July 28, 2018

பிம்பிசாரனுக்கு புத்தர் கொடுத்த வாக்கு


தான் மேற்கொண்ட பரிவ்ராஜகக் கோலத்துக்கு ஏற்றபடி வைசாலியிலிருந்து புறப்பட்டு மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருஹத்துக்குச் சென்றார். வழக்கப்படி ராஜகிருஹத்தின் தெருக்களில் பிட்சை எடுத்தபடி நடந்து சென்றார். இவ்வளவு கம்பீரமும், எழிலும், ராஜலட்சணங்களும் பொருந்தியதொரு பிட்சுகனை அந்த நகர மக்கள் இதுவரை பார்த்ததில்லை. வணிகர் வீதியில் வணிகம் ஸ்தம்பித்து நின்றது. மதுவருந்தும் மக்களும் குடிப்பதை அப்படியே நிறுத்திவிட்டு கௌதம பிட்சுவைப் பார்த்தவண்ணம் இருந்தனர். அவசரமான வேலையாக விரைந்து கொண்டிருப்பவர்கள் ஒரு நிமிடம் அப்படியே கால்களை நிறுத்தி, கௌதமரின் உருவ அழகைப் பருகினர். யாராலும் அவரை அசட்டை செய்ய முடியவில்லை.

கௌதமரது மனத்தின் வளத்தை அவரது உடையின் ஏழைமை மறைக்க முடியவில்லை.

கௌதமர் ஒவ்வொரு வீடாகச் சென்று வாசலில் அமைதியாக நிற்பார். தனது ஓட்டில் (அதை 'மண்டை' என்று அழைப்பது வழக்கம்) அவர்கள் உணவுப் பொருளை இடும்வரை நின்று பின் நகர்வார். தன் வீட்டுக்கு வந்து அவர் பிட்சை ஏற்பதை ஒவ்வொருவரும் பெரிய பேறாக எண்ணினர். அவரை வணங்கினர். தம்மிடம் உணவை ஏற்றாரே என்று நன்றி பெருகினர்.

ராஜகிருஹத்தின் அருகே ஏழு குன்றுகள் இருந்தன. அவை பாண்டவ மலை என்று அழைக்கப்பட்டன. தினமும் பிட்சை எடுத்து உண்டபின் மாலையில் பாண்டவ மலைக்குத் தவம் செய்யப் போய்விடுவார் கௌதம பிட்சு.

மகதநாட்டின் மன்னன் பிம்பிசாரனுக்கு இந்தத் தகவல் எட்டியது. 'மன்னவா! அந்த பிரம்மதேவனே ராஜகிருஹத்தின் வீதிகளில் வந்து கையேந்திச் சென்றதுபோல இருக்கிறது' என்று கூறினர் அவரிடம்.

தினமும் பிட்சையை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் அதைச் சாப்பிட்டபின், பிட்சு மலைக்குச் சென்றுவிடுகிறார் என்பதைக் கேட்ட பிம்பிசாரனுக்கு மனதில் கருணை பெருகியது. தன் அரசக் கோலத்துக்கான ஆடைகளை அணிந்து, மகுடத்தைச் சூடிக்கொண்டு, தன் அமைச்சுப் பரிவாரங்களுடன் கௌதம பிட்சு இருக்கும் இடத்தை அடைந்தான் பிம்பிசாரன்.

'ஆஹா! என்ன பொலிவு. என்ன கம்பீரம். எத்தனை உயர்ந்து பருத்த தோள்கள். கண்களில் என்ன கருணை. இப்படி ஒரு அழகை நான் பார்த்ததே கிடையாதே. இவர் அரச குமாரனாகத்தான் இருக்க வேண்டும்' என்று தன் மனத்தில் நினைத்தான். மேலும் விசாரத்திததில் கௌதம பிட்சு சாக்கிய ராஜகுமாரன்தான் என்ற செய்தி அவனுக்குக் கிட்டியது.

'பிட்சுவே! உங்களை வணங்குகிறேன். நீங்கள் ஓர் அரசகுமாரர் என்றும் அறிகின்றேன். என்ன காரணத்தால் துறவு மேற்கொண்டீர்களோ எனக்குத் தெரியாது. உங்கள் கரங்கள் செங்கோலை ஏந்தவேண்டுமே அல்லாது பிட்சை ஓட்டை அல்ல. உங்கள் உடல் பட்டுப் பீதாம்பரங்களை அணியவேண்டுமே அல்லாது சன்னியாசியின் துவராடையை அல்ல. உங்கள் இளமை இவ்வாறு வீணாவதும் தகாது. வாருங்கள், இந்த மகத அரசை நாம் இருவருமே ஆளலாம். இங்கேயே தங்கிவிடுங்கள். அரச வம்சத்தினருக்குச் செல்வத்திலும் பூமியிலும் ஆசை என்பது பெருமை தருவனவே. செல்வம், செல்வாக்கு இவற்றுடன் ஆன்மிகமும் சேர்ந்தால் அது மிகுந்த சோபை தரும்' என்று விண்ணப்பித்தான்.

தாழ்ந்திருந்த தமது கண்களை உயர்த்தினார் கௌதமர்.

'நீ தர்மவான். பக்தியுள்ளவன். உன் வார்த்தைகள் அறிவின்பாற்பட்டவையாக இருக்கின்றன. தர்மவானிடத்தில் இருக்கும் செல்வமே பொக்கிஷம் என்று கூறப்படும். கருமியின் செல்வமும் ஒருவகை வறுமையே.

'தருமமே பெரிய லாபத்தைத் தரும். தருமமே பெரும் செல்வம். அத்தகைய வழியில் போகும் செல்வம் கழிவிரக்கத்தைத் தராது.

'முக்தி வேண்டும் என்பதற்காகத் தளைகளை அறுத்துவிட்டவன் நான். நான் எப்படி மீண்டும் அரசாள முடியும்? எவன் மெய்ஞ்ஞானத்தில் மனதைச் செலுத்துகிறானே, அது தவிர்த்த எல்லாவற்றிலிருந்தும் அவன் தனது கவனத்தைத் திருப்பிவிட வேண்டும். அவனுக்கு ஒரே லட்சியம்தான்--தன்னைப் பேராசை, காமம் இவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வது. அவன் செல்வக்குக்கும் ஆசைப்படக் கூடாது.

'சற்றே காமவயப்பட்டாலும் போதும், அந்தக் காமம் ஒரு குழந்தையைப் போல வேகமாக வளர்ந்துவிடும். கொஞ்சம் செல்வாக்கைப் பிரயோகித்துப் பார், அது உன்னிடம் பல கவலைகளைக் கொண்டுவந்து விடும்.

'பூமியில் அரசாட்சி செய்வதைவிட, சொர்க்கத்தில் வாழ்வதைவிட, மூவுலகுக்கும் ஏகச் சக்ராதிபதியாக இருப்பதைவிட, துறவினால் கிடைக்கும் பலன் உயர்வானது.

'செல்வத்தின் மாயை கௌதமனுக்குத் தெரியும். அவன் விஷத்தை உணவென்று உண்ணமாட்டான்.

'ஒருமுறை சிக்கிய மீன் எங்கேனும் தூண்டிலை நேசிக்குமா? விடுபட்ட பறவை மீண்டும் வலையை விரும்புமா? பாம்பின் வாயிலிருந்து தப்பிய முயல் மீண்டும் அதனிடம் போகுமா? தீப்பந்தத்தில் கையை எரித்துக் கொண்டவன் அதைத் தரையில் வீசியபின் மீண்டும் எடுக்க முயல்வானா? விழிபெற்ற குருடன் மீண்டும் விழிகளை நாசமாக்கிக் கொள்வானா?

'என் மீது கருணை காட்டாதே, பிம்பிசாரா! அரச வாழ்வின் பாரத்தாலும், செல்வம் தரும் கவலைகளாலும் துன்புறுகிறவர்கள் மீது கருணை காட்டு. அவர்கள் எப்போதும் அச்சத்தால் நடுங்குகிறார்கள். எப்போது இவை தன்னை விட்டுப் போகுமோ என்ற அச்சம். இந்தக் கஜானாவையும் மகுடத்தையும் சாகும்போது தன்னோடு தூக்கிப் போகமுடியாதே என்ற அச்சம்.

'நான் அரச போகத்தைத் துறந்துவிட்டேன். வாழ்வின் இன்பங்களைத் துறந்துவிட்டேன். என் லட்சியத்துக்குக் குறுக்கே நிற்க முயற்சிக்காதே. என்னைப் போகவிடு' என்றார் கௌதம பிட்சு.

'மேன்மை கொண்டவரே! உங்கள் குறிக்கோள் நிறைவேறட்டும். அப்படி நிறைவேறியதும், என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று தன் இரு கைகளையும் கூப்பியவண்ணம் பிம்பிசாரன் பிரார்த்தித்தான்.

கௌதம பிட்சு அவ்வாறே செய்வதாகத் தன் மனதுள் நிச்சயித்துக்கொண்டார். பின்னர் ராஜகிருஹத்திலிருந்து தன் பயணத்தை மேலும் தொடர்ந்தார்.

- நான் எழுதிக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட புத்தம் சரணம் நூலிலிருந்து