June 07, 2015

அருணாசல அற்புதம்-10: பகையறியாத பகவான்நாம் ஒரு கார் வாங்க விரும்புவதாக வைத்துக்கொள்வோம். மிகவும் அலசி ஆராய்ந்து நமது பட்ஜெட்டுக்கேற்ற, தேவையான வசதிகளை உடைய ஒரு காரையும் தேர்ந்தெடுத்துவிட்டோம். அதற்கு ஒரு வங்கியில் கடன் கேட்கிறோம். அங்கே எண்ணற்ற படிவங்களை நிரப்பி, அவர்கள் கேட்கும் சான்றிதழ்களைக் கொடுத்து, நமக்கு உத்தரவாதம் தருபவர்களைப் பிடித்து, நடையாய் நடந்து கடன்பெறுகிறோம். அந்த வங்கி அதிகாரிமீது கோபம்கூட வருகிறது. அவர் தானாக எதையும் கேட்கவில்லை, வங்கி நிர்ணயித்த டாகுமெண்டுகளைத்தான் கேட்கிறார். ஆனாலும் நமக்கு எரிச்சலாக இருக்கிறது. ஏதோ நமது காருக்கும் நமக்கும் இடையே அவர் ஒரு தடங்கலாக நிற்பதுபோலத் தோன்றுகிறது. ஒருபக்கம் கார்மீதான ஆசை, மறுபக்கம் இந்தக் கடன்வாங்கும் வழிமுறைபற்றிய வெறுப்பு.

விருப்பு-வெறுப்பு, நட்பு-பகை என்று இத்தகைய எதிரெதிர்க் கயிறுகளின் இழுப்பில் சிக்கிக்கொண்டு மனிதன் அல்லாடுகிறான். எது தனது ஆசைக்குக் குறுக்கே வருகிறதோ அதை அவன் அழிக்கவேண்டுமென்று நினைக்கிறான். எந்த ஒன்றின் ஈர்ப்பிலிருந்து மனிதன் தப்பிவிடுகிறானோ அதற்குப்பின் அதனால் வரும் துன்பம் அவனுக்கு இல்லை. அதைத்தான் வள்ளுவரும்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

என்று அழகாகக் கூறினார். விருப்போ வெறுப்போ இல்லாதபோது பகையும் இல்லையென்று ஆகிவிடுகிறது. அங்கே வேற்றுமைகடந்த நேயம் ஒன்றே நிலவுகிறது. இதை பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் வாழ்வில் பல சம்பவங்கள் விளக்குகின்றன.

அப்போது பகவான் குருமூர்த்த மடாலயத்தில் இருந்தார். அதற்கு எதிரே சில புளியமரங்கள் இருந்தன. ஏதாவதொன்றின்கீழ் பகவான் உட்காருவது வழக்கம். அங்கே புளியம்பழங்களைத் திருட ஒருகும்பல் வந்தது. இளம்ரமணரோ பேசாது உட்கார்ந்திருந்தார். துஷ்டர் கும்பல் என்பதால் தாம் வந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போவதைவிட பிறருக்குத் துன்பம் தருவதில் அதிக ஆர்வம். ஒருவன், “டேய், எருக்கஞ்செடி ஒண்ணைப் பிடுங்கிக்கிட்டு வா. எருக்கம்பாலை ஊத்தினாலாவது இவன் வாயைத் தொறந்து பேசுறானான்னு பாப்போம்” என்றான். எருக்கம்பால் மிகவும் விஷத்தன்மை கொண்டது. கண்ணையே குருடாக்கிவிடக் கூடும். வேறொருவராக இருந்தால் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு ஓடியிருப்பார். எதைப்பற்றியும் சிந்தையற்ற பகவான் அதற்கும் அஞ்சாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்த மற்றொருவன், “இவனைப்பற்றி நமக்கென்ன கவலை. அவன்பாட்டுக்கு இருக்கட்டும். நாம் வந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போகலாம்” என்று கூறவே அவர்கள் போய்விட்டனர்.

அதனால்தான் உலகையெல்லாம் வென்றவனையல்ல, தனது புலன்களை வென்றவனையே ‘தீரன்’ என்று சொல்கிறது ஸ்ரீமத் பகவத்கீதை.

ஒரு சமயம் அண்ணாமலைக்குத் தோற்றப்பொலிவும், கல்வியும், வாய்ச்சாதுரியமும் கொண்ட இளந்துறவி ஒருவன் வந்தான். பெயர் பாலானந்தா. தன்னை ஒரு மகாயோகி எனக் கூறிக்கொண்டான். அப்போது பகவான் வயதில் மிகவும் இளையவர். மெய்யான ஞானியான பகவான் தனக்குச் செய்யப்படும் தீங்கைக்கூடப் பொருட்படுத்தாதவர் என்று முன்னர் பார்த்தோம். மௌனியும்கூட. இந்தக் காணற்கரிய குணநலத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தான் பாலானந்தா. பார்ப்போரிடமெல்லாம் ரமணரைத் தனது சீடன் என்று சொல்லிக்கொள்வான். “இந்த பாலசுவாமிக்குத் தின்ன இனிப்பு பட்சணங்கள் கொடுங்கள்” என்று சற்றும் நாணமின்றிக் கேட்பான். “குழந்தாய் வெங்கட்ராமா (அதுதான் ஸ்ரீ ரமணரின் இயற்பெயர்) இதோ இந்தத் தின்பண்டங்களை எடுத்துக்கொள்” என்று ‘தன் சீடனுக்கு’ கட்டளையிடுவான்.

அத்தோடு நிற்கவில்லை. ரமணர்மட்டும் தனியாக இருந்த ஒருநாளில் “நான்தான் உன் குரு என்று சொல்லி எல்லோரிடமும் பணம் பறிப்பேன். இதில் உனக்கென்ன நஷ்டம்? நான் சொல்வதை யாரிடமும் மறுத்துச்சொல்லாதே” என்று வெட்கமின்றிக் கூறினான். இப்படி அவனுடைய அடாவடித்தனமும் அக்கிரமும் பெருகிக்கொண்டே போனது. ஓரிரவு அவர்கள் தங்கியிருந்த விருபாட்ச குகையின் வெளிமுற்றத்திலேயே மலம்கழிக்கும் அளவுக்குப் போய்விட்டது அவனது திமிர். விடியற்காலையில் அவன் கிளம்பிப் போய்விட்டான். குகைக்குள் பாலானந்தாவின் சரிகைக் கரையிட்ட பட்டு அங்கிகள் உட்படப் பல ஆடம்பரமான மாற்றுடைகள் இருந்தன. அங்குவந்த பழனிஸ்வாமி முற்றத்தில் இருந்த அசுத்தத்தை முதலில் கழுவி அகற்றினார். பாலானந்தாவின் உடைகளைத் தூக்கி வெளியே எறிந்தார். பகவானை அழைத்துக்கொண்டு வெளியே போய்விட்டார். போகுமுன் குகையின் வாயிற்கதவைப் பூட்டிவிட்டார்.

வெகுதூரம் சென்று ஒரு தீர்த்தத்தில் பகவான் நீராடினார். இருவரும் திரும்பி வந்தனர். பாலானந்தாவுக்கு ஒரே கோபம். “என்னுடைய ஆடைகளை நீ எவண்டா தொடுவது?” என்று பழனிஸ்வாமி மேல் பாய்ந்தான். “இந்தப் பழனிஸ்வாமியை இந்த க்ஷணமே துரத்து” என்று பகவானுக்குக் கட்டளையிட்டான். ஆனால் பகவான் பதிலே கூறவில்லை. மூர்க்கனான பாலானந்தா தன்வசமிழந்து ரமணர்மீது காறி உமிழ்ந்தான். ரமணரோ, உடனிருந்த பிற சீடர்களோ எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்தனர். இந்தச் செய்தி கீழேயிருந்த பக்தர் ஒருவரின் செவிக்கு எட்டியது. அவர் மலையேறி ஓடோடி வந்தார். “எங்கள் சுவாமிமீது துப்பத் துணிந்த களவாணிப் பயல் எவண்டா?” என்று கூறி பாலானந்தாமீது மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாய்ந்தார். மிகவும் சிரமப்பட்டு அவரை மற்றவர்கள் தடுத்தி நிறுத்தினர்.

தான் எல்லை மீறிவிட்டதை பாலானந்தா உணர்ந்தான். இனி திருவண்ணாமலையில் இருப்பது தனக்கு நல்லதல்ல என்பதைப் புரிந்துகொண்டான். “ஆன்மீகத்துக்கு இந்த அருணாசலம் சரியான இடமல்ல” என்று மிகுந்த திமிரோடு கூறிவிட்டு ரயில் நிலையத்துக்குப் போனான். அப்போது ரயில் மூன்று வகுப்புகள் இருந்த காலம். பயணச்சீட்டுகூட இல்லாமல் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏறி உட்கார்ந்தான். அங்கேயும் அவனது துர்க்குணம் அவனைத் துரத்தியது. அதைப்பற்றிப் பின்னர் பார்ப்போம்.

(தொடரும்)

May 29, 2015

அருணாசல அற்புதம்-9: புறா, குருவி எங்கள் ஜாதி!


விரிந்த முட்டை, பொரிந்த குருவி

ஒருமுறை பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் நீராடியபின், உயரத்தில் மூங்கில் கொடியில் காய்ந்துகொண்டிருந்த தனது துண்டை எடுக்க முயற்சித்தார். (மூங்கில் கழி ஒன்றைக் கயிறுகளால் கூரையிலிருந்து கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். அதில் துணியைக் காய வைப்பார்கள். இதைத்தான் மூங்கில் கொடி என்றது). அந்தக் கொடியின் ஓர் ஓரத்தில் ஒரு குருவி கூடுகட்டி அதில் முட்டை வைத்திருந்தது. துண்டை எடுக்கும்போது கைபட்டு அதிலிருந்த முட்டை கீழேவிழுந்து அதன் ஓட்டில் விரிசல்கண்டது.

ஞானிகள் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் ஆன்மநேயம் கொண்டவர்கள். பகவானுக்குத் தம் கைபட்டு முட்டை விழுந்ததில் அதிர்ச்சி. அங்கிருந்த தொண்டர் மாதவனிடம், “என்ன காரியம் செஞ்சுட்டேன் பாரு!” என்று கூறியபடியே கீழேவிழுந்த முட்டையை எடுத்துத் தனது கருணைமயமான கண்களால் பார்த்தபடியே “இதோட அம்மா எவ்வளவு துக்கப்படும். இதுலேருந்து வரப்போற குஞ்சுக்கு நான் செஞ்ச நஷ்டத்தைப் பார்த்து அதுக்கு என்மேல கோபம் வரும்” என்று சொன்னதோடு நிற்கவில்லை. வெறும் கழிவிரக்கமோ, அனுதாபமோ வார்த்தையில் கூறிப் பயனில்லை என்பதை பகவான் அறிவார். நிவாரணம் என்பது அன்பில் ஊறிய செயலாக வெளிப்பட வேண்டும். “விரிஞ்ச இந்த முட்டையைச் சரிசெய்ய முடியுமான்னு பார்க்கலாம்” என்றபடி ஓர் ஈரத்துணியால் அந்த விரிசலடைந்த முட்டையைச் சுற்றிக் கட்டினார். அதைக் கூட்டுக்குள்ளேயே மறுபடியும் வைத்தார்.

மூன்று மணிநேரம் கழித்து மறுபடியும் அதைக் கையிலெடுத்துத் தன் அருட்பார்வையை அதன்மீது செலுத்தினார். இப்படித் தொடர்ந்து பலமுறை செய்தார். ஒவ்வொரு முறையும் “இந்த விரிசல் சேர்ந்து கொள்ளட்டும். முட்டை பொரிந்து இதிலிருந்து குஞ்சு சௌக்கியமாக வெளியே வரட்டும்” என்று சொல்வார். ஞானியின் பார்வையில், அவர் கையின் ஸ்பரிசத்தில், அவர் சொல்லும் வார்த்தையின் கனத்தில் எதுதான் குணமடையாமல் இருக்கும்!

ஒருவார காலம் இப்படியே போனது. பகவான் ஒருநாள் பெருமகிழ்ச்சியோடு, “என்ன ஆச்சரியம்! விரிசல் மறைஞ்சுடுத்து. அம்மாக் குருவிக்கு சந்தோஷமாயிடும். அது அடைகாத்து குஞ்சு பொரிக்கும். உயிர்ச்சேதம் செய்யும் பாபத்திலேயிருந்து ஈசுவரன் என்னைக் காப்பாத்தியிருக்கான். குஞ்சு வரவரைக்கும் பொறுத்திருந்து பாக்கலாம்” என்று கூறினார்.சிலநாட்களில் சிறிய குருவிக்குஞ்சு ஒன்று செவ்வந்திப்பூப் போல வெளியே வந்தது. முகத்தில் சந்தோஷம் பொங்க பகவான் அதைக் கையிலெடுத்து வருடிக் கொடுத்தார். மற்றவர்களும் வாங்கிப் பார்த்தனர். அந்தச் சமயத்தில் பகவான் முகத்திலிருந்த ஒளிப் பெருக்கை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. ‘மமைவாத்மா சர்வ பூத அந்தராத்மா’ (என்னுள் இருக்கும் இந்த ஆத்மா எல்லா உயிர்களுனுள்ளும் உறையும் ஆத்மாவே) என்ற வாக்கியத்தை அனுபூதியாக உணர்ந்தவரல்லரோ அவர்.

அடிபட்ட புறாவுக்கும் அன்பு, அடித்த வேடனுக்கும் அன்பு

ஒருநாள் பகவான் மலையில் உலாவிவிட்டு வரும்போது அவர் காலடியில் ஒரு புறா வந்து விழுந்தது. சற்றுத் தொலைவில் ஒரு வேடுவச் சிறுவன் தயங்கித் தயங்கி வந்து கொண்டிருந்தான். "அவன் பசிக்கு இது ஆகாரம். ரெண்டணா இருந்தால் அவனுடைய பசி போய்விடும்" என்று சொல்லியபடி ரமணர் புறாவை எடுத்து ஆதரவாகத் தடவிக் கொடுத்தார். அருகில் ராஜகோபாலய்யரும் பகவானின் உதவியாளரும்தான் இருந்தார்கள். "ஆச்ரமத்திலிருந்து இரண்டணா வாங்கி வா" என்று பகவான் சொல்லியிருந்தால் உதவியாளர் போயிருப்பார். ஆனால் 'தன்னுடைய ஆச்ரமம்' என்றெல்லாம் அவர் நினைத்ததில்லையே.

அதேபோல, புறாவை அடித்ததற்காக வேட்டுவச் சிறுவனையும் கடிந்துகொள்ளவில்லை. அவரவர் தர்மம் அவரவருக்கு என்பதில் தெளிவாக இருந்தார் பகவான். அவனுடைய பசி தீரவேண்டும் என்பதிலும் அக்கறை காட்டினார்.

ராஜகோபாலய்யர் ஓடிப்போய் ஆச்ரம அலுவலகத்தில் கடனாக இரண்டணாவை உடனடியாக வாங்கிக் கொடுத்து அவனை அனுப்பிவிட்டார். பின்னர் ஊருக்குள்ளிருந்த தனது வீட்டிலிருந்து பைசாவைக் கொண்டுவந்து அந்தக் கடனை அடைத்தார். அன்றைக்கு அந்த பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.

புறா பகவானின் கையில் மயங்கிக் கிடந்தது. பகவான் உட்காரும் கூடத்துக்கு வந்தார்கள். "பச்சை திராட்சையைப் பிழிந்து இதன் தலையில் அடிபட்ட இடத்தில் விட்டால் குணமாகிவிடும்" என்று பகவான் சொன்னதுதான் தாமதம், ஒரு வெளியூர் அன்பர் பச்சை திராட்சைப் பொட்டலத்துடன் நுழைந்தார். "அடடே! சொல்லும்போதே திராட்சை வந்துவிட்டதே" என்று பகவான் ஆச்சரியப்படுவதாகக் காண்பித்துவிட்டு, புறாவின் தலைமேல் திராட்சைச் சாறைப் பிழிந்தார். சிறிது நேரத்தில் தலைதூக்கிப் பார்த்தது புறா. மெல்ல தத்தித் தத்தி நடந்தது, கொஞ்சம் பறந்து காட்டியது. பின்னர் வெளியே பறந்தே போய்விட்டது.


மனிதகுலத்தை மட்டுமல்ல, உயிர்க்குலம் முழுவதையுமே ஒரே தட்டில் வைத்து நேசிக்கும் அன்பை ஞானிகளிடமிருந்து நாமும் கற்கவேண்டும். அதைச் செயல்முறையில் காட்டிச் சென்ற மகான்களின் படத்தை வைத்துப் பூப்போட்டால் போதாது. இதயத்தை அன்பினால் விசாலமாக்கிக் கொள்வதுதான் உண்மையான ஆன்மீகம். இதயக்கோவிலில் குடிகொண்ட அந்த அன்பேதான் தெய்வம்.