September 08, 2004

ஆணழகனின் அலங்காரம்

ஆண்களின் அலங்காரம் எப்படி இருந்தது ஓர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்? இதைப் படியுங்கள்:

தனது சுருள்சுருளான தலைமுடியில் எண்ணெய் தடவிவிட்டு, அதை வாசனைக் கொட்டைகள் போட்டு அரைத்த நறுமண மயிர்ச்சாந்தினால் (ஷாம்பூ!) நன்றாகக் கழுவினான். விரலை முடிக்குள்ளே விட்டு, சிக்கு அவிழ்த்து, ஈரம் காயும்படிக் கோதியபடி, அதிலே அகில்புகை காட்டினான்.

மலையிலும், நிலத்திலும், மரக்கிளையிலும், சுனையிலும் வளரும் தேன்சுமந்த வண்ணவண்ணமான பூக்களை ஆய்ந்து, கலந்து தொடுத்த மாலையோடு, வெண்மையான பனங்குருத்தைத் தொடுத்த கண்ணியையும் தன்னுடைய தலையின் உச்சியில் அச்சம் தரும்படி அணிந்துகொண்டிருக்கிறான். இந்தப் பூமாலைகளைச் சுற்றி வண்டுகள் பறக்கும் ஓசை யாழிசைப்பது போல இருக்கிறது.

அதற்குமேல் ஒரு சுற்று மல்லிகையும், அரளியும் சேர்த்துக்கட்டிய சரத்தைச் சுற்றியிருக்கிறான். ஒரு காதிலே பார்த்தால் சிவந்த தீக் கொழுந்துபோல அழகான ஒரு மலர்க்கொத்து. பருத்த தோளின்மீது ஒரு பசுந்தளிர்க் கொத்து காற்றில் அசைகிறது. விரிந்து, புடைத்த வலுவான மார்பின்மீது நகைகளுக்கு நடுவில் வாசனைபொருந்திய சந்தனமாலையும் பொலிகிறது. அவனுடைய உருண்டு திரண்ட கையிலே அழகான வில் வைத்திருக்கிறான். தேர்ந்தெடுத்த அம்புகள் வைத்திருக்கிறான்.

நுண்மையான பூவேலை செய்த கச்சையை இடுப்பில் இறுக்கிக் கட்டியிருக்கிறான்.

----

மேற்கண்டவாறு வர்ணிக்கிறது அந்தக் காலத்து அழகான ஆண்மகனைக் குறிஞ்சிப்பாட்டு. இது பத்துப்பாட்டு வரிசையில் எட்டாவது. இதன் ஆசிரியர் கபிலர். குறிஞ்சித் திணைப் பாடல்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் மிகச்சிறந்ததாக இது கருதப்படுவதால் இதை 'பெருங்குறிஞ்சி' என்று அழைப்பார்கள். 261 அடிகளைக் கொண்ட இந்த நூலின் ஓரிடத்தில் தொண்ணூற்றொன்பது மலர்களின் பட்டியல் தரப்படுகிறது. அக்காலத்தில் என்னென்ன மலர்கள் இருந்தன என்று அறிய இது ஒரு நல்ல ஊற்றம்.

----

மேலே கண்ட விவரணையைத் தரும் பாடற்பகுதி இதோ: (கடினமாக இருந்தாலும் ஒருமுறையாவது படித்துப் பாருங்கள்)

எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்
தண் நறுந் தகரம் கமழ மண்ணி
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழ் இசை 110

அணிமிகு வரி மிஞறு ஆர்ப்ப, தேம் கலந்து
மணி நிறம் கொண்ட மா இருங்குஞ்சியின்
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
தண் நறுந்தொடையல் வெண்போழ்க் கண்ணி
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி
பைங்காற் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇ, செந்தீ
ஒண் பூம் பிண்டு ஒரு காது செரீஇ
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி 120

மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
தொன்றுபடு நறுந்தார் பூணொடு பொலிய
செம்பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக்கையின்
வண்ண வரிவில் ஏந்தி, அம்பு தெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்குஅறக் கட்டி 125

இப்படி மேலே நடக்கிறது கதை. அவன் தன்னோடு ஒரு பயங்கரமான வேட்டை நாயை அழைத்து வருகிறான். அதைப் பார்த்து பயந்து போகின்றனர் கதாநாயகியும் தோழியரும். அப்போது அங்கே ஒரு காட்டு யானை வருகிறது.

இதற்குமேல் நான் சொல்லமாட்டேன். ஊகிக்க முடியாதவர்கள் குறிஞ்சிப்பாட்டைப் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அது சரி, இப்போது ஏன் பூ வைத்துக்கொள்வது பெண்கள்மட்டுமே என்றாகிவிட்டது? (தலைக்குக் குளித்து, சிக்கெடுத்துக் காயவைக்கும்போது சர்தார்ஜிகளைப் பார்க்கவேண்டும்; சிலசமயம் பின்னாலிருந்து பார்த்துப் பெண்தானோ என்று ஏமாந்தது உண்டு.

September 07, 2004

மரணத்தின் வாசலில்...

நாமெல்லோரும் வசதியாக, சவுகரியமாக, நல்ல வேலை மற்றும் வருமானத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில்கூடப் பொழுதுவிடிந்து பொழுதுபோனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும், நமது தொழிலிலும், நமது நாட்டின்மீதும் இன்ன பிறவற்றின் மீதும் எண்ணற்ற குறைகளைச் சொல்லியே காலத்தைக் கழிக்கிறோம். அலுத்துக் கொள்கிறோம். தேடிப் பிடித்த வசவுகளால் வைகிறோம். நம்மையும் நோகடித்துக்கொண்டு பிறரையும் நோகச் செய்கிறோம்.

ஒரு மரணதண்டனைக் கைதியின் மனநிலையும், வாழ்வும் எப்படி இருக்கும்? அதுவும் செய்யாத கொலைக்காகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தால்?

சி.ஏ. பாலன் என்ற பொதுவுடைமைக் கட்சித் தொண்டர் திருப்பூரில் நடந்த ஒரு கொலைக்காக 1950-ல் கைது செய்யப்பட்டார். அவர்தான் கொலையாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோயம்புத்தூர் சிறையில், தூக்குமரத்தின் அருகில் இருக்கும் மரணதண்டனைக் கைதிகளுக்கான death row-வில் சிறிய அறையில் அடைத்துவைக்கப் பட்டிருந்தார். அதைப் பற்றி அவர் எழுதுவது:

====
மேற்கோள்:::
====

பத்தடி நீளமும் எட்டடி அகலமும் கொண்ட ஓர் அறையில் இரவும் பகலும் அடைத்துப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதனைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். அதுவும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பவனை.

அங்கே அவனால் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சூரியனைப் பார்க்க முடியும். இரவில் நிலவைப் பல வருடங்கள் நான் காணவே இல்லை. தேய்பிறையின்போது காலையிலும் வளர்பிறையின்போது மாலை நான்கு மணிக்கும் சூரிய வெளிச்சத்தின் பிரகாசத்தில் ஒளி மங்கிய சந்திரனை மட்டுமே என்னால் காணமுடிந்தது. வசந்த ருதுவின் பூரண நிலவைக் கம்பிகளுக்கிடையே நோக்கியவாறு நான் வெகுநேரம் நின்று கொண்டிருந்தது உண்டு.

காலையில், காலைக்கடன்களுக்காகக் காவலாள் பார்வையில் வெளியே விடப்படும்போது, கிருஷ்ணபட்சத்தின் ஆரம்பமானால், கோயமுத்தூரைத் தொட்டபடி மேற்குத் திசையில் இயற்கை அமைத்ததொரு உறுதியான கோட்டை போல உயர்ந்து நிற்கும் மேற்கு மலைத் தொடர்களின் உச்சியிலே மறையப் போகும் மனக்கலக்கத்துடன் வாடிய முகத்துடன் விளங்கும் வெண்மதியையும், தனது செங்கதிர்களைப் பரப்பிக்கொண்டு ஒரு புதிய காலகட்டத்தின் உதயம்போல் குணதிசையில் எழும்புகிற பாலசூரியனையும் பார்த்துக் கொண்டு நிற்பது எனது வழக்கம். 'கண்ணுள்ளபோது காட்சி தெரியாது' என்று சொல்வது போல இவைகளையெல்லாம் வேண்டுமளவு பார்க்கக் கொடுத்து வைத்தவர்களுக்கு இந்த உதயாஸ்தமனங்களில் அசாதாரணமாக ஒன்றும் தோன்றாது. எனக்கோ மனத்துக்குள் ஏதேதோ காவிய ரசனை.

வேண்டாம்; அங்கெல்லாம் ஒன்றும் போகவேண்டாம். உன்மத்தமோ சித்தப் பிரமையோ ஏற்பட்டுவிடும். இப்போது வாழவேண்டும்! ஆத்ம தைரியத்தோடும் ஆதர்ச நிஷ்டையோடும் வாழவேண்டும். மரணதண்டனை ரத்தாகி இனி ஒரு வாழ்க்கை கிட்டுமானால் ஆரோக்கியமுள்ளவனாக வாழவேண்டும். மக்களுக்குச் சேவை செய்ய வெண்டுமென்றால் இலட்சியம் எப்படியோ, அப்படி ஆரோகியமும் இன்றியமையாதது. ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவைகளே என்னுடைய கோஷங்களாக இருக்கட்டும். உள்ளுணர்ச்சியோ மற்றெதுவுமோ எனக்கு ஏற்பட்டதனால் அல்ல. என்னால் எடுக்கப்படவேண்டிய--நான் எடுத்துக்கொண்ட தீர்மானம் இது.

====
:::மேற்கோள் முடிவு
====

பத்துமாதமும் 27 நாட்களும் மரணதண்டனைக் கைதியாகச் சொல்லொணாத் துன்பங்களைத் தாங்கியபின், உச்சநீதிமன்றம் வரை மரணதண்டனையை ஊர்ஜிதம் செய்துவிட்டபின், இறுதியில் அப்போதைய தமிழக இராஜாஜி மந்திரிசபை மற்றும் மக்களின் இயக்கங்கள், பொதுவுடமைத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவரது மரணதண்டனையை ஜனாதிபதி ஆயுள்தண்டனையாகக் குறைத்தார்.

சி.ஏ. பாலன் தனது இந்த அனுபவத்தை மலையாளத்தில் எழுத, அதை தூக்குமரத்தின் நிழலில் என்று தலைப்பிட்டு ஹேமா ஆனந்ததீர்த்தன் மிக அருமையாக மொழிபெயர்த்து, குமுதத்தில் தொடராக வெளிவந்தது. வாழ்க்கையை மதிக்கும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டியது.

Are we counting our blessings?

September 06, 2004

பாரதிக்கு வெண்பா அஞ்சலிபம்மாத்துப் பாவலர் பாகுத் தமிழதனைச்
சும்மாத் துருப்பிடிக்க விட்டக்கால் - செம்மாந்துவீரத்
திருக்குரலால் வெற்றிக் கவிசமைத்த
காரக் கவிமகனே காப்பு.

மீசை வளர்க்கலாம் மேற்பாகை கட்டலாம்
ஆசையினால் உன்பேர் அணிந்திடலாம் - ஓசைக்
குரலெடுத்துப் பாடிடலாம் கோமகனே நின்போல்
வருவதுண்டோ நாவினிலே வாக்கு!

பாஞ்சாலி சூளுரைத்த பாட்டைப் படிக்காத
நோஞ்சான் தமிழன் நொடியட்டும் - வாஞ்சையுடன்
மோகக் குயிலியவள் மூட்டும் வெறியிசையைத்
தாகத்தால் மாந்தல் தவம்.

இருமையிலா மேனிலையில் எல்லாமும் நானே
ஒருமையெனப் பாடியவா ஒற்றைக் - கருமுகிலை
நண்பனிளங் காதலியாம் சேவகனாம் தாயுமெனும்
பண்பினுக்கோ ரெல்லை பகர்.

வேழம் மிதித்தெல்லாம் வீழுகில்லாய் நீயென்று
ஆழக் குரல்வளைய ழுத்துகிறோம் - பாழும்
பிரிவுகளால் பேதமையால் உட்பகையால் பின்னே
சரியுமுனம் நின்கவியே சார்பு.

August 07, 2004

மதுரைக் கோட்டை எங்கே?

பழங்காலத்தில் பெரிய கோட்டை ஒன்று மதுரையைச் சுற்றி இருந்ததாக நூல்கள் சொல்கின்றன. பாண்டியர்களின் தலைநகரமான மதுரை நிச்சயமாக அரண்செய்யப்பட்டுத்தான் இருந்திருக்கும். அவ்வளவு பெரிய கோட்டை எப்படிக் காணாமல் போனது. இந்தக் கேள்வியை 'ராயர் காபி கிளப்'பில் திரு. திருமலை அவர்கள் கேட்டதுதான் என்னுடைய கீழ்க்கண்ட துருவுதலுக்குக் காரணம். (துருவுதல்-தேடுதல்)

மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியே தற்கால மதுரைநகர் வளர்ந்து பின் விரிவடைந்துள்ளது. தற்போது இருக்கும் சொக்கநாதர் கோவில் (இவ்வளவு பெரிதாக) கட்டப்பட்டதும், அதைச் சுற்றி வளர்ந்திருக்கும் நகரும் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலும் ஏற்பட்டவை என அறிகிறேன். கி.பி. 13 முதல் 16 ஆம் நூற்றாண்டுவரை மதுரை தில்லி சுல்தான்களின் ஆட்சியின்கீழ் இருந்ததாகவும், மாலிக் காபூர் மதுரையைத் தாக்குகையில் இங்கிருந்த கோவில்களைச் சிதைத்து, அவற்றிற்கு வழிவழியாக அரசர்கள் கொடுத்திருந்த செல்வங்களைக் கவர்ந்து சென்றதாகவும் சரித்திரம் சொல்கிறது. அவர்களே கோட்டைகளையும் தகர்த்திருக்கலாம்.

ஆனாலும் மதுரை மற்றும் 'ஏராளமாகத் தண்ணீர் ஓடுகிற' வைகையைப் பற்றியே முழுதும் பேசுகிறது தமிழின் தொன்னூலாகிய பரிபாடல் (சுமார் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு). அதிலே திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை ஆகியவையும் விவரிக்கப்படுகின்றன. திருமாலிருஞ்சோலைதான் இன்றைய அழகர்கோவில் (படத்தில் காண்க). இக்கோவிலைச் சுற்றிலும் நூறு ஏக்கர் பரப்பில் ஒரு பழைய நகரும், அந்த நகரைச் சுற்றிக் கோட்டையும் இருந்ததாகத் தெரிகிறது. அந்தக் கோட்டையின் மிச்சங்கள் இன்னும் காணப்படுகின்றன. கோவிலுக்குப் போகவேண்டுமென்றாலே கோட்டைவாயிலைக் கடந்தாக வேண்டும்.

இந்தக் கோட்டைதான் மதுரைக் கோட்டை என இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கூறப்பட்டதோ? இந்த சந்தேகம் ஏற்பட்டதற்குக் காரணம் சிலப்பதிகாரமும், பரிபாடலும் மதுரையைப் பற்றிச் சொல்லும் சில தகவல்கள்.

சிலப்பதிகாரத்தின் மதுரையில் சிவன், திருமால், பலராமன், முருகன் ஆகியோரின் கோவில்களும், அறச்சாலைகளும், அரசனின் அரண்மனையும் இருந்தனவாம்.

நுதல்விழி நாட்டத்து இறையோன் கோவிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோவிலும்

(சிலப்பதிகாரம்: ஊர்காண் காதை: அடிகள் 6-12)

[நுதல்விழி நாட்டத்து இறைவன் - நெற்றிக்கண் பார்வை உடைய சிவன்; உவணச் சேவல் உயர்த்தோன் - கருடக்கொடியை உடைய திருமால்; மேழி வலன் உயர்த்த - ஏரை ஆயுதமாக ஏந்திய பலராமன்; கோழிச்சேவற்கொடியோன் - முருகன்]

ஆனால் இவையெல்லாம் இருந்த மதுரை நகரை அடைவதற்குக் கோவலன் ஒரு கோட்டைவாயில் வழியே நுழையவேண்டியிருந்தது. கோட்டையைச் சுற்றி காவற்காடும், அகழியும் இருந்தது. யானகைள் வருவதற்காக நிலத்தின் அடியே ஒரு சுருங்கைப் பாதை (சுரங்கம்) அமைக்கப்பட்டிருந்தது. கோவலன் அதன் வழியே மதுரைக்குள் நுழைந்தான் என்று சொல்கிறது சிலப்பதிகாரம்:

பெருங்கரை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகி
(சிலப்பதிகாரம்: ஊர்காண் காதை: 64-65)

சிலப்பதிகாரம் சொல்லும் சிவன் கோவில் எது என்பதைத் தற்போதைக்குச் சற்றே யோசிக்கவேண்டாம். திருமாலின் கோவில் கள்ளழகர் கோவில்தான். பரிபாடல் எண் 15 'திருமால், பலதேவர் என்னும் இருவரையும் தொழுது' என்று சொல்கிறது. இன்றைக்கும் பலராமன் சன்னிதி உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் அங்கிருந்து இரண்டு மைல் மலைமேல் ஏறினால் பழமுதிர் சோலை இருக்கிறது. அதுமட்டுமல்ல, திருமலைநாயக்கரின் ஓர் அரண்மனை நாம் முன்னே சொன்ன கள்ளழகர் கோவில் இருக்கும் கோட்டைப்பகுதியில் இருந்திருக்கிறது. ஒருவேளை சிலம்புகூறும் பாண்டியமன்னனின் அரண்மனை இருந்ததும் அங்கேயேதானோ? ஆக சிலப்பதிகாரம் கூறிய திருமால், பலராமர், முருகன் ஆகியோரின் கோவில்களும், அரண்மனையும் அருகருகே இருந்ததைப் பரிபாடலும் காட்டுகிறது. விட்டுப்போனது சிவன்கோவில் மட்டும்தான். இப்போது கோவில் கோபுரத்தில் ஆங்கிலேயர்கள் இருப்பதை அந்நூல்கள் அறியமாட்டா. (படத்தில் காண்க)

பழமுதிர் சோலையின் மிக அருகே இருக்கிறது நூபுரகங்கை. இதை சிலப்பதிகாரமும் பரிபாடலும் 'சிலம்பாறு' என்று குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரம் சொன்னதுபோல யானை செல்வதற்கான சுருங்கை வழி ஒன்று இருந்ததையும் பரிபாடல் குறிப்பிடுகிறது:

நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து
கடுமா களிறு அணைத்துக் கைவிடு நீர்போலும்
நெடுநீர் மலி புனல் நீண்மாடக் கூடல்

(பரிபாடல் 20: அடிகள் 104-106)

நீண்ட சுரங்கப் பாதை வழியே வந்த கோபம்கொண்ட யானைகள் தம் தும்பிக்கை வழியே தண்ணீரைப் பீய்ச்சுவதுபோலும் மதுரைக்கோட்டையின் மேலிருந்து சலதாரைகள் வழியே நீர் விழுந்ததாம்.

இதைத் தவிர திருப்பரங்குன்றத்தில் ஒரு அருவி இருந்ததாகவும், அங்கே மதுரைவாசிகள் மிக உல்லாசமாகப் போய் நீராடியதையும் மிக விரிவாகச் சொல்கிறது பரிபாடல். அதைக் கேட்டுப் பெருமூச்சுத்தான் விடமுடிகிறது.

மதுரை மற்றும் திருமாலிருஞ்சோலை பற்றி நான் அறிய மிக உதவியாக இருந்தவை:
http://www.thisaigal.com/july04/tnkovilunicod.html
http://www.amutha.net/madurai/temple/01.htm

பிறகோட்டைகளைப் பற்றிப் பேசினால், செஞ்சி, புதுக்கோட்டை போன்ற பல இடங்களில் சற்றே காலத்தால் பிந்திய கோட்டைகள் காணக்கிடைக்கின்றன. ஆனால் 2000 ஆண்டுகளுக்குமுன் பேசப்படுபவை மண்மேடிட்டுப் போயிருக்கும் என்பது அதிக சாத்தியம். அவற்றைத் தொலையுணர்தல் (remote sensing) மூலம் இனங்காண முடியுமா என்று தெரியவில்லை.

தொலையுணர்தல் மூலம் காணப்பட்டதாகச் செய்தித்தாள்களில் வந்தவை: குஜராத் கடற்கரையில் சிறிது தூரத்தில் மூழ்கிக்கிடக்கும் துவாரகா நகர், கடலுக்கடியில் இலங்கைக்கு இராமபிரானால் போடப்பட்ட சேது. ஆனால் இன்றைக்கு முயற்சித்தால் கூகிள் தேடலில் இரண்டு செய்திகளுமே எனக்குக் கிடைக்க மாட்டேன் என்கிறது. நம்முடைய காலத்தில் அகழ்வு மற்றும் ஆராய்ச்சி நமது கொள்கைகளுக்கேற்ற ஆதாரங்கள் தேடுவதாக இருக்கிறதோ என்றும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.

ஆனால் நந்திதா கிருஷ்ணா (இயக்குநர், சி.பி. ஆர்ட் காலரி) ஒரு அகழ்வாய்வு நிபுணரின் சொற்பொழிவைப் பற்றிப் பேசுகிறார். அதிலே வட இந்தியாவில் 35 இடங்களிலே மகாபாரதம் சம்பந்தப்பட்ட அகழ்வுகள் நடந்து அவற்றில் ஏராளமான உடைந்த மண்பாண்டங்கள், அம்புநுனிகள், இரும்புப் பொருள்கள், இன்னும் பல சான்றுகள் கிடைத்ததாகவும் சொல்கிறார். அவர் எழுப்பும் கேள்வியும் இதுதான்: எல்லாம் கிடைத்தும் இவ்வாராய்ச்சிகள் காரணம் சொல்லாமல் நிறுத்தப்பட்டன. ஏன்? வேறு எந்த நாட்டிலேனும் இப்படித் தனது தொல்லிலக்கியம் பேசுகிறவற்றுக்குச் சான்று கிடைத்தால் அது மேற்கொண்டு தொடராமல் நிறுத்தப்படுமா? இந்தக் கட்டுரையும் முழுவதும் படித்தறியத் தக்கது: http://www.veda.harekrsna.cz/encyclopedia/krishna-archeology.htm

சேதுவைப்பற்றி (படத்தில் அமெரிக்க விண்வெளி நிறுவனம் NASA எடுத்த படம்) செய்தி எனக்குக் கிடைக்காவிட்டாலும் ஒரு பயணக்கட்டுரை இப்படிச் சொல்கிறது:

The most intriguing element here is the ancient underwater sandbank known as Adam's Bridge, which connects India to Sri Lanka. Geological evidence shows that an isthmus, which, according to temple records was breached by a violent storm in 1480, once bridged the gap. Some new pictures taken by a NASA satellite show this "bridge" in all its glory. The 30-km-long connection, which stretches across the Palk Strait, is actually a narrow and shallow ridge of sand and rocks connecting Mannar Island in Sri Lanka to Pamban Island in India.

கட்டுரையை முழுதும் படிக்க: http://www.the-week.com/23mar16/life12.htm

இராமரின் பாலம் Adam's Bridge ஆகிவிட்டதையும் கவனிக்கவேண்டும்.

ஒரு சில கோட்டைகளைப் பற்றிய சுவாரசியமான பவித்ராவின் கட்டுரைகள் படிக்க: http://pavithra.blogdrive.com/archive/cm-7_cy-2004_m-7_d-27_y-2004_o-5.html

எப்படியானாலும், விவரங்களையும் ஆதாரங்களையும் தெரிவிப்பதுதான் என் வேலை. அதைச் செய்துவிட்டேன். யார் எதை எப்போது தோண்டுகிற காலம் வரும், நிரூபிப்பார்கள் என்பதெல்லாம் நமது அறிவுக்கு எட்டுவதாக இல்லை.

July 31, 2004

எத்தனை ஜன்னல்கள்

'ஜ' என்ற எழுத்தில் தொடங்குவதிலிருந்தே நீங்கள் அது தமிழ்ச்சொல் அல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். மிகமிக அவசியமான அளவிற்கு மட்டுமே வடமொழி, உருது, பாரசீக அல்லது பிறமொழிச் சொற்களைக் கொள்வதனால் தமிழ் வளம்பெறும் என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது. ஆனால், அழகான பல சொற்களை ஓரங்கட்டிவிட்டு ஒரே ஒரு சொல் அங்கே வந்து உட்கார்ந்துவிடுமானால் அதில் எனக்கு வருத்தம் உண்டு. ஜன்னல் என்னும் போர்த்துக்கீசியக் கிளவி செய்த வேலை அதுதான்.

எத்தனைப் பழஞ்சொற்களை விலக்கிவிட்டு நாம் ஜன்னலையே பயன்படுத்துகிறோம் என்று பார்ப்போமா? அதிலும் எத்தனை நுட்பமான வித்தியாசங்களை இந்த நுவற்சிகள் காட்டுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.

காற்றுவாரி - கதவில்லாத சிறு சாளரம்; ventilator; window without shutters.
கானெறி -> கால் நெறி (காற்று வரும் வழி) - சாளரம்
திட்டி - சாளரம்
நுழை - பலகணி
பலகணி - சாளரம்
காலதர் - திட்டி
சாலேகம், சாலகம், சாலம் - latticed window (lattice என்பது உலோகம் அல்லது காறையால் பூவேலைப்பாடோ, குறுக்கும் நெடுக்குமாய் வடிவங்களோ அமைப்பது. படத்தில் காணப்படுவது)
நூழை - ஒருவகைச் சாலேகம்
கதிர்ச்சாலேகம் - இரும்புக்கம்பி பொருத்திய சாளரம்
பின்னற்சன்னல் - வலை பொருத்திய சாளரம்
குறுங்கண் - சிறிய துளைகளுடன் கூடிய அலங்காரச் சாளரம்; a kind of latticed window with small apertures;
குறுங்குடாப்பு - சாளரம் அல்லது கதவின் மேல், மழை வெய்யில் இவற்றிலிருந்து பாதுகாக்கும் தடுப்பு, sunshade
காற்றுவாரிப்பலகை - வீட்டின் முகட்டில் இருக்கும் சாளரத்தில் காற்றை நிறுத்த அல்லது அனுமதிக்கப் பயன்படும் மரக்கதவு; movable wooden shutter of a ventilator or of a window near the roof.
நேர்வாய்க்கட்டளை - பல அடுக்கு வீட்டின் மேல் அடுக்கில் வைக்கும் சாளரம்.
பசுக்கற்சன்னல் -> (பசுக்கல் + சன்னல்) - மரத்தாலான கதவுகளை உடைய சாளரம். [பசுக்கல் - பலகைகளை இணைத்தல்]
இலைக்கதவு - இலைபோல் மரத்தட்டுக்கள் தொடுக்கப்பட்ட கதவு; venetian door or window.

இப்போது பிளாஸ்டிக்கில் இலையிலையாக மறைக்கும் (அல்லது திறக்கும்) venetian blind-ஐ நாம் எல்லா இடத்திலும் பார்க்கிறோம். அதை இலைத்தட்டி என்று சொல்லலாம். முன்பெல்லாம் கோடைக்காலத்தில் வெட்டிவேர் என்ற நறுமணமுள்ள வேரால் செய்த ஒரு மறைப்பைப் பயன்படுத்துவார்கள். அதில் தண்ணீர் தெளித்தால், காற்று அதன் வழியே வரும்போது தண்மையும், வேரிகொண்டதாகவும் இருக்கும். (வேரி - நறுமணம்) அதை வெட்டிவேர்த் தட்டி என்பார்கள். எனவேதான் வெனீஷியன் பிளைண்டு நம்மைக் குருடாக்காமல் அதை இலைத்தட்டி என்று சொல்வது அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.

சந்தர்ப்பத்துக்கேற்பப் பயன்படுத்தியும், ஆரம்பத்தில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லையும் கொடுப்பதன்மூலமும் இச்சொற்களை மீண்டும் செலாவணிக்குக் கொண்டுவர முடியும். நிறையப் பொறுமையும், முயற்சியும் தேவை. அவ்வளவே. குறிப்பாக மேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துடன் தொடர்புகொண்டவர்கள் இப்பணியைத் தொடங்கினால் 'தமிழால் முடியும்' என்பது வெறும் பேச்சாக இல்லாமல், நடப்புச் சாத்தியம் ஆகும். தவிரவும் 'செம்மொழி' என்று மார்தட்டிக்கொள்ளும் பெருமையைவிட, மொழியின் செழுமையை மீண்டும் பயனுக்குத் தருவது நாம் நம் தாய்மொழிக்குச் செய்யும் பெருந்தொண்டாகும்.

அள்ள அள்ளக் குறையாது - 1

'அள்ள அள்ளக் குறையாது' என்னும் என் கட்டுரையைத் தமிழோவியத்தில் படியுங்கள்:
http://www.tamiloviam.com/unicode/secondpage.asp?fname=07290406&week=jul2904

July 25, 2004

குறும்(புப்) பாக்கள்

ஆங்கிலத்தில் எட்வர்டு லியர் பிரபலப்படுத்திய லிமரிக்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அவர் எழுதும் முன் அவை Nonsense rhymes என்றே அறியப்பட்டன. மிக வேடிக்கையாக இருக்கும். இதன் தற்போதைய வடிவில் 5 அடிகள், அதில் 1,2,5 ஆம் அடிகளிலும், 3,4 ஆம் அடிகளிலும் rhyme ஆகும். இதைத் தமிழில் இயைபுத்தொடை என்று சொல்லுவார்கள்.

இது ரொம்பச் சரளமான வடிவம். நகைச்சுவை ததும்ப எழுதவேண்டியது. தமிழில் குறும்பா என்று சொல்லுவார்கள். எனக்கு இதைக் குறும்புப்பா என்று சொன்னாலும் சம்மதம். மடற்குழுக்களிலும், வலைப்பூக்களிலும் ஒரே சச்சரவு செய்துகொள்ளுகிறவர்களாகிவிட்டோமோ என்று தோன்றுகிறது. எனவே கொஞ்சம் மனநிலையை இலகுவாக்க என் பங்குக்குக் கொஞ்சம் குறும்பாக்கள்:

சின்னசாமி நகம்ரொம்ப நீட்டம்
கின்னசுலே போடணுமாம் நாட்டம்
பொண்ணுபாக்கப் போனா
நடுங்கிப்புட்டா மீனா
நகத்தைப்பாத்து உட்டாளய்யா ஓட்டம்!

சினிமாவில் நடிக்கவந்தா சின்னா
பேரைமட்டும் மாத்திக்கிட்டா 'டின்னா'
வெற்றிவிழா கண்டா
ஆகிவிட்டா குண்டா
வெளயாட்டா கனவு(க்)கன்னி யின்னா!

பாத்திடத்தான் பரமசிவம் குட்டை
கராத்தேயில் பலவண்ணப் பட்டை
சண்டைபோட்ட கிட்டு
தலையிலொரு தட்டு
கொடுத்ததுமே 'விக்'எகிற மொட்டை!

ஏட்டையா ஓடுவது பிந்தி
ஏனுன்னா பெரிசுகொஞ்சம் தொந்தி
ஒரேயொரு நாளு
ஓடுனாரு ஆளு
பாத்தாக்கக் கலியாணப் பந்தி!

நாயிபூனை வளத்திடுவா அல்லி
நல்லவார்த்தை அன்போட சொல்லி
பிராணிக்கெல்லாம் தோழி
பெண்ணரசி வாழி!
நடுங்கினாளாம், சுவத்திலதான் பல்லி!

எத்தனையோ பொண்ணை(ப்)பாத்துப் புட்டான்
எங்கஊரு வாத்தியாரு கிட்டான்
சாளேசுரம் கண்ணுல
கல்யாணமே பண்ணல
த்ரிஷாவுக்காக் காத்திருந்து கெட்டான்!

கவிஞரையா எழுதினாரு பாட்டு
கச்சிதமா வார்த்தையெல்லாம் போட்டு
மைக்குமுன்னே நின்னு
வாய்தொறந்தா ருன்னு
எல்லாருமே உட்டுட்டாங்க ஜூட்டு!

அய்யாகம்பை எடுத்துப்புட்டா கையிலே
அடிவிழுமே கைமுகம்தொ டையிலே
அடிச்சுட்டுப்போ கட்டும்
திட்டினாதான் கஷ்டம்
வாய்நெறய கும்பகோணம் போயிலே!

இதைப் பார்த்தபின் எல்லோரும் எழுதிக் குவிக்கலாமே. வாருங்கள் மரபிலக்கியத்துக்கு. சுட்டி வலதுகைப்பக்கம்.

July 13, 2004

கண்ணாடி சொல்லும் கதைகள் - 4

எனது கண்ணாடி சொல்லும் கதைகளின் முதல் 3 பகுதிகளைப் படித்துவிட்டு, தமிழ்ச் சொற்பிறப்பியல் அறிஞரான இராம.கி. அவர்கள் ராயர் காபி கிளப்பில் முன்வைத்த கேள்வியும் அதற்கான என் மறுமொழியும்:

பளிங்கு என்பதைக் கண்ணாடி என்றே பொருள் கொள்ள முடியுமா என்ற கேள்வி எனக்கு உண்டு. மறுபளிக்கின்ற reflecting) பரப்பைக் கொண்ட எல்லா மண்ணூறல்களுமே (minerals) பளிங்குதான் என்றே நான் விளங்கிக் கொள்ளுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.


மறுபளிக்கும் எல்லாப் பொருள்களுமே பளிங்குதான் என்ற உங்கள் எண்ணத்துக்கு ஊற்றம் தராதவை இவை:

1. முன்பே கூறியது: பளிங்கு என்ற சொல் சலவைக்கல் என்ற பொருளில் இலக்கியங்களில் ஆளப்படவே இல்லை.

சலவைக்கல்லுக்கான பிற சொற்கள் - வெண்கல், வெள்ளைக்கல் என்பவையே. இவையும் OTL-இல் கிடைத்தனவே அன்றி இலக்கிய ஆட்சி கிட்டவில்லை. மதூர்க்கல் என்பதாக ஒரு கருப்பான, மிகப்பளபளப்பான சலவைக்கல் இருப்பதாகவும் தெரிகிறது.

2. முகம்பார்க்கும் கண்ணாடி: இதற்குத் தமிழில் படிமக் கண்ணாடி, பாண்டில் ஆகிய சொற்கள் இருந்தன. பாண்டில் என்பது மிகப்பழைய சொல். இதைப் புறப்பொருள் வெண்பாமாலையில் (6-12) காணமுடிகிறது. ஆடி என்ற சொல் பிரதிபலிக்கும் கண்ணாடியைக் குறித்தது என்பதைக் குறுந்தொகைப் பாடலில் இருந்து ஹரிகிருஷ்ணன் சுட்டியுள்ளார்.

கண்ணாடிவிடு தூது என்னும் 18-ஆம் நூற்றாண்டுப் பாடல் தர்ப்பணம், முகுரம், கஞ்சனம், அத்தம், படிமக்கலம், ஒளிவட்டம் ஆகிய சொற்களைத் தருகிறது. இதிலும் பளிங்கு என்ற சொல்காணப்படவில்லை.

யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதியில் புவனமெண்வச்சிரம் என்ற சொல் இருந்திருக்கிறது. அதாவது "உலகம் வைரம் என்று எண்ணுகிறது" என்று பொருள்படுகிற இது கண்ணாடிப் படிகத்தைத்தான் குறித்திருக்கிறது.

3. இப்போது 'திருப்பாவை' தரும் அழகான தட்டொளி என்னும் சொல். இது உலோகத்தைப் பளிக்கிய கண்ணாடி. தாமிரமும், வெள்ளீயமும் இன்னும் சில இரகசிய உலோகங்களையும் கலந்து செய்யும் இக்கண்ணாடி உலக அதிசயம். கேரளத்தில் பம்பையாற்றின் கரையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு மட்டுமே இக்கலை தெரியுமாம். சுட்ட களிமண்ணை மிக நுண்மையான பொடியாக்கி அதில் விளக்கெண்ணெய் சேர்த்து (யார் சொன்னது விளக்கெண்ணெய்க்கு வேறு பயன்கள் இல்லையென்று!) அந்தக் கலவையால் உலோகத் தட்டின் ஒருபுறத்தைப் பளபளப்பேற்றுவார்கள். இதற்கு 24-இலிருந்து 48 மணிநேரம் வரை ஆகலாம். இங்கே பக்கத்தில் காணப்படுவது உலோகக் கண்ணாடியே.

எனக்குக் கிட்டிய ஆதாரங்கள் உங்கள் பூட்கையை மெய்ப்படுத்தவில்லை. ஆனால் OTL பளிங்கு என்பதற்கு முகம்பார்க்கும் கண்ணாடி என்ற பொருளையும் தருகிறது. எனவே மறுபளிக்கும் கண்ணாடியை (reflecting mirror) பளிங்கு என்று குறிக்க முற்பட்டது பிற்கால வழக்காகத்தான் இருக்கவேண்டும்.

ஆயினும் நான் முதலில் எழுதிய கட்டுரையின் நோக்கம் mirror-பற்றிப் பேசுவது அல்ல. படிகக்கண்ணாடி என்ற வகைக் கண்ணாடி (1) நெடுநாட்களாகவே இந்தியாவில் அறியப்பட்ட ஒன்று (2) இதைப் பலவகையிலும் பயன்படுத்த இந்தியர் அறிந்திருந்தனர் என்று கூறுவதும் அதற்கான சான்றுகளைத் தருவதுமாகவே இருந்தது. திருக்குறளில் நான் சொன்னதுகூட அந்த இடத்தில் மறுபளிக்கும் கண்ணாடி என்பது பொருந்தாது, ஊடுருவும் கண்ணாடி என்று கொள்வதே குறளின் பொருளைத் தெளிவாக்கும் என்பதற்காகவே. 'உள்ளே இருப்பதை வெளியே காட்டுகிறது' என்று சிந்தித்தாலே என் விளக்கம் அதிகப்பொருத்தம் என்பது புரியும்.

இந்தக் கோணத்தில் சிந்திக்கவைத்தமைக்கு நன்றி. கதவைத் திறந்தே வைக்கிறேன். இன்னும் சான்றுகள் கிட்டலாம். அப்போது மீண்டும் பேசுவோம்.

July 07, 2004

கண்ணாடி சொல்லும் கதைகள் - 3

கண்ணாடி சொல்லும் கதைகள் - 1 கண்ணாடி சொல்லும் கதைகள் - 2

"பளிங்குச் சொரிவு அன்ன பாய் சுனை", அதாவது கண்ணாடியை உருக்கி ஊற்றியது போலச் சுனையின் நீர் பாய்ந்து வருகிறது, என்று பத்துப்பாட்டில் ஒன்றான கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு சொல்கிறது. இதுவும் சங்ககாலத்து நூல் என்பதைப் பார்க்கவேண்டும்.

ஆகவே இதுவரையில் நமது பழநூல்கள் எல்லாமே பளிங்கு அல்லது பளிக்கு என்பதை படிகக் கண்ணாடி (crystal glass) என்றே கொண்டிருப்பதைக் கண்டோம். அது எங்குமே முகம்பார்க்கும் கண்ணாடி (mirror) என்ற பொருளில் பயன்படுத்தப் படவில்லை. அதே சங்க காலத்தவரான திருவள்ளுவரும் இச்சொல்லை நாம் கண்ட பொருளிலேயே தான் பார்த்திருக்கவேண்டும் என்று நினைக்கும்போது, நமக்குப் பெரிதும் பழக்கமான

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
(குறள் - 706)

என்ற குறளுக்கு ஒரு புதிய, தெளிவான, துல்லியமான பொருள் விளங்குகிறது. நாம் பளிங்கு என்றதும் முகம்பார்க்கும் கண்ணாடி அல்லது சலவைக்கல் என்றே தற்போது புரிந்துகொள்கிறோம். அதாவது "ஒரு பளபளப்பான சலவைக்கல்லில் அல்லது கண்ணாடியில் அதனருகே இருப்பது பிரதிபலிக்கிறது. அதேபோல ஒருவன் மனத்தில் கோபம் வருமெனின் அதை முகம் பிரதிபலிக்கும்" - இவ்வாறே நாம் புரிந்துகொள்கிறோம். இதிலே நாம் பொதுவாக இரண்டு தவறுகள் செய்கிறோம். ஒன்று 'பளிங்கு' என்பதைப் புரிந்துகொள்வதில். இதைத் தவறாகப் புரிந்துகொண்டதால் வரும் தவறு 'காட்டும்' என்பதற்குப் 'பிரதிபலிக்கும்' என்று கொண்ட பொருள்

நாம் இதுவரையில் விவரித்தபடி பளிங்கு என்ற சொல்லை ஒளி ஊடுருவும் படிகக் கண்ணாடித் தகடு என்ற பொருளில்தான் நமது பழைய இலக்கியங்கள் பயன்படுத்தி இருக்கின்றன.

அடுத்து நாம் செய்யும் தவறு, 'கடுத்தது' என்று சொல்லுக்குக் 'கோபம் கொண்டது' என்று பொருள் கொள்ளுதல். ஏன், ஒருவேளை அவன் மகிழ்ந்தாலோ அல்லது அஞ்சினாலோ அதை முகம் காட்டாதா? 'கடுப்பு' என்பதற்கு 'மிகுதல்' என்றும் பொருளுண்டு. ஆகவே, அவன் மனதில் அதிகமாய் ஏற்பட்ட உணர்வு எதுவோ அதுதான் 'கடுத்தது'.

வள்ளுவனின் மனத்தைக் காண்பதில் மிக வல்லவரான பரிமேலழகர் சொல்லும் பொருள் இவ்வாறு: "தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்குபோல, ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும்." இவ்விளக்கத்தில் பரிமேலழகர் செய்தது ஒரே ஒரு தவறுதான் - 'பளிங்கு' என்பதற்குப் படிகம் என்று மட்டுமே பொருள் கண்டது. படிகம் தட்டையானதல்ல, ஒரு மணிபோன்ற வடிவம் கொண்டது. அதனருகில் ஒரு சிவப்பான பூ இருந்தால் படிகத்தில் சிவப்பு நிறம் தெரியும். ஆனால் அதன் வழியே பூவின் வடிவம் தெளிவாகத் தெரியாது.

ஆனால், நம்முடய பளிங்கிலோ மணிமேகலையில் சொன்னாற்போல "விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்", அதாவது ஒலிதான் வெளியே கேட்காது, உருவம் தெரியும். எனவே பரிமேலழகரும் வள்ளுவனின் மனம் காணவில்லை. 'அடுத்தது' என்பதற்கு 'பளிங்கின் மறுபுறத்திலிருப்பது' என்று பொருள். 'காட்டும்' என்றால் மறுபுறமிருந்த மணிமேகலையை உதயகுமாரன் பார்த்ததுபோல் முழுமையாகக் காட்டும் என்றுதான் பொருளே தவிர, 'அதன் நிறத்தை மட்டும் காட்டும்' என்று பொருள் அல்ல. "பளிக்குத் தகட்டின் அப்புறம் இருப்பது இப்புறம் தெரியும். அதேபோல, உள்ளத்தின் உள்ளே மிகுவது முகத்தின் வழியே வெளியே தெரியும்" என்பதுதான் இக்குறளின் சரியான பொருள்.

இக்கட்டுரையில் நான் கொடுத்திருக்கும் பளிங்கு பற்றிய இலக்கியக் குறிப்புகள் இதுவரையில் யாராலும் ஆய்ந்து சொல்லப் பட்டவையல்ல. கிரேக்க நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பிளைனி என்பவர் (கி.பி. 23-79) "இந்தியாவில் பார்ப்பது போல உலகில் வேறெங்கும் கண்ணாடியைப் பார்க்கமுடியாது, ஏனென்றால் படிகத்தை உடைத்துச் செய்யப்படுவது இது" என்று சொல்லியிருக்கிறார். இதைச் சொல்லும் ஆலன் மக்·பார்லேன் என்பவர் "இந்தியாவில் பழமையான கண்ணாடிப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார். குறிப்பாக "கண்ணாடியின் பிறப்பிடமான மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அருகில் இருந்தும்கூட இந்தியாவில் கண்ணாடித் தொழில்நுட்பம் செழிக்கவில்லை. கிறித்துவுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணாடி செய்யத் தெரிந்த இந்தியர் கண்ணாடியில் வளையலும், மணிகளும் மட்டுமே செய்தனர்" என்கிறார்.

அரிக்கமேடு ஒரு காலத்தில் கண்ணாடி மணிகள் செய்வதில் முன்னோடியாக இருந்தது என்று சுவேவா லுச்சியோலா (Sveva Lucciola) என்னும் அம்மையார் கூறுகிறார். கி.மு. 400 முதல் கி.பி. 1600 வரை சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலம் கண்ணாடி மணிவகைகளைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்வதில் முன்னோடியாக அரிக்கமேடு இருந்ததை அவர் மிக வியப்போடு குறிப்பிடுகிறார். இதுவும் பெருமைப்படத் தக்கதே. ஆனால் நாம் அத்தோடு நிற்கவில்லை என்பதே என் வாதம்.

தமிழ் இலக்கியங்கள் கூறும் சான்றுகளின் படி கண்ணாடியினாலே மாளிகைகள், மாடங்கள், அகழியின் உட்புறத் தளங்கள் என்று பலவகையிலும் செய்யும் அளவுக்கு இந்தியர் முன்னேறியிருந்தார்கள் என்பதைக் காட்டினேன். அவர்கள் விவரிக்கும் பாங்கிலிருந்தே இவை வெறும் கவிஞர்களின் அதீதக் கற்பனையல்ல என்று புரிந்துகொள்ளவேண்டும். அதிலும் பளிங்கில் இத்தகையன செய்யலாம் என்பதை இந்திய நாடு இத்தனைப் பழங்காலத்தில் அறிந்திருந்தது என்பதையும் கண்ணாடியைப் பற்றிப் பேசும் பிறநாட்டினர் யாரும் சொல்லவில்லை. இதைப் படிக்கும் எவரேனும் இந்த இலக்கியச் சான்றுகளோடு, நமது அறிவியல் மேன்மையை உலக அரங்கில் நிறுவமுடியுமென்றால் நான் மிக மகிழ்வேன்.

July 06, 2004

கண்ணாடி சொல்லும் கதைகள் - 2

கண்ணாடியின் வரலாற்றைப் பார்த்தால், கிறிஸ்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்குமுன் தழைத்த மீசோபொடாமியா (Mesopotamia - இதை மெசபடோமியா என்று உச்சரிப்பது தவறு) நாகரிகத்தில் கண்ணாடிப் பொருட்கள் காணப்பட்டனவாம். எகிப்து நாட்டில் கி.மு. 3500-இல் புழங்கிய பளிங்குச் சாமான்கள் கிடைத்துள்ளன. ஆனால் கண்ணாடியின் வரலாற்றில் இந்தியாவின் பெயர் இல்லை. ஏன் என்பது சிந்தனைக்குரியது. இப்போதிருக்கும் பதின்ம எண் வரிசை இந்தியாவில் தோன்றியதாக இருக்க, அதை 'அராபிய எண்கள்' என்று உலகம் சொல்லிவருவதைப் போன்றது.

சரி, வெறும் கண்ணாடி மாளிகைகள்தாம் இந்தியாவில் கட்டினார்களா? இல்லை வேறு பொருள்களும் செய்யப்பட்டனவா? கம்பராமாயணம் மது அருந்துவதற்கான கண்ணாடிக் கிண்ணத்தைக் குறிப்பிடுகிறது. இரண்டு வகைக் கிண்ணங்கள் பேசப்படுகின்றன:

பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறுந் தேறல் மாந்தி

(மிதிலைக்காட்சிப் படலம்: பாடல்-14)

[படிகக் கண்ணாடி வட்டிலில் வார்த்த மணமுள்ள, பசுங்கள்ளை அருந்தி]

கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி


(உண்டாட்டுப் படலம்: பாடல் -17)

[மணி வட்டிலில் இருக்கும் கள்ளில் காணும் தன் போதையேறிய முகத்தைப் பார்த்து, வானத்தில் இருந்த நிலா மது அருந்தும் ஆசையால் வட்டிலுக்குல் விழுந்ததோ என்று எண்ணி..]

வள்ளம் என்பது உண்ண அல்லது பருகப் பயன்படும் கிண்ணம் அல்லது வட்டில். முதல் பாடல் வரியில் வரும் பளிக்கு வள்ளம் புரிகிறது. அது என்ன மணி வள்ளம்? சாதாரணமாக, மணி என்பது நவமணிகளையும், முத்தையும் குறிக்கும். இதே படலத்தில் கம்பன் மதுவருந்தத் தங்கக்கிண்ணங்களைப் பயன்படுத்தியதாகவும் சொல்கிறான். மணிகளைப் பதிப்பதானால் அதிலேதான் பதிக்கவேண்டும். அதைத் தவிர மீண்டும், மீண்டும் பல பாடல்களில் மணி வள்ளம் என்கிறானே. மணி என்பதற்குப் படிகம் (crystal) என்றும் பொருள் உண்டு. நாம் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியைப் பார்த்தால் பளிக்கறை என்பதற்கு Crystal Palace என்ற பொருளைப் பார்க்கலாம். இப்போதும் உயர்தரக் கண்ணாடியால் செய்யப்பட்ட கெட்டியான கண்ணாடிக் கோப்பை முதலியவற்றைக் 'கிரிஸ்டல்' (படிகக் கண்ணாடி) என்றே வழங்குவதை அறிந்திருக்கலாம். இவை சாதாரணக் கண்ணாடியால் செய்யப்பட்ட பாண்டங்களை விட விலை உயர்ந்தவை.

இதை நான் சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. கம்பன் இராமாயணத்தை எழுதிய காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்று பெரும்பாலும் சொல்கின்றனர். சிறுபான்மையினர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு என்கின்றனர். ஆனால் படிகக் கண்ணாடி (Crystal glass) முதன்முதலில் தயாரிக்கப்பட்டது 1765-இல் என்று சரித்திரம் சொல்கிறது. அப்படியானால் இந்தியா இதனை முதலிலேயே அறிந்து, பயன்படுத்தியது என்பதைப் பிறநாட்டு வரலாற்றறிஞர் அறியவில்லை என்றுதானே பொருள்? கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த பிளைனி என்ற கிரேக்க அறிஞர் இந்தியாவில் படிகக் கண்ணாடி இருந்ததாகச் சொல்வதைப் பின்னால் பார்க்கப் போகிறோம்.

நான் முன்னரே கூறிய கி.மு. 5000-இல் கண்ணாடியால் அம்புநுனிகள், கத்திகள் ஆகியவையும் செய்யப்பட்டதாக வரலாறு சொல்கிறது. எரிமலைக் குழம்பு உறைவதால் ஒருவகைக் கருப்பான கண்ணாடி இயற்கையிலேயே கிடைக்கும். இதை 'Obsidian' (ஆப்சிடியன்) என்பார்கள். இந்தக் கண்ணாடியாலேயே ஆதிகாலக் கருவிகள் செய்யப்பட்டனவாம். ஆனால், அவ்வாறல்லாது நல்ல படிகக் கண்ணாடியாலே செய்த நுகத்தடி பொறுத்திய தங்க ஏரினால் வேள்விக்கான நிலத்தைத் திருத்தும்போதே சிவதனுசோடு, சீதாப்பிராட்டியாரை உள்ளே வைத்த பேழை கிடைத்ததாக இராமாயணம் சொல்கிறது.

இரும்பு அனைய கரு நெடுங்கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து


(கார்முகப் படலம்: பாடல்-16)

[பெரிய கருப்பான இரும்புபோன்ற கொம்புகளை உடைய காளைச் சோடியின் புடைத்த பெரும் கழுத்தில் பளிங்கினாலான நுகத்தடியைப் பிணைத்து...]

அயோவா மாநிலப் பல்கலைக் கழகம் வலையில் பதிப்பித்திருக்கும் கண்ணாடியின் வரலாற்றின் படி கி.மு. 12000-த்திலேயே நீர்க்குடுவைகள், குப்பிகள் மற்றும் ஜாடிகளிலிருந்து நீர் ஒழுகாதிருக்கும் பொருட்டுச் சீனாக் களிமண் பூச்சுப் போன்றதொரு கண்ணாடிப் படலத்தைப் பூசினர் என்று தெரியவருகிறது. இத்துடன் ஒப்பிடத்தக்க ஒன்றைக் கம்பராமாயணத்தில் பார்த்தபோது எனக்கு வியப்புத் தாங்கவில்லை.

அயோத்தி மாநகரத்தைச் சுற்றி ஒரு மதிற்சுவர் இருந்தது. அதற்கு வெளியே செயற்கையாக அமைத்த அகழி ஒன்று இருந்தது. அகழியின் வெளிப்புறச் சுவர் வெள்ளியாலே அமைக்கப்பட்டிருந்தது. உள்புறம் முழுவதும் முதலில் தங்கத் தகட்டினால் பாவப்பட்டிருந்தது. தகட்டின்மேல் முன் சொன்னதுபோலப் படிகக் கண்ணாடிப் பூச்சு ஒன்று தரப்பட்டிருந்தது.

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளிகட்டி உள்ளுறப்
பளிங்கு பொன்தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்
தளிந்த கல்தலத்தொடு அச்சலத்தினை தனித்துற
தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே


(நகரப்படலம்: பாடல்-20)

இப்படி அமைத்ததாலே இரண்டு பயன்கள். ஒன்றைக் கம்பனே சொல்கிறான். இந்த அகழி கற்பாறைகளால் ஆன கோட்டையின் அருகே இருக்கிறது. கோட்டைக்கும் அகழிக்கும் இடைப்பட்ட பகுதியிலும் கருங்கல் தளம் உள்ளது. மேலே சொன்னதுபோல் அமைத்த அகழி ஒரு செம்மையாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே செயல்படும். எனவே கோட்டையின் கற்கள் அதில் தெரியும். அப்போது தூரத்திலிருந்து வருகின்ற எதிரிப் படையினருக்கு அகழிநீர் தெரியாது. கருங்கல் தளத்தின் தொடர்ச்சியாகவே தோன்றும். "தளிந்த கல் தலத்தொடு அச் சலத்தினைத் தனித்துறத் தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே" என்கிறான் கம்பன். அகழிநீரையும், கருங்கல் தரையையும் இனம் கண்டு பிரித்துச் சொல்லத் தேவராலும் முடியாதாம்!

அடுத்த பயன் கம்பன் சொல்லாதது. அகழி செயற்கையானது. அதற்கு நீரை நிரப்பியாக வேண்டும். அவ்வாறு நிரப்பிய நீர் இரண்டு வழிகளிலே வீணாகும். ஒன்று, பூமி இழுத்துக் கொள்ளும். இரண்டாவது, சூரிய ஒளியில் ஆவியாகிப் போகும். முன்பே நீர்க்குடுவை, குப்பி ஆகியவற்றுக்குச் சொன்னதுபோல் இந்தக் வலுவான கண்ணாடிப் பூச்சு நீர் ஒழுகிப்போக முடியாது தடுக்கும். மேலும் அகழியே ஒரு கண்ணாடி போலப் பளபளப்புடன் இருப்பதால், சூரிய ஒளி பெரும்பாலும் பிரதிபலிக்கப்பட்டு, நீர் வெம்மையாவதையும் குறைக்கும். அப்போது ஆவியாதல் மட்டுப்படும்.

இன்னும் உண்டு...

கண்ணாடி சொல்லும் கதைகள் - 1

இப்போதெல்லாம் பெருநகரங்களில் இருக்கும் வானுயர மகாவணிகக் கட்டிடங்களின் முன்புறம் முழுக்கக் கண்ணாடியால் மினுங்குமாறு கட்டப்படுகிறது. ஆனால் அவை ஒருவழிப் பார்வை கொண்டவையாய் உள்ளன. வெளியே இருப்பவருக்கு உள்ளிருப்பது தெரியாது. உள்ளே மெல்லிய வெள்ளீயப் படலம் கொண்ட மிதவைக் கண்ணாடி (float glass) வகையைச் சேர்ந்தவை அவை.

ஆனால் அவ்வாறில்லாமல் நிறமற்ற கண்ணாடியாலேயே அறை கட்டியிருந்ததை தமிழ்க் காவியமான மணிமேகலை விவரிக்கிறது. மாதவியின் மகளான மணிமேகலை, புத்தமதத்தை மேற்கொண்டு, துறவறம் பூண்டு, தன் தோழி சுதமதியோடு உவவனம் என்ற மலர்வனத்துக்குச் செல்கிறாள். அவள் மீது மிகவும் காதல் கொண்டிருக்கிறான் உதயகுமாரன். இவன் கரிகாற் சோழனின் வழிவந்த அரசகுமாரன். வழியிலே எட்டிகுமாரன் என்பவன் மூலம் மணிமேகலை உவவனம் போயிருக்கிறாள் என்பதை அறிந்து, அங்கே போய் அவளைத் "தேரில் ஏற்றிக்கொண்டு வருவேன்" என்று சொல்லிப் போகிறான்.

அவன் தேரொலி கேட்டதுமே அவளைச் சுதமதி பளிக்கறை என்னும் கண்ணாடி அறையில் வைத்துத் தாழிட்டுவிடுகிறாள். அந்தப் பளிக்கறை எப்படிப்பட்டது தெரியுமா?

விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதனுள்


(மலர்வனம் புக்க காதை: 63-64)

[விளிப்பறை போகாது - அழைத்தால் அது அறைக்கு வெளியே கேட்காது; மெய் புறத்து இடூஉம் - உருவத்தை வெளியே காட்டும்; பளிக்கறை - பளிங்கு அறை, கண்ணாடி அறை]

"அந்தக் கண்ணாடியறைக்கு வெளியே இருந்து பார்ப்பவர்க்கு உருவம் தெரியும், ஆனால் ஒலி வெளியே கேளாது". எனவே இந்தப் பளிக்கறை வெறும் கவிஞனின் கற்பனையல்ல. மிகத் துல்லியமாகக் கண்ணாடியறையின் தன்மை சொல்லப்படுகிறது.

உதயகுமாரன் வந்து தேடுகிறான். பளிக்கறைக்குள் பேரழகோடு பவழத்தால் செய்த பதுமை ஒன்று இருப்பதுபோல அவனுக்குத் தெரிகிறது. பிறகு மணிமேகலைதான் அது என்று உணருகிறான். அவனுக்கு அவசரம். ஒன்றுபோலக் கண்ணாடித் தகடாக இருக்கும் அந்தச் சுவற்றில் அவனால் தாழ்ப்பாள் எங்கே இருக்கிறது என்றுகூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை. கையால் தடவிப்பார்க்கிறான். பயனில்லை.

காவி அங்கண்ணி ஆகுதல் தெளிந்து
தாழொளி மண்டபம் தன் கையிற் தடைஇச்
சூழ்வோன்


(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை: 8-10)

[குவளைமலர் போல அழகிய கண்களை உடைய மணிமேகலைதான் அது என்பதைத் தெரிந்துகொண்டு உதயகுமாரன் தன் கையாலே தடவி மண்டபத்தின் தாழ்ப்பாளைத் தேடுகிறான்.]

கண்டுபிடிக்க முடியவில்லை. அவனால் தாழ்ப்பளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் என்ன பொருள்? தாழ்ப்பளையும் கண்ணாடிப் பொருளாலே செய்திருக்கிறார்கள் என்பதுதானே!

இதே போல சித்திரகூட மலைமீது அமைந்த ஒரு பளிக்கறையைப் பற்றி கம்பராமாயணம் சொல்கிறது. இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் சித்திரகூட மலையின் அழகை இரசித்தவாறு செல்லுகையில் இராமன் இவ்வாறு சொல்கிறான்:

அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும்
களிப்பு இல் இந்தியத்து யோகியைக் கரக்கிலன் அதுபோல்
ஒளித்து நின்றுளர் ஆயினும் உருத் தெரிகின்ற
பளிக்கு அறைச் சில பரிமுக மாக்களைப் பாராய்


(அயோத்தியா காண்டம்: சித்திரகூடப் படலம்: பாடல் 11)

"இறைவன் மாயைக்குள்ளே தன்னை ஒளித்துவைத்துக் கொண்டிருந்தாலும், புலன்களால் வரும் சுகங்களை ஒதுக்கிய ஞானியருக்கு அவன் தன்னை ஒளித்துக்கொள்வதில்லை. அதுபோலத் தம்மை ஒளித்துக் கொள்ளமுயன்றும், வெளியே உருத்தெரிகின்ற பளிக்கறைக்குள் இருக்கும் கின்னரர்களைப் பார்" என்று இராமன் சொல்கிறான். கின்னரர் என்பவர் குதிரைத் தலையும் மனித உடலும் கொண்டவர். (ஆங்கிலத்தில் centaur என்று அழைப்பதன் தலைகீழ் இணைப்பு. 'Harry Potter and the Sorcerer's Stone' பார்த்திருந்தால் அதில் குதிரை உடலும் தலைப்பகுதியில் இடுப்பிலிருந்து தொடங்கும் மனிதனுமான உருவத்தைப் பார்த்திருக்கலாம்.)

இக்காலத்தில் நாம் பளிங்கு அறை என்றால் சலவைக்கல்லால் கட்டிய அறை என்று புரிந்துகொள்கிறோம். சலவைக்கல் என்பது சுண்ணாம்புக்கல்லின் வேறொரு பவுதீக வடிவம். நாம் தூய வெள்ளைக் கற்களையே சலவைக்கல் என்றாலும், பிற தனிமங்களின் கலப்பால் வெவ்வேறு நிறமும், கோலங்களும் படிந்த சலவைக்கற்களும் உண்டு. சலவைக்கல்லால் ஆனதொரு சிம்மாசனம் 'பாண்டுகம்பளம்' என்ற பெயரில் இந்திரனிடத்து இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 'பாண்டு' என்றால் வெண்மை. பாண்டவர்களின் தந்தைக்கு வெண்குஷ்டம் இருந்தது என்பதாலேயே அவன் பெயர் வந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் சலவைக்கல்லுக்கு ஒளி ஊடுருவும் தன்மை கிடையாது. எனவே இந்தக் கட்டுரையில் காணும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பளிங்கு என்ற சொல்லுக்கு சலவைக்கல் என்று பொருள் வராது.

ஆனால் முன்னரே நாம் பார்த்தது போல, பளிங்கு என்பது கண்ணாடி. அதிலும் ஒரு மாளிகை கட்டுமளவுக்குத் தடிமனும் உறுதியும் வாய்ந்த கண்ணாடிகளை இந்தியாவில் செய்தனர் என்பது வியப்பான செய்தி.

இன்னும் உண்டு...

June 25, 2004

உ.வே.சா.வின் விளாங்காய்க் கதை

ஒரு ஆசாமி நிறையச் சம்பாதித்தான். நன்றாகத் தனக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தான். எல்லாம் இருந்தும் அவனுக்கு இல்லாதது ஒன்றே ஒன்றுதான்: தருமகுணம். கடற்கரைக் காக்காய்க்குச் கடலைபொறி போடாத கருமி அவன்.

அந்தக் காலத்தில் வங்கி கிடையாது. இவனிடமோ ஏராளமாகப் பொற்காசுகள். செல்வம் 'பெற்றான் பொருள் வைப்புழி' என்று வள்ளுவர் சொல்லியிருக்கும் வங்கியாகிய பசியால் துடிக்கும் வறியவரின் வயிறுபற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதில் நம்பிக்கையில்லை. வயதாகிவிட்டது. ஒரு துணியில் தங்கக் காசுகளை முடிந்து, தன்வீட்டு மண்சுவரில் ஒரு ஓட்டை செய்து, அதில் உள்ளேவைத்துப் பூசிவிட்டான். அவனுக்கு உங்களைப் போல ஒரு நல்ல நண்பன் இருந்தான். அவன் மட்டும் விடாமல் "தர்மம் செய், அதுதான் கடைசி வரையில் உன்னைப் பாதுகாக்கும், உன்னோடு கூடவரும்" என்று சொல்லியபடியே இருப்பான்.

அந்திமக் காலம் வந்தது. நோயிலும் பாயிலும் விழுந்தான் கிழவன். மரணத் தறுவாய். எங்கெங்கோ இருந்த மக்கள் எல்லோரும் வந்து தந்தையின் படுக்கை அருகே நிற்கிறார்கள். அவனது ஆசையை நிறைவேற்றவேண்டுமே. அப்பனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு உபசரிக்கிறார்கள், நச்சரிக்கிறார்கள்.

திடீரென்று கிழவனுக்கு நண்பன் அறம் செய்யச் சொன்னது நினைவுக்கு வந்தது. சாகும்போதாவது தர்மம் செய்யலாமே என்ற எண்ணமும் வந்தது. "சுவருக்குள்ளே பொற்காசு முடிப்பு இருக்கிறது" என்று சொல்லவேண்டும். வாய் அடைத்துவிட்டது. அருகில் நின்ற மகனிடம் கையைப் பொற்கிழி போலக் காண்பித்து, சுவரையும் காண்பித்தான்.

"ஐயோ, அப்பா எதையோ கேட்கிறார். புரிந்துகொண்டு கொடுக்கமுடியாத பாவியாகிவிட்டேனே" என்று நினைத்து ஒரு மகன் கதறினான். இவர் மீண்டும் அதே சைகை காட்டினார்.

"ஆஹா, எனக்குத் தெரிந்துவிட்டது!" ஒரு மகன் கூக்குரலிட்டான். "அவருக்குப் புளிப்பான விளாங்காய் ரொம்பப் பிடிக்கும். அது வேண்டும் என்று கேட்கிறார்" என்றான் ஒருவன்.

"மூன்றாவது வீட்டில் விளாமரம் இருக்கிறது. நான் போய் நிலைமையைச் சொல்லி எப்படியாவது ஒரு காய் வாங்கிக்கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு இன்னொரு மகன் ஓடினான்.

அவன் வருவதற்குள் கிழவனின் உயிர் பிரிந்தது. சுவற்றில் புதைத்த பொன் குடும்பத்தினருக்கோ, ஏழைகளுக்கோ பயன்படாமல் போயிற்று. ஊர்க்காரன் ஒருவன் சொன்னானாம் "இத்தனைத் துட்டு வச்சிக்கிட்டு என்ன பிரயோசனம்? நாலுபேருக்குச் சோறு போட்டிருந்தா வயிறு குளுந்து வாழ்த்துவாங்க. இப்ப ஒண்ணுமில்லாமப் போயிட்டாம் பாரு. இவன்லாம் பொறந்து என்ன புண்ணியம்?"

இதையும் வள்ளுவன் சொல்கிறான்:

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை


(நன்றியில் செல்வம்: 1003)

[சம்பாதிப்பது ஒன்றே குறியாக வாழ்ந்து, (அந்தப் பொருளை ஏழைகளுக்குக் கொடுப்பதனால் வரும்) புகழை விரும்பாத மனிதர் பிறந்ததே உலகத்துக்குப் பாரம்.]

நன்றி: என் சரித்திரம், எழுதியவர்: உ.வே.சாமிநாதையர், பதிப்பு: டாக்டர் உ.வே.சாமிதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600 090, தமிழ்நாடு, இந்தியா.

June 24, 2004

நானும் திருக்குறளும்

நான் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டே என்னுடைய எழுத்துக்களை அமைத்துக் கொள்கிறேன் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மரபிலக்கியம், ராகாகி, தமிழோவியம், இ-சங்கமம் எங்கு எடுத்தாலும் என் கட்டுரைகளின் அடிநாதம் திருக்குறள்தான். ஆனால் அதில் பாரதி, கம்பன், சிலம்பு, மணிமேகலை, தொல்காப்பியம் இன்னும் பிற தமிழ்க் கருவூலங்களிலிருந்தும் எடுத்துப் பயன்படுத்துகிறேன்.

'திருக்குறள்தான் நிறையப் பேர் எழுதிவிட்டார்களே, நீங்களும் ஏன்?' என்று கேட்கலாம். பாரதியையும் கம்பனையும் போலவே ஆழ அகல நுண்மை கொண்டதும் கவிச்சுவை தளும்புவதுமாக இருக்கிறது குறள். அதைக் காலம் காலமாக பலரும் எடுத்துப் பேசுவார்கள், எழுதுவார்கள். தவிர்க்க இயலாது. நான் எழுத ஒரு காரணம் உண்டு.

இரண்டுவருட காலம் குடும்பத்தைவிட்டு அகன்று நான் மட்டும் தனியே திண்டுக்கல்லில் வசிக்க நேர்ந்தது. அப்போது கையில் (சமைத்து, துணிதுவைத்து எல்லாம் செய்தது போக) கொஞ்சம் நேரம் மிச்சம் இருந்தது. அப்போது திருக்குறள் ஆராய்ச்சியில் இறங்கினேன். பலரது உரைகளையும் படித்தேன். தவிர எனக்கேயும் திருவள்ளுவர் இப்படிக் கருதியிருக்கலாம் என்று சில கருத்துகள் தோன்றின. ரால்·ப் வால்டோ எமர்சன் எனக்குச் சிறுவயதிலேயே "உன்னுடைய கருத்து என்ற ஒரு காரணத்துக்காகவே எதையும் ஒதுக்கித் தள்ளாதே" என்று சொல்லிக் கொடுத்திருக்கிறான். ஆகவே இன்னும் குறளில் ஆழச் சென்றேன். என் குறட்காதல் அதிகமாகியதே அன்றிக் குறையவில்லை.

பிறர் கையாளாத, (போதுமான அளவு) விளக்காத, வாழ்க்கையோடு பொருத்திக் காட்டாத, மிகுந்த அழகும் செறிவும் கொண்ட பல குறள்கள் ஒளிந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. அவற்றை விளக்கும் பணியைத் தொடரவேண்டும் என்பதே என் ஆசை.

நான் அப்படிச் செய்வதைப் பொதுவாக யாரும் உணருவதில்லை. காரணம் நான் அவற்றைத் 'திருக்குறள் கட்டுரைகள்' என்று அழைப்பதில்லை. அப்படி ஒரு தலைப்பைப் பார்த்ததுமே முதல் எதிர்வினை "வந்துட்டார்ப்பா, லட்சத்தி ஒண்ணாவது ஆளு. இன்னும் எத்தனை பேர்தான் திருக்குறளையே வெச்சுக்கிட்டு பஜனை பண்ணுவாங்க!" என்பதாக இருக்கும். அதைத் தவிர்க்க விரும்பினேன்.

இன்னொன்று திருக்குறளை நான் இலக்கியவாதியாக அணுகுவதில்லை. வாழ்க்கை, அலுவலகம், உறவுகள், பொருளாதாரம், ஆன்மிகம், காதல், கருணை, கோட்பாடுகள், மேலாண்மை - என்று எந்தத் துறைக்கும் வழிகாட்டியாக அணுகுகிறேன். என்னுடைய நோக்கம் குறளை விளக்குவதல்ல. எந்த ஒரு சூழ்நிலையையும், பிரச்சனையையும் எப்படித் திருக்குறள் விளக்குகிறது என்று காண்பிப்பதுதான்.

இதில் நான் ஓரளவு வெற்றி கண்டிருப்பதாகவும் கருதுகிறேன். "என் மனைவிக்கு வெகுநாட்களாகவே திருக்குறளைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. நான் அங்கொன்று இங்கொன்று என சில குறள்களைப் படித்து உரையும் படிக்கும்போது அது அவளுக்கு சுவாரஸ்யமாகப் படவில்லை. இப்போது எங்கள் இருவருடைய குறையையும் நீக்க வந்துள்ள உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று புரியவில்லை!" என்று நண்பர் ஆர்.எஸ். மணி (கனடா) அவர்கள் சந்தவசந்தத்தில் எழுதியது எனக்கு நோபல் பரிசுக்குச் சமானமானது.

June 20, 2004

சன் சூ-வின் போர்க்கலை

கி.மு. 300-இலிருந்து 500-க்குள் சொல்கிறார்கள் சன் சூ-வின் (Sun Tzu) காலத்தை. தன்னுடைய இளவயதிலேயே எழுதிய The Art of War என்ற இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹோ லூ (வூ-வின் அரசன்) தனது சேனாதிபதியாக நியமித்தானாம். அவருடைய திறமையை மன்னன் சோதித்தது பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு. இங்கே அதற்கு நேரம் இல்லாததால் மேலே போகலாம். இந்த நூலிலிருந்துதான் மா சே துங்-கின் சிறிய சிவப்புப் புத்தகம் (The Little Redbook) வார்த்தைக்கு வார்த்தை பல இடங்களில் கடன் வாங்கி இருக்கிறது.

இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின் பெயர் லயனல் கைல்ஸ். பெயரைத் தட்டிக்கொண்டு போனவரோ ஜேம்ஸ் கிளாவல். பிரபல நாவலாசிரியர், ஹாலிவுட் படத் தயாரிப்பாளர், வசனகர்த்தா. இவர் வசனம் எழுதிய The Great Escape (ரிச்சர்ட் ஆட்டன்பரோ, ஸ்டீவ் மக்வீன், சார்ல்ஸ் பிரான்சன் நடித்தது) மிகப் பெரிய வெற்றிப்படம்.

ஆனால் நான் முக்கியமாகக் கருதுவது இவருடைய நோபிள் ஹவுஸ், கய் ஜின், ஷோகன் போன்ற நாவல்களைத்தாம். ஜப்பானியர்களையும் சீனர்களையும் தன்னுடைய கதையில் கோமாளிகளாக்காமல் அவர்களுடைய கலாச்சாரப் பின்னணியோடு சரியாகப் படம்பிடித்தார். அதிலும் கய் ஜின் படித்தபோதுதான் ஜப்பானில் விலைமாதருக்கு எவ்வளவு அங்கீகாரம் இருக்கிறது என்பதையும், சமுராய்களின் அக்கால வாழ்க்கை எவ்வளவு வறட்டு கவுரவமும் துயரமும் நிரம்பியது என்பதையும் புரிந்துகொண்டேன். (இரண்டு பிராந்தியத் தலைவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு அதைக் கையெழுத்திடுவதற்குச் சமமான சடங்கு என்ன தெரியுமா? இருவரும் ஒன்றாக நின்றுகொண்டு ஒண்ணுக்கடிக்க, அந்த வீழ்ச்சிகள் கலக்கவேண்டும்!).

ஜேம்ஸ் கிளாவல் தொகுத்து, முன்னுரையோடு 'போர்க்கலை'யை வெளியிட்டதும் அது ஆங்கிலம்கூறும் நல்லுலகெங்கும் பற்றிக் கொண்டது. சேனாதிபதிகள், யுத்த நிபுணர்கள் மட்டுமல்லாமல், இதன் யுத்திகளை விற்பனைக்கும், பங்குவணிக முதலீட்டுக்கும், தொழில்முனைவோர் வெற்றிக்கும் பயன்படுத்தலாம் என்று பலரும் சொன்னார்கள். பங்கு வணிகத்திற்கு (F&O segment உட்பட) எப்படிப் பயன்படும் என்று தெரியப் பாருங்கள்: http://www.strategies-tactics.com/suntzu.htm

சரி, அதில் என்னதான் சொல்லியிருக்கிறது? 13 அத்தியாயங்கள் (சன் சூ 13-க்குப் பயப்படவில்லை போலும்) கொண்டது இது. சீனமொழி மூலம் மிகச் சுருக்கமாக இருப்பதாகவும், மொழிபெயர்க்கையில் அது விரிக்கப்பட்டுவிட்டதாகவும் கருதப்படுகிறது. பொதுவாகவே நூல் மொழிபெயர்ப்பில் ஊதித்தான் போகும்.

என்ன சொல்கிறார் சன் சூ? இதோ ஒரு உதாரணம்: "உங்கள் எதிரியையும் தெரிந்து உங்களையும் தெரிந்துகொண்டால், நூறு யுத்தங்களின் விளைவைப் பற்றியும் அஞ்சவேண்டியதில்லை". எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே!

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
(குறள்: 471)

இந்தப் புத்தகத்தைப் படிக்கையில் அடிக்கடி திருக்குறள் நினைவுக்கு வருவதை என்னால் தவிர்க்கமுடியவில்லை. இது ரஷ்ய ராணுவத்துக்குக் கட்டாயப் பாடமாம். ஜார்ஜ் புஷ் படித்திருக்கமாட்டார் என்று தோன்றுகின்றது. இதைக் கேளுங்கள்:

"வெற்றிபெற்றபின் எந்த ஊரை வைத்துக் கொள்ள முடியாதோ, அல்லது அப்படியே விட்டால் அதனால் பாதகமில்லையோ, அதைத் தாக்கக் கூடாது."

"போரிட்டு எல்லாப் பொரிலும் வெல்வது சிறப்பல்ல. மிகச் சிறப்பு எதுவென்றால் போரிடாமலே எதிரியின் முரணை அழிப்பதுதான்."

"இதுவரையிலான வரலாற்றில், மிகநீண்டகாலப் போரினாலே ஒரு தேசம் பயனடைந்ததாக எங்குமே சொல்லப்படவில்லை."

ஒற்றர்களைப் பற்றிப் பல விஷயங்களைச் சொல்கிறார் சன் சூ. எதிரி நாட்டில் அவமதிக்கப்பட்ட உயர் அதிகாரிகளை ஒற்றர்களாக்கலாம். அங்குள்ள குடிமக்கள் சிலரை அன்பினால் வென்று ஒற்றர்களாக்கலாம். தங்கத்துக்கு அலையும் வேசியர், அதிகம் தண்டிக்கப் பட்ட குற்றவாளிகள், அநியாயமாய்ப் பதவி உயர்வு மறுக்கப்பட்ட அரசு ஊழியர், கருங்காலிகள் - இவர்கள் எல்லோரையும் பயன்படுத்தி ஒற்றாடலாம். ஆனால் மிகக் கவனத்தோடு இருக்கவேண்டும் என்கிறார்.

மாக்கியவெல்லி-யின் The Prince, மற்றும் மியாமொடோ முசாஷியின் The Book ஆகியவற்றுக்கு இணையாக இதைச் சொல்கிறார்கள். நாம் சாணக்கியனையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். திருக்குறள் இல்லாமலா!

ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும்
(குறள்: 589)

[ஒரே காரியத்தைப் பற்றி விசாரிக்கத் தனித்தனியே மூன்று ஒற்றர்களை ஏவி, அந்த மூவரும் அதே காரியத்துக்கு அனுப்பப் பட்டதை அவர்கள் அறியாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். அந்த மூவரும் தனித்தனியே அறிந்து வருகிற சேதிகளையெல்லாம் சேர்த்துப் பார்த்து அரசன் உண்மையை அறியவேண்டும். - நாமக்கல் கவிஞர் உரை]

திருக்குறள், சாணக்கியன், ஸ்டீவன் கோவி, பீட்டர் டிரக்கர் எல்லோரையும் தக்க அளவில் எடுத்துக் கொண்டு சன் சூவோடு பொருத்திப்பார்க்க வேண்டுமென்று கை துருதுருக்கிறது. அதுவே ஒரு புத்தகமாகிவிடும்.

June 17, 2004

எது 'ஆண்மை'?

என் நண்பனொருவனுக்குத் தான் பெரிய மிருகம் என்று சொல்லிக்கொள்வதில் ரொம்ப விருப்பம். தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அதாவது, தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது, தான் உக்கிரமானவன், முரடன், அல்லி சாம்ராஜ்யத்தையே போய் அடக்கிவிடுபவன்... இத்தியாதி, இத்தியாதி. இன்னும் அவனது கட்டில் வித்தைத் திறமை பற்றிய பெருமைகளை நான் சொல்லவில்லை--காரணம் அதை இங்கே நாகரிகமாக எழுத எனது சொற்களஞ்சியம் பத்தாது. இப்படிப்பட்ட மனநிலையில் அவன் பீற்றிக்கொள்ளத் தொடங்கும் போதெல்லாம் அவனது நீண்ட நெடிய கட்டுரை இப்படித்தான் முடியும்: "என்னை வீட்டுவிலங்காக்கத் தக்க ஒருத்தியே எனக்கு மனைவியாக வேண்டும்"! அவன் சொல்லும்போது பார்த்தால் ஏதோவொரு புலியைப் பூனையாக அடக்குகிற சர்க்கஸ் சாகசம் போலத் தோன்றும்.

அப்போது நாங்கள் டெல்லியில் இருந்தோம். அவன் ஒருமுறை பெங்களூருக்குப் போனவன் திடீரென்று அங்கிருந்து தொலைபேசினான். "எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சு, இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். டெல்லிக்கு வரும்போது பெண்டாட்டியோடுதான் வருவேன்." ரொம்ப நல்லது, ரிங் மாஸ்டர் கிடைத்துவிட்டாளாக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

கல்யாணம் முடிந்து சிலநாட்களில் அடுத்த தொலைபேசி: "நான் திங்கட் கிழமை புறப்பட்டு, புதன் காலையிலே அங்கே இருப்பேன். ஒரு சின்ன உதவி செய். என் வீட்டுக்குப் போய், கொஞ்சம் சுத்தம் பண்ணி வை. ஆங்... முக்கியமா அங்கே இருக்கிற ரம் மற்றும் பியர் சீசாக்களைக் கண்காணாம அப்புறப்படுத்திடு!" குரலில் கொஞ்சம் அவசரம் தொனித்தது. அச்சமும்தான். வழக்கமான விடலைக் குணம், அவன் சொன்னதை நான் செய்யவில்லை.

டெல்லிக்கு வந்தவன் என்னை வீட்டுக்குக் கூப்பிடவே இல்லை. மெதுவாக அவனது அலுவலகத்தில் பேசினேன். "டேய், நீ பாட்டுக்கு வீட்டைச் சுத்தம் செய்யாம விட்டுட்டே. நான் நல்லா மாட்டிக்கிட்டேன். எல்லாப் பழியையும் உன் தலையிலே போட்டுட்டேன். நான் வீட்டிலே இல்லாதப்போ நீதான் அங்கே வந்து குடிச்சிருப்பேன்னு சொல்லித் தப்பிக்கவேண்டியதாயிடுச்சு" என்றான்.

பழைய புலிவேஷம் எங்கே போயிற்று என்று அடையாளமே தெரியவில்லை. ஒரு திருமணத்தில் அவனது மனைவியைப் பார்த்தேன். சிறிய, பீங்கான் பொம்மை போன்ற, பளபளப்பான வெளிர்நிறத்தில், செதுக்கிய வடிவம் கொண்ட பெண்ணாகத் தெரிந்த அவரின் உதட்டில் இறுக்கம் இருந்தது. "இவன்தானே அத்தனைக் குப்பி பியரும் ரம்மும் குடித்தவன்" என்ற எள்ளல் கண்ணில் தோன்ற என்னைப் பார்த்து மரியாதைக்குப் புன்னகைத்துவிட்டு அகன்றார். "அடக்கு, அடக்கு" என்று துடித்த நம்முடைய நண்பர் இரண்டடி பின்னாலே என்னைப் பார்க்கவே பயந்தவராக அரைப் புன்னகையோடு அகன்றார். என்றைக்குமே நான் செய்யாத தவறுக்காக வருத்தப்பட்டதில்லை. எனவே எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

இன்னொரு நண்பரின் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள். அவருடைய பெயர் சந்திரன் என்று வைத்துக்கொள்வோமே. அவருடைய மணவோலை வந்தது. அப்போது சென்னைக்கு வந்துவிட்டேன். என்னால் போகமுடியவில்லை. சில மாதங்கள் கழித்து இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். "சந்திரன் கல்யாணம் எல்லாம் நல்லபடி நடந்ததா?" என்று விசாரித்தேன். "அது ஒரு பெரிய சோகக் கதை" என்றார் நண்பர். சந்திரனும் பயங்கரத் தண்ணி வண்டிதான். ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலையிலேயே தொடங்கிவிடுவார். அலுவலக நாட்களில் மாலை ஐந்து மணிக்குத் தான் மெல்லத் தொடங்குவார்.

கல்யாணத்தைக் கொண்டாட மாலை நண்பர்களோடு சேர்ந்து குடித்திருக்கிறார். அவருக்கு ஆரம்பிக்கத்தான் தெரியும், நிறுத்தத் தெரியாது. எனவே உத்தேசமாக இரவின் ஒரு பகுதியில் திடீரென்று ஒரு நண்பர் "டேய் சந்திரா, உனக்கு இன்னிக்கு முதல் இரவுடா. போ, அண்ணி காத்திக்கிட்டிருப்பாங்க" என்று சொல்லவும், சந்திரன் தண்ணியை நிறுத்திவிட்டு அண்ணியைப் பார்க்கப் போனார். அண்ணி, திடமான அண்ணி. இவருடைய கோலத்தைப் பார்த்தார். தன்னுடைய முதலிரவிலேயே இப்படிக் குடித்துவிட்டு வருகிற மனிதனுடன் என்னால் வாழ்க்கை நடத்தமுடியாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டு, அறையைவிட்டு வெளியேறினார். வரதட்சணையை தரமறுத்து மணவறையிலிருந்து வெளிநடப்புச் செய்ய எவ்வளவு துணிவு வேண்டுமோ அதைவிட இதற்குத் துணிவு வேண்டும். சந்திரன் என் நண்பர்தான். ஆனால், அந்தப் பெண்மணியை நான் அதிகம் மதிக்கிறேன்.

முதலில் சொன்னவருக்கும், சந்திரனுக்கும் என்ன வித்தியாசம்? இதில் எது 'ஆண்மை'?

June 13, 2004

குழலூதும் கண்ணன்: ஒரு படப்பிடிப்பு

நப்பின்னையைப் பற்றிப் பேசும்போது பெரியாழ்வார் பக்கம் கொஞ்சம் திரும்பினோம். யசோதை "வெக்கமிருக்காடா கண்ணா உனக்கு! இப்படி அழுக்காக நிக்கறதைப் பார்த்தால் நப்பின்னை சிரிப்பாளே, வா குளிக்க" என்று அறிவுறுத்திக் கண்ணனைக் கூட்டிக்கொண்டு போன அழகைப் பார்த்ததும் இன்னும் பெரியாழ்வாரைப் படிக்கவேணுமென்று ஆசையாயிற்று.

கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதுகின்ற அழகைப் பெரியாழ்வார் சொல்வது அப்படியே சர்க்கரை மலை. "கண்ணன் தனது இடது கன்னத்தைத் தோள்மேலே அழுத்திக்கொள்கிறான்; இரண்டு கைகளையும் புல்லாங்குழலில் சேர்த்து வைக்கிறான்; புருவங்கள் நெறிந்து மேலே உயர்கின்றன; காற்றை உள்ளே இழுத்து ஊதுவதனால் வயிறு குடம்போல உப்பித் தணிகிறது; உதடுகள் இடப்புறமாகக் குவிகின்றன; இப்படி புல்லாங்குழல் ஊதுகிறான்! அதைக்காண அங்கே கோபியர்கள் வந்ததைப் பார்க்க மயிலினங்களும் பெண்மான்களும் சேர்ந்து வந்தாற்போலத் தோன்றுகின்றது. காதல் மிகுதியாலே அவர்களுடைய மலர்சூடிய கூந்தல் அவிழ்ந்து தாழ்கிறது. அணிந்திருக்கும் ஆடை நெகிழ்கிறது. ஒரு கையாலே சரியும் துகிலைப் பிடித்துக்கொண்டு, ஒசிந்து நின்று தம் செவ்வரி படர்ந்த கண் கிருஷ்ணனின் மீதே பதிந்திருக்க அவர்கள் தம்மை மறந்து நிற்கிறார்கள்."

இட அணரைஇடத் தோளடு சாய்த்து
இருகை கூட, புருவம் நெறிந்தேற,
குடவயிறு பட, வாய் கடை கூட,
கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
மடமயில்களடு மான்பிணை போலே
மங்கைமார்கள் மலர்க்கூந்தல் அவிழ
உடைநெகிழ ஓர் கையால் துகில் பற்றி
ஒல்கி, ஓடு அரிக்கண் ஓட நின்றனரே
.

(பெரியாழ்வார் திருமொழி - 276)

[அணர் - கன்னம்]

இதிலே இரண்டு துல்லியமான சித்திரங்கள். ஒன்று குழல் ஊதும்போது கண்ணனிடத்தில் ஏற்படுகிற மெய்ப்பாடுகள். அத்துடன் "சிறு விரல் தடவிப் பரிமாற, செங்கண் கோட, செய்ய வாய் கொப்பளிப்ப, குறு வெயர்ப்புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது" என்று 282-ஆம் பாசுரத்தில் பாடுவதையும் சேர்த்துக்கொண்டால் ஒரு அசையும் சித்திரம் முழுமையாகிவிடுகிறது. அடுத்தது, அதைக் கண்டு காதல்மீதூறி நிற்கும் கோபியர்களின் மெய்ப்பாடுகள். எவ்வளவு கச்சிதமான படப்பிடிப்பு!

June 11, 2004

சொல்லுக்கு எத்தனை சொல்?

தமிழிலே சொல், வார்த்தை என்ற இரண்டைத் தவிர 'சொல் என்பதற்கு இணையான சொற்களாக வேறு எதையும் நாம் பயன்படுத்துவதில்லை. தமிழைப் போல வளமான மொழியில் எப்படி இல்லாமல் போகும்? அதிலும் வார்த்தை என்பது வடமொழியிலிருந்து வந்தது. அதையும் விட்டுவிட்டால் 'சொல்' என்கிற ஒரே 'சொல்'தானா தமிழில்!

சொல் என்பதற்கு இணையானவைகளாக நன்னூல் கூறுவது: (அடைப்புக் குறிகளுக்குள் இருப்பது வேர்ச்சொல்)

மாற்றம், நுவற்சி (நுவல்), செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, புகறல் (புகல்), மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி (பகர்), இயம்பல் (இயம்பு).

ஆக நம்மிடம் புகலப் போதிய நொடிகள் இருப்பினும் அவற்றை மறந்துவிட்டோம் என்று நான் விளம்பினால், அதற்கு உங்கள் மாற்றம் என்னவாய் இருக்கும்? கொஞ்சம் அறையுங்களேன். ;-)

மாற்றம் என்ற சொல்லை மாத்து என்று கன்னடத்திலும், மாட்ட என்று தெலுங்கிலும் பயன்படுத்துகின்றனர். 'செப்பு' ஏனோ தெலுங்கில்மட்டும்தான் இருக்கிறது. 'செப்புமொழி பதினெட்டுடையாள்' என்று பாரதி சொன்னபிறகு அந்தக் கிளவியை மறந்தே போய்விட்டோம். 'நொடி' என்பது கன்னடத்தில் 'நுடி' என்று வழங்குகிறது. ராஜ்குமார் பல படங்களில் 'கன்னட நுடி'யின் பெருமையைப் பாடியுள்ளார். தமிழில் 'அறை'தல் மலையாளத்தின் 'பறை'தல் ஆகியிருக்கலாமோ என்று எண்ண இடம் இருக்கிறது.

உங்களைக் கரைந்து இவற்றையெல்லாம் நுவல்வதின் பொருள் என்னவென்றால் இனிமேலாவது இவற்றை உங்கள் அன்றாடப் பேச்சில் விளம்பிப் புழக்கத்துக்குக் கொண்டுவரலாமே என்ற அருத்தியில்தான்.

அட.. அருத்தியா... அப்படீன்னா என்ன?

June 10, 2004

யாரந்த நப்பின்னை?

விஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும்பற்றி விரிவாகப் பேசும் பாகவதம் கிருஷ்ணாவதாரத்தை மிகமிக விரிவாகப் பேசுகிறது. அது ராதை என்ற பெயரைச் சொல்வதே இல்லை. நப்பின்னை என்பது ராதையல்ல.

திருப்பாவையில் 'நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்' என்று நப்பின்னையை அழைக்கிறார் கோதை. பார்க்கப் போனால் மூன்று பாடல்களில் தொடர்ந்து ஆண்டாள் நப்பின்னையை விவரித்திருக்கிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும் சொல்லவில்லை. ஆண்டாள் அழைக்கின்ற வேளை அதிகாலைப் பொழுது. தந்ததினால் செய்த கால்களையுடைய கட்டில்மேல் கண்ணன் தனது மனைவியான நப்பின்னையின் மார்பின்மேல் தன் மலர்மார்பை வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானாம். அவளோ கண்ணன் தன்னைவிட்டு அகன்று போவதையே பொறுக்காதவளாம். எனவே அவளைச் சமாளித்தால்தான் கண்ணன் துயிலெழுந்து வந்து இவர்களது பாவை நோன்புக்கான உக்கமும், தட்டொளியும் (விசிறியும், கண்ணாடியும்) முதலியன தந்து பாவை நோன்பை முடித்து வைப்பான். எனவே அத்தையுடன் தன் சொந்த வீட்டில் இப்படிப் படுத்திருக்கச் சாத்தியம் இல்லை.

அப்படியானால் நப்பின்னை என்பது யார்? யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித் அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும் நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று பெரியோர் கருதுகின்றனர். இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள். ராதையை அத்தை என்றல்லவா சொல்கிறார்கள்?

சிறுவனான கண்ணன் பசுக் கொட்டிலிலே விளையாடி உடலெல்லாம் மண்ணாக்கிக் கொள்கிறான். அவனுடைய தாய் யசோதை சொல்கிறாளாம் "நீ பசுத் தொழுவத்தில் உடலை மண்ணாக்கிக் கொண்டதைப் பார்க்க எனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. (இந்தக் காலத்தில் ஒரு தாயார் இப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை.) ஆனால் ஊரார் பழிப்பார்களே! அட வெக்கமில்லாத பயலே, உன்னை நப்பின்னை பார்த்தால் சிரிப்பாளே! வா குளிக்க" என்று. பாடல் இதோ:

பூணித் தொழுவினிற் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்!
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே!
மஞ்சனம் ஆடநீ வாராய்!


(நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: பெரியாழ்வார் திருமொழி: 160)

[பூணி - பசு]

மாமன் மகள் உன் அழுக்குத் திருக்கோலத்தைப் பார்த்துச் சிரிப்பாள் என்று சொல்லித்தான் குளிக்கவைக்கிறாள் யசோதை கண்ணனை. தமிழில் பிஞ்ஞை என்றால் மயில். மயில்தோகைபோன்ற அழகிய கூந்தலை உடையவள் நப்பின்னை என்பது பொருள்.

சிலப்பதிகாரத்தில் நப்பின்னையைப் பற்றி 'ஆய்ச்சியர் குரவை'யில் வருகிறது. காட்சி இது: பாண்டிய மன்னன் தவறாகக் கோவலனைக் கொன்றுவிடுகிறான். செங்கோல் வளைந்துவிடுகிறது. இங்கே ஆயர்குடியில் இருக்கும் பெண்களுக்குத் தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன. பால் தயிராக உறையமாட்டேன் என்கிறது; திரண்ட திமிலை உடைய காளைகளின் கண்களில் நீர் வழிகிறது. முதல்நாள் சிலுப்பி உறியிலே எடுத்து வைத்த வெண்ணை உருக மாட்டேன் என்கிறது. துள்ளிவிளையாடும் இயல்பை உடைய ஆட்டுக்குட்டிகள் அசையாமல் கிடக்கின்றன. பசுக் கூட்டங்கள் தம் உடல் நடுங்க அலறுகின்றன. அவற்றின் கழுத்திலே இருக்கும் மணிகள் காரணமின்றி அறுந்து விழுகின்றன. இவற்றை எல்லாம் பார்த்த மாதரி "இந்த நிகழ்வுகள் நமக்கு ஏதோ ஒரு தீமையை முன்னறிவிக்கின்றன" என்று தன் மகளிடம் சொல்லுகிறாள்.

"இந்தத் துன்பம் நீங்கவேண்டுமானால், மாதர்க்கு அணிகலனாகிய கண்ணகி நம்மோடு இருந்து காண, ஆயர் குல தெய்வமாகிய கண்ணன் தன் மனைவி நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை நாம் ஆடவேண்டும்" என்று மாதரி சொல்கிறாள்.

மகளை நோக்கி "மனம் மயங்காதே!
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும் தான் காண
ஆயர் பாடியில் எருமன்றத்து
மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில்
வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்" என்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே


(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை)

[தம்முன் - தன் முன்னவனான பலராமன்]

எனவே கண்ணன் பலராமன் மற்றும் நப்பின்னையோடு பொதுவிடத்தில் வாலசரிதையைக் குரவையாக ஆடியிருக்கிறான். ராதையோடு இவ்வாறு ஆடியிருக்க முடியாது என்று கருதுவோர் உண்டு. பரிபாடலிலும் நப்பின்னை பற்றிய குறிப்பு உண்டு.

மாமன் மகளே ஆனாலும் கண்ணன் அவளை எளிதில் அடைந்துவிடவில்லை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் அவற்றையடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான். ஆனால், இந்தக் கதை தென்மாநிலங்களிலேயே அதிகம் வழங்குகிறது என்பர் அறிந்தோர். சன் டி.வி.யின் காலைமலர் நிகழ்ச்சியில் பேசிய ஒரு வைணவ அறிஞர் வட இந்தியாவில் புழங்கும் பாகவதத்தைவிடத் தென்னிந்தியாவில் புழங்கும் பாகவதத்தில் சுமார் 800 (நான் நினைவிலிருந்து தரும் எண்ணிக்கை ஏறக்குறைய இருக்கலாம்) வடமொழிச் செய்யுள்கள் அதிகம் இருக்கின்றன என்று கூறினார். முந்நாளில் தென்னிந்தியாவில் சமஸ்கிருத அறிஞர்கள் அதிகமிருந்தனர், அவர்கள் சிறந்த செய்யுள் இயற்றும் வன்மை பெற்றிருந்தனர், இங்கே பாகவதக் கதைகள் வடக்கை விட அதிகமாகவும் இருந்தன என்பவற்றை இது காட்டுவதாகவும் அவர் சொன்னார்.

திருமாலுக்கு மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்பர். இதிலே நப்பின்னை நீளாதேவி(கடல்தாய்)யின் அவதாரம் என்று வைணவ மரபு உண்டு. எனவே இவரை இளையபிராட்டி என்பதும் ஒரு சம்பிரதாயம். ஆனால் நப்பின்னை மிகவும் விவாதத்திற்குரிய, விவாதிக்கப்பட்ட விஷயம் என்பதல் இந்தப் பத்தியில் நான் சொல்லும் ஒவ்வொன்றும் அறுதியிட்டுச் சொல்லப்படுவனவல்ல.

கடைசியாக ஒரு கேள்வி. கீழே வரும் செய்யுள் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுல் ஒன்றான பொய்கையாரின் 'இன்னிலை'யில் காணப்படுகிறது. இதிலே நப்பின்னை என்ற சொல் வரக் காண்கிறோம். என்ன கருத்துப் புலத்தில்?

ஒப்புயர்வில் ஞாலம் ஒருநிலைப்பட்டாழ்ந்த செயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி அறிந்து.


(இன்னிலை: பாடல் 22)

June 08, 2004

பாரதியின் நகைச்சுவை

பொதுவாகவே பாரதியாரின் கவிதைகளை நாம் தெரிந்து கொண்ட அளவுக்கு அவரது உரைநடைப் படைப்புகளை வாசிக்கவில்லை. பலதுறைகளிலும் தேர்ச்சியோடு எழுதிய முன்னணி இதழியலாளனாக இருந்த பாரதி பல நகைச்சுவைக் கதைகளையும் எழுதியுள்ளான். உதாரணத்துக்கு இங்கே கொஞ்சம், சின்னச் சங்கரன் கதையிலிருந்து:

சாயங்காலத்துக் கச்சேரி முடிந்தவுடன் கவுண்டரவர்கள் குதிரை வண்டியிலேறி ஊரைச் சுற்றிச் சவாரி செய்துகொண்டு வருவார். கவுண்டநகரம் சரித்திரப் பெருமையும் '§க்ஷத்திர மஹாத்மியமும்' வாய்ந்த ஊராயினும் அளவில் மிகவும் சிறியது. ஐந்து நிமிஷத்துக்குள் குதிரை வண்டி இதைச் சுற்றி வந்துவிடும். இதற்குப் பன்னிரண்டிடத்தில் 'வாங்கா' ஊதுவார்கள். இந்த வாங்கா என்பது பித்தளையில் ஒருவித ஊது வாத்தியம். பறையர் இதனை ஊதிக்கொண்டு ஜமீந்தாரவர்களின் வண்டி முன்னே குடல் தெறிக்க ஓடுவார்கள்.

சில தினங்களில் பல்லக்கு சவாரி நடக்கும். இன்னும் சில சமயங்களில் ஜமீந்தாரவர்கள் ஆட்டு வண்டியிலே போவதுண்டு. ஆட்டுவண்டி சவாரிக்கு உதவுமா என்று படிப்பவர்களிலே சிலர் வியப்படையக் கூடும். இரண்டு ஆடுகளைப் பழக்கப்படுத்தி, அவற்றுக்கிணங்க ஒரு சிறு வண்டியிலே பூட்டி, வண்டி, ஆடுகள் இவற்றைச் சேர்த்து நிறுத்தினால், அவற்றைக் காட்டிலும் குறைந்த பக்ஷம் நாலு மடங்கு அதிக நிறைகொண்ட ஜமீந்தார் ஏறிக்கொண்டு, தாமே பயமில்லாமல் ஓட்டுவார். குதிரைகள் துஷ்டஜந்துக்கள். ஒரு சமயமில்லாவிட்டாலும் ஒரு சமயம் கடிவாளத்தை மீறி ஓடி எங்கேனும் வீழ்த்தித் தள்ளிவிடும். ஆடுகளின் விஷயத்தில் அந்த சந்தேகம் இல்லையல்லவா?

இன்னும் சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம் - ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது - தயார் செய்துகொண்டு வருவார்கள். அதன்மேல் இவர் ஏறி உட்கார்ந்தவுடன் அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்றுபோகும். பிரக்கினை கொஞ்சம் தான் மிச்சமிருக்கும். எனினும் இவருக்குப் பயம் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்து முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர் நின்று அதைத் தள்ளிக்கொண்டு போவார்கள். ஜமீந்தார் கடிவாளத்தை ஒருகையிலும் பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக்கொண்டு பவனி வருவார்."

எப்படி? சின்னச் சங்கரன் கதை முழுவதிலும் இப்படிப்பட்ட வயிறுபுண்ணாகும் வர்ணனைகளைப் படிக்கலாம். பாரதியாரின் உரைநடை கவிதைக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல. படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

June 06, 2004

கொல்லிமலைச் செலவு

கொல்லிமலை இன்னும் முடியலைன்னு சொன்னேன். தொடர்கிறேன்.

சேலத்திலிருந்து ஏற்காடும் கொல்லிமலையும் கிட்டத்தட்ட ஒரே தூரம்தான். ஆனால் ஏற்காட்டில் மக்கள் போய்க் குவிகிறார்கள். கொல்லிமலை கேட்பாரற்றுக் கிடக்கிறது. நாமக்கல், ஆத்தூர், சேந்தமங்கலம், ராசிபுரம் என்று நான்கு பக்கமும் சூழப்பட்ட இந்த மலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு.

காரணம் உண்டு. மலை மிகச் செங்குத்தானது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல் 64 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டிப் போய் உச்சியை அடைந்தால், ஆஹா! என்ன சந்தோஷம். ஒரு நாளைக்கு (5 வருடங்களுக்கு முன்னால்) இரண்டு தடவை பேருந்து நாமக்கல்லிருந்து போகிறது. பயங்கரக்கூட்டம். ஜன்னல் வழியாக உங்களுக்கு முன்னால் துண்டு போட்டுவிடுவார்கள். இடித்துப் பிடித்து உள்ளே முதலில் ஏறி இடம்பிடிக்கும் திறமை இருந்தால் ஒலிம்பிக்ஸ் மெடலுக்கு முயற்சி செய்யலாம். இப்போது அதிக வசதிகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

தொந்தரவு வேண்டாம் என்று போய் வாடகை மகிழுந்து (செலவழிக்கக் காசிருந்தால்) கேட்டால், வரமாட்டேன் என்பார்கள். யாருக்கு வேண்டும் 64 கொண்டை ஊசி! சொந்தக் காரில் செல்பவர்கள் அதிஷ்டசாலிகள். நான் போன இடுகையில் சொன்ன 'ஹோட்டல் வல்வில் ஓரி' நீங்கள் போகவேண்டிய அறப்பளீசுரர் கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. முன்னாலேயே இருக்கிறது. (வல்வில் ஓரியைப் பற்றிப் புறாநானூறில் இன்னும் நல்ல பாடல்கள் உள்ளன. பிறகு பேசலாம்.)

அறப்பளீசுரர் கோவில் 2000 ஆண்டுப் பழமை வாய்ந்தது. அறப்பளீசுர சதகம் என்ற நூலும் உண்டு. அறப்பளீசுரர் கோவில் அருகில் அழகான ஓடை. குளித்துக் கொண்டே இருக்கலாம். அங்கே இருக்கும் ஓலைவேய்ந்த கடைகள் ஒன்றில் முன்கூட்டியே போய்ச் சொன்னால்தான் உங்களுக்குச் சிற்றுண்டியோ உணவோ கிடைக்கும். இல்லாவிட்டால் குளித்துவிட்டு வந்து பசியில் தவிக்கவேண்டியதுதான். உங்கள் உடைமைகளை நம்பி அங்கு வைத்துவிட்டுப் போகலாம்.

கோவிலிலிருந்து பக்கத்தில் பயணியர் விடுதி இருந்தது. 15 ரூபாய் கொடுத்தால் படுக்கை மட்டும். பை அல்லது பெட்டியை அப்படியே கட்டிலுக்குக் கீழே வைத்துக்கொண்டு தூங்கவேண்டியது. காலையில் எழுந்தால் சுற்றிலும் இருக்கும் காட்டுக்குள் போய் இறக்குமதி சமாச்சாரங்களை முடித்துக் கொள்ளவேண்டும். பல் கூடத் திறந்தவெளியில் நின்றுதான் தேய்க்கவேண்டும். அதையெல்லாம் சமாளிக்க முடியாதவர்கள் வல்வில் ஓரியில் அறைஎடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.

அருவி நம்பமுடியாத அழகு. பொதுவாக மற்ற இடங்களில் உங்கள் மட்டத்துக்கு மேலே இருந்து விழும் அருவி. இங்கே நீங்கள் கீழே இறங்கிப் போய் அதைச் சந்திக்கவேண்டும். 420 படிகள் என்று நினைவு. இறங்கும் போது சிரமம் தெரியாது. கர்நாடகாவில் ஷராவதி நதியின் குறுக்கே 'ஜோக்' அருவி (சிரிக்காதீர்கள்) பார்த்ததுண்டா, அதுபோலத்தான். பள்ளத்தாக்கில் இறங்கிப் போய் 'ஆகாயகங்கை'யைக் கழுத்துவலிக்க நிமிர்ந்து பார்க்கவேண்டும்.

இறங்கி அருவி இருக்கும் பகுதிக்குப் போனால், 'இது பூலோகம் தானா?' என்ற ஆச்சரியம் உங்களை அமுக்கும். அழகென்றால் அத்தனை அழகு. பூமத்திய ரேகைக் காடுகள் அழியாது இருக்கும் மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். கையில் சாப்பிட ஏதாவது கொண்டுபோய்விடுங்கள். இல்லாவிட்டால் திரும்பி மேலே வரும்வரை பசி தாங்காது. திரும்பி மேலே ஏறும்போது உங்கள் இதயத்தின் வலு பரிசோதிக்கப்படும். சிரமமான ஏற்றம். குழந்தைகள் முதியோர் இருந்தால் உட்கார்ந்து உட்கார்ந்து மெல்ல ஏற வேண்டும்.

சனி, ஞாயிறுகளில் சுமோக்களும், குவாலிஸ்களும் பறக்கும். மற்ற மலைத்தலங்களைப் போல் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கூட்டம் இருக்கும். அவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. கண்டிப்பாக அரசினர் மூலிகைப் பண்ணையைப் போய்ப் பாருங்கள். தெரிந்தவர்களைக் கேட்டுத் தேன் வாங்குங்கள். விலையில் அடாவடியாகப் பேரம் உண்டு. தெரியாமல் வாங்கினால் வெல்லப்பாகுதான். கவனம் தேவை. அதற்கான நாட்களில் விலைகுறைவாக அன்னாசிப் பழம் கிடைக்கும்.

ஒரே நாள்தான் போனேன். எல்லா இடமும் பார்க்கவில்லை. ஒரு பூங்கா பார்த்தேன். பெயர் மறந்துவிட்டது. நான் போன அன்றைக்கு நாங்கள் மூவர் மட்டுமே. சர்வ சுதந்திரம். தொண்டை கிழியப் பாடினோம். பறவைகளிடம் சங்கதிகள் சொல்லிப் பார்த்தோம். மரநிழலில் மதியம் படுத்துத் தூங்கினோம். பேரானந்தம்.

மீண்டும் போகவேண்டும்.

June 02, 2004

கொல்லிமலை வில்லாளி

நாமக்கல் ராஜா தன் ஊர்ப்பெருமை பேசும்போது, கையோடு கொல்லிமலை பற்றியும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கிறார். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் நண்பர்களோடு கொல்லிமலைக்குப் போனது நினைவுக்கு வந்தது. அங்கே மிகச் சவுகரியமான ஒரு தங்கும் விடுதி கட்டியிருந்தார்கள். எல்லா வசதிகளோடும். என்றால் அங்கே கிண்ண அலைவாங்கி (Dish Antenna) உண்டு. காசிக்குப் போனாலும் கருமம் தொலையவில்லை என்றாற்போல், கொல்லிமலைக்குப் போயும் தவறாமல் அண்ணாமலையும், மன்மத ராசாவும் பார்க்கலாம். அந்த விடுதியின் பெயர் வல்வில் ஓரி.

கொல்லிமலை வல்வில் ஓரியின் ஊர். ஓரி அந்த மலைப்பகுதியின் மன்னன். கடையேழு வள்ளல்களில் ஒருவன். அது என்ன 'வல்வில்'? ஒரு வில்லாளி தான் எய்யும் ஒரே அம்பால் பலவற்றையும் துளைத்தும்போகும்படிச் செலுத்தும் வலிமை பெற்றிருந்தால் அவனை 'வல்வில்' என்று அழைப்பார்கள். அப்படிப் பார்த்தால் ஏழு மராமரங்களை ஒரே பாணத்தால் துளைத்து, தான் வாலியைக் கொல்லும் வல்லமை உடையவன்தான் என்று அனுமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நிரூபித்த இராமனும் வல்வில்தான். 'வல்வில் இராமன்' என்று அழைத்திருக்கிறார்கள். ஓரியை வல்வில் என்று அழைக்கக் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் புறநானூறு (பாடல் 152) பார்க்கவேண்டும். அந்தப் பாடலில் ஒரு இசைவல்ல பாணன் இவ்வாறு சொல்கிறான்:


"நானும், (ஆடற்கலையில் வல்ல) விறலியும், என் குடும்பத்தினரும் (கொல்லிமலையின்) நெருங்கி அடர்ந்த காட்டுவழியே போய்க்கொண்டு இருந்தோம். யானையின் பிளிறலும், புலியின் கர்ஜனையும், காட்டுப் பன்றியின் (Asterix விரும்பிகளுக்கு ஒபிலிக்ஸின் பிரியமான உணவு நினைவுக்கு வரவேண்டுமே) உறுமலும் காதைத் துளைத்தன. நிலத்தில் பார்த்தால் பாம்பும், உடும்பும் நடுங்கவைத்தன.

'விர்ர்ர்'ரென்று ஒரு சத்தம். மலைபோல நின்றுகொண்டிருந்த ஒரு யானை பேரொலியோடு கீழே விழுகிறது. யானையின் மேலே பாயலாமென்று தன் வாயைப் பிளந்தபடியிருந்த புலியொன்று திடீரென்று அலறிச் சுருண்டு விழுகிறது. அதன் கர்ஜனையில் காடே கிடுகிடுக்கிறது. புலியின் வாயிலிருந்து அருவிபோல இரத்தம். அதைப் பார்ப்பதற்குள் ஒரு மான் துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்து போகிறது. அப்பால் உரலைப்போலத் தலையை உடைய காட்டுப் பன்றி ஒன்றும் தரைமீது உருண்டு விழுந்து சாகிறது. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இவ்வளவையும் செய்த அம்பு, இவற்றைத் தாண்டிப் போய் ஒரு புற்றுக்குள் பாய, அதிலிருக்கும் உடும்பு ஒன்று கடைசியாக உயிர்விடுகிறது.

முதலில் யானைமீது அம்பு பாய்ந்ததுதான் எங்கள் கண்ணுக்குத் தெரிந்தது. வாய்பிளந்து ரத்தம் கக்கிக் கிடந்த புலி, உருண்டு இறந்த காட்டுப் பன்றி, மான், உடும்பு ஆகியவை கிடந்த காட்சி அந்த அம்பின் கூர்மையையும் வேகத்தையும் எங்களுக்கு உணர்த்தின. திரும்பிப் பார்த்தால் அகன்ற மார்பில் மாலை தொங்க, சந்தனம் பூசி, தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவனாய், புன்முறுவலோடு ஒருவன் நின்றுகொண்டிருந்தான். இவனைப் பார்த்தால் சாதாரண வேட்டுவனைப் போலத் தோன்றவில்லையே..." என்று இவ்வாறு பாணனும் குடும்பத்தினரும் ஆச்சரியப்பட்டு, இவன்தான் ஓரியாக இருக்கவேண்டும் என்று சொல்லி அழகாக இசைக்கிறார்கள். நல்ல ரசனையோடு கேட்கிறான் வந்தவன். பாணன் தன் பாடலின் இறுதியிலே 'ஓரி' என்ற பெயர் வரும்படிப் பாட, அவன் சற்றே முகம் சிவந்து நாணமடைகிறான். (என்ன ஆளுப்பா இவங்கள்ளாம், நம்ம 'முடிசூடா மன்னரு'ங்களைப் பாத்துக் கத்துக்கறதில்லே?)

அதுமட்டுமல்ல, இவர்களுக்கு நிறையப் பொன்னும், மணிகளும் பொருளும் தருவதோடு, வேட்டையாடிய மானின் தசையைப் புழுக்கி உணவாகக் கொடுக்கிறான். (சமீபகாலத்தில் கேள்விப்பட்டது போல இருக்கிறதே!) புத்துருக்கு நெய்போலத் தோன்றும் தேன் கொடுக்கிறான்.

இவன் தான் வல்வில் ஓரி. ஆனால் கொல்லிமலையைப் பற்றி இன்னும் சொல்லி முடிக்கலை. மற்றொரு முறை சொல்வேன்...

செவிலியரும், காதலும்...

நீங்கள் இங்கே தேடி வருகிறீர்கள் என்பதே உங்கள் இலக்கிய ரசனையைக் காட்டுகிறது. (ஐஸ்..ஐஸ்!) சரி, தும்மாதீர்கள். என்னுடைய இரண்டு கட்டுரைகள் கீழ்க்கண்ட சுட்டிகளில் உங்களுக்காக காத்திருக்கின்றன. போய்ப்படித்துப் பாருங்கள். அப்புறம்... ஆமாம்.. கருத்துச் சொல்லுங்கள். சில நாட்களாய் வெளியூர்ப் பயணம். அதனால்தான் மதுரமொழியில் தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது. (அட.. காத்தாடிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்.)

கழுவமாட்டோம், கவுரவக்குறைச்சல்

மலரினும் மெல்லியது காதல்

இந்த இடுகையின் தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்கிறீங்களா? முதல் கட்டுரை செவிலியர் பற்றியது, இரண்டாவது காதல் பற்றி.

May 27, 2004

பாக்காததும் பூக்காததும்...

நாம இலக்கியம் படிக்கும்போது எத்தனையோ கேள்விப்படுகிறோம். ஆங்கிலத்திலே phoenix, dragon என்றெல்லாம் படித்ததுமே 'இதெல்லாம் கவிஞர்களின் புருடா' என்று சொல்லிவிடுகிறோம். அதை அழகாக 'கற்பனை' என்றும் சொல்லலாம். போகட்டும், தமிழில் படிக்கும்போது பல பூக்களும், பிராணிகளும் உண்மையா கற்பனையா என்றே தெரிவதில்லை. காரணம் நமக்கு யாரும் தேடிப்பிடித்து எது எந்தப் பூ என்று சொல்லவில்லை. அப்படிச் சிலவற்றை இங்கே அறிமுகப் படுத்துகிறேன்.

முதலில் ஞாபகத்துக்கு வருவது காந்தள் மலர்தான். தமிழறிஞரும், கலைமகள் இதழைத் தொடங்கியவருமான வாகீசகலாநிதி கி.வா.ஜகன்னாதன் அவர்கள் தான் தொடங்கிய புத்தகப் பதிப்பகத்துக்கு காந்தளகம் என்றே பெயர் வைத்திருந்தார். அவர் காந்தள்மலர் எப்போதுமே பெண்களின் கைக்கு உவமையாகச் சொல்லப்படுவது.

சீதை இராமரோடு வனவாசம் போகும்போது காட்டிலே ஒரு காந்தள் பூவின் மேல் ஒரு கிளி உட்கார்ந்து கோதிக்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்ததும் இராமனுக்கு சீதை தன் கையில் ஒரு மாந்தளிரை வைத்துக் கொண்டிருந்தாற்போலத் தோன்றுகிறதாம்.


சேந்து ஒளி விரி செவ்வாய்ப் பைங்கிளி செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக் கோதுவ, கவின் ஆரும்
மாந்தளிர், நறு மேனி மங்கை! நின் மணி முன்கை
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய்!


[அழகிய சிவந்த அலகினைக் கொண்ட பசுங்கிளிகள், அடர்ந்து நிற்கும் காந்தள்மலர் மீது ஏறித் தம் சிறகைக் கோதுகின்றன. அது நறுமணம் வீசும் மேனிகொண்ட நீ, உனது மாணிக்கம் சூடிய முன்கையில் ஒரு மாந்தளிரை ஏந்தினாற்போல உள்ளது. இந்த அழகைக் காணுவாயாக!]

குமுதம், செவ்வாம்பல், செவ்வல்லி, செங்கழுநீர் ஆகிய பெயர்கள் ஒரே பூவைக் குறிப்பன.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை


என்று கம்பன் கோசல நாட்டை வர்ணிக்கும்போது சொல்கிறான். எருமைமாட்டின் குளம்புகள் பதிந்ததால் ஏற்பட்ட குழிகளிலும் கொள்ளைகொள்ளையாகக் செங்கழுநீர் பூக்கிறதாம்.

அல்லி என்பது சாதாரணமாக வெள்ளை நிறத்திலிருக்கும். நீலநிற அல்லியை நீலம், கருங்குவளை, காவி, குவளை என்றெல்லாம் சொல்வார்கள். விழித்துப் பார்க்கும் அழகிய கண்களுக்கு உவமையாக அடிக்கடி சொல்லப்படும் பூ இதுதான். பாரதியாருக்கு குவளைக்கண்ணன் என்று ஒரு நண்பர் இருந்தாரே நினைவிருக்கிறதா?

"எட்பூ ஏசிய நாசியாய்" என்று பெண்ணின் அழகான மூக்குக்கு எள்ளுப்பூவை உதாரணமாகச் சொல்கிறது மனோன்மணீயம். பக்கவாட்டுத் தோற்றம் கிடைத்தால்தான் காரணம் சரியாக விளங்கும். கிடைக்காததால் இதையே இங்கு இட்டிருக்கிறேன்.


இராமனைக் காயாம்பூ நிறத்தவன் என்று கம்பன் வர்ணிப்பான். இந்த நிறம் பாருங்கள், எவ்வளவு அழகு!


முருக்கிதழ் என்று சிவந்த உதடுகளைக் கவிதைகள் வர்ணிக்கும். முறுக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. 'முருக்கான்' (தாம்பூலம்) தரித்த மலையாள மங்கையின் உதடும் இல்லை. இதை வடமொழி பலாசம் என்றும் சொல்லும். தமிழிலே முள்ளூமுருங்கை, புரசமரம். இந்த மரம் ஏராளமாகப் பூத்திருக்கும்போது காடு தீப்பற்றி எரிவதுபோல இருக்கும் என்பதால் இதை Flame of the forest என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.


இப்போது அனிச்சப்பூ. இது விருந்தினர் மனதின் மென்மைக்கு உவமையாகச் சொல்லப்படுவது. பல சுவையான விதங்களில் இது திருக்குறளில் கையாளப்படுகிறது. இதைத் தனியாகத்தான் விளக்கவேண்டும். ஒரு முக்கியமான விஷயம் - இப்படி ஒரு பூ கிடையாது. கற்பனைதான்.

May 22, 2004

நெருப்புக்குள் தூங்க முடியுமா? - 2

வறுமையில் வாடிய மேன்மக்களிலே பாரதியும் ஒருவன். தேசபக்தனாய், கவிஞனாய்ப் புகழ்பெற்ற பின்னும் வறுமை அவனை விட்டு நீங்கவே இல்லை. அவன் வறுமையைப் பற்றிச் சொல்வதைக் கேளுங்கள்:

பொருளிலார்க் கிலை யிவ்வுலகு என்ற நம்
புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்று காண்
பொருளிலார்க்கு இனமிலை, துணையிலை
பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால்


(சுயசரிதை, பாடல் 43)

ஆக, கொடிதினும் கொடிதாகிய வறுமை இருக்கும் போது மேலே கூறிய அத்தனைத் துன்பங்களும் வந்து சுற்றிக்கொள்ளும். அது எப்படி என்றால் நெருப்புச் சூழ்ந்தது போலவாம். ஓர் ஓலைக்குடிசையில் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். குடிசையில் நெருப்புப் பற்றிக்கொண்டுவிட்டது. 'சரி, அது எரிந்து முடியட்டும். நாம் தூங்கி எழுந்து பார்த்துக் கொள்ளலாம்' என்று அவன் தன் தூக்கத்தைத் தொடரமுடியுமோ?

அப்படி நெருப்புக்கு நடுவிலே தூங்குவது ஒருவேளை சாத்தியமானால் கூட, வறுமைகொண்டவன் கண்மூடுவது சாத்தியமே இல்லை என்கிறார் வள்ளுவர்.


நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது


(குறள் 1049, நல்குரவு)

[நிரப்பு - வறுமை; கண்பாடு - உறக்கம்]

இந்த நெருப்பைப் பற்றித் தெரிந்துகொள்வது வெறும் இலக்கிய ரசனைக்காக அல்ல. இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று தெரிந்தபின் நமக்கு உறக்கம் வரக்கூடாது. நமது வருமானத்தில் பத்து சதவிகிதம் தரும காரியங்களுக்குச் செலவிட வேண்டும் என்று அறநூல்கள் சொல்கின்றன.

ஒன்று யோசித்துப் பாருங்கள், காயசண்டிகைக்காவது பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தால் சாபவிமோசனம் உண்டு. நம் நாட்டு ஏழைகளுக்கு? ஆகவேதான் தனக்கு உணவளித்துக் காக்கும் ஒரு வள்ளலைப் புறநாற்றுப் பாணன் ஒருவன் "பசிப்பிணி மருத்துவன்" (புறநானூறு: பாடல் 172) என்று போற்றினான்.

மார்கழி மாதம் பாவை நோன்பிருக்கும்போது "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்..." என்று தனக்கான கட்டுப்பாடுகள் மட்டிலுமே கூறாது, "ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்டி" என்று அறம் செய்வதையும் வலியுறுத்துகிறாள் கோதை நாச்சியார் தன் திருப்பாவையில். கிட்டத்தட்ட அதே சமயத்தில் வரும் ரமலான் திருநாளை ஈகைப் பெருநாள் என்றே கொண்டாடுகின்றனர் மகமதியச் சகோதரர்கள். கிறித்தவ மதமோ கருணையைத் தனது தனியுரிமையாகவே கொண்டாடுகிறது. எப்படியிருப்பினும் எந்த மதமும் வருடத்தில் ஒரு மாதம் மட்டும் ஏழைகளுக்கு அன்னமிடு, ஏனைய நாட்களில் எரிந்து விழு என்று சொல்வதில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வலியுறுத்துவதன் காரணம், ஒருமுறை பழகிவிட்டால் நல்லவற்றை நாம் தொடர்ந்து செய்வோம் என்பதுதான்.

"எல்லோருக்கும், அவர் இவர் என்று வித்தியாசம் பார்க்காமல், உணவளியுங்கள். நீங்கள் உண்ணுமுன்னாலே இதைச் செய்துவிட்டு உட்காருங்கள். ஏராளமாய்ப் பொருளைச் சேர்த்து வைக்காதீர்கள். காணாததைக் கண்டவர் போல மிக அவசரமாக உணவு உண்ணாதீர்கள். காக்கை எக்காலமாய் இருந்தாலும் பிற காகங்களை அழைத்துவிட்டுத்தான் உண்ணும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்" என்று திருமந்திரம் சொல்கிறது.

ஆர்க்கும் இடுமின்; அவர் இவர் என்னன்மின்;
பார்த்திருந்து உண்மின்; பழம்பொருள் போற்றன்மின்;
வேட்கையுடையீர்! விரைந்து ஒல்லை உண்ணன்மின்;
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே!


(திருமந்திரம் 250)

பிறந்த நாள், மணநாள், புத்தாண்டு என்று ஏதோ ஒரு காரணம் கற்பித்து ஆடம்பரமான விருந்துகளுக்குச் செலவழிக்கத் தயங்காத நாம் ஓர் ஏழைக்கு ஒரு ரூபாய் கொடுக்க ஆயிரம் தத்துவம் பேசுவோம். "நல்ல தடியனாக இருக்கிறானே, வேலை செய்தால் என்ன?" என்றெல்லாம் சொல்லுவோம். உண்மையிலேயே பாத்திரம் அறிந்து பிச்சை இடுவதற்காக இப்படிப் பேசினால் வரவேற்கத் தக்கதுதான். ஆனால் தர்மம் செய்வதைத் தவிர்ப்பதற்காகப் பேசும் சாமர்த்தியப் பேச்சாக இது இருந்து விடக்கூடாது.

ஒருவருக்காவது நெருப்பின் நடுவில் தூங்காத நிலை உங்களால் ஏற்படுமேயானால் அது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கும். 'பசியால் வாடுகிறவனின் வயிறுதான் உங்கள் செல்வத்தை வைப்பதற்கு மிகப் பாதுகாப்பான வங்கி' என்று வள்ளுவன் சொல்லியிருப்பது தெரியுமா?


அற்றார் அழிபசி தீர்த்தல் அ·து ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி


(குறள் 226, ஈகை)

[அற்றார் - வறியவர்; அழிபசி - கொல்லும் பசி; தீர்த்தல் - தீர்ப்பாயாக; பெற்றான் - பணக்காரன்; வைப்புழி - சேமிக்கும் இடம்]

இது வட்டி வீதம் குறையவே குறையாத வங்கி, என்றைக்கும் இழுத்து மூடி முதலுக்கு நட்டம் ஏற்படுத்தாத வங்கி, நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் உங்களைத் தேடிவந்து பலன் தரும் வங்கி, உங்கள் சந்ததியாருக்கும் நன்மை செய்யும் வங்கி. குறைந்த பட்சம் ஆத்ம திருப்தியை உடனடியாகத் தரும் வங்கி.

சரி, வருமானத்தில் 10 சதவீதம் அதிகமாகத் தோன்றினால், 5 விழுக்காட்டிலிருந்து... வேண்டாம் 2 பெர்சன்ட்டிலிருந்து தொடங்குவது எப்படி? எனைத்தானும் நல்லவை செய்க...

வாருங்கள் பசித்தீயை அணைப்பதிலிருந்து தொடங்கி, வறுமைத்தீயை ஒழிப்போம்.

May 21, 2004

நெருப்புக்குள் தூங்க முடியுமா? - 1

காயசண்டிகை என்று ஒரு வித்தியாதர மங்கை இருந்தாள். காஞ்சனன் என்பவனின் மனைவி. இருவரும் ஒரு நாள் பொதியமலையின் அழகைப் பார்த்து வரலாமே என்று கிளம்பினார்கள். காதல் மயக்கத்தில் இருந்தனர்.

பொதிய மலையின் சாரலில் ஒரு நதி இருந்தது. அதிலே நீராடுவதற்காக விருச்சிகன் என்றொரு முனிவன் இறங்கியிருந்தான். அவன் பன்னிரண்டு வருடங்கள் உண்ணாமல் விரதம் இருந்து வந்திருக்கிறான். கரையின்மேல் பனம்பழம் போலக் கருப்பானதும் பெரியதுமான ஒரு நாவல் பழத்தை, தேக்கிலையின் மேலே வைத்துவிட்டுக் குளிக்க நீரில் இறங்கி இருக்கிறான். அந்த நாவல் பழம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுக்கக் கூடியது. அதை உண்ணுபவர்களுக்கு அதன்பின் பன்னிரண்டு ஆண்டுகள் பசியெடுக்காது. குளித்துவிட்டு வந்து, பூசை முடித்துவிட்டு விருச்சிகன் அந்த நாவற் கனியை உண்ணவேண்டும்.

காயசண்டிகையும் காஞ்சனனும் காதல் மயக்கத்தில் பொதியமலையின் அழகைப் பருகியபடி நடந்து வருகிறார்கள். அவர்களுக்குத் தன் முன்னாலே என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. அந்த நிலையில் காயசண்டிகை அந்த அரிய நாவல் பழத்தைக் காலால் மிதித்துச் சிதைத்துவிடுகிறாள்.

குளித்துவிட்டு வந்த விருச்சிக முனிவர் இதைப் பார்க்கிறார். கோபம் வருகிறது அவருக்கு. "பெண்ணே, இந்த திவ்வியமான கனியை நீ சிதைத்துவிட்டாய். உனக்கு இனி மீண்டும் வானுலகம் செல்லும் மந்திரம் மறந்து போகும். அதுமட்டுமல்ல, அடுத்த முறை இந்தக் கனி மீண்டும் பழுத்து, நான் உண்ணா நோன்பினை முடிக்கும் வரையில் பன்னிரண்டாண்டுகள் நீ யானைத்தீ நோயாலே வாடுவாய்" என்று சபித்துவிடுகிறார்.


யானைத்தீ எப்படிப் பட்டது தெரியுமா? பசித்தீ - தீராத பசித்தீ. காயசண்டிகை அதை ஒரு அழகான உதாரணத்தோடு விளக்குகிறாள் கேளுங்கள்: "திருமால் இராமபிரானாக உலகில் அவதரித்தபோது, இலங்கைக்குப் பாலம் கட்டுவதற்காகக் குரங்குகள் கொண்டு வந்து எத்தனை மலைகளை விட்டெறிந்தாலும் கடலின் வயிறு நிரம்பாதது போல, எவ்வளவு உண்டாலும் தீராத பசித்தீயைக் கொண்டிருக்கிறது என் வயிறு."

"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலரு முந்நீர் அடைந்த ஞான்று
குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்
பட்டேன்"


(மணிமேகலை - உலக அறவி புக்க காதை: 9-14)

[நெடியோன் - திருமால்; முந்நீர், அளக்கர் - கடல்]

அப்படிப் பசித்தீ கொண்டவளால் தூங்கமுடியுமா? இங்கே பசித்தீக்குக் காரணம் முனிவன் தந்த சாபம். ஆனால் சாதாரணமாக நம்மைச் சுற்றிக் காணப்படும் பசிக்குக் காரணம் வறுமை.

மற்ற எல்லாவற்றிற்கும் உவமை சொல்லும் வள்ளுவன் "வறுமையைவிடக் கொடியது என்னவென்றால்" என்று தொடங்கி, யோசித்துப் பார்த்துவிட்டு, "வறுமையேதான்" என்கிறான். அதற்கு ஒப்பாகவோ, மிகையாகவோ வேறொன்றை அவனால் சொல்ல முடியவில்லை.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது


(குறள் 1041, நல்குரவு)

தற்போதையத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ளமுடியாத வறியவனுக்கு மறுமை, புண்ணியம் என்கிற எண்ணங்கள் தோன்றவே வழியில்லை. எனவேதான் "பசித்தவனுக்குக் கடவுள் ரொட்டி வடிவத்தில் வருகிறார்" என்று சொல்வதுண்டு. ஏழை ஒருவன் எத்தனை நியாயமான, அறிவுமிகுந்த சொற்களைச் சொன்னாலும் அதற்குப் பிறர் செவிசாய்க்க மாட்டார்கள்.
ஒரு கவிஞன் கூடத் தன் பத்து விரல்களிலும் வைரமோதிரங்களை அணிந்துகொண்டு, பின்னால் இரண்டுபேர் அவன் சொல்வதற்கெல்லாம் ஜால்ரா போட, இடுப்பிலே பட்டு வேட்டி அணிந்து நல்ல பந்தாவாகப் போய் நின்று கவிதை சொல்வானென்றால், அவனுடைய கவிதை விஷம்போல, வேப்பங்காய்போல இருந்தாலும் எல்லோரும் கூடிநின்று "ஆஹா, ஓஹோ! அற்புதம்!" என்று புகழ்வார்களாம். நான் சொல்லவில்லை, அவ்வை சொல்கிறாள்:

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.


ஏழைசொல் அம்பலமேறாதது மட்டுமல்ல, அவன் செய்வதையும் சொல்வதையும் திரித்துக் கூறிப் புரளி பேசுவார்களாம் மற்றவர். அவனது குடும்பத்தினரின் நடத்தையைச் சந்தேகப்பட்டு அவதூறு சொல்வார்களாம். இவையெல்லாவற்றையும் வள்ளுவப் பெருமான் தன் குறளிலே பொதிந்து வைத்திருக்கிறார்.

இன்னும் உண்டு...

May 20, 2004

மின்னம்பல வெண்பாக்கள் (எளிய விளக்கத்தோடு)

இணையத்தில் முதன்முதலில் (டிசம்பர், 1999) வெளியான என்னுடைய வெண்பாக்கள் இவை. அப்போதே வெண்பா என்ற மரபுவடிவத்தில் அதிநவீனமான Internet என்னும் மின்னம்பலத்தைப் பாட முயற்சித்ததைக் கவனியுங்கள். ஓரளவு வெற்றியும் கண்டதாகவே நினைக்கிறேன். இது ஆறாம்திணை இணைய இதழில் நண்பர் வாஞ்சிநாதன் தொடர்ந்து தொகுத்து எழுதி வந்த 'வெண்பா மேடை'யில் வெளியாயிற்று.

படிப்பவருக்கு எளிதாக இருக்கும் பொருட்டு, நான் அதை மீண்டும் இங்கே என் உரையோடு கொடுக்கிறேன்.

1. வீட்டிலேயே தல யாத்திரை


அலையார் அறுபடையும் மாலோன் உறையு
மலையாரே ஏறிடுவார் மண்ணில் - கலையாகும்
பொன்னம் பலம்வேண்டார் தன்னம் பலம்கொண்ட
மின்னம் பலக்கணினி யார்.

தன்னுடைய வீட்டில் சொந்தக் கணினியிலே இணைப்பை வைத்துக்கொண்டு அதில் வலைமேய்கிறவர்கள் அறுபடை வீடுகளுக்கும் போக மாட்டார் என்னும்போது திருமால் வசிக்கும் திருமலையில் ஏறுவாரா என்ன! அதேபோல அவர்களுக்குச் சிவபெருமான் இருக்கும் பொன்னம்பலமாகிய சிதம்பரமும் தேவையில்லை.

(எல்லா 'தெய்வீகப் பேரின்பத்தை'யும் வலையிலே கண்டுவிடுவர் என்பது தாத்பரியம்)

2. பிள்ளையாருக்கு வந்த 'மவுஸ்'

முன்னம் ஒருநாள் முருகன் வயிறெரியத்
தின்ன கனிக்கதையும் தீதன்று - சின்னதோர்
சுண்டெலியால் மூவுலகம் சுற்றிவரும் சூட்சுமமும்
கண்டோம் கணினியின் கண்.

முன்னால் ஒருகாலத்தில் சுண்டெலி வாகனப் பிள்ளையார் சுருக்கமான வழியில் உலகை வலம் வந்து ஞானப் பழத்தை வென்று முருகன் வயிற்றெரிச்சலைக் கொண்டது மெய்தான் போலும்! இப்போது பார்த்தால் இத்தனை பிள்ளையார்கள் உட்கார்ந்த இடத்தில் 'மவுஸின்' உதவியோடு உலகை வலம் வருகிற தந்திரத்தைக் கற்றுக்கொண்டுவிட்டார்களே!

3. மின்வலை என்னும் மாதவியோ?

ஆடக் களமுண்டு பாடத் தலமுண்டு
கூடக் குறுநகையார் கூடமுண்டு - ஊடாடும்
மின்வலையின் மாயங்கொள் பின்னலிலே வீழ்ந்தாரும்
பின்வருவ துண்டோ பிரிந்து.

இந்த மின்வலைக்குள்ளே நுழைந்துவிட்டால் ஆடல், பாடல் எல்லாம் பார்க்கலாம். துணைக்கு அழகிய இளம்பெண்களும் உடன் வருவர் (மின்வெளியில்தான்!). இப்படிப் பின்னலிடும் மின்வலைக்குள் விழுந்தவர்கள் மீண்டும் திரும்பிவந்ததாகச் சரித்திரம் உண்டோ?

4. இதுவும் ஒரு சக்களத்திதான்


உண்ணார் உறங்கார் ஒருபாதி யானதொரு
பெண்ணாள் முயக்கமும் பேணிடார் - எண்ணாது
புக்கார் கணினிப் பொதுவலையில் அஃதொக்கும்
சக்களத்தி உண்டாமோ சாற்று.

கணினியில் விரியும் இந்த வலையில் நுழைந்தவருக்கு அதுவே சக்களத்தியாகும். ஏனென்றால், ஒருமுறை இதன் சுவைகண்டவர் சாப்பாடு, தூக்கம், தன்னில் பாதியான தன் மனைவியின் முயக்கம் ஆகிய எல்லாவற்றையும் மறந்து போய்விடுவார்கள்.

5. சொர்ணம் கூட பலமல்ல

சொன்னம் பலமல்ல சுற்றம் பலமல்ல
இன்னம் எதுவும் பலமல்ல - துன்னுமோர்
சின்னத் திரையுள் செகமெல்லாம் காட்டுகின்ற
மின்னம் பலமே பலம்.

(சொன்னம்பலமல்ல - சொர்ணம் பலமல்ல)

இந்த யுகத்திலே, தங்கம் ஒருவனுக்கு வலிமை தருவதிலை; சுற்றத்தார் தருவதில்லை; வேறு எதனாலும் அவனுக்கு பலம் சேருவதில்லை. மிகச்சிறிய திரையைக் கொண்ட கணினிக்குள்ளே இந்த உலகத்தையெல்லாம் தந்து காட்டுகின்ற மின்னம்பலம் என்னும் அந்த பரவெளியே பலம்.

இப்போ சொல்லுங்க -- வெண்பா எந்தப் புதுக்கவிதைக்காவது குறைச்சலா என்ன? இன்றைய விஷயத்தை இவ்வளவு சுளுவாக, அழகாக, தெளிவாக சொல்லமுடியுதே. "ஆடத்தெரியாத...." என்று தொடங்கும் பழமொழி ஒண்ணு உண்டாமே?

(நன்றி: பேராசிரியர் பசுபதி, கனடா. என் கைவசம் இல்லாத இந்த வெண்பாக்களை எனக்கு நினைவூட்டித் தன் சேமிப்பிலிருந்து தந்தமைக்கு)

May 18, 2004

உங்களுக்கு அறிவு இருக்கிறதா?

கோவிச்சுக்காதீங்க, நான் கேட்டது வள்ளுவன் சொன்ன மாதிரி அறிவு.

உடனே "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்..." என்று தொடங்கிவிடுவீர்கள். "அந்த அறிவு என்கிட்ட இருக்கிறது என்று சொல்வீர்கள். எனக்கு அறிவில்லை என்று சொல்லிக்கொண்ட முட்டாளை இதுவரை பார்த்ததில்லை.


அறிவுன்னா என்னான்னு இன்னொரு மாதிரியும் வரையறுத்திருக்கிறார் வள்ளுவர். அதைப் புரிஞ்சுக்கறதுக்கு முன்னாலே ஒரு புதிய சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

ஒட்பம் என்று ஒரு சொல் தமிழில் இருக்கிறது. இது ஒண்(மை) [ஒளி] என்ற வேர்ச்சொல்லில் கிளைத்தது. இவற்றின் பொருளைப் பார்ப்போம்:

ஒட்பம்: அறிவு, அழகு, ஒளி, நன்மை, மேன்மை, ஒண்மை, குறைவு; (கழகம்)
intelligence; prescience; wisdom; 1. beauty; 2. benefit; 3. excellence (TLS) - OTL

ஒண்மை: அழகு, ஒழுங்கு, ஒளி, அறிவு, நன்மை, மிகுதி, விளக்கம், கூரிய அறிவு, இயற்கையழகு, அறநெறி. (கழகம்)
1. brilliancy, splendour, brightness; 2. natural grace, beauty; 3. good, goodness, excellence; 4. knowledge, clearness of understanding, wisdom; 5. luxuriance, fullness, abundance.(OTL)

இப்போ குறள்:

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.


(அறிவுடைமை, 425)

குறளின் பொருள்:

"உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம். அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம்" என்பது பரிமேலழகரின் விளக்கம்.

தழீஇயது என்ற சொல்லுக்கு நட்பாக்குவது என்று பொருள்கண்ட பரிமேலழகர் தன்னுடைய பொறியில் தானே சிக்கிக்கொண்டுவிட்டார். ஏனென்றால் அந்நட்பை மலர்ச்சியும் கூம்புதலும் இல்லாமல் வைத்துக்கொள்ளும் நிலையே அறிவு என்று சொல்லி, அறிவுடைமையின் பரந்துபட்ட பொருளைத் திடீரென்று நட்புக்குள் குறுக்கிவிட்டார். பின்னால் வந்த பலரும் ஏறத்தாழ இந்த நட்புவலையிலே சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள் என்பதைப் பல உரைகள் நிரூபிக்கின்றன.

ஆனாலும் குதிரையேறிய சுந்தரர் சாதாரண ஆளல்ல. இந்தக் குறளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கான சூட்சுமத்தையும் அவரே சொல்லிவிடுகிறார். எப்படி?

அது அப்படியே இருக்க, நாம ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு சின்னப் பகுதியைப் பார்ப்போம்:

சுயம்புவ மனு என்னும் அரசருக்கு உத்தானபாதர், பிரியவிரதன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவனுக்கு அரசாள்வதில் சிறிதும் விருப்பமில்லாமல் போகவே தந்தை இளையவன் பிரியவிரதனை அழைத்து அரசனாகக் கட்டளையிட்டார். அவனும் இறைச்சிந்தனையுடயவனாய் இருக்கவே, காட்டுக்குத் தவம் செய்யப்போகிறான். பெரிய கதையைக் குறுக்குவோம்: நாரதர், பிரம்ம தேவர் முதலியோர் அவன் தவம் செய்யும் குகைக்குப் போய் அவனது உலகியல் கடமைகளை உணர்த்த அவன் திரும்பி வந்து ராஜ்யபாரம் ஏற்கிறான்.

பிரியவிரதன் பெருவீரனாக இருக்கவே பகையற்று வாழ்ந்தான். ஒருநாள் அவன் மேருமலைக்குப் போகையிலே, உலகின் ஒருபகுதி இருளாகவும், மற்றொரு பகுதி பகலாகவும் இருப்பதைக் காண்கிறான். (பாகவதத்தின் காலம் என்ன? எப்போது முதல் பாரதத்தினர் உலகில் ஒருபகுதி பகலாக இருக்கும்போது மற்றொரு பகுதி இரவாக இருந்ததை அறிந்திருந்தனர் போன்ற வியப்பான சங்கதிகளை ஆய்வாளர் விளக்கவேண்டும்). அக்காலத்தோர் மேருமலையை உலகின் மையமாகக் கருதினர். சூரியன் இதைச் சுற்றிவருவதாகவும் கூறினர். இது Geocentric Theory என்றழைக்கப் பட்டது.

விஷயத்துக்கு வருவோம். இப்படி மேருவைச் சுற்றிவருவதால் எப்போதும் உலகின் ஏதாவதொரு பகுதி இருளாக இருப்பது பிரியவிரதனுக்குப் பிடிக்கவில்லையாம். அவன் சூரியனோடு போரிட்டு, வென்று, உலகில் இருள் என்பதே இல்லாமல் செய்தான் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். நல்லவேளையாக மீளவும் யாரோ ஒரு அரசன் முன்னிருந்த நிலையே (status quo ante) கொண்டுவந்திருக்கவேண்டும்.

குளத்திலே இருக்கிற தாமரை காலையில் சூரியனைப் பார்த்து மலரும். சூரியன் மறைந்தால் வாடிவிடும். தாமரைக்கு வேறெதுவும் பொருட்டல்ல. ஆனால் மரக்கொம்பில் இருக்கும் மாம்பூவின் மலர்ச்சி சூரியனைப் பொறுத்ததல்ல. வாடி உதிரும்வரை மரத்தின்மேல் மலர்ந்திருக்கும். இப்போது பரிமேலழகரின் விளக்கத்தைக் கேளுங்கள்: "(உயர்ந்தோரோடு) கயப்பூப் போல வேறுபடாது, கோட்டுப் பூப்போல ஒருநிலையே நட்பாயினான் எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்."

கயம் என்றால் குளம். கயப்பூ - குளப்பூ. இரவில் மலரும் அல்லி போன்ற நீர்ப்பூக்களும் இருக்க நமக்கு ஏனோ மலர்தலும் கூம்பலும் என்ற உடனே தாமரையைத் தானே நினைவுக்கு வருகிறது?

தாமரைக் காடான இராமனை தசரதன் கூப்பிட்டு "புனையும் மா முடி புனைந்து, இந்த நல் அறம் புரக்க நினையல் வேண்டும்" என்கிறான். அப்படி, முடிபுனைந்து மன்னனாக வேண்டும் என்று சொன்னபோதும் இராமன் "காதல் உற்றிலன், இகழ்ந்திலன்; 'கடன் இது' என்று உணர்ந்தும்" அப்பணியை ஏற்கிறான். "ஹைய்யா! நான் ராஜாவாகப் போறேன்" என்று மூன்றுமுறை கூரை தலையில் இடிக்கும்படிக் குதிக்கவில்லை. தோளிலிருந்த துகிலையெடுத்துக் கொண்டு சாலையிலெல்லாம் "நான் ஆணையிட்டால்..." என்று பாடியபடி ஓடவில்லை. "ஐயையோ! நமக்கு அரசாட்சியெல்லாம் வாணாம்ப்பா. நான் சுதந்திரப் பறவை" என்று கழட்டிக் கொள்ளவும் இல்லை. மாமன்னன் சொன்னதைச் செய்வதல்லவா எந்தன் பணி என்று அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.

இராமன் முடிபுனையப் போகிறான் என்று உலகமே களியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் அவனைப் பேரன்புடன் வளர்த்து ஆளாக்கிய சிற்றவை அழைக்கிறாள். தன் மேலாடையைப் பணிவோடு கையில் மடக்கிவைத்துக் கொண்டு, வாய்பொத்தி, "நாள் முழுதும் மேயப் போயிருந்த தாய்ப்பசுவை மாலையில் வந்ததும் கண்ட கன்றைப் போன்ற" இராமன் நின்றானாம்.

பரதன் அரசாள்வான்; நீ காட்டுக்குப் போய்த் தவம்செய்துவிட்டுப் பதினான்காண்டுகள் கழித்து வா என்ற இரண்டு இரண்டு செய்திகளை மன்னன் சொல்லச் சொன்னதாகக் கைகேயி சொன்னபோது இராமன் என்ன செய்தான்? பின்னால் அசோகவனத்தில் சீதை அனுமனிடம் சொல்கிறாள்:

'மெய்த் திருப்பதம் மேவு' என்ற போதினும்
'இத் திருத் துறந்து ஏகு' என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.


ஆமாம், 'நீ பட்டமேற்க வேண்டும்' என்றபோதும் சரி, 'காட்டுக்குச் சாமியாராகப் போ' என்ற சொல்லைக் கேட்டபோதும் சரி, இராமன் முகம் தாமரையைப் போலத்தான் இருந்ததாம். ஆனால் இது சித்திரத் தாமரை. உண்மையான கயப்பூ இருளைக் காண வாடுமே. இந்தப் பூ கைதேர்ந்த ஓவியன் கிழியில் தீட்டிய தாமரைப்பூ. எப்படி கிரேக்கத் தாழியில் பொறித்திருக்கும் மரத்தைப் பார்த்து "ஓ மகிழ்ச்சியான கிளைகளே! நீங்கள் இலையை உதிர்ப்பதில்லை, வசந்தத்தை நீங்கள் வழியனுப்புவதுமில்லை" (Ode on a Grecian Urn by John Keats) என்று கீட்ஸ் சொல்கிறானோ, அதே போல இந்த ஓவியத் தாமரைக்கும் மாற்றம் இல்லை. அட இராமனின் அறிவு வள்ளுவன் சொன்னாற்போல 'மலர்தலும் கூம்பலும் இல்லது' ஆக இருக்கிறதே!


ஏன்? கதிரவன் இன்னொரு புறம்தான் போயிருக்கிறானே தவிர, ஒரேயடியாகக் காணாமற் போய்விடவில்லை என்கிற விஷயம் இந்த முட்டாள் தாமரைக்கு தெரியவில்லை (முள்+தாள் தாமரை என்று சிலேடை பேசவில்லை நான்). தாமரை ஒரே நாளில் வாடுகிற பூவல்ல. தினமும் சூரியன் மறைவதையும் மீண்டும் மறுநாள் வருவதையும் பார்த்தும் கூட அது மாலையில் கூம்புவதை விடுவதில்லை.

மனிதனின் ஒட்பம் அத்தகையதல்ல. ஒருமுறை பார்த்தால் உள்ளே அதைச் சேமித்து வைத்துக்கொண்டுவிடுவான். கதிர்போனாலும் இது நிரந்தர இருளல்ல என்னும் தெளிவு அவனது அறிவுக்கு உண்டு. இருக்கவேண்டும். ஆனால், வாழ்வின் இருளான சமயங்களில்? நம்பிக்கை இழந்துவிடுகிறானே! குமுறி அழுத எத்தனை இரவுகள், அஞ்சி நடுங்கிய எத்தனை இரவுகள், தற்கொலை செய்துகொண்டுவிடலாமா என்று மறுநாள் காலையைச் சந்திக்கக் கூசிய எத்தனை இரவுகள் - ஒளிமயமானதாக விடிந்திருக்கின்றன! "நானா அப்படி அஞ்சினேன்!" என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும்படி ஆகியிருக்கின்றதே. அன்று நாம் அஞ்சிய சூழ்நிலைகள் இன்று நகைக்கிடமாய்க் கூட ஆகிவிட்டிருக்கின்றனவே.

ஆனால், அதனை அடுத்தூர்வது அ·தொப்பதில் என்கிற ஒட்பம் இருப்பவன் இராமனைப்போலவே மலர்வதும் இல்லை, கூம்புவதும் இல்லை. ஏனெனில் அவனது அறிவு இவ்வுலகையே அரவணைத்ததாய் (உலகம் தழீஇயது), (பகல், இரவு; இன்பம், துன்பம்; பிறப்பு, இறப்பு போன்ற) உலகின் இருமைகளைப் புரிந்துகொண்டதாய் இருக்கிறது. அந்தப் புரிதலால் மனம் சமநிலை எய்தியிருக்கிறது. மெய்யான அறிவு இதுதான்.

இந்த வெளிச்சத்தில் (ஒட்பத்தில்!) மீண்டும் திருக்குறளின் பொருளைப் பார்ப்போம்:

(சூரியனின் ஒளி உலகனைத்தையும் தழுவியிருப்பதை அறியாது) மலர்வதையும் கூம்புவதையும் (தாமரைப்பூப் போலச்) செய்யாமலிருப்பதே அறிவுடையான் செயல். ஏனென்றால் அவனது ஒட்பம் (wisdom) உலகத்தின் (இருமைகள் கூடிய) இயல்பை முழுதுமாய் அரவணைத்துச் செல்வதாய் இருக்கிறது.

ஆரம்பத்தில் கேட்ட கேள்வி மீண்டும் இதோ - உங்களுக்கு (இத்தகைய) அறிவு இருக்கிறதா?

May 17, 2004

திருக்குறள் சொல்லும் தீக்கள் - 3தலைகீழ் நெருப்பு
=============

இப்போ நாம பாக்கப் போறது தலைகீழ் நெருப்பு. ஹார்மோன் நெருப்பு.

சாதாரணமா நெருப்பு ரொம்பப் பக்கத்தில் போனால் சுடும், விலகினால் குளிரும் - அப்படி நெருப்பைத்தான் குறள் 691-ல் பார்த்தோம்.

ஐயா மெடிக்கல் ரெப். கொடைக்கானலுக்குப் போயிருக்கிறார் தொழில் நிமித்தமாய். வெய்யில் தாங்கமுடியாமல் ஏராளமான மக்கள் அங்கே வந்து குவிந்திருக்கிறார்கள். ஜோடி ஜோடியாகக் காதலர்களும் தான். இவர் டாக்டர் வீட்டு வாசலில் கனத்த பையோடும் அதைவிடக் கனத்த மனதோடும் உட்கார்ந்திருக்கிறார். இவருக்குக் கொடைக்கானல் பிடிக்கவில்லை.

அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு மருத்துவரைப் பார்க்கப் போகிற வழியில் படகுத்துறை. அங்கே பூங்கொத்துக்கள் போல ஆண்களும் பெண்களும். பெடலிங் படகில் அசட்டுத் தனமான ஜோக்குகளுக்கெல்லாமல் அடக்கமுடியாமல் சிரித்துக் கொண்டு, சாதாரண சா·ப்டியை தேவாமிருதம் போலச் சுவைத்துக்கொண்டு, மேலே ஒட்டிய சருகைத் தட்டிவிடுகிறாற்போலத் தொட்டுப்பார்த்துகொண்டு, திடீரென்று பேச மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, 'அடடா, அரைமணி நேரம் முடிந்து விடுமே, படகிலிருந்து இறங்கவேண்டுமே' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு - எத்தனை காதல் ஜோடிகள்!

நம்ம ஆளுக்கு மட்டும் கொடைக்கானல் சுடுகிறது. இவனுடைய 'அவள்' வேறொரு ஊரில் இருக்கிறாள். மரத்தைப் பார்த்தால், பூவைப் பார்த்தால், காற்று வீசினால், சூரியன் எழுந்தால், ஒரு நல்ல பானி-பூரி சாப்பிட்டால், வெளிர்நீலப் புடவையைப் பார்த்தால், மல்லிகையைப் பார்த்தால் - இவனுக்கு அவள் ஞாபகம் வந்துவிடுகிறது. இரவு நேரம் வந்தது. பகலைவிட எல்லோருக்கும் அதிகக் குளிராக இருக்க, இவனுக்கு இரவில்தான் அதிக வெம்மை.

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு அவன் யோசிக்கிறான்: "இவளுக்கு மட்டும் இந்த அதிசய நெருப்பு எங்கிருந்து வந்தது? இவளை விட்டு அகன்று போனால் அது சுடுகிறதே. அதிக தூரம் நீங்கிப் போனால் அதிகம் சுடுகிறது. ஆனால் அவளருகில் போனால் வெம்மை அடங்கிவிடுகிறது. அணைத்தாலோ, சிலீரென்று குளிர்ச்சியாக இருக்கிறதே. எங்கே பெற்றாள் இந்த நெருப்பை?"

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்


(குறள்: 1104)

[தெறும் - சுடும்; குறுகுங்கால் - நெருங்கும்போது]

எல்லோரும் எப்போதோ ஒருமுறையாவது அனுபவித்த நெருப்புதானே இது.