June 30, 2020

ரமணரின் மனதைப் படிக்க முயன்ற சேஷாத்ரி சுவாமிகள்!

ரமணரின் மனதைப் படிக்க முயன்ற சேஷாத்ரி சுவாமிகள்!

சேஷாத்ரி சுவாமிகள் பத்தொன்பதாவது வயதில் சன்னியாசம் வாங்கிக்கொண்டார். அதற்கு முன்பே சோடசாட்சரி மந்திரம், மூக பஞ்சசதி போன்றவை இவரது நாவில் எப்போது ஓடிக்கொண்டே இருக்கும். ஒருநாள் ஐந்து சிகரங்களோடு கூடிய அண்ணாமலையை ஓர் அட்டையில் வரைந்து பூஜையில் வைத்திருந்தார். விசேடம் என்னவென்றால் அதுவரை அவர் அருணாசலத்தைப் பார்த்ததில்லை என்பதுதான். அப்போதே அவருக்குள் அருணாசலத்தின் அழைப்பு கேட்டுவிட்டது என்பதை இது உணர்த்துகிறது.

எதிரிலிருப்பவர்கள் மனதில் இருப்பதை இவரால் படிக்க முடிந்தது. ஒருமுறை இவர் ரமணர் முன்னால் சற்று நேரம் உட்கார்ந்துகொண்டிருந்தார். அப்போது ரமணர் மாமரத்தடி குகையில் இருந்தார். எவ்வளவு முயன்றும் அவரது மனதில் இருப்பது சேஷாத்ரி சுவாமிகளுக்குத் தெரியவில்லை. "இந்த மனுஷன் என்ன நினைக்கிறான்னு ஒண்ணுமே புரியல்லியே" என்று முணுமுணுத்தாராம்.

நம் போன்றவர்களின் மனம் எண்ணங்களாலானது. ஒரு வெங்காயத்தை இதற்கு ஒப்பிடலாம். உடனடியாகத் தோன்றும் எண்ணங்களிலிருந்து புறப்பட்டு ஆழப் புதைந்து கிடக்கும் நினைவுகள்வரை மனத்தில் இருக்கின்றன. ஆனால் வெங்காயத்தைப் போலவே உரித்து உரித்து மனதையும் இல்லாமலாக்கலாம் என்று புறப்பட்டால் நடவாத காரியமாக இருக்கிறது. ஏனென்றால் ஓர் எண்ணத்தை அகற்றினால் அந்த இடத்திலே பல எண்ணங்கள் முளைத்து விடுகின்றன.

எண்ணங்களும், ஆசைகளும் செயலுக்குக் காரணமாக இருக்கின்றன. செயல்கள் நல்லவையா தீவையா என்பதைப் பொறுத்து நமக்குப் பாவ புண்ணியம் ஏற்படுகிறது. இவற்றின் தொகுப்பே கர்மவினை என்று நாம் பார்த்தோம். வங்கியிலே ஒருவருக்குக் கணக்கு இருந்தால் அதில் பணம் இருக்கும்வரை அவர் வங்கியோடு தொடர்பு கொண்டுதான் ஆகவேண்டும். அவர் கடன் வாங்கியிருந்தாலும் வங்கி அவரை விடாது. பாவ புண்ணியங்களின் பலனும் கடன் மற்றும் வங்கிச் சேமிப்பு போன்றதுதான். கணக்கைத் தீர்த்தே ஆகவேண்டும்.

ஒவ்வொரு ரூபாய் வந்ததும் ஒருவன் 'ஏது இந்தப் பணம்?' என்று கேட்டால் அது அவன் சம்பாதித்தது அல்லது கடன் வாங்கியது என்று அப்பணம் புறப்பட்ட இடத்தைக் கண்டுபிடிக்கலாம். அதேபோல ஒவ்வோர் எண்ணமும் எங்கே இருந்து புறப்பட்டது இது என்று கேட்கச் சொன்னார் ரமணர். அப்படிச் செய்வதன் மூலம் எண்ணத்தின் பிறப்பிடமாகிய மனத்தைக் கண்டறியலாம். அந்த மனம் உங்கள் தொடர்ந்த கேள்விக்கு அஞ்சி ஆன்மாவில் தஞ்சம் புகும். இது மனோநாசம் எனப்படும்.

யாருடைய மனம் அழிந்துவிட்டதோ, அவனுக்குச் சுயமான விருப்பு வெறுப்புகள் இல்லை. அவன்தான் ஞானி. அவன் நிரந்தரமாய்த் தன் ஆன்மாவிலேயே திளைத்து இருக்கிறான். ரமணர் அப்படிப்பட்டவர். அவருக்கென்று மனம் ஏதுமில்லை. எனவேதான் சேஷாத்ரி சுவாமிகளால் அவர் மனதைப் படிக்க இயலவில்லை.

- மதுரபாரதி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ரமண சரிதம் நூலிலிருந்து.

June 17, 2020

குரு நானக்ஜீ வாழ்க்கையில்: மருத்துவர் வந்தார்



வளர வளர நானக் தனிமையைத் தேடுவது அதிகமாயிற்று. பல நாட்கள் மவுனமாக தியானத்தில் அமர்ந்துவிடுவான். தனிமையை நாடும் மகனின் போக்கு பெற்றோருக்குக் கவலையைத் தந்தது. உலகைப் பற்றிய அக்கறை இன்மை ஒரு மனநோயாகத் தோன்றத் தொடங்கியது.

அந்த ஊரில் ஹரிதாஸ் என்று ஒரு மனநோய் மருத்துவர் இருந்தார். நானக்கைப் பரிசோதிக்க ஒருநாள் அவரை அழைத்து வந்தனர். ஹரிதாஸ் நானக்கின் நாடியைச் சோதிக்கும் பொருட்டாக அவனது கையைத் தொட்டார். "மருத்துவரே, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான் நானக். "நான் உன் நோய் இன்னதென்று அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன்" என்று விடை கூறினார்.

சிறுவன் சிரித்துவிட்டு கீழ்க்கண்ட ('சபத் கீர்த்தன்' என்று அழைக்கப்படும்) பாடலைக் கூறினான்:

எனக்காக ஒரு மருத்துவர் வந்திருக்கிறார்!
அவர் கையைப் பிடித்து நாடியை உணர்கிறார்.
நாடி என்ன சொல்லமுடியும்?
வலியோ நெஞ்சின் ஆழத்தில்.
மருத்துவரே, உங்களை நலமாக்கிக் கொள்ளுங்கள்,
உங்கள் நோயை முதலில் அறியுங்கள்,
அதன் பின்னர் பிறரது நோயைக் கண்டுபிடிக்கும் 
மருத்துவர் என்று உங்களை அழைத்துக் கொள்ளலாம்.
(மலர் கி வர், மொஹல்லா 1)

"ஓஹோ! எனக்கு உடல்நலமில்லை, மருந்து தேவை என்று நீ நினைக்கிறாயா?" என்று கேட்டார்.

"ஆமாம். உங்கள் ஆன்மாவில் வியாதி. நோயின் பெயர் அஹங்காரம். வாழ்வின் ஆதாரமான கடவுளிடமிருந்து உங்களைப் பிரிப்பது அதுதான்" என்று கூறினார் நானக்.

மேலும் நானக் கூறினார்:

ஒளிமிக்கவனின் திருநாமம் மனிதனிடம் இருந்தால்
அவனது உடல் பொன்னாகும், ஆன்மா தூய்மையடையும்;
நோய்களும் நோவும் அகன்றுவிடும்,
ஓ நானக், அவன் சத்தியத் திருநாமத்தாலே காப்பாற்றப்படுவான்
(மலர் கி வர், மொஹல்லா 1)

வெகுநேரம் நானக்கிடம் பேசிக்கொண்டிருந்த ஹரிதாஸ், தெய்வச் சிறுவனை வணங்கினார். அவனது பெற்றோர்களிடம், "கவலை வேண்டாம். உலகின் நோயை அகற்றும் பிள்ளையை நீங்கள் பெற்றெடுத்திருக்கிறீர்கள்" என்று கூறிவிட்டுப் போனார்.

மதுரபாரதி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘சீக்கிய மதம்’ நூலிலிருந்து...