December 25, 2007

திருவெம்பாவை - 7

கொடுநெஞ்சம் கொண்ட அறிவிலியோ நீ!

திருச்சிற்றம்பலம்

அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறா யின்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.


Soolam'தாயே! அமரர்களுக்கும் சிந்திப்பதற்கு அரிய தனித்தன்மை கொண்டவன், பெரும்புகழ் கொண்டவனான சிவனுடைய திருச்சின்னங்களைக் கேட்டாலே 'சிவசிவா' என்று புலம்புவாய். அவனைத் தென்னவன் என்று கூறினால் போதும் நீ தீயில் விழுந்த மெழுகுபோல உருகிவிடுவாய்.

'இன்றைக்கு நாங்கள் சேர்ந்தும் தனித்தனியாகவும் 'என்னவனே', 'என் அரசனே', 'இனிய அமுதம் போன்றவனே' என்று கொஞ்சநஞ்சமா சொல்லியிருக்கிறோம்! இவ்வளவையும் கேட்டுக்கொண்டு, கொடுநெஞ்சம் கொண்ட அறிவிலி போல சும்மா கிடக்கிறாயே. உன் துயிலின் இயல்புதான் என்ன!'

Lord Siva 1சிறப்புப் பொருள்: சிவனைப் பற்றிக்கூடக் கூறுவது வேண்டாம், அவனது திருச்சின்னங்களாக சூலம், வெண்ணீறு, மான், மழு, பிறை, புலித்தோல் என்று இவற்றில் ஏதாவது ஒன்றன் பெயர் உன் காதில் விழுந்தால் போதும் நீ 'சிவசிவ' என்று ஜபிக்கத் தொடங்கிவிடுவாய். அதிலும் 'தென்னா' என்றால் தீயிலிட்ட மெழுகாகவே உருகுவாயே என்பது வீட்டுக்குள்ளிருக்கும் பெண்ணின் பக்திச் சிறப்பைக் காட்டுவது.

Soolamஆனாலும் பலரும் பலவாறு சேர்ந்தும் தனித்தும் பாடிய துதிகளைக் கேட்டும் யாரொருவர் சற்றும் இளகாது, மனதில் பக்திப் பரவசம் தோன்றாது, கேட்டும் கேளாதவர் போல் இருக்கிறாரோ, அவர் நெஞ்சம் கல் போன்றது மட்டுமல்ல, அவர்களை அறிவிலி என்று கூறினாலும் தகும் என்பது குறிப்பு.

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே


என்றல்லவோ திருமூலர் கூறுகிறார்.

(அருஞ்சொற்பொருள்: உன்னல் - நினைத்தல்; இருஞ்சீரான் - பெரும்புகழ் கொண்டவன்; அரையன் - அரசன்; வாளா - எதுவும் செய்யாமல்)

இன்னும் வரும்...

No comments: