July 01, 2020

குரு நானக்ஜீ வாழ்க்கையில்: தச்சர் வீட்டு விருந்து



குரு நானக்கும் மர்தானாவும் சைதுபூர் என்ற இடத்தை அடைந்தனர். பிற்காலத்தில் இதைத் தாக்கி அழித்த முகலாய மன்னர் பாபர் இதன் பெயரை எமினாபாத் என்று மாற்றிவைத்தார்.

எமினாபாதில் ஓர் ஏழை மரத்தச்சர் இருந்தார். அவரது பெயர் லாலு. பல தனவந்தர்களின் வீடுகளை அசட்டை செய்துவிட்டு நானக் நேராக லாலுவின் வீட்டுக்குச் சென்றார். அவரது வீட்டில் கிடைத்த வறண்ட ரொட்டியை ஏதோ ராஜவிருந்து போல ருசித்துச் சாப்பிட்டார் நானக். உயர்ந்த க்ஷத்திரிய குலத்தில் பிறந்த நானக் ஒரு தச்சரின் வீட்டில் தங்கியிருக்கும் செய்தி ஊருக்குள் பரவியது. எல்லோரும் அவரைப் பார்க்க வந்தனர். வந்த இடத்தில் குரு நானக் தேவரின் அன்பான, பொருள்பொதிந்த சொற்களால் ஈர்க்கப்பட்டனர். லாலுவும் குருதேவரைத் தனது வீட்டில் இன்னும் சில நாட்கள் தங்கியிருக்குமாறு அன்போடு வேண்டிக் கொண்டார்.

அதே ஊரில் மாலிக் பாகோ என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் சைதுபூர் முஸ்லிம் நிர்வாகியிடம் திவானாக இருந்தார். மாலிக் பாகோ ஒருநாள் ஒரு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தார். அதற்கு அவ்வூரில் இருந்த இந்து மற்றும் முஸ்லிம் துறவிகளை அழைத்தார். விருந்துநாள் வந்தது. அவரது மாளிகையில் சன்னியாசிகளும் பக்கிரிகளும் பெரும் எண்ணிக்கையில் கூடிவிட்டனர். ஆனால் ஏழை லாலுவின் வீட்டில் தங்கியிருக்கும் தல்வண்டி ஊர்க்கார ஞானியார் மட்டும் வரவில்லை என்பது அவருக்குத் தெரியவந்தது.

மாலிக் பாகோவுக்கு ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் ஆச்சரியம். தன்னுடைய ஆடம்பரமான விருந்து அவருக்கு ஒரு பொருட்டில்லையா! உடனே ஓர் ஏவலாளை அனுப்பி அவரை அழைத்துவரச் சொன்னான்.

"ஐயா! நீங்கள் தங்கியிருக்கும் அந்த ஜாதிகெட்டவனின் விருந்து எனது விருந்தைவிட மேலானதாக உங்களுக்குத் தோன்றுகிறதோ?" என்று கேட்டார் மாலிக்.

"சந்தேகமில்லாமல்" என்றார் நானக்.

"நீங்கள் சாப்பிட்டுப் பார்க்காமலே எப்படித் தீர்மானித்தீர்கள்?"

"எங்கே, என் கையில் இரண்டு ரொட்டிகளைக் கொடு" என்றதும் நெய் சொட்டும் இரண்டும் ரொட்டிகள் நானக்கின் கையில் தரப்பட்டன.

குரு நானக் தனது மற்றொரு கையைக் காட்டினார். அதில் லாலுவின் வீட்டு வறண்ட ரொட்டி இருந்தது. இரண்டு கைகளில் இருந்த ரொட்டிகளையும் அழுத்திப் பிழிந்தார்.

என்ன ஆச்சரியம், மாலிக்கின் ரொட்டியிலிருந்து நெய் சொட்டவில்லை, ரத்தம் சொட்டியது! லாலு வீட்டு ரொட்டிகளில் இருந்து பால் சொட்டியது.

பார்த்த மக்கள் பிரமித்தனர், மாலிக்கோ திகைத்துப் போனார்.

"பெரியோனே! இது என்ன விபரீதம். ஏன் இப்படி நடக்கிறது?" என்று கேட்டார் மாலிக்.

"நீ சற்றும் இரக்கமில்லாமல் எளிய மக்களைப் பிழிந்தெடுத்து அவர்களது ரத்தத்தால் வரும் செல்வத்தைச் சேமிக்கிறாய். அதனால் உனது ரொட்டியிலிருந்து ரத்தம் சொட்டியது. லாலு கடின உழைப்பாளி. பிறர் செல்வத்தின்மேல் ஆசை வைக்காதவன். சம்பாதிக்கிற சிறிது பணத்தில் நிறைவாக வாழ்கிறான். பிறருக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்கிறான். அதனால் அவனுடைய ரொட்டியிலிருந்து பால் சொட்டியது" என்று விளக்கினார் குரு நானக்.

மாலிக் குருதேவரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார். அவரது உபதேசங்களைச் செவிமடுத்து மறுபிறப்பெடுத்தார்.

ஆதாரம்: மதுரபாரதி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘சீக்கிய மதம்’

No comments: