January 07, 2008

திருவெம்பாவை - 20

திருச்சிற்றம்பலம்

நின் திருவடிகளே போற்றி, போற்றி!

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்


இந்த இறுதிப் பாடல் ஆடலரசனின் பாதங்களின் மேன்மையை மட்டுமே வெவ்வேறு வகையில் வழுத்திப் பாடுகிறது.

'புவனங்கள் அனைத்தின் மூலகாரணமும் நின் பாதமலர்கள்தாம்; அவற்றை எமக்கு அருளுவாய், போற்றி! செந்தளிர்களான நின் பாதங்களிலேயே அவையெல்லாம் சென்று ஒடுங்குகின்றன, அந்தப் பாதங்களை எமக்கு அருளுவாய், போற்றி!

'உயிர்களனைத்தும் உன் பொற்பாதங்களில் தோன்றி, உன் பூங்கழல்களிலேயே வாழ்வைத் துய்த்து, உன் இணையடிகளிலேயே சென்று முற்றுப் பெறுகின்றன; அப்பேர்ப்பட்ட பாதங்களுக்குச் சொல்கிறோம் போற்றி, போற்றி!

'திருமாலும் பிரம்மனும் எந்தப் பாத தாமரைகளைத் தேடியும் பெறமுடியவில்லையோ, அவற்றை நாம் போற்றுகிறோம்!

'எம்மை ஆட்கொண்டு முக்தியைத் தரும் பொன்மலர்ப் பாதங்களைப் போற்றிப் பாடி, மார்கழி நீராடுவோம், எம்பாவாய்!'

சிறப்புப்பொருள்: பிறவியென்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு மனிதருக்கு ஒரே துணையாக இருப்பது இறைவனின் பாதங்களாகிய புணைதான் என்றார் வள்ளுவர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.


அவனுடைய பாதங்களின் மஹிமை சொல்லற்கரியது. நம் கற்பனைக்கு எட்டுவதும் எட்டாததுமான எல்லாமுமே அவனது பாதங்களில் தோன்றி, இருந்து, மறைகின்றன. அதனால்தான் சிவபுராணம் பாடத் தொடங்கி 'நமச்சிவாய வாஅழ்க!' என்று சொன்ன கையோடு 'நாதன் தாள் வாழ்க' என்று திருவடியை வாழ்த்துகிறார். அது போதாதென்று, அடுத்த 14 அடிகளும் சிவனின் அடிகளை வாழ்த்துவனவாகவே இருக்கின்றன.

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஒரே இரவில் இறைவனின் திருப்பாத மஹிமையைப் போற்றும் 'பாதுகா சஹஸ்ரம்' என்ற 1008 சம்ஸ்கிருத ஸ்லோகங்களை எழுதினார். வைணவத்தில் இதற்கு மிக உயர்ந்த இடம் உள்ளது. எப்படிப் பாட முடிந்தது என்று கேட்டபோது, 'ஸ்ரீ பாதுகையின் கருணையிருந்தால் ஒரே இரவில் ஆயிரத்தெட்டு என்ன, லட்சத்தெட்டு ஸ்லோகங்களை எழுதலாம்' என்றாராம். அடி என்றால் பாதம். அவற்றின் கீழ் அமர்தல் பணிவையும் பக்தியையும் குறிக்கும். எனவேதான் பக்தரும், தொண்டரும் அடியவர் எனப்படுகின்றனர். இந்த மரபில் சுவாமிகளை 'ஸ்ரீபாதங்களவரு' என்று கன்னடத்திலும் சொல்லக் கேட்டதுண்டு. வடமொழி பயிலும் பிறமொழிகளிலும் சொல்வர்.

நந்திகிராமத்திலிருந்து ராமனின் சார்பாக 14 ஆண்டுகள் ஆட்சி செய்த பரதன், ஸ்ரீ ராம பாதுகைகளையே சிம்மாசனத்தில் ஏற்றிவைத்திருந்தான். முடிசூடுவதைவிட இறைவனின் அடிசூடுவது உயர்வானது என்பதை பரதனின் செய்கை நமக்கு உணர்த்துகிறது.

திருவெம்பாவை முற்றும்

3 comments:

Srikanth said...

அற்புதமான தொடர். அருமையான விளக்கங்கள். நிறைவடைகிறதே என்று இருக்கிறது.

Srikanth said...

அற்புதமான தொடர். அருமையான விளக்கங்கள். நிறைவடைகிறதே என்று இருக்கிறது.

Veeraraghavan said...

வணக்கம்.
உமது திருவெம்பாவை பதிவுகளை,ஆர்குட் ஐயங்கார் குழுமம் ஒன்றில் ( http://www.orkut.com/Main#Community.aspx?cmm=49248056) மார்கழி மாத இழைக்காக பயன் படுத்திக்கொண்டேன்.அருமையான விளக்கங்கள்.சிறப்புபொருள் பகுதியின் உன்னதமும் அவசியமும் தங்களின் ஆழ்-நுண்ணறிவும் பாராட்டத்தக்கவை.

நன்றி.