January 04, 2008

திருவெம்பாவை - 13

எங்கள் பிராட்டியும் எம்பிரானும் ஒருங்கிருந்தாற் போலக்
காட்சி தரும் தடாகம்


திருச்சிற்றம்பலம்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


'இந்தப் பாடல் சிவனும் உமையும் இணைந்திருக்கும் கோலம் தடாகத்தைப் போலவே காட்சி தருவதாக விவரிக்கிறது. எவ்வாறு இந்த விவரணை பொருந்தும் என்பதைப் பார்க்கலாம்:

கரிய குவளை மலரும் சிவந்த தாமரையும் அருகருகே இருப்பது கருநிறம் கொண்ட உமையையும் சிவந்த எம்பெருமானையும் போல இருக்கிறது.

அர்த்தநாரி வடிவத்தில் இருவரது அங்கமும் உருகி ஒன்றாய்ப் பிணைந்தாற்போலக் காணப்படுகிறது. தடாகத்திலோ அங்கங்கு சிறு பறவையினம் காணப்படுகின்றது. சிவன் பாம்பைக் கழுத்தில் அணிந்திருக்கிறான். தடாகத்திலோ ஒலி எழும்பிய வண்ணம் இருக்கிறது.

அம்மையப்பனின் அருளில் மூழ்கித் தமது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் அடியவர் கழுவிக்கொள்கின்றனர். பொய்கையில் முழுகுபவரின் உடல்மீது இருக்கும் அழுக்கு நீங்குகிறது.

நமது சங்கு வளையல்கள் ஒலியெழுப்ப, அவ்வொலியுடன் சேர்ந்து சிலம்பும் ஒலிக்க, நமது மார்பகங்கள் பொங்கியெழ, இத்தகைய பொய்கையில் நீராடுவோம், வாரீர்!'

காணுமிடமெல்லாம் எம்பிரானும் எம்பிராட்டியும் தென்படுவது அன்பரின் பக்தி உள்ளத்தின் இயல்பு. இவர்கள் விரதம் இருந்து, நல்லொழுக்கில் நின்று, இறைவனையே சிந்தித்து, சிவ மஹிமையில் திளைக்கும் இந்த உள்ளங்களுக்கு குவளையும் கமலமும் நிரம்பிய பொய்கையும் அம்மையப்பனாகவே தெரிகிறது.

அத்தகைய உயர்ந்த பாவத்துடன் அதில் முழுகி எழுவதனால் தமக்கும் மலபரிபாகம் (மும்மலம் நீங்குதல்) வாய்க்கப்பெறும் என்று அவர்கள் நம்புகிறார்கள். 'பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே' என்று பாரதி பாடினான். 'நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்' என்று தற்கால உளவியலும் சான்று தருகிறது.

அத்தகைய உயர்ந்த பக்தியை மதித்துத்தான் திருமால் ஒரு தூணிலிருந்தும் வெளிப்பட்டான். ஆழ்ந்த நம்பிக்கை, பக்தி இவற்றால் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருளைக் காண முடியும்.

(அருஞ்சொற்பொருள்: அங்கங்குருகினத்தால் -> அங்கு + அம் + குருகு + இனத்தால்; அங்கங்கு + உருகின(த்)தால்); சங்கம் - சங்கினால் ஆன வளையல்)

No comments: