December 20, 2007

திருவெம்பாவை - 3

திருச்சிற்றம்பலம்

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதனென்(று) அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.

LordShiva2-Profileஅடுத்து ஓர் இல்லத்தின் கதவு மூடியிருக்கிறது. அவள் வழக்கமாக வருகிறவள். மகளிர் குழுவுக்கு இதைப் பார்த்ததும் அவளும் உறங்குகிறாளோ என்று ஐயம். அவர்கள் கூறுகின்றனர், 'முத்துப் போன்று வெளுத்த சிரிப்பை உடையவளே! எப்போது நாங்கள் வருவதற்கு முன்னரே கதவைத் திறந்துகொண்டு வந்து எங்கள் முன் நின்றபடி 'சிவன் என் அப்பன், ஆனந்தன், அமுதன்' என்று தித்திக்கத் தித்திக்க வாயில் எச்சிலூறும்படிப் பேசுவாயே. இன்றைக்கு என்ன ஆயிற்று? வா! வந்து கதவைத் திற' என்றனர்.

'சிவன்மீது பற்றுக்கொண்ட நீங்களெல்லாம் மிகவும் பழைய அன்பர்கள். உங்களுக்கு எல்லா நியமங்களும் நன்றாகத் தெரியும். நான் அப்படியா! அன்பர் குழாத்துக்குப் புதியவள். என்னுடைய குறைவுகளை மன்னித்து உங்களில் ஏற்றுக்கொண்டால் ஏதேனும் குற்றமாகிவிடுமா என்ன?' என்று கொஞ்சம் நக்கலாகவே சொல்கிறாள்.

'அடடடடே! அப்படியெல்லாம் சொல்லிக் கொள்ளாதே. சிவன்மீது நீ கொண்ட பக்தி எங்கள் எல்லோருக்கும் தெரியாதா என்ன?'

இவளுடைய நையாண்டி தொடர்கிறது. 'மனது மிக அழகாக இருப்பவர்கள் நமது சிவனைப் பாடமாட்டார்களோ!' என்று பழிக்கிறாள்.

'உன்னைப் போய்க் கூப்பிட்டோ மே, எங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்' என்று போலியாக அலுத்துக் கொள்கிறார்கள் தோழிகள்.

சிறப்புக் குறிப்பு: 'முத்தன்ன வெண்ணகை' என்பது மிக அழகான தொடர். முத்தின் வெண்மை தூய வெண்மையல்ல. அதில் சற்றே மஞ்சள் இருக்கும். மனிதரின் பல்லும் அப்படியே. வெளிநாடுகளில் வெண்சாயம் அடித்துக் கொள்பவர் பற்கள் மட்டுமே பளிச்சிடும் வெள்ளையாக இருக்கும்.

'சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை' என்கிறாள் அழைக்கப்படும் பெண். அதில் எவ்வளவு நையாண்டி இருக்கிறதோ அவ்வளவே உண்மையும் உள்ளது. 'நீங்களெல்லாம் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் என்னைப் பழித்துப் பேசுகிறீர்கள். உங்கள் தோற்றத்தைப் போலவே மனமும் அழகாக இருந்தால் எவ்வளவு நல்லது!' என்று அவள் கூறுவதைப் போல இருக்கிறது.

இறைவன் புறத்தோற்றத்தின் அழகுக்கு மயங்குகிறவன் அல்ல. அன்பு, கருணை, பக்தி, மனநிறைவு இவையே உள்ளத்துக்கு அழகு தருபவை. கர்வம், கோபம், காமம், பேராசை, பொறாமை, பொய்ம்மை, வெறுப்பு ஆகியவை மனதில் நிறைந்திருக்குமேயானால் அவர்களது பக்தி முழுமையான பலனைத் தருவதில்லை.

ஆனால் தனது தோழிகளுக்குக் கூறுவது போல அவள் இறைவனின் ஒரு கருணைச் செயலையும் நினைவு கூறுகிறாள். தீமையிலேயே உழல்கிறவர்கள் மீது அவனது அருட்பார்வை விழுந்துவிட்டால் அவர்களைப் 'புன்மை தீர்த்து' ஆட்கொள்கிறான்! பணமே குறியாக இருந்த பட்டினத்தாருக்கும், காமத்தில் புழுத்துப் போன அருணகிரிக்கும் இறைவன் அருளவில்லையோ. இறைவனே அப்படிச் செய்யும் போது சீனியர் பக்தைகளாகிய நீங்கள், ஜூனியரான எனது 'புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ' என்கிறாள்.

ஆனால், அது எல்லோருக்கும் நடப்பதில்லை. நாம் சித்தத்தை வாய்மையாலும் பக்தியாலும் கருணையாலும் பற்றின்மையாலும் அழகுசெய்துகொண்டு சிவனைத் துதிப்போமேயானால் நிச்சயம் அவன் நமக்கு அருள் செய்வான் என்பதில் ஐயமில்லை.

[அருஞ்சொற்பொருள்: அத்தன் - தந்தை; அள்ளூறி - வாயில் எச்சிலூறி; பத்துடையீர் - ஈசன்பால் பற்றுடையீர்]

இன்னும் வரும்...

No comments: