March 14, 2014

அருணாசல அற்புதம் 8: சுக்குத் தூளும் நாட்டுச் சர்க்கரையும்

மகாதேவ ஐயர் என்ற பக்தர் ஒருவர் சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மாத காலமாக விடாமல் விக்கல் ஏற்பட்டது. இதைப் பார்க்கச் சகியாமல் அவருடைய மகன் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளுக்குக் கடிதம் எழுதி, தன் தந்தையின் துன்பத்தை நீக்கப் பிரார்த்தனை செய்துகொண்டார். இங்கே இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, மகனுக்குத் தந்தை மேல் இருந்த அக்கறை. இரண்டாவது, பகவான் இதைப் போக்கிவிடுவார் என்ற முழு நம்பிக்கை.

கடிதம் பகவான் கையை எட்டியது. பகவான் தம் அருகிலிருந்து டி.கே. சுந்தரேசய்யரிடம் “காய்ந்த சுக்குத் தூளும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து உட்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்னு கடிதாசு எழுது” என்று கூறினார். பவரோகத்துக்கு மருந்து தரும் ஞானவைத்தியரான பகவான், தன் அன்பரின் உடல் ரோகத்துக்கும் மருந்து சொல்வதை அற்பமாகக் கருதவில்லை. பாசமுள்ள மகனின் அக்கறையும், நம்பிக்கையும் பகவானின் கருணை என்ற சர்வரோக நிவாரிணியைப் பெறத் தவறவில்லை.

பகவான் மருந்து சொன்னதோடு நிற்கவில்லை. அங்கே மாதவன் என்பவர் சேவை புரிந்துவந்தார். அவரைப் பார்த்து, “இந்த மருந்து நம்மிடம் தயாராக இருக்குமே! அதைத் தேடி எடுக்க முடியுமா பார்!” என்றார். மகரிஷிகள் மாதவனுக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை, வேண்டுகோள் விடுத்தார் என்பதை இந்த வார்த்தைகளில் நாம் கவனிக்க வேண்டும். நாமெல்லாம் செல்லுமிடத்தில் அதிகாரம் செய்வதைப் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் மேலோர்களிடம் வினயம் மேலோங்கிக் காணப்படும். ‘பெருக்கத்து வேண்டும் பணிதல்’ என்று இதைத்தான் வள்ளுவர் குறிப்பிட்டார். ‘வித்யா வினய சம்பன்னே’ (கல்வி பணிவைத் தரும்) என்றும் ‘பண்டித சமதர்சினஹ’ (எல்லோரையும் சமமாக நோக்குகிறவன் அறிஞன்) என்றும் பகவத் கீதை (5:18) குறிப்பிடுகிறது. எதனை அறிந்தபின் வேறெதையும் அறிய வேண்டுவதில்லையே அதனை அறிந்த பகவான் வினயமாக நடந்ததில் வியப்பேது!

பகவான் கேட்டதும் மாதவன் அந்த மருந்தைக் கொண்டுவந்து கொடுத்தார். ஒரு சிறிய உருண்டையை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட பகவான் மிச்சத்தை எல்லோருக்கும் வினியோகிக்கச் சொன்னார். எவ்வளவு அரிய பொருளாயினும் பகவான் அதைத் தான்மட்டும் உண்ணும் வழக்கம் கிடையாது. அத்தகைய பாரபட்சங்களை அவர் ஏற்றுக் கொள்வதில்லை. ‘சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று’ (மரணமில்லா வாழ்க்கை தரும் அமுதத்தைக் கூட வேண்டமாட்டார்கள்) என்றல்லவா நம் முன்னோர் கூறினர். அப்படியிருக்க இந்த மருந்து எம்மாத்திரம்?

‘இந்திரர் அமிழ்தம் 
இயைவது ஆயினும் இனிது எனத் 
தமியர் உண்டலும் இலரே’  (புறநானூறு:பாடல்-182)

“ஆஹா! எனக்கு இந்திர லோகத்தின் அமுதம் கிட்டிவிட்டது! நல்லது, நானே இதை அருந்திவிடுகிறேன்” என்று மேலோர்கள் சாப்பிட்டுவிட மாட்டார்களாம். பகவானுக்கென்று தனியாக ஏதாவது மருந்தை யாராவது கொடுத்தால், “இந்த மருந்து எனக்கு நல்லதென்றால் எல்லாருக்கும் நல்லதாகத்தானே இருக்கும்” என்பாராம்.

பகவான் தாமும் சாப்பிட்டு எல்லோருக்கும் அந்த மருந்தை வினியோகித்த பின் சுந்தரேசய்யரிடம், “சரி, இன்றைக்குச் சாயங்காலத் தபாலிலேயே மகாதேவ ஐயருக்குக் கடிதம் எழுதிவிடு” என்றார். “இனி அதற்கென்ன அவசியம் பகவானே! அவருக்காகத்தான் பகவான் மருந்து சாப்பிட்டாச்சே!” என்று வேடிக்கையாக சுந்தரேசய்யர் கூற பகவான் பலமாகச் சிரித்தார். ஆனால், பகவான் கூறியபடிக் கடிதம் போயிற்று. இது அங்கே போய்ச் சேரும் நேரம், சென்னையிலிருந்து கடிதம் வந்துவிட்டது, அதில் பகவான் மருந்தை உட்கொண்ட அதே நேரத்தில், அதாவது முந்தைய நாள் மதியம் 1.00 மணி அளவில், தனது தந்தையின் விக்கல் நின்றுபோனது என்ற தகவல் இருந்தது.

இங்கே ஒரு மகாபாரத சம்பவம் நினைவுக்கு வருகிறது. துர்வாசரையும் அவரது பத்தாயிரம் சீடர்களையும் வனவாசத்திலிருந்த பஞ்சபாண்டவர்களிடம் உணவு முடியும் வேளையில் அனுப்பி வைக்கிறான் துரியோதனன். பாஞ்சாலியிடம் இந்திரன் கொடுத்த அட்சய பாத்திரம் இருந்தது. அதில் பஞ்சபாண்டவர்களுக்கும், வனத்தில் இருக்கும் ரிஷிகளுக்கும், பிறருக்கும் உணவளித்த பின், தானும் உண்டுவிட்டு, பாஞ்சாலி அதனைக் கழுவி வைத்துவிடுவாள். அப்படிக் கழுவி வைத்துவிட்டால் அன்றைய தினம் அதிலிருந்து மேற்கொண்டு உணவு எதுவும் வராது. அதையறிந்த துரியோதனன், அந்தச் சமயத்தில் அங்கு சென்றடையும்படி துர்வாசர் பட்டாளத்தை அனுப்புகிறான்.

இதின் பின்னால் ஒரு கெட்ட எண்ணம். அது என்னவென்றால், துர்வாசருக்கும் சீட கோடிகளுக்கும் பஞ்சபாண்டவர்களால் உணவளிக்க முடியாது, கோபக்கார துர்வாசரின் சாபத்தை அவர்கள் சம்பாதித்துக் கொள்ளட்டும் என்பதுதான்.

துர்வாசர் படையோடு வந்தார். தர்மபுத்திரர், “சுவாமி, தாங்கள் சென்று நீராடி, ஜபதபம் முடித்து வாருங்கள். உணவு தயாராக இருக்கும்” என்று அனுப்பி வைத்தார். பாஞ்சாலிக்குக் கைகால் ஓடவில்லை. ஆனால் அவளுக்குத் தெரியும், கிருஷ்ண பரமாத்மா இருக்கும்வரை பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பது. “ஹே கிருஷ்ணா! இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்டுவிட்டதே. உன்னையன்றிக் காப்பவர் யார் இருக்கிறார்!” என்று உருகி உருகிப் பிரார்த்தித்தாள்.

துவாரகையில் இருந்த கண்ணன் அடுத்த நொடியில் அந்தக் காட்டில் இருந்தான். வந்தவன், பாஞ்சாலியிடம் உன் கஷ்டம் என்னவென்று கேட்காமல், ஒரேயடியாக, “பாஞ்சாலி, எனக்குப் பசி உயிர் போகிறது. முதலில் ஏதாவது சாப்பிடக் கொடு. பிறகு பேசலாம்” என்று அவசரப்படுத்தினான். “கிருஷ்ணா, நான் இருக்கும் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் நீயும் படுத்துகிறாயே” என்று புலம்பினாள் திரௌபதி. “அதெல்லாம் இருக்கட்டும். நீ ஒன்று செய். உன் அட்சய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வா. என்ன இருக்கிறதென்று பார்க்கிறேன்” என்று சொன்னான் கிருஷ்ணன்.

வேறு வழியில்லாமல், அலம்பிக் கவிழ்த்த அட்சய பாத்திரத்தை எடுத்துவந்தாள் திரௌபதி. அதை வாங்கி மேலும் கீழும் பார்த்தான் கிருஷ்ணன். தன் கையால் அதன் உள்பகுதியைத் தடவிப் பார்த்தான் கிருஷ்ணன். “ஆ! இதோ பார். இன்று நீ கீரை சமைத்தாய் போலிருக்கிறதே. நல்லது” என்று சொன்னபடி, ஒட்டிக்கொண்டிருந்த கீரைத் துணுக்கைக் கையில் எடுத்து மிகுந்த ரசனையோடு தன் நாவில் வைத்துச் சுவைத்து உண்டான் கிருஷ்ணன். அதே நேரத்தில் நதியில் குளித்துக் கொண்டிருந்த துர்வாசருக்கும், பத்தாயிரம் சீடர்களுக்கும் வயிறு நிரம்பி ஏப்பம் வந்தது!

குறும்புக்காரக் கிருஷ்ணர் சும்மா இருப்பாரா, பீமனைக் கூப்பிட்டு, நதிக்குப் போய் துர்வாச முனிவரைப் பரிவாரத்தோடு அழைத்து வரச் சொன்னார். எல்லோரும் ஏக காலத்தில் ஏப்பம் விட்டதுமே துர்வாசருக்கு உண்மை புரிந்துவிட்டது. பாண்டவர்களிடம் போய் அவர்கள் அளிக்கும் விருந்தைச் சாப்பிடாவிட்டால் அது அவர்களை அவமரியாதை செய்வதாகும். போதாக்குறைக்கு பீமசேனன் அங்கே வந்து அவர்களைக் கட்டாயம் தம்மிடத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறான்.

பார்த்தார் துர்வாசர். எதிர்க்கரையில் ஏறித் தனது சீடர்களோடு ஓட்டம் பிடித்தார்.

துவாபர யுகத்தில் பார்த்தசாரதி உண்ட ஒரு கீரைத்துண்டு குருவுடன் பத்தாயிரம் சீடர்களின் வயிறை நிரப்பியது. கலியுகத்தில் ரமணர் தம் சீடர்களோடு உட்கொண்ட சுக்கும் சர்க்கரையும் சென்னையிலிருந்த அன்பரின் நோயைத் தீர்த்து வைத்தது. எல்லாம் இறைவனின் மகிமை, ஞானியரின் பெருமை!