திருச்சிற்றம்பலம்
என்னையும் நீ ஆண்டுகொண்டனையே ஐயா!
இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
'மார்கழி மாதத்தின் இந்த அதிகாலைப் பொழுதில் உன் சன்னதியில் அமர்ந்து சிலர் வீணையும் சிலர் யாழும் வாசிக்கின்றனர். மற்றொரு பக்கம் சிலர் ரிக் முதலான வேதங்களால் உன்னைத் தோத்தரிக்கின்றனர்.
'சிலர் நெருங்கத் தொடுத்த மாலைகளைக் கையிலேந்தி வருகின்றனர். உன்னைத் தொழுபவர் சிலர், அழுபவர் சிலர், பக்திப் பெருக்கால் மயங்கி விழுபவர் சிலர். மற்றும் சிலர் தம் தலைக்கு மேலே கையை உயர்த்திக் கூப்பி வணங்குகின்றனர்.
'ஆவுடையார் கோவிலில் உறையும் சிவபெருமானே! விழுமிய பக்தியைக் காட்டும் இந்தச் செயல்களுள் எவற்றையும் நான் செய்யாத போதும், என்னை ஆட்கொண்டு, இனிய அருளை வழங்கும் எம்பெருமானே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக.'
சிறப்புப்பொருள்: எல்லோரும் அவரவரால் முடிந்த வழிகளில் இறைவனை வழிபடுகின்றனர். இவை எதையுமே செய்யாதவரும் உள்ளனர். அவர்கள் மனதிலே மட்டும் பக்தி கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் எம்பெருமானே, எந்தவகை பக்தியாக இருந்தாலும் அதனை ஏற்று, பக்தி செய்பவரை ஆட்கொண்டு, அருள் செய்கிறான் என்பது இப்பாடலால் பெறப்படுகிறது.
'என்னால் பாட முடியவில்லையே', 'என்னால் பூத்தொடுத்துச் சாற்ற முடியவில்லையே', 'என்னால் வேதம் ஓத முடியவில்லையே' என்று நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருக்காமல், நமக்கு எது முடியுமோ அதை நிச்சயம் செய்ய வேண்டும். எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு இறையருள் கிடைக்கவில்லை என்று பேசுவதில் பலன் இல்லை.
வறியவர்க்கு அன்னதானம் செய்தல், அடியவர்க்கு அமுது செய்வித்தல், பக்திப் பனுவல்களான தேவாரம், திருவாய்மொழி, திருவாசகம், திருப்புகழ், சஹஸ்ரநாமங்கள், புஜங்கம் என்று அருளாளர்கள் நமக்கு எவ்வளவோ அருளிச் சென்றிருக்கிறார்கள். ஓரிடத்தில் அமர்ந்து, மனதை ஒருமைப்படுத்தி, இவற்றைப் பாராயணம் செய்யவேண்டும். ஞானிகளின் அருளுரைகளைப் படிக்க வேண்டும். இறைவனே வந்து நம் பொருட்டாக ஸ்ரீமத் பகவத் கீதையை அருளிச் செய்திருக்கிறான். அதைப் படிக்கவேண்டும்.
பராயணம் என்ற சொல்லுக்கு 'செல்லுதல், இறுதி லட்சியம்' என்றெல்லாம் பொருள்கள் உண்டு. சம்சாரக் கடலின் மறுகரைக்குச் செல்ல இறைவன் திருநாமமும், அவன் புகழைப் பேசும் பக்தி நூல்களும் துணைசெய்யும். நம்பாதவர்களின் கேள்விகளாலும், வாழ்க்கையின் சோதனைகளாலும் நமது பக்தி ஆட்டம் கண்டுவிடாத உறுதியைத் தரும். நமது அனுபவத்துக்கேற்பப் புதிய புரிதல்களை உண்டாக்கும்.
இன்னும் வரும்...
No comments:
Post a Comment