December 22, 2007

திருவெம்பாவை - 5

திருச்சிற்றம்பலம்

Udayam

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்


'பாலும் தேனும் ஒழுகப் பேசுகிற புளுகுணிப் பெண்ணே! திருமாலும் பிரம்மனும் அவனை முழுதாகக் காணமுடியவில்லை. அப்பேர்ப்பட்ட ஜோதி மலையாக நின்றவனை நீ அறிந்துகொண்டதாகப் பொய்சொல்கிறாயே. அவனை பூவுலகத்தவரும் வானவரும் மற்றையவரும் கூட முழுதாக அறிய இயலவில்லை.

அவனுடைய எழிலையும் நமது பாவங்களைக் களைந்து ஆட்கொள்ளும் சீலத்தையும் புகழ்ந்து பாடி நாங்கள் 'சிவனே, சிவனே' என்று கூவுகிறோம். அப்படியும் உனக்கு விழிப்பு வரவில்லையே, மணமிக்க கூந்தலையுடையவளே! இதுவா உன் தன்மை?'

சிறப்புக் குறிப்பு: 'மாலறியா நான்முகனும் காணா மலை' என்பது அண்ணாமலை. இவ்வடி திருவண்ணாமலையின் தலபுராணத்தைக் குறிப்பிடுகிறது. அதைக் கீழே தந்துள்ளேன். மாணிக்க வாசகர் திருவெம்பாவையைத் திருவண்ணாமலையில்தான் அருளினார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

திருவண்ணாமலைத் தலவரலாறு

ஒரு சமயம் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்தது. சண்டை வலுத்தது. பிரபஞ்சம் ஸ்தம்பித்து நின்றது. தேவர்களுக்குக் கவலையாகிவிட்டது. ஓடிச் சென்று சிவபெருமானிடம் இந்தச் சண்டையைத் தீர்த்து வையுங்கள் என்று முறையிட்டனர்.

Arunachalam

சிவன் தன்னை ஓர் அக்கினித் தூணாக நிறுத்திக்கொண்டார். அதிலிருந்து ஒரு குரல் வெளிப்பட்டது. "எனது உச்சியையும், பாதத்தையும் யார் கண்டுபிடிக்கிறாரோ அவரே பெரியவர்" என்றது அக்குரல். விஷ்ணு ஒரு காட்டுப் பன்றியின் வடிவம் எடுத்துத் தரையைக் குடைந்து கீழே பாதத்தைத் தேடிச் சென்றார். பிரம்மாவோ ஓர் அன்னத்தின் வடிவம் எடுத்து உச்சியைக் காணப் பறந்து சென்றார். வெகுதூரம் மேலே சென்ற பின்னும் உச்சி தெரியவில்லை. ஒரு தாழம்பூ கீழே விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்தப் பூ சிவனின் தலையிலிருந்து விழுந்திருக்க வேண்டும் என்று ஊகித்த பிரம்மா அதைக் கையில் கொண்டுபோனால் தான் உச்சியை எட்டியதற்குச் சான்றாகிவிடும் என்று எண்ணினார். விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு வந்து சிவனைப் போற்றித் துதித்தார். ஆனால் பிரம்மாவின் பொய் அம்பலமாகி, வெட்கப்பட்டு நின்றார்.

அந்த நெருப்புத் தூண் கண் கூசுமளவிற்கு ஒளிமிகுந்ததாக இருந்தது. யாருமே பார்க்க முடியவில்லை. எனவே சிவபெருமான் தன்னை அருணாசல மலையாக மாற்றிக்கொண்டு அங்கே நின்றார். 'எவ்வாறு நிலவு சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகிறதோ அவ்வாறே எல்லா ஆன்மிகத் தலங்களும் இங்கிருந்தே தமது புனிதத் தன்மையைப் பெறும்' என்று வாய்மலர்ந்தருளினார். ஓம் என்னும் பிரணவம் அருணாசலமே.

ஒளித்தூணாக இறைவன் நின்றதைப் போற்றுமுகமாகவே ஒவ்வோராண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று வரும் திருக்கார்த்திகைத் திருநாளில் மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 'நான்தான் இந்த உடல் என்ற தேகாத்ம பாவத்தை ஒழித்து, மனத்தை ஹிருதயத்தில் நிறுத்தி தன்னையே இரண்டற்ற பொருளாகவும், எல்லாவற்றின் ஒளியாகவும் காணுவதே, பிரபஞ்சத்தின் மையமாகிய அண்ணாமலையார் தீப தரிசனமாகும்' என்று ரமணர் இவ்விழாவின் சிறப்பை விளக்குகிறார்.

வைஷ்ணவர்கள் அண்ணாமலையைத் திருமாலின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் என்று கருதுகிறார்கள். அருணாசலேசுவரர் கோவிலில் அண்ணாமலையார் சன்னதியின் பின்புறத்தில் வேணுகோபாலசுவாமி இருக்கிறார். இந்தக் கோவில் வேணுகோபாலசுவாமி கோவிலாகவே அரசின் ஆவணங்களில் பதியப்பட்டிருக்கிறது என்பது பி.வி. நரசிம்ம சுவாமி அவர்கள் சொல்லும் வியப்பான செய்தி.

-நான் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ரமண சரிதம் நூலிலிருந்து

[அருஞ்சொற்பொருள்: பொக்கம் - பொய்; படிறீ - பொய் கூறுபவள்; கோதாட்டும் - பாவங்களை நீக்கும்; ஏலக்குழல் - நறுமணமூட்டப்பட்ட கூந்தல்]

இன்னும் வரும்...

No comments: