December 09, 2016

காஞ்சிப் பெரியவரும் பால் பிரண்டனும் - 1

பால் பிரண்டன் ஒரு நாத்திகர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் ரிஷிகள் இருக்கிறார்கள் என்று புத்தகங்கள் வாயிலாகக் கேள்விப்பட்டார். உண்மையான குரு, அப்படி ஒருவர் இருக்க முடியுமானால், அவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார். அவர் ரமணரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை.

மும்பையில் ஓர் எகிப்திய மந்திரவாதி, மெஹர்பாபா என்ற பார்சி மகான், அமிலத்தைக் குடித்து ஜீரணம் செய்யும் ஒரு யோகி, பூமிக்குள் பள்ளம் தோண்டி மூச்சுவிடாமல் பலநாட்கள் இருந்த ஒரு யோகி, ஒரு வாய்பேசாத மௌனி என்று இப்படிப் பலதரப்பட்டவர்களையும் சந்தித்தார். யாரிடமும் அவருக்குத் திருப்தியாகவில்லை. சுப்பிரமண்யா என்பவர் பிரண்டனிடம் ரமணரைப் பாருங்கள் என்று கூறினார். மிகவும் மனம் தளர்ந்து போயிருந்த பிரண்டன் இனி யாரையும் பார்த்துப் பயனில்லை என்று கூறி மறுத்துவிட்டார். ஊருக்குத் திரும்பிப் போவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார்.

அப்போது பிரபல எழுத்தாளராக இருந்த கே.எஸ். வெங்கடரமணி என்பவர் வந்து தான் செங்கற்பட்டில் முகாம் இட்டுத் தங்கியிருக்கும் கும்பகோணம் சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட காஞ்சிப் பெரியவர்களைப் பார்க்கப் போவதாகவும், தன்னுடன் வரலாம் என்றும் கூறி அழைத்தார். பால் பிரண்டன் அவருடன் போனார்.

அதுவரை காஞ்சிப்பெரியவர் வெளிநாட்டவர்களுக்குத் தரிசனம் கொடுத்ததில்லை. பால் பிரண்டனைச் சந்திக்க அதிசயமாக ஒப்புக்கொண்டார். மங்கிய குத்துவிளக்கின் வெளிச்சத்தில் அமைதியும் ஆன்மிகப் பேரொளியும் தவழும் சுவாமிகளைப் பார்த்தவுடனேயே பிரண்டனின் மனம் அமைதியுற்றது. அவரை வணங்கி, தன்னைச் சந்தித்ததற்கு நன்றி தெரிவித்தார். உலகில் இவ்வளவு போரும், அழிவும் இருக்கின்றதே, சமாதானமும் நட்பும் நிலவ என்ன செய்யலாம் என்ற தன் அக்கறையை வெளியிட்டார்.


அக்கிரமங்களும், அழிவுச் செயல்களும் அதிகப் படும்போதெல்லாம் உயரிய தெய்விகசக்தி வாய்ந்த மகான்கள் வந்து வழிகாட்டுவார்கள் என்றும், தனது சக்திக்கு மீறிய தெய்வ சக்தியை மனிதன் நம்பும்போது உலகில் அமைதியும் ஆனந்தமும் பெருகும் என்றும் பதிலளித்தார் சுவாமிகள். அதற்குப் பின் "நான் ஓர் உண்மையான யோகியை தரிசித்து குருவாக ஏற்றுப் பயனடையவே பாரதத்துக்கு வந்திருக்கிறேன்" என்று தனது வருகையின் காரணத்தைக் கூறினார்.

பால் பிரண்டனின் சிரத்தை சுவாமிகளுக்குப் புரிந்தது. "உங்களுக்குள்ளே ஒரு ஒளி தோன்றியிருக்கிறது. அதுவே உங்களுக்கு வழிகாட்டும்" என்று கூறினார். அன்றாடம் அதிகாலையிலும், அந்தி வேளியிலும் தியானம் செய்து வந்தால் கடவுள் சரியான குருவைக் காட்டுவார் என்று வழிகாட்டினார். "இல்லை, நீங்கள் எனக்குக் காட்டவேண்டும்" என்று அவரிடம் மன்றாடினார் பிரண்டன்.

"உங்கள் பயணத்தைத் தொடருங்கள். கடைசியாக, யார் உங்கள் உள்ளத்தை மிகவும் கவர்ந்தார் என்று யோசித்துப் பாருங்கள். அவர்தான் உங்கள் குரு. அவரிடம் மீண்டும் செல்லுங்கள்" என்றார் ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள்.

இதுவரையிலும் யாருமே அவரைக் கவரவில்லை--இவர் ஒருவரைத் தவிர. இவரையே குருவாக இருக்கும்படிக் கேட்டால் என்ன? கேட்கவும் கேட்டார்.

"நான் ஒரு மடாதிபதி. எனக்கு ஏராளமான நிர்வாகப் பணிகளும் உண்டு. ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குகிறேன் நான். தனிப்பட்ட சிஷ்யர்களுக்கு வழிகாட்ட எனக்கு நேரம் கிடையாது. உங்களுக்குத் தேவை அப்படிப்பட்டவர்கள்தாம்" என்றார் சுவாமிகள். பிரண்டனோ கொடாக்கண்டர். "அப்படித் தனிப்பட்ட சீடர்களை ஏற்று வழிகாட்டும் ஞானிகள் யாரேனும் உங்களுக்குத் தெரிந்து இருக்கிறார்களா?" என்று கேட்டார்.

சற்று யோசித்த சுவாமிகள் "காசிக்கு அருகிலுள்ள காடுகளில் ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர் அன்னிய தேசத்தவரை ஏற்றுக்கொள்ள மாட்டார். நீங்கள் திருவண்ணாமலைக்குப் போங்கள். மிக உயர்ந்த நிலையை அடைந்தவர் அவர். மகரிஷி என்று அவரை அழைப்பார்கள்" என்று கூறினார்.

இவ்வளவு நன்றாக ரமணரை வர்ணித்த சுவாமிகள் அவரைச் சந்தித்ததுகூட இல்லை. ஒருமுறை காஞ்சிப்பெரியவர் திருவண்ணாமலையில் முகாமிட்டிருக்கும் போது ரமணரை ஓர் அன்பர் "நீங்கள் சங்கராச்சாரிய சுவாமிகளைச் சந்தித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு ரமணரின் பதில் "நாங்கள் எப்போதும் ஒன்றாகத்தானே இருக்கிறோம். எப்படிச் சந்திப்பது!" என்பதாக இருந்தது.

(தொடரும்)
ரமண சரிதம், கிழக்குப் பதிப்பகம் வெளியீடு

December 07, 2016

ஆனந்தரின் அழகு


புத்தர் மெய்ஞானம் அடைந்த அதே வைகாசி பவுர்ணமியன்று பிறந்தவர் ஆனந்தர். புத்தருக்குப் பல துன்பங்களை ஏற்படுத்திய தேவதத்தனின் இளைய சகோதரர்.

புத்தர் இம்முறை கபிலவாஸ்துவுக்கு வந்தபோது அங்கிருந்த ஆனந்தர் புத்தருக்குக் கவரி வீசினார். பின்னர் பாத்ரர், அனிருத்தர் ஆகிய இளவரசர்கள் சன்னியாசம் மேற்கொண்ட அதே சந்தர்ப்பத்தில் ஆனந்தரும் துறவறம் ஏற்றார்.

ஆனந்தரின் முயற்சியால்தான் புத்தரின் வளர்ப்புத் தாயான மஹாபிரஜாபதி தேவி உட்பட்ட ஐந்நூறு பெண்கள் புத்த சங்கத்தில் சேரமுடிந்தது என்றும், பிட்சுணிகளுக்கென்று ஒரு பிரிவு ஏற்பட்டது என்றும் முன்னரே பார்த்தோம்.

ஆனந்தர் மிக்க அழகுள்ள இளைஞர். இது அவருக்குச் சில சங்கடங்களை உண்டாக்கியது. ஒருமுறை அவர் சிராவஸ்தியில் பிட்சை எடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் தாகமாக இருந்தது. வழியில் ஒரு கிணற்றைப் பார்த்தார். அதிலிருந்து ஒரு கிராமத்துப் பெண் நீர் இறைத்துக்கொண்டிருந்தாள்.

'எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடம்மா' என்று ஆனந்தர் கேட்டார்.

'மரியாதைக்குரியவரே, நான் குடியானவப் பெண். உங்களுக்கு எதுவும் கொடுக்கும் தகுதி எனக்கில்லை' என்றாள் ஆனந்தரை அடையாளம் கண்டுகொண்ட அவள்.

'பெண்ணே, நான் கேட்டது தாகத்துக்குத் தண்ணீரே அன்றி உன் குலத்தை அல்ல. ஒரு பிட்சுவுக்கு அத்தகைய வேறுபாடுகள் பொருட்டல்ல.'

ஆனந்தரின் தோற்றமும் அன்பான பேச்சும் அவளை மிகவும் கவர்ந்துவிட்டன. மறுநாள் ஆனந்தர் அதே வழியாகப் போனபோது அவள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஆனந்தருக்கும் சிறிதே சலனம் ஏற்பட்டது. உடனே அவர் மனதில் புத்தரைத் தியானிக்க, மீண்டும் மனவுறுதி ஏற்பட்டது.

அடுத்த நாள் நகரத்துக்குத் திடமான மனதோடு ஆனந்தர் பிட்சைக்குச் சென்றார். இன்றைக்கு அந்தப் பெண் தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். ஆனந்தருக்காகத் தெருவிலேயே காத்திருந்தாள். அவர் வந்ததும் அவரைப் பின் தொடர்ந்தாள். ஆனந்தர் என்ன சொல்லியும் கேட்கவில்லை.

என்ன செய்வதென்று அறியாத ஆனந்தர் புத்த விஹாரத்துக்குத் திரும்பிப் போய், நடந்ததைப் புத்தரிடம் விவரித்தார். தன்னிடம் அந்தப் பெண்ணை அழைத்து வரும்படி புத்தர் கூறினார்.

புத்தர் தன்னைப் பார்க்க விரும்புகிறார் என்ற செய்தி வந்ததும் சற்றே அவள் அதிர்ச்சி அடைந்தாள். ஆனாலும் மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு அவர்முன் போனாள். 'பெண்ணே, ஆனந்தர் ஒரு பிட்சு. நீ அவருக்கு மனைவியாக வேண்டுமென்றால் நீயும் ஒரு வருடகாலம் பிட்சுணியாக இருக்க வேண்டும். சம்மதமா?' என்று புத்தர் கேட்டார்.

'பெரியோனே, எனக்குச் சம்மதம்' என்றாள், புத்தர் இவ்வளவு எளிதில் ஒரு வழியைச் சொன்னதை நம்பமுடியாமல்.

அந்தப் பெண்ணின் பெயர் மாதங்கா. அவள் தன் வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சொல்லித் தனது தாயை அழைத்து வந்தாள். தாய்க்கும் இந்த ஏற்பாட்டில் சந்தோஷம்தான்.

மாதங்கா தன் தலையை மழித்துக்கொண்டு பிட்சுணி ஆனதோடு மட்டுமல்லாமல், தவறாமல் புத்தரின் அறவுரைகளைக் கேட்டுக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு நாள் கழியும் போதும் அவளது மனம் பண்படத் தொடங்கியது. ஆறுமாதங்கள் ஆவதற்குள்ளாகவே காதலின் பின்னே அலைந்த தனது நடத்தை வெட்கப்படத் தக்கது என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

ஆசைகள், வெறுப்பு, மயக்கம், அகந்தை, தீய காட்சி என்ற இந்த ஐந்தையும் தவிர்க்க வேண்டும் என்றும், இவையே துன்பத்துக்குக் காரணம் என்பதையும் புத்தர் எப்போதும் விளக்கிவந்தார். இவற்றை அகற்றும்போதே மனம் தூய்மையாகும், வாழ்வில் அமைதி வரும் என்றும் கூறினார்.

தான் ஆனந்தர்மீது கொண்டிருந்த தீவிர மோகம் ஒருவகைக் குற்றமே என்பதை உணர்ந்த மாதங்கா புத்தரின்முன் ஒருநாள் மண்டியிட்டு, 'ஐயனே, நான் விழிப்படைந்தேன். முன்போல நான் அறியாமையில் இல்லை. அதற்குத் தங்களுக்கு நன்றி கூறுகிறேன். தாங்கள் என்போன்றவர்களுக்காக எவ்வளவு உழைத்து இந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள்! நான் இனி பிட்சுணியாகவே என் வாழ்நாளைக் கழிக்க விரும்புகிறேன்' என்று கூறினாள்.

ஆனந்தருக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய விபத்தை புத்தர் எப்படி மாதங்காவுக்கு நல்ல வழியாக மாற்றினார் என்பது புத்த சங்கத்தினருக்கே ஒரு படிப்பினையாக அமைந்தது.

- புத்தம் சரணம் நூலிலிருந்து, கிழக்கு பதிப்பகம் வெளியீடு