December 22, 2007

திருவெம்பாவை - 4

திருச்சிற்றம்பலம்

தூங்கி வீணாகக் காலத்தைக் கழிக்காதே!

Shakuntala-ravivarma-edited

ராஜா ரவிவர்மாவின் 'சகுந்தலை' ஓவியத்தின் ஒரு பகுதி


ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோ ம் நீயேவந்(து)
எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்


கீழ்க்கண்ட உரையாடல் மற்றொரு வீட்டு வாசலில் நடக்கிறது. அந்த வீட்டுப் பெண்ணும் எழுந்து வெளியே வரவில்லை. வந்த குழுவினரில் ஓர் இளம்பெண் கேட்கிறாள்:

'ஒளிவீசும் முத்தைப் போலப் புன்னகை செய்பவளே! உனக்கு மட்டும் இன்னும் விடியவில்லையா?'

அதற்கு அவள் பதில் கூறுகிறாள், 'அழகான கிளியைப் போலப் பேசும் நமது தோழிமார் எல்லாரும் வந்துவிட்டார்களா என்ன!' ஏதோ நான்மட்டும்தான் எழுந்து வராததைப் போலப் பேசுகிறீர்களே என்பது உட்குறிப்பு. அதுமட்டுமல்ல, மற்றவர்கள் வரட்டும், அப்புறமாக நான் வருகிறேன், அதுவரையில் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேன் என்றும் உணர்த்துகிறாள். 'Buying time' என்பது இதுதான்

'நாங்கள் வந்திருப்பவர்களின் தலையை எண்ணி அதற்குப்பின் உன் கேள்விக்குப் பதில் சொல்கிறோம். அதுவரையில் தூங்கித் தூங்கி வீணாகக் காலத்தைப் போக்காதே.

இப்போது உடனடியாக நாங்கள் எண்ணிச் சொல்ல மாட்டோ ம். ஏன் தெரியுமா? வானத்தின் அமுதம் போன்றவனை, வேதங்கள் எல்லாம் கூறும் உயர்ந்த உட்பொருள் ஆனவனை, காண்பதற்கு மிக இனியவனை (நம் சிவபெருமானை) நாங்களெல்லாம் பாடிப்பாடி உள்ளம் கசிந்து உருகிக் கொண்டிருக்கிறோம்.

வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப் பார். எண்ணிக்கை குறைவாக இருந்தால் நீ எங்களோடு சேர வேண்டாம். மறுபடியும் போய்ப் படுத்துத் தூங்கிக்கொள்' என்கின்றனர்.

சிறப்புக் குறிப்பு: தெய்வ காரியம் செய்வதை ஒத்திப்போடச் சாக்குத் தேடக்கூடாது. இந்தப் பெண் 'மற்ற எல்லோரும் வந்துவிட்டாரோ' என்று கேட்பது தனது தூக்கத்தைத் தொடர்வதற்குத்தானே. அதுமட்டுமல்ல, பக்தியோடு தொடர்புடையதான பூஜை, விரதம், தவம், யோகம் ஆகிய சாதனைகளுக்கு இடையூறாக வருபவற்றில் மிக முக்கியமானது உறக்கம். அதனால்தான் சேஷாத்ரி சுவாமிகள் எல்லோரிடமும் 'தூங்காதே, எமன் வந்து தூக்கிக்கொண்டு போய்விடுவான்' என்று கூறுவார். ஏன், உலகியல் வாழ்விலும் அதிகத் தூக்கம் நமது சாதனைக்கு இடையூறுதானே.

நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
-(திருக்குறள் 605)


என்று வள்ளுவப் பெருந்தகை நமக்கு எச்சரிக்கை தந்திருக்கிறாரே. 'ஒரு முக்கியமான செயலைச் செய்யத் தொடங்காமல் காலந்தாழ்த்துதல் (அல்லது அதைத் தொடங்கி நெடுங்காலத்துக்கு நீட்டித்துச் செய்தல்), தேவையானதைச் செய்ய மறந்து போதல், செய்யச் சோம்பல் படுதல், செய்யாமல் தூங்கிப் போய்விடுதல் ஆகிய நான்கு குணங்களும் வாழ்க்கையில் சீரழிந்து போவார் விரும்பி ஏறுகின்ற மரக்கப்பல் ஆகும்' என்று தெளிவாகக் கூறி வைத்திருக்கிறார் வள்ளுவர். அப்படியிருக்க நோன்புக் காலத்தில் தூக்கத்தைத் தொடரவும், சற்றே தாமதமாக வந்து தோழியர் குழாத்தில் சேரவும் சாக்குப் போக்குகளைத் தேடுவது எப்படி நியாயமாகும்!

[அருஞ்சொற்பொருள்: ஒண்ணித்திலம் -> ஒள் + நித்திலம் - ஒளிவீசும் முத்து; புலர்ந்தின்றோ - விடியவில்லையா; விழுப்பொருள் - உயர்ந்த பொருள்; நெக்கு - நெகிழ்ந்து, உருகி; கெடுநீரார் - கெட்டுப்போகும் தன்மை உடையவர்]

இன்னும் வரும்...

No comments: