January 02, 2008

திருவெம்பாவை - 12

திருச்சிற்றம்பலம்

சிவனென்னும் தீர்த்தத்தில் நீராடுவோம்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.


'திரும்பத் திரும்ப வந்துவிடுகிற பிறவி என்னும் துயரம் தீருவதற்காக நாம் பேரொலி எழுப்பியபடி நீராடும் அந்தப் புனிதநீரே சிவபெருமான்தான். அவனோ தில்லைச் சிற்றம்பலத்தில் கையில் தீச்சட்டியை ஏந்தியபடி நர்த்தனம் ஆடுபவனாக இருக்கிறான்.

அவன் வானையும் மண்ணையும் பிறவுலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் மறைத்தும் அருளியும் செய்வதான ஐந்தொழில்களையும் விளையாட்டாகச் செய்துவிடுகிறான்.

நாம் பேசியபடியே, நமது கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்க, இடுப்பிலுள்ள மேகலைகள் சத்தமிட, நமது கூந்தலில் சூட்டியுள்ள பூக்களில் வண்டுகள் முரல, மலர்வனத்தால் சூழப்பட்ட இந்தப் பொய்கையில் நீந்தி விளையாடுகிறோம். அதே சமயத்தில் நம்மை உடையவனான சிவபெருமானின் பொற்பாதங்களையும் புகழ்ந்து பாடியபடியே இந்தப் பெருஞ்சுனையில் நீராடலாம், வாருங்கள்.'

சிறப்புக்குறிப்புகள்: இதற்கு முந்தைய பாடலில் நோன்பிருக்கும் மகளிர் ஒரு சுனையில் முகேரென ஒலியெழும்படிப் பாய்ந்து குளிப்போம் என்று பேசினர். இந்தப் பாடலிலோ, தாம் அவ்வாறு முழுகும் அந்தத் தீர்த்தமே சிவபெருமான்தான் என்று கூறுகின்றனர். தீர்த்தன் என்றால் மரியாதைக்குரியவர், போற்றத் தக்கவர் என்று பொருள். கிரி, சாகர் என்றெல்லாம் சில சன்யாசிகள் தமது பெயரில் வைத்துக்கொள்ளுவதைப் போல, தீர்த்தர் என்பதும் ஒரு சன்யாச பரம்பரையின் பிற்பெயர். ராமானந்த தீர்த்தர் என்பதுபோல.

thiruneeruதீர்த்தமாடுதல் என்பது ஹிந்துப் புனித சடங்குகளில் ஒன்று. ஒவ்வொரு புனிதத் தலத்திலும் ஒரு தலவிருட்சம், தீர்த்தம் இருப்பது வழக்கம். 'தண்ணீரில் முழுக்குப் போடுவதால் தெய்வ தரிசனம்' கிடைக்குமா என்றெல்லாம் விதண்டா வாதம் பேசுவது அதிகமாகிவிட்டதால், இன்றைக்குப் பல புனித தீர்த்தங்கள் பராமரிப்பற்று, பாசியும் அழுக்கு நீரும் சேருவதோடு அதன் மேற்பரப்பில் குப்பையும் பிளாஸ்டிக் கூளமுமாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், வாய்ப்பாடு படிப்பதால் ஏழு வயதுப் பையனுக்கு என்ன பயன் என்று கேட்பதைப் போன்றதே இந்த வாதமும். ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையில் மதத்தின் சம்பிரதாயங்களும் சடங்குகளும் நெறிப்படுத்துகின்றன. ஒரு போலீஸ்காரர் எதற்காக சீருடை அணியவேண்டும்? அவர் எதற்காக மீசை வைத்துக்கொண்டு, கையில் கம்பு ஏந்த வேண்டும்?

Photobucketதிருநீறு, திருமண், கோபி, சந்தனம், குங்குமம் போன்ற சமய அடையாளங்கள் நமக்கும் பிறருக்கும் நமது அடையாளத்தைக் காண்பிக்கின்றன. நமது பக்தியும் சாதனையும் உறுதிப்படும்வரை நாம் தொடர்ந்து சமயத்தின் புறச்சின்னங்களை அணிவதும், அவற்றை அணிவதற்கான நமது உரிமையை நிலைநிறுத்திக்கொள்வதும் மிக அவசியம். நாம் செய்வதோடு, நமது இல்லத்தில் குழந்தைகளுக்கும் இதை உணர்த்த வேண்டும். நாமும் ஒரு ரமணராகவோ, ராமகிருஷ்ண பரமஹம்சராகவோ மலர்ந்தபின் புறச்சின்னங்களைத் துறந்துவிடலாம்.

(அருஞ்சொற்பொருள்: குவலயம் - உலகம்)

1 comment:

Srikanth said...

அருமையான விளக்கங்கள்! மனதை நிலைப்படுத்தவே புறச்சின்னங்கள் என்பது மிகச் சரி. கிரியை இல்லாமல் வெறுமனே மனத்தால் மட்டும் பக்தி செய்து கொண்டிருந்தால் நாளடைவில் சுவாரசியம் குறையக்கூடும் (மனம் தான் குரங்காயிற்றே! )

தீர்த்தனான சிவ பெருமானே, சதா கங்கையில் ஸ்நானம் செய்து கொண்டு, பட்டை பட்டையாக நீறு அணிந்து (நீரில் நனைந்தபடி நீறை அணிந்தபடி :) ) நமக்கு செய்து காட்டுகிறானே!