திருச்சிற்றம்பலம்
கண்களால் பருகும் அமுதம்
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
'அருணாசலேஸ்வரனின் திருப்பாத கமலங்களில் தேவர்களெல்லாம் வந்து பணிகின்றனர். அவனது பாதத்தின் பேரொளியில் அவர்களது பொன்மகுடங்களில் பதிக்கப்பட்ட வைர வைடூரியங்களின் ஒளியும் மங்கிப் பொலிவிழக்கிறது. அது எப்படி இருக்கிறதென்றால் கண்களைக் கூசவைக்கும் சூரியன் வந்து இருளை அகற்றியதும் நட்சத்திரங்கள் மறைவதைப் போல உள்ளது.
'அவன் பெண்ணாகவும் ஆணாகவும் இருப்பதோடு இருபாலுமற்ற மானுடராகவும் இருக்கிறான். ஒளிபொருந்திய வானகமாகவும் பூவுலகமாகவும் இன்னும் பிறவாகவும் தானே மாறுபட்டு நிற்கிறான்.
'கண்களால் பருகத்தக்க அமுதமான அருணாசல மலையாக நின்றவனின் திருவடிகளைப் பாடியபடியே பூம்புனலில் பாய்ந்து நீராடலாம் வாருங்கள் தோழியரே!'
சிறப்புப்பொருள்: அருணாசலத்தை நினைக்க முக்தி. அங்கே பரமன் மலையாக நிற்கிறான். அந்த 'மலையின் புனிதமான பகுதியிலிருந்து ஒரு சிறிய கல்லை எனக்குத் தாருங்கள்' என்று வெளிநாட்டு அன்பர் ஒருவர் ரமணரிடம் வேண்டினார். 'மலைமுழுவதுமே புனிதமானதுதான், அப்படியிருக்க எந்தப் பகுதியிலிருந்து நான் எடுத்துத் தருவேன்' என்று ரமணர் விடையளித்தார்.
அதுவே தலம் அருணாசலம் தலம் யாவினும் அதிகம்
அது பூமியின் இதம் அறி; அதுவே சிவன் இதயப்
பதியாம் ஒரு மருமத் தலம் பதியாம் அவன் அதிலே
வதிவான் ஒளி மலையா நிதம் அருணாசலம் எனவே
என்று அருணாசல மகாத்மியம் கூறுகிறது. மதுரையில் ரமணருடன் பள்ளிக்கூடத்தில் படித்த ரங்கா பின்னாளில் கேட்டார், 'திருவண்ணாமலைக்குப் புறப்படுவதற்கு முதல்நாள் கூட என்னுடன் பேசி, விளையாடிக்கொண்டு இருந்தாயே. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லையே!' அதற்கு ரமணர் 'நான் திட்டமிட்டா அது நடக்கிறது என்று நினைத்தாய்' என்று பதில் கூறினார். அருணாசலத்தை 'கிரி உருவாகிய கிருபைக் கடல்' என்று வர்ணிக்கிறார் தமது அட்சரமணமாலையில். அது எப்போதுமே சித்தர்களை ஈர்த்துவந்திருக்கிறது.
அந்த மகத்தான மலையாக நிற்கும் சிவபெருமான் கண்களால் பருகத் தக்க அமுதமாக இருக்கிறானாம். 'செவிநுகர் கனிகள்' என்று கம்பனும், 'தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாரதியும் பாடவில்லையா, அதைப்போல. அந்த அற்புத மலையை கிரிவலம் வருவது (எந்த நாளானும் பரவாயில்லை, பௌர்ணமியன்றுதான் என்றல்ல) பெருத்த ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சற்றே சந்தேகப் பிராணியான தேவராஜ முதலியார் கிரிவலத்தால் என்ன பயன் என்று திருப்பித் திருப்பிக் கேட்டதற்கு 'போய்த்தான் பாரேன், அப்புறம் புரியும்' என்றார் ரமணர். தனது தேகான்ம பாவத்தையே இழந்ததாகப் பின்னர் தேவராஜ முதலியார் எழுதுகிறார்.
இன்னும் வரும்...
No comments:
Post a Comment