January 11, 2008

திருப்பள்ளியெழுச்சி - 3

திருச்சிற்றம்பலம்

எல்லோரும் அறிவதற்கு அரியவன்,
எமக்கோ எளியவன்!


கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி, ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது, விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவ பெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்!
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


'பூங்குயில்கள் கூவுகின்றன, கோழிகள் கூவுகின்றன. சிறு பறவைகள் கீச்சிடுகின்றன. சங்கின் பேரொலி கேட்கிறது.

'உதய திசையில் அடர்ந்து வரும் ஒளியைக் கண்டு தாரகையில் ஓடி ஒளிந்துகொண்டன. திருப்பெருந்துறையை இருப்பிடமாகக் கொண்ட பரமனே! உன்னுடைய கழலணிந்த இரு தாள்களையும் அன்போடு எமக்குக் காண்பித்து அருள்வாய்!

'எல்லோருக்கும் உன்னை அறிவது மிகக் கடினமாக இருக்கிறது. ஆனால், நீ எமக்கு எளிதாகப் புலப்படுகிறாய். எம்பெருமானே! பள்ளி எழுவாயாக!'

சிறப்புக்குறிப்புகள்: எல்லோரும் என்பது மனிதர் தவிர்த்த உயிர்கள். இதிலே யக்ஷ கின்னர் கந்தர்வர்கள், தேவர்கள் போன்றோர் அடங்குவர். அவர்களெல்லாம் வானுலகில் வசித்து உயர்ந்த இன்பங்களை அனுபவிப்பதாகத் தோன்றினாலும், அவையும் பிறவிகளும் பதவிகளுமே ஆம். அதனால்தான்

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!


என்று ஆழ்வார் பாடினார். பக்தியில் தோய்தலும், பழுத்துத் தவம் முயல்வதும், தவம் பலித்துத் தன்னை உணர்தலும், மெய்ஞ்ஞான சித்தியும் மனிதருக்கே உரியன என்று பெரியோர் கூறுகின்றனர். நம் கண்முன்னே ஜீவன் முக்தர்களாக வாழ்ந்தவர்களைப் பார்த்திருக்கிறோம், பார்க்கிறோம்.

திண்ணன் என்ற வேடனின் எல்லையற்ற அன்புக்கு எளிவந்த பிரானாக ஆனவனல்லவா அவன். ஆனால் எல்லோரும் அவனுடைய செருப்புக் காலையும் எச்சில் நீரையும் பன்றிக் கறியையும் பேசுகிறார்கள். அவையல்ல முக்கியம். அவனுடைய பக்தியின் உயர்வுதான் முக்கியம்.

சிவலிங்கத்தின் கண்களிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்துத் தனது ஒரு கண்ணை அம்பால் பிடுங்கி அப்பினான். அந்தக் கண்ணில் ரத்தம் நின்றது. ஆனால் லிங்கத்தின் மறுகண்ணில் ரத்தம். உடனே தயங்காமல் தனது மற்றொரு கண்ணையும் பிடுங்கி அப்பினான். பிறகு கேவிக்கேவி அழுதானாம். தன் இரு கண்களும் போய்விட்டனவே என்றா? இல்லை, சிவனுக்கு மூன்று கண்களாயிற்றே. மூன்றாவது கண்ணில் ரத்தம் வழிந்தால் அப்புவதற்குத் தனக்கும் மூன்று கண்கள் இல்லையே என்று அழுதானாம்.

அவ்வாறு தனது உடலுக்கு ஏற்படும் ஊறையும் வலியையும் பொருட்படுத்தாமல் (தான் உடல் என்று கருதி அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிராமல், தேகான்ம பாவத்தை விடுத்து), புறக்கண்களைப் பொருட்படுத்தாமல் அகக்கண்ணால் நோக்கினால், சீவனுக்குச் சிவன் காண எளியவனாவான் என்பதே திண்ணப்பன் என்னும் வேடன் கண்ணப்பன் ஆனதன் தத்துவம்.

ஆன்மீக முயற்சிக்கு உறுதுணை என்ற அளவிலேதான் உடலைப் பேண வேண்டுமே அல்லாது, அதன் அழகும் சுகமும் வலிவும் வண்ணமும் லட்சியங்கள் அல்ல. இந்த ஒளி மனதில் உதயமானால் பிற உலகியல் எண்ணங்கள் என்னும் தாரகைகள் மனதில் ஒளியிழக்கும்.

(அருஞ்சொற்பொருள்: ஓவின - இல்லாமற்போயின)

இன்னும் வரும்...

No comments: