திருச்சிற்றம்பலம்
கேட்கு முன்னரே அருள் சுரப்பாள் தாய்
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.
மேகம் எழுந்து மழை பொழியும் அழகை உமையம்மைக்கு ஒப்பிட்டுப் பாடுகிறது இந்தப் பாசுரம்.
'மேகமே! நீ கடலை நெருங்கி அதன் நீரைச் சுருக்கி உன்னில் முகந்து எடுத்துக் கொண்டு, எம்மை உடையவளாகிய பார்வதி தேவியைப் போலக் கருமையடைகிறாய்.
'அவளுடைய மெல்லிடை போல உன்னில் மின்னல் தோன்றுகிறது. அம்மையின் சிலம்பைப் போல ஆர்த்து ஒலிக்கிறாய். அவளது புருவம் போல வானவில்லைக் காட்டுகிறாய்.
'எம்மை ஆளாகக் கொண்ட அம்மையின் பாகம் பிரியாத நாதனின் அன்பருக்கு, அவள் தானே முன்வந்து நாம் கேட்பதற்கு முன்னரே அருள் சுரந்து பொழிகிறாள். அவளது இனிய அருளைப் போல மழை பொழிகிறாய் நீ!'
சிறப்புக்குறிப்புகள்: 'ஆழிமழைக்கண்ணா' என்று தொடங்கும் திருப்பாவையில் கோதை நாச்சியார் இதோ போல மழை மேகத்தை கண்ணனுக்கு உவமித்துச் சொல்லும் அழகைக் காண முடியும். நாம் கேட்டு மழை வருவதில்லை. அது தானே வந்து வாழ்விக்கிறது. அதேபோல அன்னையும் நாம் கேளா முன்னமே வந்து நமக்கு ஞானப்பால் ஊட்டி அருளுகிறாள். காழியூர் குளக்கரையில் நின்று அழுத ஞானசம்பந்தப் பிள்ளைக்கு அருள்கூர்ந்து பால் புகட்டியது அவள் கரமல்லவா?
கரையில் நிற்கும் மரத்தில் கட்டிய தூளியில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும். தாய் வயலில் நடவு செய்துகொண்டிருப்பாள். உச்சி வெயிலைப் பார்த்தே அவளுக்குக் குழந்தையின் பசி நேரம் தெரியும். வரப்பேறிப் போய்ப் பாலூட்டி வருவாள். குழந்தை அழுதுதான் கூப்பிட வேண்டும் என்பதில்லை. அன்னையின் அன்பு அத்தகையது. அவளைவிட உலகநாயகியின் பரிவு பெரியதாம்!
'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து' தானே முன்வந்து அருள் சுரப்பவள் அவள்.
இன்னும் வரும்...
No comments:
Post a Comment