February 01, 2017

ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 1



ஒருமுறை பகவான் ஸ்ரீ ரமணர் விளையாட்டாகக் கூறினார்  “நீங்கள் என் காலைப் பிடித்துவிட்டுப் புண்ணியம் தேடிக்கொள்ளப் பார்க்கிறீர்கள். அந்த எண்ணெயை இங்கே கொடுங்கள், நானே தடவிக்கொள்கிறேன். எனக்கும்தான் கொஞ்சம் புண்ணியம் வரட்டுமே” என்று. எலும்புகள் தேய்ந்ததனால் அவருக்கு மூட்டு வலி வந்திருந்தது. முதுகு மற்றும் தோள்பட்டையையும் வலி தாக்கியது. ஒருமுறை அணிலொன்றைத் துரத்திய நாய் அதைப் பிடித்துவிடக் கூடாதே என்று தன் கையிலிருந்த தடியை வீசுகையில் கீழே விழுந்தார். அப்போது தோள்பட்டை எலும்பு முறிந்தது.

எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவரான அவரது தோற்றத்தில் வயதுக்கு மீறிய வயோதிகம் தென்பட்டது. அன்பர்கள் சத்தான உணவு, பழங்கள், ஊட்டமருந்துகள் அவர் உண்ணவேண்டும் என்று விரும்பினர். அவரோ எது வந்தாலும் 'எனக்கு நல்லதென்றால் மற்றவர்களுக்கும் அது நல்லதாகத்தானே இருக்கவேண்டும்' என்று கூறிப் பகிர்ந்தளிப்பவராகவே இருந்தார். யாராலும் அவருக்கென்று ஒன்றைத் தனியாகச் செய்ய முடியவில்லை.

இவை போதாதென்று அவருடைய இடது முழங்கை முட்டுக்குக் கீழே  சார்க்கோமா என்ற ஒருவகைக் கழலைக்கட்டி வந்தது. அது வந்த இடத்திலேயே மீண்டும் வரும் புற்றுநோய் வகையைச் சேர்ந்தது என்பதை அறியாத ஆசிரம வைத்தியர், பகவான் அவசியமில்லை என்று கூறியும், அறுவைசிகிச்சை செய்து அகற்றினார். பிப்ரவரி 1949இல் இது நடந்தது. ஒரு ஞானியின் உடலில் சஸ்திர சிகிச்சை செய்வது வழக்கமில்லை. ஆனால் அவர்மீது கொண்ட அளவுகடந்த அன்பே அவரது வார்த்தையை மீறச் செய்தது. பிறருக்கு நன்மை என்றால் யாராலும் பகவானின் அபிப்பிராயத்தை மாற்ற முடியாது. சொல்வதைச் செய்வதில் உறுதியாக இருப்பார். தனது உடல் என்னும்போது அவர் அத்தனை 'கருணை' காட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சில அன்பர்கள் பகவான் மனதுவைத்தால் தனது நோயைத் தானே குணப்படுத்திக்கொண்டு விடலாம் என்றனர். "நான் என் சங்கல்பத்தினால் என்னைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சுப்பராமய்யா விரும்புகிறார். ஆனால் ஞானிக்கு சுயமாக மனம் இல்லை. அவனுக்கு உடலும் இல்லை; அந்த உடலுள் அதன் வாரிசாக இருக்கும் வியாதிகளும் இல்லை" என்று பகவான் அருகிலிருந்த சிலரிடம் கூறினார்.

இதில் நாம் கவனிக்க வேண்டியவை வியாதிகள் வருவது உடலுக்குத்தான் என்பதும் ஒரு ஞானி உடலுக்கு வரும் நோயைத் தனதாகக் கருதுவதில்லை என்பதும்தான். அதனால் பாதிக்கப்படுவதும் இல்லை. சிறிதும் மயக்கமருந்தே இல்லாமல் அந்தப் புற்றுக் கட்டியை பகவானின் கையிலிருந்து அகற்றினார்கள். மற்றவர்களானால் வலியில் கதறியிருப்பார்கள். பகவானோ யாருக்கோ நடப்பது போலப் பாராமுகமாய் இருந்தார். ஒருமுறை பகவானுக்குத் தொண்டர் ஒருவர் காலைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து 'எதுக்கோ என்னமோ செய்யற மாதிரி இருந்தது' என்றார். அதாவது கால் பிடித்துவிட்ட உணர்வுகூடத் தனக்கு இல்லை என்பது குறிப்பு.

ஆங்கில வைத்தியம், ஹோமியோபதி, யூனானி, மூலிகை வைத்தியம் என்று பலவகை முறைகளையும் அவர்மீது பிரயோகித்துப் பார்த்தார்கள். எப்படியாவது பகவான் குணமடைந்துவிடமாட்டாரா என்கிற ஆவல் அவர்களுக்கு. ஒவ்வொன்றையும் வேண்டாம் என்று கூறுவார், ஆனால் அவர்களது தொடர்ந்த வற்புறுத்தலுக்கு இணங்குவார். ரேடியக் கதிர்கள் பாய்ச்சினர், பச்சிலை அரைத்துப் பூசினர், கஷாய அபிஷேகம் செய்தனர், ஒத்தடம் கொடுத்தனர்--எதற்கும் மசியவில்லை கட்டி.

வைத்திய நாதனாக இருந்தது தனது அன்பர்களின் நோய்களையெல்லாம் குணப்படுத்திய பகவானுக்கு எப்படி நோய் வந்தது என்ற கேள்வி எழுவது இயற்கையே.

அதையும் பார்ப்போம்....

(தொடரும்)

- மதுரபாரதி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட *ரமண சரிதம்* நூலிலிருந்து

No comments: