மார்கழி மாதம் வந்துவிட்டது. ஊரெங்கும் திருப்பாவையும் திருவெம்பாவையும் அதிகாலையில் ஒலிக்கும். திருப்பள்ளியெழுச்சியும்தான். மதுரமொழியில் திருவெம்பாவைப் பாடல்களின் பொருளை இடலாம் என்று நண்பர் ஒருவர் கூறினார். இதோ இந்த அறிமுகத்துடன் அதைத் தொடங்குவோம்.
திருவெம்பாவை பாவைப்பாடல் வகையைச் சேர்ந்தது. இது அம்பாளைக் குறித்து நோன்பு நோற்பது. ஆயினும் காலக்கிரமத்தில் தமது விருப்ப தெய்வத்தைக் குறித்துப் பாடுவதாக ஆயிற்று. திருவெம்பாவை சிவபெருமானைக் குறித்தும் திருப்பாவை திருமாலைக் குறித்தும் பாடுகின்றன. 'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்ற பெருமையைப் பெற்ற திருவாசகத்தின் 7வது பகுதியாகத் திருவெம்பாவை அமைந்துள்ளது. இருபது பாடல்களைக் கொண்டது.
வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்ற வள்ளலாரின் வார்த்தைகள் போதுமே திருவாசகத்தின் அழகையும் பக்திச் சுவையையும் தெளிவுபடுத்த! மார்கழி நோன்பு என்று அறியப்படும் இந்நோன்பு தைந்நோன்பு என்று சங்க நூல்களில் அறியப்பட்டிருந்தது. அதற்கான பின்புலம் மற்றும் வரலாற்றை அறியக் கீழ்க்கண்ட சுட்டிகளில் பாருங்கள்:
http://www.tamilonline.com/thendral/Content.aspx?id=74&cid=8
http://groups.google.com/group/muththamiz/msg/80a069fba925edf6
பாவை நோன்பு தனது விருப்ப தெய்வத்தின் அருளைப் பெறுவதற்காக மட்டுமல்லாமல் மணமாகாத கன்னியர் தமது விருப்பத்துக்கு உகந்த கணவனைப் பெற வேண்டி, இறைவனைத் துதித்து, விரதங்கள் இருக்கும் நோன்பாகவும் இருந்தது. மார்கழி மாதத்தின் குளிரில் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனைத் துதித்துப் பாடி, உணவு உடை அலங்காரங்களை மிக எளிமையாகச் செய்வது இந் நோன்பின் அங்கங்களாக இருந்தன என்பது பாவைப்பாடல்களின் வழியே தெரிய வருகின்றது.
திருவெம்பாவைப் பாடல்களின் பொருளுக்குள் நுழைவதற்கு முன்னால், 'சித்தம்' மடற்குழுவில் நான் எழுதிய மாணிக்கவாசகர் சரித்திரத்தையும் இங்கே இட்டுவிடுகிறேன்.
மதுரபாரதி
Arunachaleswarar Temple Photo credit: Siva Seshappan
1 comment:
ராஜபாட்டையாக ஆரம்பித்திருக்கிறது. மிகவும் நன்றாக இருக்கிறது. சுட்டிகளின் சாரத்தையும் கொடுத்தால் சுருக்கமாகவும் சிலர் பார்க்க வாய்ப்புண்டு. தொடர்ந்து எழுதுங்கள். மிக்க நன்றி
ஜயராமன்
Post a Comment