January 13, 2008

திருப்பள்ளியெழுச்சி - 5

திருச்சிற்றம்பலம்

போக்கும் வரவும் இல்லாதவன்

பூதங்கள்தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள்முன் வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


'பஞ்ச பூதங்களின் உள்ளும் உறைபவனாக நீ இருக்கிறாய். அதுமட்டுமல்லாமல் உனக்குப் போக்கும் வரவும் கிடையாது என்றெல்லாம் அறிஞர்கள் புகழ்ந்து பாடுகின்றனர், ஆடுகின்றனர். அவற்றை நான் கேட்டிருக்கின்றேன். ஆனால் உன்னைப் பார்த்ததாக யாரும் கூறி நான் கேட்கவில்லை.

'குளிர்ச்சியான வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் உறைகின்றவனே, எங்கள் சிந்தனைக்கும் எட்டாதவனே. எமக்கு முன்னே தோன்றி, எமது குற்றங்களையெல்லாம் களைந்து ஆட்கொண்ட எம்மானே! பள்ளி எழுந்தருள்வாயாக.'

சிறப்புப்பொருள்: உலகம் ஐம்பூதங்களால் ஆனது. பஞ்ச பூதங்களிலும் இறைவன் இருக்கின்றான் என்றால் உலகின் ஒவ்வொரு அணுவிலும் அவன் இருக்கிறான். ஆனால் அறிஞர்களோ அவனது போக்கு வரவில்லா நிரந்தர இருப்பைப்பற்றி அறிவுபூர்வமாகப் பாடுகிறார்கள். அவனோ அறிவினால் அறியத் தக்கவனல்லன். எனவேதான் புலவர்கள் என்னதான் பாடினாலும் ஆடினாலும் அவர்கள் மெய்யாகவே இறைவனைக் கண்டுணர்ந்தவர்கள் அல்லர்.

ஆனால் மாணிக்க வாசகர் போன்ற ஞானியரோ தமது எல்லையற்ற பக்தியினாலும் தவத்தினாலும் இறைவனை ஈர்த்துவிடுகின்றனர். அத்தகையோரிடம் சிறிது குற்றங்கள் இருப்பினும், இறைவன் தானே எதிர்வந்து, குற்றங்களைக் களைந்து அவர்களை ஆட்கொள்கிறான்.

மனம், அறிவு ஆகியவை உடல் சார்ந்தவை. எவனொருவன் தன்னைத் தனது உடலும் உடல் சார்ந்தவைகளும்தான் எனத் தவறாக நினைக்கிறானோ அவனுக்கு மெய்யறிவு துலங்குவதில்லை. 'இது நானல்ல, இது நானல்ல (நேதி, நேதி) என்று உடல்சார்ந்தவற்றை ஒவ்வொன்றாக ஒதுக்கினான் என்றால் இறுதியாக எஞ்சுவது 'நான்' ஆக இருக்கும். அதுதான் சுயதரிசனம். அதுதான் ஞானநிலை. அதுதான் ரமணர் போன்றோர் நிலைத்திருந்த ஆத்மானந்த அனுபவ நிலை.

அந்த நிலை நம் போன்றோருக்கு ஊகிக்கவும் அரிது என்பதனாலேயே 'சிந்தனைக்கும் அரியாய்' என்கிறார். ஆனால் இறைவன் தனது பரம கருணையினாலே, நாம் நமது அறிவின்மீதும், உடலின்மீதும் கொண்ட அபிமானங்களை அகற்றிச் சரணடைவோமேயானால், அவனே நமது குற்றங்களை அகற்றி ஆட்கொள்கிறான். 'நீ இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் இறைவன் உன்னை நோக்கிப் பத்து அடி எடுத்து வைக்கிறான்' என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியது இதைத்தான்.

(அருஞ்சொற்பொருள்: ஏதம் - குற்றம்.)

இன்னும் வரும்...

January 12, 2008

திருப்பள்ளியெழுச்சி - 4

திருச்சிற்றம்பலம்

என்னையும் நீ ஆண்டுகொண்டனையே ஐயா!

இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!


'மார்கழி மாதத்தின் இந்த அதிகாலைப் பொழுதில் உன் சன்னதியில் அமர்ந்து சிலர் வீணையும் சிலர் யாழும் வாசிக்கின்றனர். மற்றொரு பக்கம் சிலர் ரிக் முதலான வேதங்களால் உன்னைத் தோத்தரிக்கின்றனர்.

'சிலர் நெருங்கத் தொடுத்த மாலைகளைக் கையிலேந்தி வருகின்றனர். உன்னைத் தொழுபவர் சிலர், அழுபவர் சிலர், பக்திப் பெருக்கால் மயங்கி விழுபவர் சிலர். மற்றும் சிலர் தம் தலைக்கு மேலே கையை உயர்த்திக் கூப்பி வணங்குகின்றனர்.

'ஆவுடையார் கோவிலில் உறையும் சிவபெருமானே! விழுமிய பக்தியைக் காட்டும் இந்தச் செயல்களுள் எவற்றையும் நான் செய்யாத போதும், என்னை ஆட்கொண்டு, இனிய அருளை வழங்கும் எம்பெருமானே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக.'

சிறப்புப்பொருள்: எல்லோரும் அவரவரால் முடிந்த வழிகளில் இறைவனை வழிபடுகின்றனர். இவை எதையுமே செய்யாதவரும் உள்ளனர். அவர்கள் மனதிலே மட்டும் பக்தி கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் எம்பெருமானே, எந்தவகை பக்தியாக இருந்தாலும் அதனை ஏற்று, பக்தி செய்பவரை ஆட்கொண்டு, அருள் செய்கிறான் என்பது இப்பாடலால் பெறப்படுகிறது.

'என்னால் பாட முடியவில்லையே', 'என்னால் பூத்தொடுத்துச் சாற்ற முடியவில்லையே', 'என்னால் வேதம் ஓத முடியவில்லையே' என்று நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருக்காமல், நமக்கு எது முடியுமோ அதை நிச்சயம் செய்ய வேண்டும். எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு இறையருள் கிடைக்கவில்லை என்று பேசுவதில் பலன் இல்லை.

வறியவர்க்கு அன்னதானம் செய்தல், அடியவர்க்கு அமுது செய்வித்தல், பக்திப் பனுவல்களான தேவாரம், திருவாய்மொழி, திருவாசகம், திருப்புகழ், சஹஸ்ரநாமங்கள், புஜங்கம் என்று அருளாளர்கள் நமக்கு எவ்வளவோ அருளிச் சென்றிருக்கிறார்கள். ஓரிடத்தில் அமர்ந்து, மனதை ஒருமைப்படுத்தி, இவற்றைப் பாராயணம் செய்யவேண்டும். ஞானிகளின் அருளுரைகளைப் படிக்க வேண்டும். இறைவனே வந்து நம் பொருட்டாக ஸ்ரீமத் பகவத் கீதையை அருளிச் செய்திருக்கிறான். அதைப் படிக்கவேண்டும்.

பராயணம் என்ற சொல்லுக்கு 'செல்லுதல், இறுதி லட்சியம்' என்றெல்லாம் பொருள்கள் உண்டு. சம்சாரக் கடலின் மறுகரைக்குச் செல்ல இறைவன் திருநாமமும், அவன் புகழைப் பேசும் பக்தி நூல்களும் துணைசெய்யும். நம்பாதவர்களின் கேள்விகளாலும், வாழ்க்கையின் சோதனைகளாலும் நமது பக்தி ஆட்டம் கண்டுவிடாத உறுதியைத் தரும். நமது அனுபவத்துக்கேற்பப் புதிய புரிதல்களை உண்டாக்கும்.

இன்னும் வரும்...

January 11, 2008

திருப்பள்ளியெழுச்சி - 3

திருச்சிற்றம்பலம்

எல்லோரும் அறிவதற்கு அரியவன்,
எமக்கோ எளியவன்!


கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி, ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது, விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவ பெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்!
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


'பூங்குயில்கள் கூவுகின்றன, கோழிகள் கூவுகின்றன. சிறு பறவைகள் கீச்சிடுகின்றன. சங்கின் பேரொலி கேட்கிறது.

'உதய திசையில் அடர்ந்து வரும் ஒளியைக் கண்டு தாரகையில் ஓடி ஒளிந்துகொண்டன. திருப்பெருந்துறையை இருப்பிடமாகக் கொண்ட பரமனே! உன்னுடைய கழலணிந்த இரு தாள்களையும் அன்போடு எமக்குக் காண்பித்து அருள்வாய்!

'எல்லோருக்கும் உன்னை அறிவது மிகக் கடினமாக இருக்கிறது. ஆனால், நீ எமக்கு எளிதாகப் புலப்படுகிறாய். எம்பெருமானே! பள்ளி எழுவாயாக!'

சிறப்புக்குறிப்புகள்: எல்லோரும் என்பது மனிதர் தவிர்த்த உயிர்கள். இதிலே யக்ஷ கின்னர் கந்தர்வர்கள், தேவர்கள் போன்றோர் அடங்குவர். அவர்களெல்லாம் வானுலகில் வசித்து உயர்ந்த இன்பங்களை அனுபவிப்பதாகத் தோன்றினாலும், அவையும் பிறவிகளும் பதவிகளுமே ஆம். அதனால்தான்

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!


என்று ஆழ்வார் பாடினார். பக்தியில் தோய்தலும், பழுத்துத் தவம் முயல்வதும், தவம் பலித்துத் தன்னை உணர்தலும், மெய்ஞ்ஞான சித்தியும் மனிதருக்கே உரியன என்று பெரியோர் கூறுகின்றனர். நம் கண்முன்னே ஜீவன் முக்தர்களாக வாழ்ந்தவர்களைப் பார்த்திருக்கிறோம், பார்க்கிறோம்.

திண்ணன் என்ற வேடனின் எல்லையற்ற அன்புக்கு எளிவந்த பிரானாக ஆனவனல்லவா அவன். ஆனால் எல்லோரும் அவனுடைய செருப்புக் காலையும் எச்சில் நீரையும் பன்றிக் கறியையும் பேசுகிறார்கள். அவையல்ல முக்கியம். அவனுடைய பக்தியின் உயர்வுதான் முக்கியம்.

சிவலிங்கத்தின் கண்களிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்துத் தனது ஒரு கண்ணை அம்பால் பிடுங்கி அப்பினான். அந்தக் கண்ணில் ரத்தம் நின்றது. ஆனால் லிங்கத்தின் மறுகண்ணில் ரத்தம். உடனே தயங்காமல் தனது மற்றொரு கண்ணையும் பிடுங்கி அப்பினான். பிறகு கேவிக்கேவி அழுதானாம். தன் இரு கண்களும் போய்விட்டனவே என்றா? இல்லை, சிவனுக்கு மூன்று கண்களாயிற்றே. மூன்றாவது கண்ணில் ரத்தம் வழிந்தால் அப்புவதற்குத் தனக்கும் மூன்று கண்கள் இல்லையே என்று அழுதானாம்.

அவ்வாறு தனது உடலுக்கு ஏற்படும் ஊறையும் வலியையும் பொருட்படுத்தாமல் (தான் உடல் என்று கருதி அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிராமல், தேகான்ம பாவத்தை விடுத்து), புறக்கண்களைப் பொருட்படுத்தாமல் அகக்கண்ணால் நோக்கினால், சீவனுக்குச் சிவன் காண எளியவனாவான் என்பதே திண்ணப்பன் என்னும் வேடன் கண்ணப்பன் ஆனதன் தத்துவம்.

ஆன்மீக முயற்சிக்கு உறுதுணை என்ற அளவிலேதான் உடலைப் பேண வேண்டுமே அல்லாது, அதன் அழகும் சுகமும் வலிவும் வண்ணமும் லட்சியங்கள் அல்ல. இந்த ஒளி மனதில் உதயமானால் பிற உலகியல் எண்ணங்கள் என்னும் தாரகைகள் மனதில் ஒளியிழக்கும்.

(அருஞ்சொற்பொருள்: ஓவின - இல்லாமற்போயின)

இன்னும் வரும்...

January 10, 2008

திருப்பள்ளியெழுச்சி - 2

திருச்சிற்றம்பலம்

அருணன் கிழக்கை அணுகினான்,
இருள் அகன்றது!


Sunrise temple small

அருணண்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ, நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிறை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே!


'சூரியன் கிழக்குத் திசையை நெருங்கிவிட்டான். இருளோ ஓடி அகன்றுவிட்டது. உதயம் ஆனது.

'அதேபோல உன் முகமலரில் கருணையாம் சூரியன் எழுகின்றது. அண்ணலே! உன் கண்களாம் எழில் மலர்கள் விரிகின்றன. அவை விரியும்போதே அடியவர்களாம் வண்டுகள் சூழ்ந்து ரீங்காரமிடுகின்றன. இவற்றை நீ அறிந்துகொள்.

'அருள்நிதியை அள்ளி வழங்கவரும் ஆனந்தமாகிய மலையே, அலைகடலே! திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே, துயிலகன்று எழுவாயாக!

சிறப்புப்பொருள்: கதிரவன் ஒற்றைச் சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருபவன். அந்தத் தேரின் சாரதிதான் அருணன். அருணனின் மக்கள்தாம் சம்பாதியும் ஜடாயுவும். கருடன் இவனது சகோதரன். இந்திரன் திசை என்பது கிழக்கு.

அன்பர்களை வண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். 'குளத்தில் மலரும் தாமரைப் பூவின் அருகிலேயே இருந்த போதும் தவளைகள் தேனின் அருமையை அறியமாட்டா. வெகுதூரத்தில் இருக்கும் தேனீக்கள் பூவின் நறுமணத்தைத் தொடர்ந்து வந்து தாமரையில் இருக்கும் தேனைப் பருகிச் செல்லும்' என்பார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நாம் வாழும் காலத்திலேயே ஸ்ரீ சத்ய சாயி பாபா, மாதா ஸ்ரீ அமிர்தானந்த மயி, ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தா போன்றவர்கள் பெரும் ஆன்மிக மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். ரமணரிடமும் ராமகிருஷ்ணரிடமும் வந்து சென்றவர்கள் சிலரே. அவர்களை அறியாமல் வெற்று வேதாந்தம் பேசியவர்களே பலர். அவ்வாறுதான் நாமும் நமது அறிவு என்னும் சிறிய அளவுகோலால் ஆன்மிகம் என்னும் ஆழ்கடலை அளக்க முயன்று, இயலாததாலே, பெரியோரைப் பழித்தும் இழித்தும் பேசி, அவர்களை அணுகிப் பயன்பெறாமல் இருக்கிறோம்.

ஏன், ஸ்ரீ ராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் இந்த மண்ணில் உலவிய காலத்தில் அவர்களை இகழ்ந்தவர்களும் அசட்டை செய்தவர்களும் இருக்கிறார்களே. அதனால் இழப்பு அவர்களுக்கா? 'காந்தம்கூடத் துருப்பிடிக்காத ஊசியைத்தான் இழுக்கும்' என்பார் ஸ்ரீ ரமண மஹரிஷி. நமது மன அழுக்குகளை அகற்றினால், ஞானிகளை இனங்காணலாம். தெய்வம் நமக்குள் தெரியும். பாசியை அகற்றினால்தானே பௌர்ணமி நிலவின் பிம்பம் குளத்தில் தெரியும்!

இன்னும் வரும்...

January 09, 2008

திருப்பள்ளியெழுச்சி - 1

திருச்சிற்றம்பலம்

பகுத்தறிவும் மனவுறுதியும்

திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் சேர்ந்து சைவத்தின் ஒன்பதாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருப்பள்ளியெழுச்சியில் வரும் திருப்பெருந்துறை என்பது ஆவுடையார் கோவிலே ஆகும். இங்கேதான் மாணிக்கவாசகர் சிவபெருமானிடமிருந்து உபதேசம் பெற்றது.

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!


'என் வாழ்வின் மூலாதாரப் பொருளான உன்னைப் போற்றுகிறேன். இதோ விடிந்துவிட்டது உன்னுடைய பாதங்கள் எப்படி தாமரைகளைப் போல இருக்கின்றனவோ, அவற்றையே ஒத்திருக்கும் இரண்டு தாமரைப் பூக்களால் உன் பாதங்களைப் பூஜிக்கிறேன்.

'அழகிய உன் திருமுகத்தில் மலர்கின்ற புன்னகையை எமது மனதில் பதித்துக் கொண்டோ ம். உனது திருவடியை வணங்குகிறோம்.

'கமல மலர்கள் மலரும் வளமான குளிர்ந்த நிலங்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவனே! காளைக்கொடி உடையவனே, என்னையும் உடையவனே, எம்பெருமானே! பள்ளியெழுவாயாக.'

சிறப்புப்பொருள்: இறைவன் உறங்குவது என்பது ஏது? ஆனாலும் அவன்மீது கொண்ட அன்பின் மிகுதியால் நாம் அவனுக்கு நிவேதனம் படைக்கிறோம்; பூக்களாலும், நகைகளாலும் அணிசெய்து பார்க்கிறோம்; இரவில் பள்ளியறையில் சேர்க்கிறோம், காலையில் துயிலெழுப்புகிறோம். இவற்றாலெல்லாம் மகிழ்வது இறைவனல்ல, நாம்தான். சிறு பெண்குழந்தைக்குத் தலை பின்னி, தாழம்பூ தைத்து, நெற்றிச் சூட்டி அணிவித்து, பட்டுப்பாவாடை சட்டை போட்டு, திருஷ்டிப் பொட்டு வைத்து அலங்கரிப்பதால் அந்தக் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தாயாருக்கு அதிக ஆனந்தம் ஏற்படுகிறதல்லவா, அதுபோல.

இத்தனை முயற்சிகளும் இறைவனைக் கண்விழிக்கச் செய்வதற்காக அல்ல. நமக்குள்ளே உறைந்திருக்கும் பரமாத்ம தத்துவத்தை விழிக்கச் செய்வதற்கு. சடங்குகளால் நிரம்பிய பூஜையிலிருந்து சாதகன் யோகம், தியானம், சமாதி, முக்தி என்னும் நிலைகளை எய்தவேண்டும்.

இந்தப் பாடலில் தாமரை முக்கிய இடம் வகிக்கிறது. இறைவனின் திருவடித் தாமரைகளை ஒத்திருக்கும் இரண்டு தாமரைகளால் முதலில் பூஜை நடக்கிறது. மீண்டும், திருப்பெருந்துறையின் செழிப்பான வயல்களிலும் அதே தாமரை காணப்படுகின்றது. அவையும் 'சேற்றிதழ்த் தாமரை'யாம். அவை இருப்பதென்னவோ சேற்றில்தான். ஆனால், அவற்றின் இதழ்களில் சேறு படிவதில்லை.

உலக வாழ்க்கையைப் பற்றிய தீவிர அலசலின் காரணமாக அதன் இயல்பை உணர்ந்து கொண்டவனுக்கு விவேகம் வருகிறது. விவேகம் என்பதுதான் உண்மையில் பகுத்தறிவு. 'இது சரி, இது தவறு; இதனால் மனிதன் உயர்கிறான், இது என்னைப் பாவக் குழியில் தள்ளுகிறது' என்று சரியாகப் பகுத்து அறியும் அறிவு. பகுத்தறிவின் காரணமாக 'வைராக்கியம்' வருகிறது. அதாவது, 'நான் என் ஆத்மா, குடும்பம், சமூகம் இவற்றுக்குச் செய்யும் நன்மையே புண்ணியம். இவற்றின் அழிவுக்கும் துன்பத்துக்கும் வழிகோலுவதே பாவம். எனவே எனக்கும் பிறருக்கு நீடித்த இன்பமும் உயர்வும் தரும் சொற்களையே பேசுவேன், செயல்களையே செய்வேன்' என்னும் மன உறுதி வருகிறது. இவ்வாறு தவறு தவிர்க்கும், நன்மை பெருக்கும் அந்த மன உறுதியே வைராக்கியம்.

இவ்வாறு முதலில் விவேகமாகிய பகுத்தறிவும், வைராக்கியமாகிய நன்மன உறுதியும் வந்துவிட்டால் அவன் தன்னைச் சுற்றியிருக்கும் சேற்றில் சிக்கித் தவிக்க மாட்டான். அதிலிருந்தே போஷாக்கை எடுத்துக்கொண்டு, தான் உயர்ந்து, ஆன்மீகத்தில் மலர்ந்து, மணம் வீசி, அந்தச் சேற்றுக்கும் மணம் சேர்ப்பான். இதுதான் 'சேற்றிதழ்த் தாமரை' நமக்குத் தரும் பாடம்.

(அருஞ்சொற்பொருள்: துணைமலர் - இரண்டு மலர்கள்; ஏற்றுயர் கொடி -> ஏறு + உயர் + கொடி - காளையைச் சின்னமாகக் கொண்ட உயர்ந்த கொடி)

இன்னும் வரும்...

January 07, 2008

திருவெம்பாவை - 20

திருச்சிற்றம்பலம்

நின் திருவடிகளே போற்றி, போற்றி!

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்


இந்த இறுதிப் பாடல் ஆடலரசனின் பாதங்களின் மேன்மையை மட்டுமே வெவ்வேறு வகையில் வழுத்திப் பாடுகிறது.

'புவனங்கள் அனைத்தின் மூலகாரணமும் நின் பாதமலர்கள்தாம்; அவற்றை எமக்கு அருளுவாய், போற்றி! செந்தளிர்களான நின் பாதங்களிலேயே அவையெல்லாம் சென்று ஒடுங்குகின்றன, அந்தப் பாதங்களை எமக்கு அருளுவாய், போற்றி!

'உயிர்களனைத்தும் உன் பொற்பாதங்களில் தோன்றி, உன் பூங்கழல்களிலேயே வாழ்வைத் துய்த்து, உன் இணையடிகளிலேயே சென்று முற்றுப் பெறுகின்றன; அப்பேர்ப்பட்ட பாதங்களுக்குச் சொல்கிறோம் போற்றி, போற்றி!

'திருமாலும் பிரம்மனும் எந்தப் பாத தாமரைகளைத் தேடியும் பெறமுடியவில்லையோ, அவற்றை நாம் போற்றுகிறோம்!

'எம்மை ஆட்கொண்டு முக்தியைத் தரும் பொன்மலர்ப் பாதங்களைப் போற்றிப் பாடி, மார்கழி நீராடுவோம், எம்பாவாய்!'

சிறப்புப்பொருள்: பிறவியென்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு மனிதருக்கு ஒரே துணையாக இருப்பது இறைவனின் பாதங்களாகிய புணைதான் என்றார் வள்ளுவர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.


அவனுடைய பாதங்களின் மஹிமை சொல்லற்கரியது. நம் கற்பனைக்கு எட்டுவதும் எட்டாததுமான எல்லாமுமே அவனது பாதங்களில் தோன்றி, இருந்து, மறைகின்றன. அதனால்தான் சிவபுராணம் பாடத் தொடங்கி 'நமச்சிவாய வாஅழ்க!' என்று சொன்ன கையோடு 'நாதன் தாள் வாழ்க' என்று திருவடியை வாழ்த்துகிறார். அது போதாதென்று, அடுத்த 14 அடிகளும் சிவனின் அடிகளை வாழ்த்துவனவாகவே இருக்கின்றன.

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஒரே இரவில் இறைவனின் திருப்பாத மஹிமையைப் போற்றும் 'பாதுகா சஹஸ்ரம்' என்ற 1008 சம்ஸ்கிருத ஸ்லோகங்களை எழுதினார். வைணவத்தில் இதற்கு மிக உயர்ந்த இடம் உள்ளது. எப்படிப் பாட முடிந்தது என்று கேட்டபோது, 'ஸ்ரீ பாதுகையின் கருணையிருந்தால் ஒரே இரவில் ஆயிரத்தெட்டு என்ன, லட்சத்தெட்டு ஸ்லோகங்களை எழுதலாம்' என்றாராம். அடி என்றால் பாதம். அவற்றின் கீழ் அமர்தல் பணிவையும் பக்தியையும் குறிக்கும். எனவேதான் பக்தரும், தொண்டரும் அடியவர் எனப்படுகின்றனர். இந்த மரபில் சுவாமிகளை 'ஸ்ரீபாதங்களவரு' என்று கன்னடத்திலும் சொல்லக் கேட்டதுண்டு. வடமொழி பயிலும் பிறமொழிகளிலும் சொல்வர்.

நந்திகிராமத்திலிருந்து ராமனின் சார்பாக 14 ஆண்டுகள் ஆட்சி செய்த பரதன், ஸ்ரீ ராம பாதுகைகளையே சிம்மாசனத்தில் ஏற்றிவைத்திருந்தான். முடிசூடுவதைவிட இறைவனின் அடிசூடுவது உயர்வானது என்பதை பரதனின் செய்கை நமக்கு உணர்த்துகிறது.

திருவெம்பாவை முற்றும்

January 06, 2008

திருவெம்பாவை - 19

திருச்சிற்றம்பலம்

சூரியன் எங்கே உதித்தால் எங்களுக்கென்ன!

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்
எம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்!


இந்தப் பாடல் பரிபூரண சரணாகதி நிலையைக் காட்டுகிறது.

'குழந்தையை உன் கையில் கொடுத்துவிட்டோ ம். இனி அவன் உன் பொறுப்பு!' என்று சொல்வது மிகப் பழமையான சொல். அந்தச் சொல்லை உன்னிடம் மிகுந்த அச்சத்தோடு மீண்டும் ஒன்று சொல்கிறோம் கேள்.

'உன் அடியாருக்கு மட்டுமே நாம் வாழ்க்கைப்படவேண்டும். எமது கை உன்னையன்றி வேறொருவருக்கும் தொண்டு செய்யாமல் இருக்கட்டும். இரவானாலும் பகலானாலும் உன் திருவுருவைத் தவிர வேறெதனையும் எமது கண்கள் காணாமல் இருக்கட்டும்.

'இங்கு இவற்றை எல்லாம் எங்களுக்கு நீ அருள்வாயென்றால் சூரியன் எந்தத் திசையில் எழுந்தாலும் எமக்கு என்ன ஆயிற்று!'

சிறப்புப்பொருள்: குழந்தைக்குத் தானாக எதுவும் செய்துகொள்ளத் தெரியாது. பசித்தாலும் உறக்கம் வந்தாலும் வலித்தாலும் அழும். ஒவ்வொரு வகை அழுகையின் பொருளைப் புரிந்துகொண்டு தாய்தான் அதற்கானதைச் செய்ய வேண்டும். அதேபோல, நோன்பிருக்கும் இந்த மகளிரும் சிவனைப் பரிபூரணமாகச் சரணம் அடைந்துவிட்டனர்.

அனைத்தும் அறிந்தவனான அவனிடம் போய், இந்தச் சிறிய விஷயத்தைச் சொல்லவும் அச்சமாக இருக்கிறது. என்றாலும், தமது திருப்திக்காக இவற்றைச் சொல்கின்றனர். முன்னரே,

உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்

என்று ஒன்பதாவது பாசுரத்தில் கூறியதைப் பார்த்தோம். அதோடு மட்டுமல்ல, அத்தகைய அடியவருக்குப் பணி செய்வதும் சிவத் தொண்டே. அதைத் தவிர வேறெதையும் எமது கைகள் செய்யக்கூடாது என்றும் வேண்டுகின்றனர்.

'இரவிலும் பகலிலும் உன் திருவுருவை மட்டுமே எமது கண்கள் காணட்டும்' என்பது மிக முக்கியமான பிரார்த்தனை. வேறெதையும் பார்க்காமல் ஒருவர் எப்படி இருக்க முடியும்?

Gitopadesam small

யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி |
தஸ்யாஹம் ந பரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி ||


என்று பகவான் கீதையில் (அத். 6: ஸ்லோ. 30) சொல்கிறாரல்லவா. இதன் பொருள் 'யார் என்னை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் என்னிடத்திலும் காண்கிறானோ அவன் காட்சியினின்றும் நான் மறைவதில்லை; அவனும் என் காட்சியினின்றும் மறைவதில்லை.'

இவ்வாறே, எதைப் பார்த்தாலும் அதில் உன்னைக் காணவேண்டும் என்பதாக இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அது சரணாகதியின் உச்சநிலை. அப்படிப்பட்ட நிலை வந்தபின்பு ஞானநிலை வெகுதூரத்தில் இல்லை. அதுமட்டுமல்ல, பகவானின் 'என் காட்சியினின்றும் அவர்கள் மறைவதில்லை' என்று வேறு உறுதியளிக்கின்றானே. அப்படி எப்போதும் இறைவனின் பார்வையை விட்டு நீங்காதவர்களுக்கு, சூரியன் எங்கெழுந்தால் என்ன!

இன்னும் வரும்...

திருவெம்பாவை - 18

திருச்சிற்றம்பலம்

கண்களால் பருகும் அமுதம்

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


'அருணாசலேஸ்வரனின் திருப்பாத கமலங்களில் தேவர்களெல்லாம் வந்து பணிகின்றனர். அவனது பாதத்தின் பேரொளியில் அவர்களது பொன்மகுடங்களில் பதிக்கப்பட்ட வைர வைடூரியங்களின் ஒளியும் மங்கிப் பொலிவிழக்கிறது. அது எப்படி இருக்கிறதென்றால் கண்களைக் கூசவைக்கும் சூரியன் வந்து இருளை அகற்றியதும் நட்சத்திரங்கள் மறைவதைப் போல உள்ளது.

'அவன் பெண்ணாகவும் ஆணாகவும் இருப்பதோடு இருபாலுமற்ற மானுடராகவும் இருக்கிறான். ஒளிபொருந்திய வானகமாகவும் பூவுலகமாகவும் இன்னும் பிறவாகவும் தானே மாறுபட்டு நிற்கிறான்.

'கண்களால் பருகத்தக்க அமுதமான அருணாசல மலையாக நின்றவனின் திருவடிகளைப் பாடியபடியே பூம்புனலில் பாய்ந்து நீராடலாம் வாருங்கள் தோழியரே!'

Aruna Giri
சிறப்புப்பொருள்: அருணாசலத்தை நினைக்க முக்தி. அங்கே பரமன் மலையாக நிற்கிறான். அந்த 'மலையின் புனிதமான பகுதியிலிருந்து ஒரு சிறிய கல்லை எனக்குத் தாருங்கள்' என்று வெளிநாட்டு அன்பர் ஒருவர் ரமணரிடம் வேண்டினார். 'மலைமுழுவதுமே புனிதமானதுதான், அப்படியிருக்க எந்தப் பகுதியிலிருந்து நான் எடுத்துத் தருவேன்' என்று ரமணர் விடையளித்தார்.

அதுவே தலம் அருணாசலம் தலம் யாவினும் அதிகம்
அது பூமியின் இதம் அறி; அதுவே சிவன் இதயப்
பதியாம் ஒரு மருமத் தலம் பதியாம் அவன் அதிலே
வதிவான் ஒளி மலையா நிதம் அருணாசலம் எனவே


என்று அருணாசல மகாத்மியம் கூறுகிறது. மதுரையில் ரமணருடன் பள்ளிக்கூடத்தில் படித்த ரங்கா பின்னாளில் கேட்டார், 'திருவண்ணாமலைக்குப் புறப்படுவதற்கு முதல்நாள் கூட என்னுடன் பேசி, விளையாடிக்கொண்டு இருந்தாயே. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லையே!' அதற்கு ரமணர் 'நான் திட்டமிட்டா அது நடக்கிறது என்று நினைத்தாய்' என்று பதில் கூறினார். அருணாசலத்தை 'கிரி உருவாகிய கிருபைக் கடல்' என்று வர்ணிக்கிறார் தமது அட்சரமணமாலையில். அது எப்போதுமே சித்தர்களை ஈர்த்துவந்திருக்கிறது.

Sri Ramana Maharishiஅந்த மகத்தான மலையாக நிற்கும் சிவபெருமான் கண்களால் பருகத் தக்க அமுதமாக இருக்கிறானாம். 'செவிநுகர் கனிகள்' என்று கம்பனும், 'தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாரதியும் பாடவில்லையா, அதைப்போல. அந்த அற்புத மலையை கிரிவலம் வருவது (எந்த நாளானும் பரவாயில்லை, பௌர்ணமியன்றுதான் என்றல்ல) பெருத்த ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சற்றே சந்தேகப் பிராணியான தேவராஜ முதலியார் கிரிவலத்தால் என்ன பயன் என்று திருப்பித் திருப்பிக் கேட்டதற்கு 'போய்த்தான் பாரேன், அப்புறம் புரியும்' என்றார் ரமணர். தனது தேகான்ம பாவத்தையே இழந்ததாகப் பின்னர் தேவராஜ முதலியார் எழுதுகிறார்.

இன்னும் வரும்...

January 05, 2008

திருவெம்பாவை - 17

திருச்சிற்றம்பலம்

Mukkannanமூன்றாம் கண்ணால் நமது மலங்களை எரித்துவிடுவான்

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்


'சிவந்த கண்களையுடைய திருமாலுக்கும், திசைக்கொன்றாக நான்கு முகம் கொண்ட பிரம்மனுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத மெய்ஞ்ஞானப் பேரின்பம் நமக்கு மட்டும் கிடைக்கும் படியாகச் செய்பவன் சிவன்.

'அவன் நமது மலங்களை அறுத்து, பாவை நோன்பு நோற்கும் இல்லந்தோறும் மணப்பொடிகள் விரவிய கூந்தலைக் கொண்ட உமையம்மையை எழுந்தருளச் செய்திருப்பதோடு, தனது சிவந்த தாமரை மலர்ப் பாதங்களைத் தந்தருளுகிறான்.

'அவனே விரூபாட்சன் என்று சொல்லப்படும் மூன்றாவது கண்ணைக் கொண்ட அரசன். அடியவர்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வை நல்கும் ஆரமுதம். எமது பெருமானும் அவனே. அவனது புகழைப் பாடியபடி, நமக்கெல்லாம் நன்மை வாய்க்கும்படித் தாமரைப் பொய்கையில் பாய்ந்து நீராடுவோம், வாரீர் தோழியரே!

சிறப்புப்பொருள்: பாவை நோன்பு நோற்கும் பெண்டிர் மலைமகளாம் பார்வதியைக் குறித்து நோன்பு செய்வர். எனவேதான் இப்பாடலில் 'இங்கு நம் இல்லங்கள் தோறும் கொங்குண் கருங்குழலி எழுந்தருளி' இருப்பதாகக் கூறுகின்றனர். இவ்வாறு செய்வதாலே தேவருக்கும் அரிக்கும் அயனுக்கும் கிட்டாத பேரின்பம் இவர்களுக்கு வாய்க்கிறதாம்.

மனிதப் பிறவி எடுத்துவிட்டால் அவர்களிடம் ஆணவம், கன்மம், மாயை என்றை மும்மலங்களும் அவர்தம் ஆன்மாவைச் சூழ்ந்து பரஞ்சோதியை அறியவிடாமல் தடுக்கின்றன. ஆனால் அவனைப் பாடி நோன்பிருந்தால் அவனே நம்மைக் 'கோதாட்டி' அதாவது நமது மலங்களை அகற்றி, பின் தனது செங்கமலப் பொற்பாதத்தைத் தந்தருளுகிறான்.

அவனது அங்கண்ணான விரூபாட்சத்தால் நம்மை நோக்கினால் அதிலிருந்து புறப்படும் ஞானாக்கினி நமது மலங்களை எரித்து நம்மிலிருக்கும் ஞானச்சுடரைப் பிரகாசிக்கச் செய்கிறது.

இன்னும் வரும்...

திருவெம்பாவை - 16

திருச்சிற்றம்பலம்

கேட்கு முன்னரே அருள் சுரப்பாள் தாய்

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.


மேகம் எழுந்து மழை பொழியும் அழகை உமையம்மைக்கு ஒப்பிட்டுப் பாடுகிறது இந்தப் பாசுரம்.

'மேகமே! நீ கடலை நெருங்கி அதன் நீரைச் சுருக்கி உன்னில் முகந்து எடுத்துக் கொண்டு, எம்மை உடையவளாகிய பார்வதி தேவியைப் போலக் கருமையடைகிறாய்.

'அவளுடைய மெல்லிடை போல உன்னில் மின்னல் தோன்றுகிறது. அம்மையின் சிலம்பைப் போல ஆர்த்து ஒலிக்கிறாய். அவளது புருவம் போல வானவில்லைக் காட்டுகிறாய்.

'எம்மை ஆளாகக் கொண்ட அம்மையின் பாகம் பிரியாத நாதனின் அன்பருக்கு, அவள் தானே முன்வந்து நாம் கேட்பதற்கு முன்னரே அருள் சுரந்து பொழிகிறாள். அவளது இனிய அருளைப் போல மழை பொழிகிறாய் நீ!'

Thayum Magavumசிறப்புக்குறிப்புகள்: 'ஆழிமழைக்கண்ணா' என்று தொடங்கும் திருப்பாவையில் கோதை நாச்சியார் இதோ போல மழை மேகத்தை கண்ணனுக்கு உவமித்துச் சொல்லும் அழகைக் காண முடியும். நாம் கேட்டு மழை வருவதில்லை. அது தானே வந்து வாழ்விக்கிறது. அதேபோல அன்னையும் நாம் கேளா முன்னமே வந்து நமக்கு ஞானப்பால் ஊட்டி அருளுகிறாள். காழியூர் குளக்கரையில் நின்று அழுத ஞானசம்பந்தப் பிள்ளைக்கு அருள்கூர்ந்து பால் புகட்டியது அவள் கரமல்லவா?

கரையில் நிற்கும் மரத்தில் கட்டிய தூளியில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும். தாய் வயலில் நடவு செய்துகொண்டிருப்பாள். உச்சி வெயிலைப் பார்த்தே அவளுக்குக் குழந்தையின் பசி நேரம் தெரியும். வரப்பேறிப் போய்ப் பாலூட்டி வருவாள். குழந்தை அழுதுதான் கூப்பிட வேண்டும் என்பதில்லை. அன்னையின் அன்பு அத்தகையது. அவளைவிட உலகநாயகியின் பரிவு பெரியதாம்!

'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து' தானே முன்வந்து அருள் சுரப்பவள் அவள்.

இன்னும் வரும்...

திருவெம்பாவை - 15

திருச்சிற்றம்பலம்

பக்தரைப் பித்தராக்கும் பித்தன்

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


இப்போது அதீத பக்திவயப்பட்ட ஒருவளின் அடையாளங்கள் சொல்லப்படுகின்றன.

'மார்பகத்தில் அணிந்த கச்சினைத் தாண்டியும் பல நகைகளை அணிந்தவர்களே! இவள் 'எம்பிரான், எம்பிரான்' என்றபடி அவன் புகழை வாய் ஓயாமல் கூறுகிறாள். அதனால் மனதிலே ஏற்பட்ட இன்பத்திலே கண்ணில் அடக்கமுடியாமால் நீர் பெருகி வழிகிறது.

'நிலத்திலே ஒருமுறை வீழ்ந்து நமஸ்கரிக்கிறாள். ஆனால், பிற தேவர்களை இவள் வணங்க மாட்டாள்.

'இவ்வாறு பேரரசனான சிவபெருமான் மீது பித்துப் பிடித்துப் போகும்படியாகச் செய்யும் அந்த ஞானத்திரளின் தாளை வாயாரப் பாடியபடி, அழகான பொய்கையில் பாய்ந்து நீராடலாம், வாருங்கள்!'

சிறப்புப்பொருள்: பக்தி வயப்பட்டவர்கள் தம்மை அறியாமல் உறக்கத்திலும் விழிப்பிலும் இறைவனி திருநாமத்தைக் கூறிய வண்ணம் இருப்பர். எந்த ஒன்றையும் எண்ணியபடியே இருந்தால் அதைப் பற்றிய நுண்ணுணர்வு மாறிவிடும். அதாவது மரத்துப் போய்விடும். ஆனால் இறைவன் திருநாமமோ கூறக்கூற அதிக மகிழ்ச்சியைத் தருவதோடு, ஒவ்வொரு முறையும் கண்களில் நீர் துளிர்த்துவிடுக்கிறது. மனத்தை உருக்குவதால் இது நிகழ்கிறது.

Ramakrishna Paamahamsaதனக்கென்று எந்தத் தேவையும் இல்லாத ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் எப்படி பவதாரிணி மாதாவின் சன்னிதியில் கண்ணீர் பெருக்கினார்! அதுமட்டுமா? அழிந்துபோகும் செல்வத்துக்காகவும் மனைவிக்காகவும் மக்களுக்காகவும் கண்ணீர் பெருக்குகிறீர்கள், அதில் பத்தில் ஒரு பங்கை இறைவனுக்காகப் பெருக்குங்கள், இறைவனைக் காணலாம் என்று கூறினாரே.

நாதன் நாமமாகிய நமச்சிவாயம் ஒருவரைக் 'காதலாகிக் கசிந்து கண்ணீர்' மல்க'ச் செய்யும் என்று ஞானசம்பந்தப் பெருமானும் சொல்கிறாரே. அதுமட்டுமா,

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே


'நானும் எனது நெஞ்சும் என் பக்தியும் எவ்வளவோ பொய்மை கொண்டனவாக இருக்கின்றன. நான் தீவினை நிரம்பியவனாக இருக்கிறேன் ஆனாலும் நான் மனமுருகி அழுதால், உன்னைத் தருகிறாய்' என்று அழுகையின் பெருமையை மாணிக்க வாசகர் கூறுகிறார்.

அழுவது பேடித்தனம் என்றொரு கருத்து உண்டு; அது ஆண்மைக்கு அழகல்லவாம். ஆனால் இந்த நோக்கில் 'ஆண்மை' என்பது அகங்காரத்தைக் குறிக்கிறது. இறைவனின் சன்னிதியில் அகங்காரத்தை விடும்போது அழுவது சாத்தியமாகிறது. அகங்காரம் நீங்கும்போது சரணாகதி சாத்தியமாகிறது.

இன்னும் வரும்...

January 04, 2008

திருவெம்பாவை - 14

திருச்சிற்றம்பலம்

நம்மை மாறுபட்டவராக வளர்த்தாள் அன்னை!

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.


'நாம் எல்லோரும் குளிர்ந்த நீரில் குளிக்கிறோம். அப்போது நமது காதிலுள்ள குழைகள் ஆடுகின்றன; அழகிய நகைகளை அணிந்திருக்கிறோமே, அவை ஆடுகின்றன; நமது பூச்சரம் அணிந்த கூந்தல் அசைகிறது; பூச்சரங்களை மொய்த்த வண்டுகள் ஆடுகின்றன.

'இவ்வாறு நீராடுகையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற திருமறைப் பொருளான நாதனைப் பாடுவோம். அவன் திருமறையின் பொருளாக நின்ற விதத்தைப் பாடுவோம். அவனே சகலத்துக்கும் ஆதியும் அந்தமும் ஆன வகையினையும் பாடுவோம்.

'அவனை மட்டுமா பாடுவோம். தனது திருக்கையில் வளைகளை அணிந்த உமையம்மை நம்மை மட்டும் தனித்துவம் கொண்டோ ராக வேறுபடுத்தி வளர்த்தெடுத்தாளே, அவளது திருபாதங்களின் மேன்மையைப் பாடியபடியே நீராடலாம், வாருங்கள்'

சிறப்புக்குறிப்பு: மனிதனையும் ஒரு விலங்கு என்பது விஞ்ஞானம். மனிதனுக்குள்ளிருக்கும் விலங்குகளை ஒடுக்கி, தெய்வமாக்குவது மெய்ஞ்ஞானம். இவ்வாறு தெய்வத்தன்மையை அடைவது மனிதனுக்கே உரிய பண்பு. தேவருக்கும் இயல்வதல்ல. அந்த மனிதருள்ளும் ஒரு சிலரே இவ்வுண்மையை உணர்ந்து அகத்தேடலில், தன்னுள்ளே தெய்வத் தேடலில் இறங்குகின்றனர். இறையுணர்வு இல்லாமல், இரைதேடி, புகழ் தேடி, செல்வம் தேடி, உடலின்பம் தேடி, அவற்றையே வாழ்வின் நோக்கமாகக் கொண்டு எண்ணற்றோர் வாழ்க்கையை விரயமாக்குகின்றனர். 'நெஞ்சில் ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ?' என்று பாரதி கூறியதும் இதைத்தான்.

Swami Vivekananda'தினந்தோறும் கோடிக்கணக்கான புழுபூச்சிகள் தோன்றி மறைகின்றன. நாமும் அவற்றைப் போலத் தோன்றி மடிந்து என்ன பயன்?' என்று வீரத்துறவி விவேகானந்தன் கேட்பது அதனால்தான். அவ்வாறு சிவனையே போற்றும் செம்மனம் கொண்டவராகத் தாம் இருப்பதில் இவர்களுக்கு மகிழ்ச்சி. இதனையே 'பேதித்து வளர்த்தெடுத்த பெய்வளை' என்று புகழ்கின்றனர் இந்தப் பூவையர்.

இன்னும் வரும்...

திருவெம்பாவை - 13

எங்கள் பிராட்டியும் எம்பிரானும் ஒருங்கிருந்தாற் போலக்
காட்சி தரும் தடாகம்


திருச்சிற்றம்பலம்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


'இந்தப் பாடல் சிவனும் உமையும் இணைந்திருக்கும் கோலம் தடாகத்தைப் போலவே காட்சி தருவதாக விவரிக்கிறது. எவ்வாறு இந்த விவரணை பொருந்தும் என்பதைப் பார்க்கலாம்:

கரிய குவளை மலரும் சிவந்த தாமரையும் அருகருகே இருப்பது கருநிறம் கொண்ட உமையையும் சிவந்த எம்பெருமானையும் போல இருக்கிறது.

அர்த்தநாரி வடிவத்தில் இருவரது அங்கமும் உருகி ஒன்றாய்ப் பிணைந்தாற்போலக் காணப்படுகிறது. தடாகத்திலோ அங்கங்கு சிறு பறவையினம் காணப்படுகின்றது. சிவன் பாம்பைக் கழுத்தில் அணிந்திருக்கிறான். தடாகத்திலோ ஒலி எழும்பிய வண்ணம் இருக்கிறது.

அம்மையப்பனின் அருளில் மூழ்கித் தமது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் அடியவர் கழுவிக்கொள்கின்றனர். பொய்கையில் முழுகுபவரின் உடல்மீது இருக்கும் அழுக்கு நீங்குகிறது.

நமது சங்கு வளையல்கள் ஒலியெழுப்ப, அவ்வொலியுடன் சேர்ந்து சிலம்பும் ஒலிக்க, நமது மார்பகங்கள் பொங்கியெழ, இத்தகைய பொய்கையில் நீராடுவோம், வாரீர்!'

காணுமிடமெல்லாம் எம்பிரானும் எம்பிராட்டியும் தென்படுவது அன்பரின் பக்தி உள்ளத்தின் இயல்பு. இவர்கள் விரதம் இருந்து, நல்லொழுக்கில் நின்று, இறைவனையே சிந்தித்து, சிவ மஹிமையில் திளைக்கும் இந்த உள்ளங்களுக்கு குவளையும் கமலமும் நிரம்பிய பொய்கையும் அம்மையப்பனாகவே தெரிகிறது.

அத்தகைய உயர்ந்த பாவத்துடன் அதில் முழுகி எழுவதனால் தமக்கும் மலபரிபாகம் (மும்மலம் நீங்குதல்) வாய்க்கப்பெறும் என்று அவர்கள் நம்புகிறார்கள். 'பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே' என்று பாரதி பாடினான். 'நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்' என்று தற்கால உளவியலும் சான்று தருகிறது.

அத்தகைய உயர்ந்த பக்தியை மதித்துத்தான் திருமால் ஒரு தூணிலிருந்தும் வெளிப்பட்டான். ஆழ்ந்த நம்பிக்கை, பக்தி இவற்றால் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருளைக் காண முடியும்.

(அருஞ்சொற்பொருள்: அங்கங்குருகினத்தால் -> அங்கு + அம் + குருகு + இனத்தால்; அங்கங்கு + உருகின(த்)தால்); சங்கம் - சங்கினால் ஆன வளையல்)

January 02, 2008

திருவெம்பாவை - 12

திருச்சிற்றம்பலம்

சிவனென்னும் தீர்த்தத்தில் நீராடுவோம்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.


'திரும்பத் திரும்ப வந்துவிடுகிற பிறவி என்னும் துயரம் தீருவதற்காக நாம் பேரொலி எழுப்பியபடி நீராடும் அந்தப் புனிதநீரே சிவபெருமான்தான். அவனோ தில்லைச் சிற்றம்பலத்தில் கையில் தீச்சட்டியை ஏந்தியபடி நர்த்தனம் ஆடுபவனாக இருக்கிறான்.

அவன் வானையும் மண்ணையும் பிறவுலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் மறைத்தும் அருளியும் செய்வதான ஐந்தொழில்களையும் விளையாட்டாகச் செய்துவிடுகிறான்.

நாம் பேசியபடியே, நமது கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்க, இடுப்பிலுள்ள மேகலைகள் சத்தமிட, நமது கூந்தலில் சூட்டியுள்ள பூக்களில் வண்டுகள் முரல, மலர்வனத்தால் சூழப்பட்ட இந்தப் பொய்கையில் நீந்தி விளையாடுகிறோம். அதே சமயத்தில் நம்மை உடையவனான சிவபெருமானின் பொற்பாதங்களையும் புகழ்ந்து பாடியபடியே இந்தப் பெருஞ்சுனையில் நீராடலாம், வாருங்கள்.'

சிறப்புக்குறிப்புகள்: இதற்கு முந்தைய பாடலில் நோன்பிருக்கும் மகளிர் ஒரு சுனையில் முகேரென ஒலியெழும்படிப் பாய்ந்து குளிப்போம் என்று பேசினர். இந்தப் பாடலிலோ, தாம் அவ்வாறு முழுகும் அந்தத் தீர்த்தமே சிவபெருமான்தான் என்று கூறுகின்றனர். தீர்த்தன் என்றால் மரியாதைக்குரியவர், போற்றத் தக்கவர் என்று பொருள். கிரி, சாகர் என்றெல்லாம் சில சன்யாசிகள் தமது பெயரில் வைத்துக்கொள்ளுவதைப் போல, தீர்த்தர் என்பதும் ஒரு சன்யாச பரம்பரையின் பிற்பெயர். ராமானந்த தீர்த்தர் என்பதுபோல.

thiruneeruதீர்த்தமாடுதல் என்பது ஹிந்துப் புனித சடங்குகளில் ஒன்று. ஒவ்வொரு புனிதத் தலத்திலும் ஒரு தலவிருட்சம், தீர்த்தம் இருப்பது வழக்கம். 'தண்ணீரில் முழுக்குப் போடுவதால் தெய்வ தரிசனம்' கிடைக்குமா என்றெல்லாம் விதண்டா வாதம் பேசுவது அதிகமாகிவிட்டதால், இன்றைக்குப் பல புனித தீர்த்தங்கள் பராமரிப்பற்று, பாசியும் அழுக்கு நீரும் சேருவதோடு அதன் மேற்பரப்பில் குப்பையும் பிளாஸ்டிக் கூளமுமாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், வாய்ப்பாடு படிப்பதால் ஏழு வயதுப் பையனுக்கு என்ன பயன் என்று கேட்பதைப் போன்றதே இந்த வாதமும். ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையில் மதத்தின் சம்பிரதாயங்களும் சடங்குகளும் நெறிப்படுத்துகின்றன. ஒரு போலீஸ்காரர் எதற்காக சீருடை அணியவேண்டும்? அவர் எதற்காக மீசை வைத்துக்கொண்டு, கையில் கம்பு ஏந்த வேண்டும்?

Photobucketதிருநீறு, திருமண், கோபி, சந்தனம், குங்குமம் போன்ற சமய அடையாளங்கள் நமக்கும் பிறருக்கும் நமது அடையாளத்தைக் காண்பிக்கின்றன. நமது பக்தியும் சாதனையும் உறுதிப்படும்வரை நாம் தொடர்ந்து சமயத்தின் புறச்சின்னங்களை அணிவதும், அவற்றை அணிவதற்கான நமது உரிமையை நிலைநிறுத்திக்கொள்வதும் மிக அவசியம். நாம் செய்வதோடு, நமது இல்லத்தில் குழந்தைகளுக்கும் இதை உணர்த்த வேண்டும். நாமும் ஒரு ரமணராகவோ, ராமகிருஷ்ண பரமஹம்சராகவோ மலர்ந்தபின் புறச்சின்னங்களைத் துறந்துவிடலாம்.

(அருஞ்சொற்பொருள்: குவலயம் - உலகம்)