திருச்சிற்றம்பலம்
மிகப் பழையவன், புதியவற்றுக்கும் புதியவன்!
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய்.
சென்ற பாடல் வரையிலும் எழுந்து வரச் சோம்பல்படும் தோழியைரைப் பார்த்துப் பாடியவர்கள் இந்தப் பாடலில் தொடங்கிப் பெருமானின் புகழைப் பாடுகின்றனர்.
'மிகப் பழமையானவற்றுளெல்லாம் பழமையானவனே, பின்னர் மிகப் புதுமையெனக் கருதுபவை அனைத்துக்கும் புதுமையானவனே!
'செம்மையான அடியாராகிய நாங்கள் உன்னை மட்டுமே தலைவனாகப் பெற்றிருக்கிறோம். நாங்கள் உனது அடியார்களின் தாள்களைப் பணிவோம்.
'அவர்களுக்கே நாங்கள் உரிமையுடையவர்கள் ஆவோம். அவ்வாறு உனக்கு யார் அடியாரோ அவரே எமக்குக் கணவராக முடியும். அவர்கள் விரும்பியபடியே தொண்டராக இருந்து பணி செய்வோம். இத்தகைய வாழ்க்கையை நீ அருளுவாயென்றால் எமக்குக் குறையெதுவும் இருக்காது.'
சிறப்புக் குறிப்பு: நாமறிந்த, அறியாத அனைத்துக்கும் மூலகாரணமானவன் சிவபெருமானே. நமக்குப் பின்னும் அடுத்தடுத்த ஊழிகளிலும் தொடர்ந்து இருக்கப் போகும் அவனை எல்லாவற்றுள்ளும் புதுமையென்று கருதுவதில் தவறென்ன. 'உன்னையும் உன் அடியாரையும் மட்டுமே பணிவோம்' என்று உறுதியோடு இருக்கும் இம்மகளிர் சிவநிந்தனை செய்வாருக்கு வாழ்க்கைப்பட்டால் அவர் வாழ்க்கை முழுதுமே துன்பமாகிவிடாதோ. எனவேதான் நாம் விரும்பியவாறு கணவரை நீ எமக்கு அருளிவிட்டால் பின்னர் எமக்குக் குறையெதுவும் இருக்காது என்கின்றனர்.
பாவை நோன்பு நோற்பதன் ஒரு காரணம் எனக்கு இத்தகைய கணவன் வாய்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவதும் ஆகும். இந்தப் பாடலில் அதனை இவர்கள் செய்கின்றனர்.
(அருஞ்சொற்பொருள்: பேர்த்தும் -> பெயர்த்தும் - அதற்குப் பின்னரும், மீண்டும்; பெற்றி - தன்மை; உகந்து - விரும்பி; தொழும்பு - அடிமைத் தொண்டு, பக்தி)
No comments:
Post a Comment