December 19, 2007

திருவெம்பாவை - 1

திருச்சிற்றம்பலம்

ஆதியந்தம் இல்லா அருட்பெரும் சோதி

Photo Sharing and Video Hosting at Photobucketசிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாது பெரும் சோதி வடிவில் ஓங்கி நின்ற திருவண்ணாமலை அக்னித் தலமாகும். அதனால்தான் இதன் அறிமுகத்திலேயே அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் பின்னணியில் அண்ணாமலை தெரியும்படியான புகைப்படத்தை இட்டிருந்தேன். இங்கேதான் மாணிக்கவாசகர் திருவெம்பாவையைப் பாடினார். திருவெம்பாவையின் மற்றொரு சிறப்பு தன்னை ஒரு பெண்ணாக பாவித்து மணிவாசகர் பாடியது. ஏன், திருப்பாவையைப் பாடியதே பெரியாழ்வார்தான் என்ற ஒரு கருத்தும் உண்டே.

இங்கே நாம் நனிசொட்டும் பக்திச் சுவையை மட்டும் எடுத்துக்கொண்டு மேலே செல்வோம். முதலில் பாசுரம்:

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.


பாவை நோன்பு நோற்கும் இளம்பெண்கள் கூட்டமொன்று சிவபெருமானின் பெருமையைப் பாடியபடி செல்கிறது. அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு தோழியில் வீட்டு வாசலில் அவளை எழுப்பும்பொருட்டுப் பாடுகின்றார்கள். அவள் எழுந்திருக்கவில்லை. "ஒளிபொருந்திய பெரிய கண்களை உடைய பெண்ணே, உனக்கென்ன இரும்புக் காதா? நாங்கள்
எல்லோரும் அடிமுடி அறியாத பெருஞ்சோதியான சிவனைப் பாடுகிறோம். அதைக் கேட்டபின்னும் தூங்குவாயோ! தெருவிலே நாங்கள் மகாதேவனின் திருவடிகளை வாழ்த்தும் ஒலியைக் கேட்டதுமே, நெஞ்சு விம்மி, மெய்ம்மறந்து, மலர்கள் தூவப்பெற்ற
மஞ்சத்தில் புரண்டு புரண்டு நிலையற்றுப் போய்விடுவாயே. இன்றைக்கு ஏன் இப்படித் தூக்கம்? இதுவா உனது தன்மை!'' என்று அவர்கள் வியந்தும் பழித்தும் கூறுகிறார்கள்.

சிறப்புப் பொருள்: அண்ணாமலைப் புராணத்தில் வருகின்றது சிவபெருமான் அடிமுடி காணாத நெருப்பு லிங்கமாக நின்ற கதை. அதை வேறோரிடத்தில் காண்போம். அதுமட்டுமல்ல, இறைவன் தோற்றமும் அழிவும் இல்லாதவன்; ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் கட்டைவிரல் அளவே ஆன சோதி வடிவில் இருப்பவன். 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி' என்பது இதையும் குறிக்கும். இந்தச் சோதியைத் திருமூலர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி யீசனைச் சொல்லும் எப்போதும்
உளங்கொளி யூனிடை நின்றுயிர்க்கின்ற
வளங்கொளி எங்கும் மருவி நின்றானே

(திருமந்திரம் 2687)

[அருஞ்சொற்பொருள்: வாள் - ஒளி (பொருந்திய); தடம் - பெரிய; வளருதல் - கண்வளர்தல், உறங்குதல்; போதார் -> போது + ஆர் - மலர்தூவப்பட்ட; அமளி - மஞ்சம்; இங்ஙன் - இவ்வாறு; பரிசு - தன்மை]

No comments: