July 31, 2004

எத்தனை ஜன்னல்கள்

'ஜ' என்ற எழுத்தில் தொடங்குவதிலிருந்தே நீங்கள் அது தமிழ்ச்சொல் அல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். மிகமிக அவசியமான அளவிற்கு மட்டுமே வடமொழி, உருது, பாரசீக அல்லது பிறமொழிச் சொற்களைக் கொள்வதனால் தமிழ் வளம்பெறும் என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது. ஆனால், அழகான பல சொற்களை ஓரங்கட்டிவிட்டு ஒரே ஒரு சொல் அங்கே வந்து உட்கார்ந்துவிடுமானால் அதில் எனக்கு வருத்தம் உண்டு. ஜன்னல் என்னும் போர்த்துக்கீசியக் கிளவி செய்த வேலை அதுதான்.

எத்தனைப் பழஞ்சொற்களை விலக்கிவிட்டு நாம் ஜன்னலையே பயன்படுத்துகிறோம் என்று பார்ப்போமா? அதிலும் எத்தனை நுட்பமான வித்தியாசங்களை இந்த நுவற்சிகள் காட்டுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.

காற்றுவாரி - கதவில்லாத சிறு சாளரம்; ventilator; window without shutters.
கானெறி -> கால் நெறி (காற்று வரும் வழி) - சாளரம்
திட்டி - சாளரம்
நுழை - பலகணி
பலகணி - சாளரம்
காலதர் - திட்டி
சாலேகம், சாலகம், சாலம் - latticed window (lattice என்பது உலோகம் அல்லது காறையால் பூவேலைப்பாடோ, குறுக்கும் நெடுக்குமாய் வடிவங்களோ அமைப்பது. படத்தில் காணப்படுவது)
நூழை - ஒருவகைச் சாலேகம்
கதிர்ச்சாலேகம் - இரும்புக்கம்பி பொருத்திய சாளரம்
பின்னற்சன்னல் - வலை பொருத்திய சாளரம்
குறுங்கண் - சிறிய துளைகளுடன் கூடிய அலங்காரச் சாளரம்; a kind of latticed window with small apertures;
குறுங்குடாப்பு - சாளரம் அல்லது கதவின் மேல், மழை வெய்யில் இவற்றிலிருந்து பாதுகாக்கும் தடுப்பு, sunshade
காற்றுவாரிப்பலகை - வீட்டின் முகட்டில் இருக்கும் சாளரத்தில் காற்றை நிறுத்த அல்லது அனுமதிக்கப் பயன்படும் மரக்கதவு; movable wooden shutter of a ventilator or of a window near the roof.
நேர்வாய்க்கட்டளை - பல அடுக்கு வீட்டின் மேல் அடுக்கில் வைக்கும் சாளரம்.
பசுக்கற்சன்னல் -> (பசுக்கல் + சன்னல்) - மரத்தாலான கதவுகளை உடைய சாளரம். [பசுக்கல் - பலகைகளை இணைத்தல்]
இலைக்கதவு - இலைபோல் மரத்தட்டுக்கள் தொடுக்கப்பட்ட கதவு; venetian door or window.

இப்போது பிளாஸ்டிக்கில் இலையிலையாக மறைக்கும் (அல்லது திறக்கும்) venetian blind-ஐ நாம் எல்லா இடத்திலும் பார்க்கிறோம். அதை இலைத்தட்டி என்று சொல்லலாம். முன்பெல்லாம் கோடைக்காலத்தில் வெட்டிவேர் என்ற நறுமணமுள்ள வேரால் செய்த ஒரு மறைப்பைப் பயன்படுத்துவார்கள். அதில் தண்ணீர் தெளித்தால், காற்று அதன் வழியே வரும்போது தண்மையும், வேரிகொண்டதாகவும் இருக்கும். (வேரி - நறுமணம்) அதை வெட்டிவேர்த் தட்டி என்பார்கள். எனவேதான் வெனீஷியன் பிளைண்டு நம்மைக் குருடாக்காமல் அதை இலைத்தட்டி என்று சொல்வது அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.

சந்தர்ப்பத்துக்கேற்பப் பயன்படுத்தியும், ஆரம்பத்தில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லையும் கொடுப்பதன்மூலமும் இச்சொற்களை மீண்டும் செலாவணிக்குக் கொண்டுவர முடியும். நிறையப் பொறுமையும், முயற்சியும் தேவை. அவ்வளவே. குறிப்பாக மேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துடன் தொடர்புகொண்டவர்கள் இப்பணியைத் தொடங்கினால் 'தமிழால் முடியும்' என்பது வெறும் பேச்சாக இல்லாமல், நடப்புச் சாத்தியம் ஆகும். தவிரவும் 'செம்மொழி' என்று மார்தட்டிக்கொள்ளும் பெருமையைவிட, மொழியின் செழுமையை மீண்டும் பயனுக்குத் தருவது நாம் நம் தாய்மொழிக்குச் செய்யும் பெருந்தொண்டாகும்.

3 comments:

ராஜா said...

/பசுக்கற்சன்னல்/
இந்த வார்த்தையில் வரும் சன்னல் என்பது ஜன்னலின் தமிழ் படுத்தல் தானே? "ஜன்னல்" என்பது பிறமொழி சொல் எனும் போது அதை இப்படி "சன்னல்" என்று மாற்றி மட்டும் உபயோகிக்கலாமா?

ஜன்னலுக்கு இணையான பொதுவான தமிழ் வார்த்தையாக "சாளரம்" உபயோகிப்பது சரியாக இருக்குமா?

தெரிந்து கொள்ளும் ஆவலுடன்,

Madhurabharati said...

ºýÉø «øÄÐ ƒýÉø ±ýÈ ¦º¡ø¨Ä§Â ÀÂýÀÎò¾ìܼ¡Ð ±ýÀ¾øÄ ±ý ¸ðΨâý º¡Ãõ. Ó¾ø Àò¾¢¨Â Á£ñÎõ ÀÊÔí¸û. ¬É¡ø «ó¾ ´§Ã ¦º¡ø âɢ¸¡óò Á¡¾¢Ã¢ ±øÄ¡î ¦º¡ü¸¨ÇÔõ «ÊòÐò ÐÃò¾¢Å¢ð¼§¾ ±ýÀо¡ý ±ý ¬¾í¸õ.

º¡ÇÃòмý ¦¾¡¼÷Ò¦¸¡ñ¼ ±øÄ¡î ¦º¡ü¸¨ÇÔõ ¾Õõ ±ñ½ò¾¢§Ä§Â 'ÀÍì¸üºýÉø' ±ýÀ¨¾Ôõ ÌÈ¢ôÀ¢ð§¼ý. ÀÍì¸üº¡ÇÃõ, ÀÍì¸üÀĸ½¢, ÀÍì¸ü¸¡Ä¾÷ ±ý¦ÈøÄ¡õ ¿£í¸û ¦ÅüÈ¢¸ÃÁ¡¸ô ÒÆì¸òÐìÌò ¾ÕÅ£÷¸§Ç¡ɡø ±ÉìÌ Á¸¢ú§Â ;-)

ராஜா said...

இப்போது சரியாக விளங்கியது நன்றி!

சாளரத்துடன் தொடர்புடைய அனைத்து சொற்களையும் புழக்கத்துக்கு தர முடிகிறதோ இல்லையோ, குறைந்த பட்சம் ஜன்னலுக்கு பதில் சாளரம் என்பதையாவது இனி பயன் படுத்துவேன். :-)