July 28, 2018

பிம்பிசாரனுக்கு புத்தர் கொடுத்த வாக்கு


தான் மேற்கொண்ட பரிவ்ராஜகக் கோலத்துக்கு ஏற்றபடி வைசாலியிலிருந்து புறப்பட்டு மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருஹத்துக்குச் சென்றார். வழக்கப்படி ராஜகிருஹத்தின் தெருக்களில் பிட்சை எடுத்தபடி நடந்து சென்றார். இவ்வளவு கம்பீரமும், எழிலும், ராஜலட்சணங்களும் பொருந்தியதொரு பிட்சுகனை அந்த நகர மக்கள் இதுவரை பார்த்ததில்லை. வணிகர் வீதியில் வணிகம் ஸ்தம்பித்து நின்றது. மதுவருந்தும் மக்களும் குடிப்பதை அப்படியே நிறுத்திவிட்டு கௌதம பிட்சுவைப் பார்த்தவண்ணம் இருந்தனர். அவசரமான வேலையாக விரைந்து கொண்டிருப்பவர்கள் ஒரு நிமிடம் அப்படியே கால்களை நிறுத்தி, கௌதமரின் உருவ அழகைப் பருகினர். யாராலும் அவரை அசட்டை செய்ய முடியவில்லை.

கௌதமரது மனத்தின் வளத்தை அவரது உடையின் ஏழைமை மறைக்க முடியவில்லை.

கௌதமர் ஒவ்வொரு வீடாகச் சென்று வாசலில் அமைதியாக நிற்பார். தனது ஓட்டில் (அதை 'மண்டை' என்று அழைப்பது வழக்கம்) அவர்கள் உணவுப் பொருளை இடும்வரை நின்று பின் நகர்வார். தன் வீட்டுக்கு வந்து அவர் பிட்சை ஏற்பதை ஒவ்வொருவரும் பெரிய பேறாக எண்ணினர். அவரை வணங்கினர். தம்மிடம் உணவை ஏற்றாரே என்று நன்றி பெருகினர்.

ராஜகிருஹத்தின் அருகே ஏழு குன்றுகள் இருந்தன. அவை பாண்டவ மலை என்று அழைக்கப்பட்டன. தினமும் பிட்சை எடுத்து உண்டபின் மாலையில் பாண்டவ மலைக்குத் தவம் செய்யப் போய்விடுவார் கௌதம பிட்சு.

மகதநாட்டின் மன்னன் பிம்பிசாரனுக்கு இந்தத் தகவல் எட்டியது. 'மன்னவா! அந்த பிரம்மதேவனே ராஜகிருஹத்தின் வீதிகளில் வந்து கையேந்திச் சென்றதுபோல இருக்கிறது' என்று கூறினர் அவரிடம்.

தினமும் பிட்சையை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் அதைச் சாப்பிட்டபின், பிட்சு மலைக்குச் சென்றுவிடுகிறார் என்பதைக் கேட்ட பிம்பிசாரனுக்கு மனதில் கருணை பெருகியது. தன் அரசக் கோலத்துக்கான ஆடைகளை அணிந்து, மகுடத்தைச் சூடிக்கொண்டு, தன் அமைச்சுப் பரிவாரங்களுடன் கௌதம பிட்சு இருக்கும் இடத்தை அடைந்தான் பிம்பிசாரன்.

'ஆஹா! என்ன பொலிவு. என்ன கம்பீரம். எத்தனை உயர்ந்து பருத்த தோள்கள். கண்களில் என்ன கருணை. இப்படி ஒரு அழகை நான் பார்த்ததே கிடையாதே. இவர் அரச குமாரனாகத்தான் இருக்க வேண்டும்' என்று தன் மனத்தில் நினைத்தான். மேலும் விசாரத்திததில் கௌதம பிட்சு சாக்கிய ராஜகுமாரன்தான் என்ற செய்தி அவனுக்குக் கிட்டியது.

'பிட்சுவே! உங்களை வணங்குகிறேன். நீங்கள் ஓர் அரசகுமாரர் என்றும் அறிகின்றேன். என்ன காரணத்தால் துறவு மேற்கொண்டீர்களோ எனக்குத் தெரியாது. உங்கள் கரங்கள் செங்கோலை ஏந்தவேண்டுமே அல்லாது பிட்சை ஓட்டை அல்ல. உங்கள் உடல் பட்டுப் பீதாம்பரங்களை அணியவேண்டுமே அல்லாது சன்னியாசியின் துவராடையை அல்ல. உங்கள் இளமை இவ்வாறு வீணாவதும் தகாது. வாருங்கள், இந்த மகத அரசை நாம் இருவருமே ஆளலாம். இங்கேயே தங்கிவிடுங்கள். அரச வம்சத்தினருக்குச் செல்வத்திலும் பூமியிலும் ஆசை என்பது பெருமை தருவனவே. செல்வம், செல்வாக்கு இவற்றுடன் ஆன்மிகமும் சேர்ந்தால் அது மிகுந்த சோபை தரும்' என்று விண்ணப்பித்தான்.

தாழ்ந்திருந்த தமது கண்களை உயர்த்தினார் கௌதமர்.

'நீ தர்மவான். பக்தியுள்ளவன். உன் வார்த்தைகள் அறிவின்பாற்பட்டவையாக இருக்கின்றன. தர்மவானிடத்தில் இருக்கும் செல்வமே பொக்கிஷம் என்று கூறப்படும். கருமியின் செல்வமும் ஒருவகை வறுமையே.

'தருமமே பெரிய லாபத்தைத் தரும். தருமமே பெரும் செல்வம். அத்தகைய வழியில் போகும் செல்வம் கழிவிரக்கத்தைத் தராது.

'முக்தி வேண்டும் என்பதற்காகத் தளைகளை அறுத்துவிட்டவன் நான். நான் எப்படி மீண்டும் அரசாள முடியும்? எவன் மெய்ஞ்ஞானத்தில் மனதைச் செலுத்துகிறானே, அது தவிர்த்த எல்லாவற்றிலிருந்தும் அவன் தனது கவனத்தைத் திருப்பிவிட வேண்டும். அவனுக்கு ஒரே லட்சியம்தான்--தன்னைப் பேராசை, காமம் இவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வது. அவன் செல்வக்குக்கும் ஆசைப்படக் கூடாது.

'சற்றே காமவயப்பட்டாலும் போதும், அந்தக் காமம் ஒரு குழந்தையைப் போல வேகமாக வளர்ந்துவிடும். கொஞ்சம் செல்வாக்கைப் பிரயோகித்துப் பார், அது உன்னிடம் பல கவலைகளைக் கொண்டுவந்து விடும்.

'பூமியில் அரசாட்சி செய்வதைவிட, சொர்க்கத்தில் வாழ்வதைவிட, மூவுலகுக்கும் ஏகச் சக்ராதிபதியாக இருப்பதைவிட, துறவினால் கிடைக்கும் பலன் உயர்வானது.

'செல்வத்தின் மாயை கௌதமனுக்குத் தெரியும். அவன் விஷத்தை உணவென்று உண்ணமாட்டான்.

'ஒருமுறை சிக்கிய மீன் எங்கேனும் தூண்டிலை நேசிக்குமா? விடுபட்ட பறவை மீண்டும் வலையை விரும்புமா? பாம்பின் வாயிலிருந்து தப்பிய முயல் மீண்டும் அதனிடம் போகுமா? தீப்பந்தத்தில் கையை எரித்துக் கொண்டவன் அதைத் தரையில் வீசியபின் மீண்டும் எடுக்க முயல்வானா? விழிபெற்ற குருடன் மீண்டும் விழிகளை நாசமாக்கிக் கொள்வானா?

'என் மீது கருணை காட்டாதே, பிம்பிசாரா! அரச வாழ்வின் பாரத்தாலும், செல்வம் தரும் கவலைகளாலும் துன்புறுகிறவர்கள் மீது கருணை காட்டு. அவர்கள் எப்போதும் அச்சத்தால் நடுங்குகிறார்கள். எப்போது இவை தன்னை விட்டுப் போகுமோ என்ற அச்சம். இந்தக் கஜானாவையும் மகுடத்தையும் சாகும்போது தன்னோடு தூக்கிப் போகமுடியாதே என்ற அச்சம்.

'நான் அரச போகத்தைத் துறந்துவிட்டேன். வாழ்வின் இன்பங்களைத் துறந்துவிட்டேன். என் லட்சியத்துக்குக் குறுக்கே நிற்க முயற்சிக்காதே. என்னைப் போகவிடு' என்றார் கௌதம பிட்சு.

'மேன்மை கொண்டவரே! உங்கள் குறிக்கோள் நிறைவேறட்டும். அப்படி நிறைவேறியதும், என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று தன் இரு கைகளையும் கூப்பியவண்ணம் பிம்பிசாரன் பிரார்த்தித்தான்.

கௌதம பிட்சு அவ்வாறே செய்வதாகத் தன் மனதுள் நிச்சயித்துக்கொண்டார். பின்னர் ராஜகிருஹத்திலிருந்து தன் பயணத்தை மேலும் தொடர்ந்தார்.

- நான் எழுதிக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட புத்தம் சரணம் நூலிலிருந்து

November 17, 2017

சக்தியின் தாளே சரண்
சக்திக் கனல்தேக்கிச் சக்திக் கவிதூக்கி
சக்திக்கே நாமடிமை பூண்டதனால் - சக்திஓம்
சக்தியென ஆர்த்திடுவோம் சக்தியருள் பூத்திடுவாள்
சக்தியின் தாளே சரண்.

41 வருடம் பழைய வெண்பா!  1976ல் எழுதிய இந்த வெண்பாவை என் சிக்னேச்சர் கவிதையாக வைத்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பங்குபெறும் கவிதையரங்கங்களில் இதை முதலில் படித்துவிட்டுத்தான் தலைப்புக்கே வருவேன். அன்னை இன்னமும் என்னை நன்கு காத்துத்தான் வருகிறாள்.

February 26, 2017

ரமண சரிதம்: பால் பிரண்டன்பகலுணவுக்குப் பின் மீண்டும் அறைக்கு வந்தனர். முதல் அனுபவத்தின் உயரத்திலிருந்து சற்றே கீழே இறங்கி வந்திருந்த பால் பிரண்டன் கேள்வி கேட்டார்:

பால்: எனக்கு ஞான அனுபவம் வேண்டும். நீங்கள் உதவி செய்வீர்களா? இல்லை தன்னைத் தேடுவது ஒரு மாயைதானா?

பகவான்: 'நான்' என்று சொல்கிறீர்கள். 'எனக்கு' அனுபவம் வேண்டும் என்கிறீர்கள். அந்த 'நான்' என்பது யார்? முதலில் 'நான்' யாரென்று தெரிந்து கொண்டால் உண்மை தெரிந்துவிடும். செய்யவேண்டியது ஒன்றுதான். தனக்குள்ளே பார்வையைத் திருப்பினால் எல்லா விடைகளும் அங்கே இருக்கின்றன.

பால்: குருவின் உதவியோடு செய்தால் தன்னை அறிய எவ்வளவு நாட்களாகும்?

பகவான்: சிஷ்யனின் பக்குவத்தைப் பொறுத்தது அது. வெடிமருந்தில் உடனே தீப்பற்றுகிறது. அதுவே கரியில் தீப்பிடிக்க நிறைய நேரமாகிறது.

இது பகவான் உபதேசங்களுள் தலையாயதாகும். அதை மிக எளிமையாகச் சொல்லிவிட்டார். அவருடனான இன்னொருமொரு உரையாடலும் பகவானின் கருத்தைத் தெளிவாக்கும்.

பால்: நாம் மிகச் சிக்கலான காலத்தில் வாழ்கிறோம். இந்த உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி பகவானின் கருத்து என்ன?

பகவான்: எதிர்காலத்தைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு நிகழ்காலம் நன்றாகத் தெரிந்துவிட்டதா? நிகழ்காலத்தில் கவனம் வை, எதிர்காலம் தானாகவே சரியாக அமையும்.

பால்: ஒரு நட்புறவும் பரஸ்பர உதவியும் கொண்ட நல்ல யுகத்தை உலகம் விரைவிலேயே காணுமா, இல்லை குழப்பமும் போருமே நீடிக்குமா?

பகவான்: இந்த உலகை ஆள்கிறவன் ஒருவன் இருக்கிறான். அதைக் கவனித்துக் கொள்வது அவனுடைய வேலை. உலகைப் படைத்தவனுக்குப் பார்த்துக்கொள்ளவும் தெரியும். இந்த உலகின் பாரத்தைத் தாங்குவது அவன், நீயல்ல.

பால்: பாரபட்சமற்ற கண்களோடு சுற்றுமுற்றும் பார்த்தால் இந்தக் கருணைக்கான அடையாளமே தெரியவில்லையே.

பகவான்: நீ எப்படியோ, இந்த உலகம் அப்படியே. உன்னைப் புரிந்துகொள்ளாமல் இந்த உலகைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் என்ன பலன்? ஒரு உண்மையான 'தேடுவோன்' நீ கேட்கிற கேள்வியை கேட்க அவசியமில்லை. இத்தகைய கேள்விகளில் மக்கள் தமது சக்தியை விரயம் செய்கின்றனர். உன்னிடமிருக்கும் உண்மையை முதலில் கண்டுபிடி, பிறகு உலகத்தின் உண்மையை நீ புரிந்துகொள்வாய்.

1934-இல் பால் பிரண்டன் A Search in Secret India என்ற புத்தகத்தை எழுதினார். அது உலகம் முழுவதும் அவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்ததோடு, ரமண பகவானின் அற்புத வாழ்க்கையையும் போதனைகளையும் கடல்கடந்து எடுத்துச் சென்றது. இன்றைக்கும் இப்புத்தகம் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்று. பூமி உருண்டையின் ஏதேதோ மூலைகளிலிருந்து ஆன்மிகப்பசி கொண்டவர்களை அருணாசலத்திற்கு இழுத்து வருவதில் இப்புத்தகத்திற்கு நிகர் கிடையாது.

தன்னுடைய தேடல் முடிந்தது என்று புரியாத பால் பிரண்டன் மீண்டும் இந்தியாவை ஒருமுறை சுற்றினார். எங்குமே அவருக்கு மனம் ஒன்றவில்லை. எனவே ரமணாச்ரமத்துக்கு இரண்டாம் முறையாகச் சில வருடங்களிலேயே திரும்பி வந்தார். இந்தமுறை பகவானின் அருட்பார்வையின் கீழ் அவருக்கு சமாதிநிலையின் சுவை சற்றே தெரிந்தது. உடல்நிலை காரணமாக இந்தியாவை விட்டு அகன்றாலும் வாழ்நாள் முழுவதும் பகவானைத் தன்னுடனே உணர்ந்து, வழிகாட்டலைப் பெற்றார் பால் பிரண்டன்.

ஓம் நமோ பகவதே ரமணாய|