December 18, 2007

மாணிக்கவாசகர் - 3

Photo Sharing and Video Hosting at Photobucketஅரிமர்த்தன பாண்டியன் மீண்டும் அமைச்சராகத் தன்னிடம் இருக்கக் கோரியும் அதனை விரும்பாத திருவாதவூரார் சிவத்தலங்களைத் தரிசித்தவாறு திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அங்கும் சிவபிரான் அவர்முன்னர் ஒரு வேதியர் போல வந்தார்.

அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.

'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.

'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.

அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர், வாதவூரார் சொல்லச் சொல்லச் செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
Photo Sharing and Video Hosting at Photobucket முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லைவாழ் அந்தணர் ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையாரும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனமகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத் துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.

இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு. மேற்கொண்டு திருவெம்பாவைப் பாடல்களைப் பார்க்கலாம்...

(மாணிக்க வாசகர் சரித்திரம் முற்றும். தகவல் உதவி: அபிதான சிந்தாமணி)

மதுரபாரதி

No comments: