July 07, 2004

கண்ணாடி சொல்லும் கதைகள் - 3

கண்ணாடி சொல்லும் கதைகள் - 1 கண்ணாடி சொல்லும் கதைகள் - 2

"பளிங்குச் சொரிவு அன்ன பாய் சுனை", அதாவது கண்ணாடியை உருக்கி ஊற்றியது போலச் சுனையின் நீர் பாய்ந்து வருகிறது, என்று பத்துப்பாட்டில் ஒன்றான கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு சொல்கிறது. இதுவும் சங்ககாலத்து நூல் என்பதைப் பார்க்கவேண்டும்.

ஆகவே இதுவரையில் நமது பழநூல்கள் எல்லாமே பளிங்கு அல்லது பளிக்கு என்பதை படிகக் கண்ணாடி (crystal glass) என்றே கொண்டிருப்பதைக் கண்டோம். அது எங்குமே முகம்பார்க்கும் கண்ணாடி (mirror) என்ற பொருளில் பயன்படுத்தப் படவில்லை. அதே சங்க காலத்தவரான திருவள்ளுவரும் இச்சொல்லை நாம் கண்ட பொருளிலேயே தான் பார்த்திருக்கவேண்டும் என்று நினைக்கும்போது, நமக்குப் பெரிதும் பழக்கமான

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
(குறள் - 706)

என்ற குறளுக்கு ஒரு புதிய, தெளிவான, துல்லியமான பொருள் விளங்குகிறது. நாம் பளிங்கு என்றதும் முகம்பார்க்கும் கண்ணாடி அல்லது சலவைக்கல் என்றே தற்போது புரிந்துகொள்கிறோம். அதாவது "ஒரு பளபளப்பான சலவைக்கல்லில் அல்லது கண்ணாடியில் அதனருகே இருப்பது பிரதிபலிக்கிறது. அதேபோல ஒருவன் மனத்தில் கோபம் வருமெனின் அதை முகம் பிரதிபலிக்கும்" - இவ்வாறே நாம் புரிந்துகொள்கிறோம். இதிலே நாம் பொதுவாக இரண்டு தவறுகள் செய்கிறோம். ஒன்று 'பளிங்கு' என்பதைப் புரிந்துகொள்வதில். இதைத் தவறாகப் புரிந்துகொண்டதால் வரும் தவறு 'காட்டும்' என்பதற்குப் 'பிரதிபலிக்கும்' என்று கொண்ட பொருள்

நாம் இதுவரையில் விவரித்தபடி பளிங்கு என்ற சொல்லை ஒளி ஊடுருவும் படிகக் கண்ணாடித் தகடு என்ற பொருளில்தான் நமது பழைய இலக்கியங்கள் பயன்படுத்தி இருக்கின்றன.

அடுத்து நாம் செய்யும் தவறு, 'கடுத்தது' என்று சொல்லுக்குக் 'கோபம் கொண்டது' என்று பொருள் கொள்ளுதல். ஏன், ஒருவேளை அவன் மகிழ்ந்தாலோ அல்லது அஞ்சினாலோ அதை முகம் காட்டாதா? 'கடுப்பு' என்பதற்கு 'மிகுதல்' என்றும் பொருளுண்டு. ஆகவே, அவன் மனதில் அதிகமாய் ஏற்பட்ட உணர்வு எதுவோ அதுதான் 'கடுத்தது'.

வள்ளுவனின் மனத்தைக் காண்பதில் மிக வல்லவரான பரிமேலழகர் சொல்லும் பொருள் இவ்வாறு: "தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்குபோல, ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும்." இவ்விளக்கத்தில் பரிமேலழகர் செய்தது ஒரே ஒரு தவறுதான் - 'பளிங்கு' என்பதற்குப் படிகம் என்று மட்டுமே பொருள் கண்டது. படிகம் தட்டையானதல்ல, ஒரு மணிபோன்ற வடிவம் கொண்டது. அதனருகில் ஒரு சிவப்பான பூ இருந்தால் படிகத்தில் சிவப்பு நிறம் தெரியும். ஆனால் அதன் வழியே பூவின் வடிவம் தெளிவாகத் தெரியாது.

ஆனால், நம்முடய பளிங்கிலோ மணிமேகலையில் சொன்னாற்போல "விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்", அதாவது ஒலிதான் வெளியே கேட்காது, உருவம் தெரியும். எனவே பரிமேலழகரும் வள்ளுவனின் மனம் காணவில்லை. 'அடுத்தது' என்பதற்கு 'பளிங்கின் மறுபுறத்திலிருப்பது' என்று பொருள். 'காட்டும்' என்றால் மறுபுறமிருந்த மணிமேகலையை உதயகுமாரன் பார்த்ததுபோல் முழுமையாகக் காட்டும் என்றுதான் பொருளே தவிர, 'அதன் நிறத்தை மட்டும் காட்டும்' என்று பொருள் அல்ல. "பளிக்குத் தகட்டின் அப்புறம் இருப்பது இப்புறம் தெரியும். அதேபோல, உள்ளத்தின் உள்ளே மிகுவது முகத்தின் வழியே வெளியே தெரியும்" என்பதுதான் இக்குறளின் சரியான பொருள்.

இக்கட்டுரையில் நான் கொடுத்திருக்கும் பளிங்கு பற்றிய இலக்கியக் குறிப்புகள் இதுவரையில் யாராலும் ஆய்ந்து சொல்லப் பட்டவையல்ல. கிரேக்க நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பிளைனி என்பவர் (கி.பி. 23-79) "இந்தியாவில் பார்ப்பது போல உலகில் வேறெங்கும் கண்ணாடியைப் பார்க்கமுடியாது, ஏனென்றால் படிகத்தை உடைத்துச் செய்யப்படுவது இது" என்று சொல்லியிருக்கிறார். இதைச் சொல்லும் ஆலன் மக்·பார்லேன் என்பவர் "இந்தியாவில் பழமையான கண்ணாடிப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார். குறிப்பாக "கண்ணாடியின் பிறப்பிடமான மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அருகில் இருந்தும்கூட இந்தியாவில் கண்ணாடித் தொழில்நுட்பம் செழிக்கவில்லை. கிறித்துவுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணாடி செய்யத் தெரிந்த இந்தியர் கண்ணாடியில் வளையலும், மணிகளும் மட்டுமே செய்தனர்" என்கிறார்.

அரிக்கமேடு ஒரு காலத்தில் கண்ணாடி மணிகள் செய்வதில் முன்னோடியாக இருந்தது என்று சுவேவா லுச்சியோலா (Sveva Lucciola) என்னும் அம்மையார் கூறுகிறார். கி.மு. 400 முதல் கி.பி. 1600 வரை சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலம் கண்ணாடி மணிவகைகளைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்வதில் முன்னோடியாக அரிக்கமேடு இருந்ததை அவர் மிக வியப்போடு குறிப்பிடுகிறார். இதுவும் பெருமைப்படத் தக்கதே. ஆனால் நாம் அத்தோடு நிற்கவில்லை என்பதே என் வாதம்.

தமிழ் இலக்கியங்கள் கூறும் சான்றுகளின் படி கண்ணாடியினாலே மாளிகைகள், மாடங்கள், அகழியின் உட்புறத் தளங்கள் என்று பலவகையிலும் செய்யும் அளவுக்கு இந்தியர் முன்னேறியிருந்தார்கள் என்பதைக் காட்டினேன். அவர்கள் விவரிக்கும் பாங்கிலிருந்தே இவை வெறும் கவிஞர்களின் அதீதக் கற்பனையல்ல என்று புரிந்துகொள்ளவேண்டும். அதிலும் பளிங்கில் இத்தகையன செய்யலாம் என்பதை இந்திய நாடு இத்தனைப் பழங்காலத்தில் அறிந்திருந்தது என்பதையும் கண்ணாடியைப் பற்றிப் பேசும் பிறநாட்டினர் யாரும் சொல்லவில்லை. இதைப் படிக்கும் எவரேனும் இந்த இலக்கியச் சான்றுகளோடு, நமது அறிவியல் மேன்மையை உலக அரங்கில் நிறுவமுடியுமென்றால் நான் மிக மகிழ்வேன்.

1 comment:

Thangamani said...

சில நாட்களுக்கு முன் தான் நண்பரொருவர் பழந்தமிழர்கள் கண்ணாடி பற்றி அறிந்திருந்தார்களா என்று என்னிடம் கேட்டார். நான் அவருக்கு எந்த பதிலையும் சொல்லத் தெரிந்திருக்கவில்லை. உங்கள் பதிவைக் கண்ட பொழுது மிகுந்த ஆச்சர்யமடைந்தேன். அதுவும் மிகத்தெளிவான உதாரணங்களை, இலக்கிய சான்றுகளை குறிப்பிட்டது நன்று. மிக்க நன்றி. அதுவும் "அடுத்தது காட்டும்" என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் பொருந்துகிறது. பொதுவாக சாதி வகைப்பட்ட தொழில் துறை நம்முடையது. இப்படிப்பட்ட கண்ணாடித் (பளிங்கு) தொழில் அக்காலத்தில் எந்த சாதியினரால் செய்யப்பட்டது என்று ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா? நல்ல பதிவு.