February 23, 2017

ரமண சரிதம்: பால் பிரண்டனின் காணாமல் போன கேள்விகள்


இதன் முந்தைய பகுதியைப் படிக்க: பால் பிரண்டன்

ஒரு ஞானி மற்றொரு ஞானியை மிக எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார், அவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும். பால் பிரண்டனோ ஊருக்குத் திரும்பிப் போக ஏற்பாடுகள் செய்தாயிற்று. எனவே திருவண்ணாமலைக்குப் போவதாக உறுதியளிக்கவில்லை. ஆனால் முன்னரே ஒரு சாது இவரைத் திருவண்ணாமலைக்கு அழைத்ததும், தான் மறுத்ததும் நினைவுக்கு வந்தது. மீண்டும் சங்கராச்சாரிய சுவாமிகளிடம் விடைபெறும்போது அவர் கேட்டார் "கண்டிப்பாகத் திருவண்ணாமலை போகிறீர்களல்லவா?"

மழுப்பலாக ஏதோ சொல்லிவிட்டுச் சென்னை வந்தபோது நள்ளிரவு. வந்தால் முதலில் இவரைக் கூப்பிட்ட அதே சாது, பிரண்டன் திருவண்ணாமலை வருகிறாரா என்று கேட்பதற்காகக் காத்திருந்தார். அவரிடம் பேசிவிட்டுப் படுத்தார் பிரண்டன். படுத்தவர் காரணமேயில்லாமல் சற்று நேரத்தில் விழித்துகொண்டார். ஏதோ மின்காந்த அலைகளால் சூழப்படுவதுபோல் உணர்ந்தார். ஒரே இருள். தலையணைக்கடியில் இருந்த பைக் கடிகாரத்தில் மணி பார்த்தார். இரண்டே முக்கால். கால்மாட்டில் அப்போது ஓர் ஒளிவட்டம் தோன்றியது. அதில் சங்கராச்சாரியாரின் தோற்றம்! இருக்க முடியாதே, அவர் செங்கல்பட்டில் அல்லவா இருக்கிறார். கண்ணை மூடினாலும் அந்த உருவத்தோற்றம் தெரிந்தது.

"அடக்கத்தோடும் எளிமையோடும் இரு. நீ தேடுவது உனக்குக் கிடைக்கும்" என்று சொன்னார் அமானுஷ்யமாக வந்த ஆச்சாரிய சுவாமிகள். தன்னை மீறிய பெரும் சக்தியின் திட்டத்தில் தான் ஒரு காய் ஆக இருப்பது பால் பிரண்டனுக்குப் புலப்படலாயிற்று. மறுநாள் ரமணரைப் பார்க்கப் புறப்பட்டுச் சென்னையிலிருந்து போனார். ரயிலில் போகும் போதெல்லாம் ஆயிரம் கேள்விகள் மனதில். பத்திரிக்கையாளர், அதிலும் நாத்திகர், கேள்வி கேட்பதில் என்ன ஆச்சரியம். எல்லாவற்றையும் ரமணரிடம் கேட்டுவிடுவது என்று திட்டமிடபடிச் சென்றார்.

மனதை ஈர்க்கும் மலையைப் பின்னணியாகக் கொண்ட எளிய ஆச்ரமம் பால் பிரண்டனை வரவேற்றது. சாது சுப்பிரமண்யா ரமணர் இருக்கும் அறைக்குள் பிரண்டனை அழைத்துச் சென்றார். சுமார் இருபது பேர் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்கள். பகவான் இவர் வந்ததைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. உயர்ந்த நெற்றி, நீண்ட கைகளும் கால்களும், விழிகளில் அசாதாரண ஒளி--கற்சிலை தோற்றுப்போகும்--அப்படியே உட்கார்ந்திருந்தார் பகவான்.

தன் பக்கம் திரும்ப மாட்டாரா என்று பிரண்டனின் மனம் ஏங்கியது. இத்தகைய அலட்சியமான வரவேற்புக்குப் பழக்கப்பட்டவரல்ல அவர். இதுகூடத் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளும் நடிப்புத்தானோ என்றுகூட  அவருக்குத் தோன்றியது. ஆனாலும் மவுனமாக அமர்ந்திருந்தார் பகவானின் முன்னே. நேரம் செல்லச் செல்ல மனம் அலை ஓய்ந்த கடல்போல ஆயிற்று. எல்லாக் கேள்விகளும் ஒவ்வொன்றாய் மறைந்தன. "நம்முடைய அறிவு ஏராளமாய்க் கேள்விகளை எழுப்பி நமக்குத் தொல்லை கொடுக்கிறதோ?" என்று தோன்றத் தொடங்கியது. பகுத்தறிவாளருக்கு இப்படித் தோன்றியது விந்தையே.

யாரோ ஒரு அன்பர் கேட்டார் "சுவாமியிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?"

கேள்வியா? கேட்டால் இப்போதிருக்கும் இந்த அளவற்ற அமைதி குலைந்துவிடும்போல் இருக்கிறதே. பேச்சே தேவையில்லை போலிருக்கிறதே. இப்படி நினைக்கின்ற நேரத்தில் பகவன் சிறிதே தலையைத் திருப்பி ஆயிரம் நிலவுகளின் குளிர்ச்சி பொருந்திய பார்வையை பிரண்டனின் மீது பதித்தார். உள்ளே ஆனந்தம் பொங்கி எழுந்தது. "இப்போது எதுவும் கேட்கத் தோன்றவில்லை" என்று கூறிவிட்டு எழுந்தார்.

தொடரும்...

No comments: