December 18, 2007

மாணிக்கவாசகர் - 2

Photo Sharing and Video Hosting at Photobucket அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி, முன்னரே அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று மணலில் வெய்யில் நேரத்தில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். (நம்ம ஊர் ஒண்ணாங்கிளாஸ் டீச்சர் குடுக்கற தண்டனை மாதிரி இருக்குதே :-)) அந்தக் காலத்தில் மந்திரிகளைக்கூடத் தண்டிக்கமுடிந்தது என்பதைக் கேட்கவும் நன்றாக இருக்கிறது!

சரி, வாதவூராருக்கு அப்படித் தண்டனை கொடுத்ததும் ஒருவகையில் நல்லதாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் வைகையில் தண்ணீர் வருமா? (தமிழின் மிகப்பழைய நூலான பரிபாடல் வைகையாற்றில் ஏராளமாகத் தண்ணீர் ஓட, அதிலே ஆண்களும் பெண்களும் சிறாரும் குளித்து மகிழ்ந்த காட்சிகளை விலாவாரியாக விவரித்து வயிற்றெரிச் சலைக் கொட்டிக்கொள்கிறது.) சிவபெருமானுக்கு பக்தனின் துயரம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். தாங்குமா? கரையை உடைத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது.

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். ஒரே ஒரு வந்திக் கிழவி, பிட்டு சுட்டு விற்பவள், மட்டும் தனிக்கட்டை. அவள் வீட்டில் இளைஞர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது
என்று யோசிக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து அவள் சார்பாக வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்குச் சம்மதித்த சிவபெருமான் 'வேலையைத்' தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. அங்கே பார்த்தால் ஐயா கொன்றை மரத்தடியில் குறட்டை! ('அரசு அலுவலகத்தில் தூங்கிய முதல் ஆள் நீர்தான்' என்று ஞானக்கூத்தன் முரசு கட்டிலில் தூங்கிய மோசிகீரனாரைப் பற்றிப் பாடுவார். அது நினைவுக்கு வருகிறது.)

கோபம் கொண்ட அரசன் அவனைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்துபோனான். ஆனால் அவன்மீது பட்ட பிரம்படி அண்ட சராசரங்களின் அனைத்து
உயிர்களின்மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்தவண்ணம் இருந்தார்.

இன்னும் உண்டு...

மதுரபாரதி

2 comments:

ஜடாயு said...

மிக அழகாக மணிவாசகர் சரிதத்தை எழுதியுள்ளீர்கள், மதுரபாரதி ஐயா.

"அக்ஞானத்தில் உழலும் உயிர் ஆன்ம பரிபக்குவம் பெறுவது" என்பதன் குறியீடு தான் நரிகள் பரிகள் ஆன கதை என்பதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன். சரித்திர நிகழ்வுகளுக்குக் குறியீட்டுத் தன்மை வழங்குவது நமது கலாசாரத்தில் புதிய விஷயம் இல்லை. இல்லையா?

திருவாசகம் முழுவதும் பல இடங்களில் நரிகள் பரிகளானதையும், இறைவன் மண்சுமந்து அடி வாங்கியதையும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார் மணிவாசகர். அவரது தனிப்பட்ட ஆன்ம அனுபவமே அந்த பக்தி நூலின் அடிநாதமாகவும் இருக்கிறது என்று தோன்றுகிறது.

திருவெம்பாவை விளக்கங்கள் தொடங்கட்டும், தொடரட்டும். ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.

R.DEVARAJAN said...

மிக அருமை நண்பரே !
இதை ஒரு மொக்கைப்பதிவாகக் கருத வேண்டாம்.
என் உணர்வுகளை முறையாக விளக்க இயலவில்லை.

தேவராஜன்
www.askdevraj.blogspot.com