதிலிருந்து நீ மலர்மஞ்சத்தின்மீது வைத்தாய்?
உடனே துள்ளி எழுந்து வந்தாள் தூங்கியவள். 'சீசீ! இதென்ன வார்த்தை! விளையாடவும் என் மீது பழி கூறவும் இதுவா இடம்? நாம் யார்? வானவர்களும் வந்து புகழ்பாட இயலாத அளவுக்கு ஒளிவீசுகின்ற மலர்ப்பாதத்தைக் கொண்டவன், நமக்கு அப்பாதத்தைத் தந்தருளுவதற்காக தேசமெங்கும் நிறைந்தவன், ஆனால் சிவலோகத்தை இருப்பிடமாகக் கொண்டவன், சிதம்பரத்தில் இருக்கும் சிற்றம்பலத்தவனான ஈசனின் அன்பர்கள் அல்லவோ!' என்று கூறியபடி வந்து இவர்களுடன் சேர்ந்துகொண்டாள்.
சிறப்புக் குறிப்பு: விராட்புருஷனான இறைவனின் வடிவத்தில் அவனது இருதயத் தலமாகக் குறிக்கப்படுவது சிதம்பரம். இங்கே ஒரு காலத்தில் தில்லை மரங்கள் நிரம்பியிருந்ததால் இதற்குத் தில்லை என்று பெயர் வந்தது. இம்மரங்கள் தற்போது பிச்சாவரம் உப்பங்கழிக் காடுகளில் காணப்படுகின்றன. பஞ்சபூதத் தலங்களில் இது ஆகாயத் தலம். ஒரு பாதத்தை முயலகன் மீது பதித்து மறுபாதத்தைத் தூக்கியாடும் கூத்தபிரான் நடனக் கலைஞர்களின் இஷ்டதெய்வம். நந்தனாருக்கு நந்தி விலகி தரிசனம் கொடுத்த தலம் இது. இங்கே இருப்பது கனகசபை, பொற்சபை, சிற்சபை என்று அழைக்கப்படும். சிதம்பரம் என்பது ஞானாகாசம் அல்லது மெய்யறிவு வெளி. அம்மெய்ஞ்ஞான வெளியிலிருந்துதான் திருமறைகள் கிளம்புகின்றனவாம்.
சிதம்பரத்தின் பெருமையைப் பேசவந்த நாவுக்கரசர் 'குறைவிலாத அன்ன தானம் நிகழும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னுலகத்தையும் தரும். இந்தப் புவி வாழ்வை விரும்பியே என் அன்பு சுழல்வதைக் கண்டு, நான் இன்பம் பெறும்படியாக இப்பிறவியிலேயே மேலும் பலவற்றைத் தருமோ!' என்று கூறி வியக்கிறார்.
அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே
(நாவுக்கரசர் தேவாரம்)
அப்பேர்ப்பட்ட பெருமையுடைய தலத்திலுள்ள 'கூத்தரசனின் அன்பர்களில் நானும் ஒருத்தி' என்று மிடுக்கோடு எழுந்து வருகிறாள் உறக்கம் கலைந்த பெண்.
இன்னும் வரும்...
No comments:
Post a Comment