September 12, 2006

வெள் என்ற சொல்

பல மடற்குழுமங்களில் திருமுறை வரிசை தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்களிலும், ஆங்கிலத்தில் பொருளோடும், அருஞ்சொற்பொருளோடும் வெளியிடப்படுகிறது. இதனை shaivam.org அமைப்பினர் மிகக் கருத்தோடு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவருகின்றனர். இன்றைக்குக் கீழ்க்கண்ட பாடலைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனத் தோன்றியது. முதலில் பாடல்:

திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா
தலம் கோயில்
பண் பஞ்சமம்
9-ம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

பெருமையிற் சிறுமை பெண்ணொடு ஆணாய் என்
பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
மகள் உமையவள் களைகண்ணே
அருமையின் மறை நான்கு ஓலமிட்டரற்றும்
அப்பனே அம்பலத்து அமுதே
ஒருமையிற் பல புக்கு உருவி நின்றாயைத்
தொண்டனேன் உரைக்குமாறு உரையே.

ஆங்கிலத்தில் இதன் பொருள்:

Tiny in the immense, male and female - being so
the Great Light that cut my birth and death!
Oh the Space of darkness (nothing)!
The Hold for umA, the Daughter of the himavAn,
the Lady of fish like eyes!
The Father Whom the four vedas scream
and babble in inability (to explain)!
The Ambrosia of the hall (of thillai)!
Oh the One Who stays throughout everything,
how will I, the servitor, tell You? Tell!

அழகான பாடல். (எந்தவொரு திருமறைப்பாடலையும் இவ்வாறு தயங்காமல் சொல்லித் தொடங்கலாம்!). இதிலே களைகண் என்ற அழகான சொல் வருகிறது. களைகண் என்றால் பற்றுக்கோடு, ஆதரவு, support என்று பொருள். பிரபஞ்சத்துக்கெல்லாம் ஒரே பற்றுக்கோடு என்ற முறையில் இறைவனையும் களைகண் என்ற சொல் குறிக்கும்.

அதைவிட முக்கியமான விஷயம் இதிலே வரும் 'வெளியே' என்ற சொல். வெளி என்றால் space அல்லது (அகத்துக்கு எதிரான) புறம் எனவே நாம் புரிந்துகொள்கிறோம். மேலே கண்ட ஆங்கிலப் பொருளும் 'கருமையின் வெளியே' என்பதற்குப் பொருள் கூறுகையில் 'the Space of darkness (nothing)' என்கிறது.

இங்கே ஏதோ உதைப்பது போல் தோன்றியது.

வானம் இருண்டு கிடக்கிறது. மழைபெய்து முடித்ததும் மேகங்கள் விலகி ஒளி வருகிறது. உடனே என்ன சொல்கிறோம்? 'வானம் வெளி வாங்கிடிச்சு'! இதென்ன வெளி? வெளிச்சம் என்ற பெயர்ச்சொல்லில் இருக்கும் 'வெளி' என்ன? சற்றே பளிச்சென்ற, அடர்த்தியற்ற நிறத்திலான புடைவையை 'வெளிர்நிறம்' என்றல்லவா பொதுவாகச் சொல்கிறோம். ஆங்கிலத்தில் 'bright colour'. அழுக்குப் போகத் துணியைத் துவைத்தால் அது 'வெளுப்பது'.

காலையில் வா என்று சொல்ல வேண்டுமென்றால் கிராமப் புறங்களில் 'வெள்ளன வா' என்பார்கள். அதாவது, இருட்டு அகன்று 'வெள்' என ஆனதும் வா என்பது பொருள். வெண்ணெயில் கூட வெள் இருக்கிறதே. 'வெள்' என்பதற்கே shining, bright என்று OTL பொருள் தருகிறது.

1 veL 01 1. whole; 2. blank; empty; 3. pure, unadulterated; 4. shining, bright (OTL)

இப்போது பாருங்கள், மேலே கண்ட பாடலில் 'கருமையின் வெளியே' என்பது என்னவாக இருக்கக் கூடும் என்று.

பொருள் காணும்போது பாடலில் வரும் பிறவற்றையும் பார்த்தால் மட்டுமே சரியாகக் காணமுடியும். பிற அடிகளில் சொற்கள் முரண்பட (எதிரெதிரான பொருள் வரும்படி) அமைந்திருப்பதையும் கவனியுங்கள்: பெருமை, சிறுமை; பெண், ஆண்; பிறப்பு, இறப்பு; ஒருமை, பல.

ஆகவேதான் கருமையும் வெளியும் எதிரெதிர் பொருள் கொண்ட சொற்களாகவே பயன்பட்டிருக்க வேண்டும். 'பெருமையிற் சிறுமை' என்று முதல் அடியில் கூறினாற்போல இதுவும் 'கருமையின் வெண்மையே/ஒளியே' என்றே பொருள்.

அப்படியானால் 'வெள்ளோட்டம்' என்பதில் வரும் 'வெள்' எதைக் குறிக்கிறது?

நீங்களும் கொஞ்சம் வெளுத்துக் கட்டலாமே.

அன்புடன்
மதுரபாரதி

4 comments:

Om said...

Rombo nalla ezhuthireenga :)

T.ANANDH--- WINGS OF SCIENCE said...

Really it is nice to see the treasures of Tamil in English.
one language helps another one to expose the beauty n richness.
ur pursuits are great n remarkable.

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

அன்பரே,தங்கள் விளக்கத்தில் சிறு முரண் இருப்பது போல தோன்றுகிறது.
வெளி என்றால் புறத்தே,வெளிப்புறத்தில்,அப்பால் போன்ற பொருள் உண்டு.
இந்த பாடலைப் பொறுத்த வரை முதல் இரு அடிகள் இறையை விளிக்க பயன் படுகின்றன.பெருமையில் சிறுமை,பெண்ணில் ஆணாய் என்ற சொற்கள் இறையின் தன்மையை குறிப்பிடுகின்றன.பெருமை என்று ஒன்று இருக்கும் போது சிறுமை என்பது அதனின்று வேறுபட்டது;அதைப் போலவே ஆண் என்று சொல்லும் போது அதில் பெண் இருக்க முடியாது.அப்படியெனில் இறைத் தத்துவத்தை பெருமையே என்று விளிக்கும் போது சிறுமை எங்கே போகிறது?ஆணாக இருக்கும் போது பெண்மை எங்கே போகிறது?எல்லாமே இறைதானே..எனவேதான் பெருமையாய் இருக்கும் போதே சிறுமையாகவும்,ஆணாக இருக்கும் நிலையிலேயே பெண்ணாகவும் இருக்கின்ற இறையே உலகியலில் இருக்கின்ற அனைத்துமாக இருக்கின்றது;அதாவது பெருமையாகவும்,அதனின்று வேறுபட்ட சிறுமையாகவும்,ஆணாக இருக்கும் போதே அதனின்று வேறுபட்ட பெண்ணாகவும் திகழ்கின்ற இறையே என்பது முதல் இரு அடிகள் அளிக்கின்ற பொருள்.
எல்லாவற்றின் உள்ளே,அனைத்தினுக்கும் புறம்பே என்று அபிராம பட்டர் ஒரு அந்தாதிப் பாடலில் சொல்லுவார்.இறை என்பது அனைத்துமாகவும்,அனைத்தினுக்கும் புறம்பாகவும் இருக்கிறது என்பது சைவ சித்தாந்த தத்துவம்.
கருமையின் வெளியே என்பது வேறு வகையான பயன்பாடு.கருமையி-ன் என ன் விகுதி போடுகிறார்.ன் விகுதி வரும்போது கருமையினுடைய வெளி எனும்போது கருமைக்கு வெளியாக இருக்கின்ற ஒளித் தன்மையுடையவனே என்ற பொருளே தருவதாக உணர்கிறேன்.முதலடியில் பெருமையிற் சிறுமை என்கின்ற போது அது ல் விகுதியுடன் முடிகிற சொல்.அப்போது அதன் பொருள் பெருமையில் சிறுமை,அதாவது பெருமையாக இருக்கும் போதெ அதனில் சிறுமையாகவும் இறைவன் விளங்குகிறான் என்பதே பொருள்.
மற்றபடி வெள்ளோட்டம் என்பதின் பகுபதம் வெளி+ஓட்டம் என்பது.ஒரு பொருள் வெளிப் புறத்தை முதலில் காணுகிற செயல் வெள்ளோட்டம் எனப் படுகிறது.

R.DEVARAJAN said...

‘கருமையின் வெளி’ -
ப்ரம்மாண்டத்துக்கு வெளியே பாழ் சூழ்ந்துள்ளதாக நம் நூல்கள் பகரும்.
’முடிவில் பெரும் பாழேயோ!’ என்று நம்மாழ்வாரும் இதையே
கூறுகிறாரோ ?

தேவ்
rdev97@gmail.com