December 27, 2007

திருவெம்பாவை - 8

திருச்சிற்றம்பலம்

ஏழைபங்காளனைப் பாடுவோம் வா!

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.


Kozhiஅழைக்க வந்த தோழியர் குழாம் இப்போது விடியலுக்கான அறிகுறிகளைக் கூறுகின்றனர்:

'கோழி கூவி விட்டது. எங்கு பார்த்தாலும் பறவைகள் சப்தஸ்வரங்களை இசைக்கின்றன. எங்கிலும் வெண்மையான சங்கு ஒலிக்கிறது.

'தனக்கு இணையாக எவருமில்லாத பரஞ்சோதியை, இணையற்ற உயர்கருணையை, ஈடில்லாத சத்தியப் பொருள்களைப் பாடுகிறோம், அதை நீ கேட்கவில்லையா? வாழ்க நீ! இப்படியும் ஒரு தூக்கமா?

'வாயைத் திறந்து 'வருகிறேன்' என்று சொல்லமாட்டாயோ! இதுதான் நீ கருணைக் கடலான பரமனின்மீது கொண்ட பக்தியா?

'ஊழிக்காலத்தில் தனியொரு முதல்வனாக நிற்பவனை, ஏழையரின் துன்பத்தில் பங்கேற்பவனைப் பாடுவோம் வா!'

சிறப்புக் குறிப்பு: சிலம்பல் என்பதற்கு ஒலியெழுப்புதல் என்று பொருள். தொடர்ந்து ஒலியெழுப்புவதனாலேயே மகளிர் காலில் அணியும் ஓர் அணிக்குச் சிலம்பு என்று பெயர் வந்தது. குருகு என்றால் நாரை என்றும் பொதுவாகப் பறவைகள் என்றும் பொருள் உண்டு.

இந்தப் பாடல் சிவபெருமானை 'ஏழைபங்காளன்' என்ற மிக அழகிய அடைமொழியால் அழைக்கிறது. வந்தியின் உதிர்ந்த பிட்டைக் கூலியாக ஏற்று, உடைந்த வைகைக் கரைக்கு மண்கொட்டி அணைபோட வந்து, பிரம்படி வாங்கிய அந்தப் பெருமானை, 'ஏழைபங்காளன்' என்று அழைப்பதில் தவறு என்ன?

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று சங்க இலக்கியம் சங்கையில்லாமல் முழங்குகிறது. ஆயினும் மனிதன் குறைமதியின் காரணமாகத் தனது துன்பங்களுக்கு இறைவனைக் காரணமாகக் காட்டுகிறான். மட்டுமின்றி, இறைவனின் இருப்பையே மறுக்கிறான். ஆயினும், அவரவர் வினைப்பயனையும் மீறி, அவர்களது பக்தியின் உயர்வு கருதி, இறைவன் அவர்களது துன்பத்தைத் தான் ஏற்கிறான்.

பக்தி என்பதற்கு வெறும் இறைவன்பால் வைத்த பற்று என்று மட்டும் கொள்வது சரியல்ல. எல்லா உயிரையும் தம்முயிர் போல் கருதிப் பொருளாலும் உடலாலும் மனதாலும் சேவை செய்தலும் கருணை காட்டுதலும் இறைவனிடம் காட்டும் பக்தியே. உடல் மற்றும் மனத்தூய்மைகளுக்கான நல்லொழுக்கத்தில் நிற்றலும் பக்தியின் ஒரு முக்கியக் கூறே. கள், களவு, பிறர்மனை விரும்புதல், பொறாமை, பேராசை, ஆணவம் ஆகியவற்றைத் தவிர்த்து வாழ்தலும் பக்தியின் இன்றியமையாக் கூறுகளே.

நந்தனாருக்காக நந்தியை விலகச் செய்த ஏழைபங்காளனை இந்த மார்கழி நன்னாளில் துதித்துப் பாடுவோம், வாருங்கள்.

(அருஞ்சொற்பொருள்: ஏழில் - சப்தஸ்வரம்; கேழில் -> கேழ் + இல் - உவமையில்லாத; இயம்புதல் - ஒலித்தல்)

இன்னும் வரும்...

1 comment:

ஜயராமன் said...

ஐயா,

மிக அழகாக இருக்கிறது. தினமும் இந்த அமுதத்தை அளிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

"ஏழைப்பங்காளன்" என்ற பதம் இவரின் காப்பி ரைட்டா!! எத்தனையோ கரை வேட்டி கட்டிய ஏழைப்பங்காளர்களை நாம் இன்று சமுதாயத்தில் காண்கிறோம். அவர்களுக்கெல்லாம் ஐயன் பரஞ்சோதிதான் முதன்மர் என்று நினைக்கிறேன். ஆனால், என்ன. ஏழைகளின் துக்கத்தில் ஐயன் "பங்கு" பெறுவதால், அங்கு இறைவன் "ஏழைப்பங்காளன்". இங்கோ, ஏழைகளின் சொத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு "பங்காளி" ஆகிவிடுவதால் இவர்களும் "ஏழைப்பங்காளர்"கள்தாம்.

//// 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று சங்க இலக்கியம் சங்கையில்லாமல் முழங்குகிறது. ஆயினும் மனிதன் குறைமதியின் காரணமாகத் தனது துன்பங்களுக்கு இறைவனைக் காரணமாகக் காட்டுகிறான். மட்டுமின்றி, இறைவனின் இருப்பையே மறுக்கிறான். ஆயினும், அவரவர் வினைப்பயனையும் மீறி, அவர்களது பக்தியின் உயர்வு கருதி, இறைவன் அவர்களது துன்பத்தைத் தான் ஏற்கிறான். ///

இது புரியவில்லையே ஐயா, தயை செய்து விளக்கவும். இறைவனால் துன்பம் வாராது என்றால் இன்பம் மட்டும் வருமா? இறைவன் துன்பத்தை எடுத்துக்கொண்டு குறைக்கிறார் என்றால் இன்பத்தை கொடுப்பாரா இல்லை அதையும் எடுத்துக்கொண்டு விடுவாரா. இறைவனால் இன்பமும், துன்பமும் வருமா வாராதா? வாராது என்றால் அது இறைமறுப்பு இல்லையா?

நன்றி

ஜயராமன்