July 21, 2013

அருணாசல அற்புதம் 5: ரமணரின் சம்பாத்தியம்

ஒரு ஊரில் கோடீசுவரர் ஒருவர் இருந்தார். வயது எழுபதுக்கு மேல். அவருக்கு நான்கு மகன்கள். அவர் மிகுந்த பக்திமான். அந்த ஊருக்கு ஒரு மகான் வந்தார். தனவந்தர் அவரைத் தன் வீட்டுக்கு அமுது செய்விக்க அழைத்தார்.

மகானும் தனவந்தர் வீட்டுக்குச் சென்றார். வந்தவருக்குப் பாதபூஜை செய்தபின் சற்றே பேசிக்கொண்டிருந்தார்கள். மகான் நல்ல தபஸ்வி. எப்போதும் ‘அருணாசலம், அருணாசலம்!’ என்று இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தார். அவருக்குத் தம் முன்னே இருப்பவரைப் பற்றி எல்லாமும் அறியும் ஆற்றல் இருந்தது. ஆனாலும், மரியாதை நிமித்தமாகச் செல்வந்தரைப் பற்றிய விவரங்களை விசாரித்தார். முதலில், “அருணாசலம்! நீங்கள் மிகவும் இளமையாகத் தெரிகிறீர்களே, உங்களுக்கு வயது 60 இருக்குமா?” என்று கேட்டார். அதற்குச் செல்வந்தர் தனக்கு வயது ஐந்து என்று கூறினார்! சுற்றியிருந்த எல்லோரும் தனவந்தர், மகானிடமே பொய் சொல்கிறாரே என்று எண்ணி அதிர்ச்சி அடைந்தனர்.

“அருணாசலம்! இறைவன் உங்களுக்கு நிறையச் செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். உங்கள் சொத்தின் மதிப்பு பல கோடி இருக்குமே!” என்றார் மகான். “அப்படி எல்லாம் இல்லை ஐயா. நான் சேர்த்தது என்னமோ இரண்டு லட்சம்தான்” என்றார் செல்வந்தர். இன்னொரு பொய்யா என்று மருகினர் அருகிருந்தோர். இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் செல்வந்தரின் மனைவியும் ஒரு மகனும் வந்து மகானை நமஸ்கரித்தனர்.

“அருணாசலம்! நல்லது. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டார் மகான். “இறைவன் எனக்குக் கொடுத்திருப்பது ஒரே ஒரு பிள்ளைதான்” என்றார் செல்வந்தர். சுற்றியிருந்தவர்கள், ‘இந்த மனிதனுக்கு இவரிடம் இப்படிப் பொய் சொல்ல என்ன நெஞ்சுரம்!’ என்று எண்ணினர். கிளம்பிப் போய்விடலாமா என்றுகூட நினைத்தனர்.

அப்போது மகான் அவரை ஆசிர்வதித்து, “இங்கிருக்கும் எல்லோரும் நீங்கள் என்னிடம் அடுக்கடுக்காகப் பொய் சொல்வதாக எண்ணுகிறார்கள். ஏன், பேசாமல் எழுந்து போய்விடலாமா என்ற எண்ணம்கூட அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் உங்கள் விடைகள் மிகச் சரியானவையே. சற்றே அதை இவர்களுக்கு விளக்கிச் சொல்வோமா?” என்று கூறித் தொடர்ந்தார், “நான் வயதைக் கேட்டபோது ஐந்து என்று கூறினார். ஏன் என்று சொல்லுங்கள்.”

“சுவாமி! நான் உலகில் பிறந்து எழுபத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. உண்பது, உறங்குவது, சுயநலமான வேலைகள் செய்வது என்று அதில் 67 ஆண்டுகள் போய்விட்டன. பக்தி, சமூகத் தொண்டு, இறைப்பணி, பெரியோரைப் போற்றுதல், நல்லவை கேட்டல் என்று இவற்றுக்காகச் செலவழித்தது ஐந்து ஆண்டுகள் மட்டுமே. அதுதான் என் உண்மையான வயது என்று நினைக்கிறேன்” என்றார் செல்வந்தர் மிகப் பணிவுடன்.

“அருணாசலம், அருணாசலம்! உங்கள் சொத்து விவரமும் சொல்லிவிடுங்கள்” என்றார் மகான். “ஐயா, நான் பொன்னும், நிலபுலன்களும் என்று எவ்வளவு குவித்திருக்கிறேன் என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது. எல்லாம் இறைவன் கொடுத்த சொத்துத்தான். ஆனால், ஏழைகள் பசி தீர்க்கவும், உலக நன்மைக்கும், தெய்வப் பணிக்கும் நான் செலவிட்டது இரண்டு லட்சம்தான். அதுதான் நான் இந்த உலகைவிட்டு நீங்கும்போது என்னோடு வரப்போகும் சொத்து. அதையே எனது சொத்து என்று குறிப்பிட்டேன்” என்றார் செல்வந்தர்.

“அருணாசலம்! மிக உண்மை. உங்கள் ஒரே மகன் பற்றியும் கூறிவிடுங்கள்.”

“எனக்குப் பிறந்தவர்கள் நான்கு மகன்கள். ஆனால் நான் சொன்னதைக் கேட்பவன். பெரியோரை மதிப்பவன், தீய வழிக்குப் போகாதவன் இதோ இங்கிருக்கும் ஒருவன்தான். அதனால்தான் எனக்கிருப்பது ஒரு பிள்ளை என்று கூறினேன்” என்றார் செல்வந்தர்.

சேஷாத்ரி சுவாமிகள் ரமணரின் ‘சம்பாத்தியம்’ குறித்துக் கூறியதும் இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய முதலியார் என்று ஒரு ரமண அன்பர் இருந்தார். அவர் தனது வருவாயிலிருந்து ஏராளமாக அன்னதானம் செய்தார். நிறையச் சொத்துக்கள் கொண்டவர். ஆனால் மேலும் மேலும் சம்பாதிப்பதில் காட்டிய தீவிர ஆர்வத்தில் ஒரு சிறிதளவுகூட அவருக்கு ஆன்மீக முயற்சிகளில் இல்லை. சேஷாத்ரி சுவாமிகள் அவரிடம் ஜபம், தியானம் போன்ற ஆன்ம சாதனைகளின் அவசியத்தைப் பலமுறை வற்புறுத்தினார். அவர் ஈடுபாடு காட்டவே இல்லை. சேஷாத்ரி சுவாமிகள் அவரிடம் ஒருமுறை “முதலியார்வாள், இதைக் கேளும். என் இளைய சகோதரனின் வருமானம் பத்தாயிரம் ரூபாய். எனது வருமானமோ ஆயிரம் ரூபாய். நீர் நூறு ரூபாய் சம்பாத்தியமாவது தேடக்கூடாதா?” என்று கேட்டார்.

சுவாமிகள் தனது ‘இளைய சகோதரன்’ என்றது ரமணரை! ‘சம்பாத்தியம்’ என்றது ஆன்ம சக்தியை. தாமே ஞானியாக இருந்தபோதும் அவர் அடக்கத்தோடு தனது சம்பாத்தியத்தைக் குறைத்துக் கூறிக்கொண்டதையும் பார்க்க வேண்டும்.

நாமும் பொழுது விடிந்து பொழுதுபோனால் சம்பாதிக்கவே ஓடுகிறோம், தேடுகிறோம், அலைகிறோம், உடலும் மனமும் களைத்துப் போகிறோம். போகும் வழியில் ஒரு கோவிலைப் பார்த்தால் நெஞ்சைத் தொட்டுக் கொள்கிறோம், சிலர் தம் விரல்களை முத்தமிட்டுக் கொள்வதும் உண்டு! ஆனால் ஐந்து நிமிடமாவது கண்களை மூடி, நம்மையும் இந்தப் பிரபஞ்சத்தையும் படைத்த அந்த எல்லையற்ற பேரருளை நம் மனதுக்குள்ளே எண்ணி, உணர்ந்து, பேரானந்தம் அடைய நமக்கு நேரமில்லை என்கிறோம்.

முதலில் கூறிய செல்வந்தரைப் போல, ஆன்ம பலம் சேர்க்கச் செலவழிக்காத நேரமும், நல்லதற்குச் செலவழிக்காத பணமும், நன்முறையில் வளராத சந்ததியும் நமக்குப் பயன்படாதவை என்பது மட்டுமல்ல. சமுதாயத்துக்கும் கேடுதான். இதைப் புரியவைக்கத்தான் பெரியோர்கள் உலகில் தோன்றி, ‘இப்படி வாழ்வது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம்’ என்று முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்கள்.

“நூறு ரூபாய் சம்பாத்தியமாவது தேடக்கூடாதா?” என்று சேஷாத்ரி சுவாமிகள் கேட்டது நம்மை நோக்கியும்தான்!

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

July 03, 2013

அருணாசல அற்புதம் 4: வீடு புகுந்து வேரறுப்பவன்

அகம் என்ற சொல்லுக்கு உள், மனம், வீடு என்று பல அர்த்தங்கள் உண்டு. இன்னொரு பொருளும் உண்டு. அதற்குப் பின்னால் வருகிறேன்.

நாம் ஒருவருக்கு வீட்டின் ஓர் அறையை வசிக்கக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவன் உள்ளே புகுந்தான். மெல்ல மெல்ல வியாபித்து வீடு முழுவதையும் தன்னதாக்கிக் கொண்டுவிட்டான். போதாததற்கு வீட்டுக்குள் நாம் வைத்திருந்த பொருட்கள் எல்லாவற்றையும் வெளியே தூக்கி எறிந்து விடுகிறான். தன் பொருட்களால் நிரப்பி வைக்கிறான்.இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவனை வெறுப்பதற்குப் பதிலாக நாம் அவனை எப்போதையும்விட அதிகம் நேசிக்கத் தொடங்குகிறோம். “அப்பா, தயவு செய்து இந்த வீட்டைவிட்டுப் போய்விடாதே! என்னால் ஒருகணம்கூட நீ இல்லாமல் இருக்க முடியாது” என்று சொல்லித் தவித்துப் புலம்பத் தொடங்குகிறோம்.

சரி என்று அவனும் தொடர்ந்து குடியிருக்கிறான். குடியிருப்பதற்கு நாம் அவனுக்குக் குடக்கூலி தரவேண்டியிருக்கிறது. அப்படிக் கொடுத்தாலும் சும்மா இருக்கிறானா! தான் இருக்கும் வீட்டையே இடித்துப் போட்டுவிடுகிறான். தரைமட்டமாக்கி விடுகிறான். ஏனென்றால், அப்படி இடிக்க அனுமதித்தால்தான், இந்த அகத்தை நொறுக்கித் தரைமட்டமாக்கினால்தான், அவன் தரும் வீட்டை நாம் பெற முடியும்.

அருணாசலமென அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா

என்று தொடங்குகிறது பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் எழுதிய அருணாசல அக்ஷரமணமாலை.

பகவான் பதினான்கு வயதுச் சிறுவனாக, வெங்கட்ராமன் என்ற பெயருடன் மதுரையில் இருந்தபோது வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் அருணாசலத்திலிருந்து வருவதாகச் சொன்னார். அருணாசலம் என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில் வெங்கட்ராமனின் அகத்தில் அருணாசலம் புகுந்துவிட்டது. அதுவே அவரை ‘பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி’ என்ற ஆன்மீக தீபமாக மாற்றி உலகுக்கு ஒளிகாட்ட வைத்தது.

நம் அகத்தை நாம் காமம், குரோதம், மோகம், லோபம், மதம் மாத்சரியம் என்ற தீக்குணங்களால் நிரப்பி வைத்திருக்கிறோம். இவை ‘மனித இயல்புகள்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ‘தவறு செய்வது மனித இயல்பு’ என்று யாரொ சொன்னதை வைத்து, ‘தவறு செய்வதே மனித இயல்பு’ என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். எப்போதோ ஒருமுறை தவறிப்போய்ச் செய்வதுதான் தவறு. அப்படி எப்போதோ ஒருமுறை மனிதன் தவறக்கூடும் என்பதுதான் உண்மை. நாமோ, அறிந்தோ அறியாமலோ, செய்யத் தகாதவற்றைச் செய்து கொண்டிருப்பதே மனித இயல்பு என்று நம்பிவிட்டோம். இவைதாம் நமக்கு மகிழ்ச்சியைத் தருவன என்று நம்பி இவற்றால் எல்லையற்ற மனரீதியான, உடல்ரீதியான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தவறு, குற்றம், இயல்பு, வாழ்க்கை முறை என்று ஒன்றையொன்று பிரித்தறிய இயலாதவர்களாகிவிட்டோம்.

ஆனாலும், நம் முன்னோர் செய்த புண்ணியத்தால், ஒருநாள் திடீரென அருணாசலம் வந்து அகத்தில் புகுந்துகொள்கிறது, வெங்கட்ராமனுக்கு ஏற்பட்டது போலவே. வெங்கட்ராமனின் தயார்நிலை வேறு நமது நிலை வேறு. ஆனாலும் அந்த அருணகிரி விடுவதில்லை. அகத்தில் மெல்லப் புகுந்து ஒரு ஓரமாக உட்கார்ந்துகொள்கிறது. ஓரறையிலிருந்து மற்றோர் அறைக்குப் பரவுகிறது. பிறகு பார்த்தால் அகம் முழுவதும் அதுவே ஆக வியாபித்து விடுறது. நம்மை அழச் சொல்கிறது, சிரிக்கச் சொல்கிறது, கருணை காட்டச் சொல்கிறது; பொய்கூறிய உடனே நாவைக் கடித்துக் கொள்ள வைக்கிறது. வேண்டாததைப் பார்க்கவொட்டாமல் இமையை இழுத்து மூடுகிறது. நமது கடுமையான சூழலின் தாக்கத்தையும் மீறி நம்மைத் தூய்மைப்படுத்துகிறது.

அதுமட்டுமா, வீட்டுக்குள் நாம் நிரப்பி வைத்திருந்த காமம், குரோதம் முதலிய, நாம் நண்பர்களாக நினைத்த ஆறு எதிரிகளை, வெளியே விரட்டிவிடுகிறது. தனது குணங்களாகிய அன்பு, இரக்கம், கருணை, சாந்தம், ஆனந்தம் முதலியவற்றால் அகத்தை நிரப்பி வைக்கிறது. பக்தியை ஆழப்படுத்துகிறது.

அருணாசலம் என அகமே நினைத்ததால் வந்த வினை இது. உள்ளே நுழைந்தவன் உரிமையாளன் ஆகிவிட்டான். அத்தோடு விடவில்லை.

அகம் என்ற சொல்லுக்கு இன்னும் ஒரு பொருள் இருக்கிறது என்றுதானே தொடங்கினேன். அகங்காரம், ஆணவம், அகந்தை என்பதுதான் அந்த இன்னொரு பொருள். முதலில் நம்முடைய மனமாகிய அகத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, நம் மனதை ஆட்டிப்படைக்கும் அகங்காரமாகிய அகத்தை வேரறுக்கிறான் அருணாசலன். பின்னர், தான் குடியிருந்த வீடாகிய மனதையே இல்லாமல் செய்கிறான்.

‘மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்’ என்றுதானே கவிஞர் கூறினார்!

அகத்தில் நுழைந்து அகத்தை அறுத்த அருணாசலன் இவற்றைச் செய்வது எதற்காக என்றால் பேரின்ப வீடாகிய அகத்தை நமக்குத் தருவதற்காகத்தான். இதில் நாம் எப்படி அவனுடன் ஒத்துழைக்கலாம் என்பதையும் வரும் நாட்களில் பார்க்கலாம். பகவான் மற்றும் பிற மகான்களின் வாழ்க்கை நமக்குக் காட்டும் ஒளியிலே இதைப் பார்க்கலாம். நாமும் ஆன்மீகம் என்னும் ராஜபாட்டையில் நடைபோட முயலலாம்.

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....