பகலுணவுக்குப் பின் மீண்டும் அறைக்கு வந்தனர். முதல் அனுபவத்தின் உயரத்திலிருந்து சற்றே கீழே இறங்கி வந்திருந்த பால் பிரண்டன் கேள்வி கேட்டார்:
பால்: எனக்கு ஞான அனுபவம் வேண்டும். நீங்கள் உதவி செய்வீர்களா? இல்லை தன்னைத் தேடுவது ஒரு மாயைதானா?
பகவான்: 'நான்' என்று சொல்கிறீர்கள். 'எனக்கு' அனுபவம் வேண்டும் என்கிறீர்கள். அந்த 'நான்' என்பது யார்? முதலில் 'நான்' யாரென்று தெரிந்து கொண்டால் உண்மை தெரிந்துவிடும். செய்யவேண்டியது ஒன்றுதான். தனக்குள்ளே பார்வையைத் திருப்பினால் எல்லா விடைகளும் அங்கே இருக்கின்றன.
பால்: குருவின் உதவியோடு செய்தால் தன்னை அறிய எவ்வளவு நாட்களாகும்?
பகவான்: சிஷ்யனின் பக்குவத்தைப் பொறுத்தது அது. வெடிமருந்தில் உடனே தீப்பற்றுகிறது. அதுவே கரியில் தீப்பிடிக்க நிறைய நேரமாகிறது.
இது பகவான் உபதேசங்களுள் தலையாயதாகும். அதை மிக எளிமையாகச் சொல்லிவிட்டார். அவருடனான இன்னொருமொரு உரையாடலும் பகவானின் கருத்தைத் தெளிவாக்கும்.
பால்: நாம் மிகச் சிக்கலான காலத்தில் வாழ்கிறோம். இந்த உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி பகவானின் கருத்து என்ன?
பகவான்: எதிர்காலத்தைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு நிகழ்காலம் நன்றாகத் தெரிந்துவிட்டதா? நிகழ்காலத்தில் கவனம் வை, எதிர்காலம் தானாகவே சரியாக அமையும்.
பால்: ஒரு நட்புறவும் பரஸ்பர உதவியும் கொண்ட நல்ல யுகத்தை உலகம் விரைவிலேயே காணுமா, இல்லை குழப்பமும் போருமே நீடிக்குமா?
பகவான்: இந்த உலகை ஆள்கிறவன் ஒருவன் இருக்கிறான். அதைக் கவனித்துக் கொள்வது அவனுடைய வேலை. உலகைப் படைத்தவனுக்குப் பார்த்துக்கொள்ளவும் தெரியும். இந்த உலகின் பாரத்தைத் தாங்குவது அவன், நீயல்ல.
பால்: பாரபட்சமற்ற கண்களோடு சுற்றுமுற்றும் பார்த்தால் இந்தக் கருணைக்கான அடையாளமே தெரியவில்லையே.
பகவான்: நீ எப்படியோ, இந்த உலகம் அப்படியே. உன்னைப் புரிந்துகொள்ளாமல் இந்த உலகைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் என்ன பலன்? ஒரு உண்மையான 'தேடுவோன்' நீ கேட்கிற கேள்வியை கேட்க அவசியமில்லை. இத்தகைய கேள்விகளில் மக்கள் தமது சக்தியை விரயம் செய்கின்றனர். உன்னிடமிருக்கும் உண்மையை முதலில் கண்டுபிடி, பிறகு உலகத்தின் உண்மையை நீ புரிந்துகொள்வாய்.
1934-இல் பால் பிரண்டன்
A Search in Secret India என்ற புத்தகத்தை எழுதினார். அது உலகம் முழுவதும் அவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்ததோடு, ரமண பகவானின் அற்புத வாழ்க்கையையும் போதனைகளையும் கடல்கடந்து எடுத்துச் சென்றது. இன்றைக்கும் இப்புத்தகம் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்று. பூமி உருண்டையின் ஏதேதோ மூலைகளிலிருந்து ஆன்மிகப்பசி கொண்டவர்களை அருணாசலத்திற்கு இழுத்து வருவதில் இப்புத்தகத்திற்கு நிகர் கிடையாது.
தன்னுடைய தேடல் முடிந்தது என்று புரியாத பால் பிரண்டன் மீண்டும் இந்தியாவை ஒருமுறை சுற்றினார். எங்குமே அவருக்கு மனம் ஒன்றவில்லை. எனவே ரமணாச்ரமத்துக்கு இரண்டாம் முறையாகச் சில வருடங்களிலேயே திரும்பி வந்தார். இந்தமுறை பகவானின் அருட்பார்வையின் கீழ் அவருக்கு சமாதிநிலையின் சுவை சற்றே தெரிந்தது. உடல்நிலை காரணமாக இந்தியாவை விட்டு அகன்றாலும் வாழ்நாள் முழுவதும் பகவானைத் தன்னுடனே உணர்ந்து, வழிகாட்டலைப் பெற்றார் பால் பிரண்டன்.
ஓம் நமோ பகவதே ரமணாய|