June 21, 2013

அருணாசல அற்புதம் 3: “எனக்கு ஒரே ஒரு ருசி”


ஒருமுறை ஔவைப் பாட்டி வழுதி என்பவன் திருமணத்துக்குப் போயிருந்தாளாம். அவன் தமிழில் மிகத் தேர்ந்தவன். அங்கே நடந்த விருந்தில் அவள் எவையெல்லாம் உண்டாளாம் தெரியுமா? எல்லாப்புறமும் பலரால் நெருக்குண்டாளாம், பிடித்துத் தள்ளுண்டாளாம். கூட்டத்தைத் தாண்டி அவளால் உணவுக் கூடத்துக்குள் நுழையே முடியவில்லை. மிகவும் நேரமாகிப் போகவே பசி அதிகமாகி, உடல் வாடிப் போயிற்றாம்!

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் சோறுண் டிலேன்.

ஆனால் குமரகுருபரர் சொல்கிறார், யாரொருவர் இந்த உலக வாழ்க்கையிலே மொத்துண்ண, அதாவது இடிபட, விரும்பவில்லையோ, அவர்கள் பைத்தியக்காரன் சாப்பிடுவதைப் போல சாப்பிடுவாராம். பைத்தியக்காரன் எப்படிச் சாப்பிடுவான்? முதலில் அவனுக்கென்று ஏதும் விருப்பம் கிடையாது. விரும்பினாலும் கொடுப்பார் கிடையாது. அப்படியே தவறிப்போய் யாரேனும் சுவையான பண்டங்களை அவன் முன்னால் வைத்தாலும் அதில் கவனம் செலுத்தாமல், தன் கையில் என்ன எடுக்கிறோம், வாயில் என்ன போகிறது, அது எப்படிச் சுவையாக இருக்கிறது என்பவற்றை அறியாமல் சாப்பிடுவான்.

துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையும் எல்லாம்
அயிற்சுவையின் ஆகுவ என்றெண்ணி - அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர். (நீதிநெறிவிளக்கம் - 85)

நன்கு சாப்பிட்டால் தூக்கம் ரொம்ப சுவாரசியமாக வரும். சாப்பிடும் உணவிலேயே காம உணர்ச்சியைத் தூண்டும் பொருள்களும் உள்ளன. இதைப் புரிந்துகொண்டதனால், எவனொருவன் எல்லோரையும் போல உலக வாழ்க்கையில் அடிபட விரும்பவில்லையோ, அவன் பைத்தியக்காரனைப் போல, உணவில் சிறிதும் அக்கறை காட்டாமல் சாப்பிடுவானாம்!

ஔவையார் சாப்பிடப் போய் உலகோரிடையே இடிபட்டார். குமரகுருபரரோ சாப்பிட்டுவிட்டு அதனால் உலக வாழ்க்கையில் அடிபட மாட்டேன் என்கிறார்.

ஒரு பித்தனுக்கோ கவனித்துச் சோறு போட யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு ஞானிக்கு அப்படியல்ல. ஸ்ரீ ரமண மகரிஷிகளுக்குப் பலபேர் பல பொருட்களைக் கொண்டு வருவார்கள். பக்தர்கள் கொண்டுவரும் உணவுப் பண்டங்களை எல்லாம் பழனி சுவாமி ஒன்றாகக் கலப்பார். ஒரு கவளம் அதில் ரமணருக்குக் கொடுப்பார். அவ்வளவுதான். மீதியிருப்பது மற்றவர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படும். இறுதிவரையில் ரமணர் குழம்பு, ரசம், காய், பாயசம் என்று தனித்தனியே உணவு உண்டதில்லை.

இந்தச் சமயத்தில் தேவராஜ முதலியார் சொல்லும் ஒரு சம்பவம் நினைவுகூரத் தக்கது. ரமணாச்ரமம் ஏற்பட்டுவிட்ட சமயம். போஸ் என்ற பக்தரின் தாயார் பலவித உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டு வந்து உணவு வேளையின் போது பகவானுக்கும் பக்தர்களுக்கும் பரிமாறினார். வழக்கம்போல ரமணர் ஒவ்வொன்றிலும் சிறிது, சிறிது எடுத்துக் கலந்து சாப்பிட்டார். போஸ் வங்காளி ஆதலால் தேவராஜ முதலியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லிவிட்டு ரமணர் இவ்வாறு கூறினார், "இனிமேல் இப்படிச் சிரமப்பட்டு வகைவகையாக உணவு தயாரித்துக் கொண்டு வரவேண்டாம் என்று அந்த அம்மாவிடம் சொல்லுங்கள். உங்கள் எல்லோருக்கும் பலவிதமான ருசிகள் உள்ளன; எனக்கோ ஒரே ஒரு ருசிதான். உங்களுக்குப் 'பலவற்றில்' ருசி; எனக்கு எப்போதும் 'ஒன்றில்'தான் ருசி. நான் எல்லாவற்றையும் கலந்து ஒன்று சேர்த்துச் சாப்பிடுகிறேன் என்பதையும் கவனித்திருப்பீர்கள்."

நாமெல்லாம் ஞானிகள் அல்ல. அதற்காக, நாவின் ருசியே குறியாக அலையவேண்டியதும் இல்லை. இப்போது மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகள் வயதுக்கு மீறிய வளர்ச்சியும், எடையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெற்றோரும் தம் குழந்தைகள் எத்தனைக்கெத்தனை நிறையச் சாப்பிடுகிறார்களோ அத்தனைக்கதனை ஆரோக்கியம் என்று நினைத்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு உடல் உழைப்புக் கிடையாது. அரை கிலோ மீட்டர் நடப்பதென்றாலும் ஏதோ ஒரு வாகனத்தைத் தேடுகிறோம். அளவுக்கதிகமான உடல் பருமன் சிறு வயதிலேயே சர்க்கரை நோய், இதய நோய், நீங்காத சோர்வு, புத்தி மந்தம் போன்ற பலவகைச் சிக்கல்களில் கொண்டுபோய் விடுகிறது. மற்றவர்கள் கேலி செய்வதால் ஏற்படும் மனவியல் ரீதியான சிக்கல்கள் வேறு.

அரை வயிற்றுக்கு உணவு, கால்வயிறு நீர் உட்கொள்ள வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள். மீதி கால்வயிறு காலியாக இருக்க வேண்டும். நம்முடைய இரைப்பை சுருங்கி விரிவதன் மூலம்தான் உணவு செரிக்கிறது. அது சுருங்கவே முடியாமல் தலையணையில் பஞ்சு அடைப்பது போல உணவை அடைத்துவிட்டால்.....!

வயது ஏற ஏற, பிற சுவைகளைக் குறைத்துக் கொண்டே வந்து ஒரே சுவை, அதாவது இறைவனின் அழகிய வடிவத்தின் சுவை, அவனுடைய திகட்டாத திருப்பெயரின் மீது சுவை என்று மாறிவிட்டால், வாழ்க்கை அதிகம் சுவைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

(தொடரும்)

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

June 13, 2013

அருணாசல அற்புதம் 2: கிரிவலம் தரும் பெருநலம்

ரமணாச்ரமத்திலிருந்து அண்ணாமலை தரிசனம்

சென்ற ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியன்று ஆருத்திரா தரிசனம் என்னும் திருவாதிரை நாள் வந்தது. அது சிவபெருமானுக்கு விசேடமான நாட்களில் ஒன்று. மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுதையே!என்றுதான் சிவபக்த சிரோமணியான நந்தனார் சிதம்பரத்துக்குப் போய்த் திருச்சிற்றம்பலவனைத் தரிசிக்க ஆசைகொண்டு பாடினார்.

ஆனால் 1879ஆம் ஆண்டில் ஆருத்திரா தரிசனம் டிசம்பர் 29ஆம் தேதியன்று வந்தது. அன்றிரவு மணி ஒன்று இருக்கும். திருச்சுழி என்ற ஊரில் அழகம்மாள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவும் அவ்வூர்க் கோவிலுக்குள் பூமிநாதர் நுழையவும் சரியாக இருந்தது. இப்போதுபோல மகப்பேறு வசதிகள் இல்லாத காலத்தில் அவருடன் இருந்தவர் கண் தெரியாத ஒரு பெண்மணி. ஆனால், என்ன ஆச்சரியம்! குழந்தை பிறந்த அதே நேரத்தில் அவள் கண்முன்னே ஒரு மின்னல்வெட்டு தோன்றி மறைந்தது. அழகம்மை, இவன் தெய்வீகப் பிறவியாக இருக்கவேண்டும்என்றாள் அந்த முதியவள்.

அந்தக் குழந்தைதான் வெங்கட்ராமன். பின்னாளில் ரமண மகரிஷி என்ற மாபெரும் ஞானச்சுடராகத் திருவண்ணாமலையில் பிரகாசிக்கப் போகிறவன். ரமணரையே அருணாசலத்தின் அற்புதம் என்று கூறிவிட முடியும். அகிலமெல்லாம் அத்தலத்தின் மகிமை பரவியுள்ளதென்றால் அதற்கு வித்திட்டவர் ரமணர்தான். 

மலையைச் சுற்றுவதா?

பதினான்காம் வயதில் ஞானத்தைப் பெற்றுவிட்ட, அதற்குப் பிறகு எந்தவித ஆன்மீக சாதனையும் தேவைப்படாத ரமணரும்கூட செம்மலையாக நின்ற செம்மலை வலம் வருவதில் பெருமகிழ்ச்சி கண்டதுண்டு.

தேவராஜ முதலியார் என்றொரு ரமண பக்தர் இருந்தார். நல்ல அரசுப் பதவியில் இருந்த அவர் தன்னைப் பெரிய அறிவாளி என்று நினைப்பார். அதே நேரத்தில் சோம்பேறித்தனமும் அவரிடம் இருந்தது. ஜடமான அந்த மலையைச் சுற்றி வருவதில் என்ன பயன் என்று நினைத்துக் கொள்வார். பிற்காலத்தில் அவர் ரமணாச்ரமத்துக்கே வந்து தங்கிவிட்டார். அப்போது தனது சந்தேகத்தை மகரிஷியிடம் கேட்டேவிட்டார்.

அதற்கு பகவான் கூறினார், “கிரிப்பிரதட்சிணம் செய்வது எல்லோருக்கும் நல்லதே. அதில் நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமில்லை. நம்பிக்கை உள்ளவரோ அற்றவரோ ஆனாலும் எப்படி நெருப்பு தன்னைத் தீண்டியவரைச் சுடுகிறதோ, அதுபோலவே இம்மலையும் தன்னை வலம்வரும் எல்லோருக்கும் நன்மை தரும்.”

கேள்வி கேட்பதே அறிவின் அடையாளம் என்று நினைப்பவர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். தேவராஜ முதலியாரும் அப்படிப்பட்டவர்தான். சர்க்கரை இனிக்குமா?” என்று கேட்டுக்கொண்டே இருப்பவனுக்கு அதன் சுவை புரிவதே இல்லை; ஒரு துளி எடுத்து நாக்கில் வைத்துக்கொள்பவன் அதற்குப் பிறகு கேள்வி கேட்பதில்லை. தேவராஜ முதலியாரும் கிரிவலத்தின் பலனைப் பற்றி ரமணரைக் கேள்வி கேட்டுத் துளைத்தெடுப்பவராகவே இருந்தார்.

இத்தனை கேள்விகளை ஏன் எழுப்புகிறாய்? எந்தப் பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உடற்பயிற்சியாவது ஆகிவிடும், போய் வாஎன்றார் ஒருமுறை. மற்றொரு முறை ஒருமுறை சுற்றி வா. அருணாசலம் உன்னை வசீகரிப்பதை நீயே உணர்வாய்என்றார்.

இறுதியாக முதலியார் இரு வாரங்களுக்கு ஒருமுறை திருச்சுற்று வரத் தொடங்கினார். அவர் கூறுகிறார், “ஆரம்ப நாட்களில் எனது இப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடந்தன. பகவான் என்னிடம் கூறியிருந்தபடியே அருணாசலம் என்னை ஈர்க்கத் தொடங்கியது.....பிரதட்சிணம் செய்வதால் எல்லா விதத்திலும் நற்பயன் பெற்றிருக்கிறேன் என்பது என் அனுபவம்.

தமிழறிஞரும் கவிஞருமான முருகனார் பெற்ற அனுபவம் இன்னும் உயர்ந்தது. நடக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எனக்குத் தேகான்ம புத்தி (உடலே தான் என்னும் உணர்வு) மறைந்ததுஎன்கிறார்.

தியானம் செய்ய இயலாதவர்கள் அருணாசலத்தைப் பிரதட்சிணம் செய்வதால் தம் முயற்சியில் வெற்றி பெறுவர்என்று ரமண பகவான் பலரிடமும் சொன்னதுண்டு.


முயற்சி செய்துதான் பாருங்களேன்!

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

June 05, 2013

கதாதரனின் மூன்று கேள்விகள்

கதாதரன் மிகச் சிறியவனாக இருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். தந்தையார் இருந்த காலத்திலேயே குடும்பம் ஒன்றும் செழிப்பான நிலையில் இருக்கவில்லை. மூத்தமகன் ராம்குமார் கொல்கத்தாவுக்குச் சென்று அங்கே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கினார். கதாதரன் அங்கே சென்று அண்ணனோடு இருக்க வேண்டியதாயிற்று.

அண்ணன் ராம்குமாருக்கு கதாதரன் பள்ளிக்குச் சென்று நவீன கல்வி கற்க வேண்டுமென்று ஆசை. அதை அவனிடம் கூறினார். அவனோ ஒரு தெய்வீகப் பாடலைக் கேட்டாலே ஆனந்த பரவசத்தில் மூழ்கிவிடுகிற அற்புதச் சிறுவன். அண்ணன் கூறியதைக் கேட்டதும் அவன் தனக்குத் தானே மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டான்.

“இந்தக் கல்வி கற்பதால் எனக்கு பக்தியும் ஆன்ம போதமும் ஏற்படுமா?” என்பது முதல் கேள்வி. “இல்லை” என்று அழுத்திக் கூறியது மனம்.

“என் தந்தையாரைப் போலவே தெய்வ பயமும், நேர்மையும் கொண்டவனாக என்னை ஆக்குமா?” என்பது இரண்டாவது கேள்வி. “இல்லை” என்றது அவனது மனச்சாட்சி.

“இந்தக் கல்வியின் வழியே நான் கடவுளை உணர்ந்து, அஞ்ஞானத்திலிருந்து தப்பி, உலகப் பொருட்களைத் துய்க்கும் ஆசையிலிருந்து விடுபடுவேனா?” என்பது மூன்றாவது கேள்வி. மனத்தின் பதிலில் மாற்றம் இல்லை.

“பிறகு இந்தக் கல்வியை வைத்துக்கொண்டு என்ன செய்வது! இதனால் உலகின் துன்பங்களிலிருந்து என்னை விடுவித்து தெய்வ அனுபூதியைத் தரமுடியாது. என் ஆன்மீக லட்சியங்களைத் தூக்கி எறிவதைவிட, வாழ்நாள் முழுவதும் கல்வியறிவு இல்லாதவனாகவே இருந்து, கடவுள் மார்க்கத்தில் செல்வதையே விரும்புகிறேன்” என்று தீர்மானித்தான் கதாதரன்.

ராம்குமார் மீண்டும் கேட்டபோது, “அண்ணா! வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? என் இதயத்தை ஒளிரச் செய்யும் ஞானமே எனக்குத் தேவை. அதற்குப் பின் எனக்குத் தேவைகளே இருக்க மாட்டா” என்றான் கதாதரன் மிக அழுத்தமாக.

மெத்தப் படித்த கல்விமான்களும் இந்தப் படிப்பறிவில்லாப் பரமஹம்சனைத் தேடி வரவேண்டியதாயிற்று பிற்காலத்தில். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் விவேகானந்தர். அந்தச் சிறுவன் கதாதரன்தான் உலகம் போற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

(தகவல்: The Life of Swami Vivekananda - by His Eastern and Western Disciples; Published by Advaita Ashrama, Kolkatta)

June 01, 2013

அருணாசல அற்புதம் 1: செம்மலைக்கு நிகர் எம்மலை!

அதுவே தலம் அருணாசலம் தலம் யாவினும் அதிகம் 
அது பூமியின் இதயம்

என்பது அருணாசல மகாத்மியத்தில் நந்தி வாக்காக வருவது. இந்த அழகிய செய்யுளை எழுதியவரோ அருணாசலம் என்று கூறியவுடனே நம் நினைவுக்கு வருகின்ற பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள். எல்லாத் தலங்களையும் விட மகிமையில் உயர்ந்தது என்பதனாலே இது ‘தலம் யாவினும் அதிகம்’ என்று சொல்லப்படுகிறது.

வணிகமும் செல்வமும் செழிக்கும் இடங்களையே தேடித்தேடிப் போய்க் குடியேறிக் கொண்டிருக்கிற காலம் இது. ஆனால் திருவண்ணாமலைத் தலமோ அருளாலே நிறைந்தது. ‘என்றுமே அறவோர் அன்பர்க்கு இருப்பிடம்’. கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஏராளமான சித்தர்கள் வசிக்குமிடம். “ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் அருணாசலம்” அல்லவோ அது. தபோதனர் என்றால் தவத்தையே செல்வமாக, தவத்தால் பெற்ற ஞானத்தையே பெருஞ்செல்வமாகக் கொண்டவர்களைக் குறிக்கும். ஞானிகளை மட்டுமல்லாமல் ஆன்மீகத் தேடல் கொண்ட அனைவரையும் இந்த மலை வா என்று அழைத்தபடியே இருக்கும்.

அருணம் என்றால் சிவந்த நிறம். அசலம் என்றால் மலை. இந்தப் பகுதியில் வசிப்போர் செம்மலை என்று பெயரிட்டுக்கொள்வதுண்டு. சோணம் என்றாலும் சிவப்புதான். சோணாசலம் என்ற பெயரும் அண்ணாமலைக்கு உண்டு. ‘சித்திரமாம் இஃதெல்லாம் செம்மலையே’ என்று ரமணர் அருணாசல பஞ்சரத்னத்தில் கூறுகிறார்.

குன்றாத நெருப்புக் குன்றம்

சிவப்பு நெருப்பின் நிறம். அண்ணாமலை என்பது அக்கினி மலை. அந்த அக்கினி மலையை அடையாளம் காட்டுவதாகத்தான் இங்கே அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதத்தில் முழுநிலவு நாளன்று இந்தக் குன்றத்தின் உச்சத்தில் ஏற்றப்படுகின்றது. ஆண்டுதோறும் இந்த ஞானப் பேரொளியின் தரிசனத்தை அன்பர்கள் தொலைக்காட்சி வழியே கண்டு களித்திருப்பீர்கள்.

இந்த நெருப்புக் குன்றம் வெறும் பௌதிகப் பொருளல்ல. வெறும் கல்லென்று இதைக் கருதுவதற்கில்லை. இது ‘சித்கனம்’ எனப்படும் ஞானத்திரள். அதனால்தான் திருஞானசம்பந்த மூர்த்திகள் திருவண்ணாமலைத் தேவாரத்தில் ‘ஞானத்திரளாய் நின்ற பெருமான்’ என்று விதந்து பாடுகிறார். அதற்கொரு புராணக் கதை உள்ளது.

சிவமலையே இந்தச் செம்மலை

ஒருமுறை பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் இடையே யார் பெரியவர் என்றொரு விவாதம் எழுந்தது. விவாதம் வலுத்து, சண்டை என்ற நிலைக்குப் போய்விட்டது. படைப்புக்கும் கடவுளுக்கும் காக்கும் கடவுளுக்கும் இடையே போர் மூண்டால் பிரபஞ்சம் என்ன ஆவது? அப்படியே அச்சத்தில் உறைந்து நின்றது. தேவர்கள் எல்லாரும் ஓடிச் சென்று சிவபெருமானிடம் இதற்கு வழி செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.

நீறாடிய பெருமான் நெருப்புத் தூணாக மாறி அங்கே நின்றுவிட்டான். போராடிய இருவருக்கும் அசரீரியாக ஒரு குரல் கேட்டது, “எனது பாதத்தையும், உச்சியையும் கண்டுபிடிக்க இருவரும் ஆளுக்கொரு புறமாகப் புறப்படுங்கள். யார் முதலில் இரண்டில் ஒன்றை எட்டுகிறாரோ, அவரே பெரியவர்!” என்றது அந்தக் குரல். “நல்லது, நாமே அதிக சக்திசாலி, சவாலைச் சந்தித்து, வெற்றி பெற்று எமது மேன்மையை உலகுக்கு நாட்டுவோம்” என்று இருவருமே எண்ணினர்.

திருமாலுக்கு வராக அவதாரம் எடுத்த அனுபவம் கைகொடுத்தது. தான் ஒரு காட்டுப்பன்றியாக மாறி, பூமியைக் குடைந்துகொண்டு அக்னிஸ்தம்பத்தின் அடியை நோக்கிக் கிளம்பினார். பூதேவி எப்படியும் அவருக்கு உதவியாகத்தானே இருப்பாள்!

பிரம்மா அன்னத்தை வாகனமாகக் கொண்டவர். ஆனால் இந்தமுறை வானில் ஏறி உயரப் பறக்க வேண்டிய நிலை வரவே, தானே தன் வாகனத்தின் வடிவெடுத்து, அன்னமாகப் பறந்தார். மேலே, மேலே போய்க்கொண்டே இருக்கிறார், ஆனால் உச்சியை அடைய முடியும் என்று தோன்றவில்லை. அவ்வளவு உயர்ந்து நின்றது அந்த செஞ்சடை நெருப்புத் தூண்.

சற்றே மனம் தளர்ந்த நேரத்தில்தான் பிரம்மா அந்தத் தாழம்பூவைப் பார்த்தார். அது செஞ்சடையிலிருந்துதான் விழுந்திருக்க வேண்டும். “இதைக் கொண்டுபோய்க் காண்பித்தால் போதுமே, நாம் உச்சியை அடைந்ததற்குச் சாட்சியாக இருக்குமே” என்று ஓர் எண்ணம் தோன்ற, அந்தத் தாழம்பூவைக் கையில் பற்றிக்கொண்டு, தாழ இறங்கினார். அவரது தாழ்ச்சிக்கு அதுவே காரணமானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

திருமாலுக்கும் எட்டவில்லை சோதிவானவனின் திருவடி. ஆனால், தனது இயலாமையை ஒப்புக்கொண்டு மேலே ஏறிவந்தார். பொய்மையைத் துணைக் கொள்ளாத காரணத்தால் அவரும் நிலையில் தாழாது உயர்ந்தார். சிவஜோதியைத் துதித்துப் பாடி நின்றது நீலமணி நெருப்பு! தாழம்பூவைச் சாட்சியாகக் கொண்டு தாழ்ந்த செயல் செய்த பிரம்மனோ வானவர்முன் வெட்கித் தலைகுனிய வேண்டியதாயிற்று.

அடிமுடி காணாத அக்கினியின் பிரகாசத்தையும் வெப்பத்தையும் தாள முடியாமல் வானோரும் மண்ணோரும் தவித்தனர். “ஐயனே! குளிர வேண்டும்!” என்று மன்றாடினர். கையில் நெருப்பேந்தினாலும் தலையில் கங்கையை வைத்திருக்கும் ஐயனோ கருணைகூர்ந்து, “குளிர்ந்தோம்! ஆதவனின் ஒளியைப் பெற்று நிலவு எப்படி அமுத ஒளியைத் தருகிறதோ, அதுபோல புவியின் எல்லா ஆன்மீகத் தலங்களும் அண்ணாமலையிடமிருந்தே தெய்வீக சக்தியைப் பெற்று ஒளிதரும்” அன்று அருளினார் அரவணி பூண்ட ஐயன்.

இத்தலத்தை நினைத்ததும் அத்தன் ஆனந்தன் அருணா ரமணனே நமது நினைவுக்கு வருகிறான் என்றபோதும், சேஷாத்திரி சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் போலப் பல மகான்களின் வசிப்பிடமாக இருந்து சித்தபூமியாக இருந்து வருவது அருணாசலம். இதனை வலம்வருவதன் பெருமை சொல்லி மாளாதது. வரும் நாட்களில் இவற்றைப் பற்றி மேலும் மேலும் பார்த்து நம் அருணகிரி வலத்தைத் தொடர்வோம்.

(தொடரும்)

- ’Impress Mag' இதழில் வெளியான எனது கட்டுரைத் தொடரின் முதல் பகுதி