April 04, 2020

திருமூலர்: பிராணாயாமம் தரும் களிப்பு



போதைகளில் பலவகை உண்டு. அரசியல், அந்தஸ்து, பணம், அழகு, பதவி, சொத்து, தங்கம், மது எனப் பலவகை போதைகளில் திளைக்கும்போது மனிதனுக்குத் தலைகால் தெரியாது. துச்சாதனனைப் பற்றிச் சொல்லவரும் பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் “கரைதத்தி வழியும் செருக்கினால், கள்ளின் சார்பின்றியே வெறி சான்றவன்” என்கிறார். அவனுக்குத் தனது செருக்கே போதைதரப் போதுமானதாக இருக்கிறதாம்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள், “Don't I look stoned" (நான் போதையில் இருப்பதுபோல் தோன்றவில்லையா?) என்று கேட்டுவிட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதைப் பார்க்கவே நமக்கு போதை வரும். நாம் எல்லோருமே போதையைத் தாண்டிய பெருங்களிப்புத் தருகின்ற அந்த மருந்தை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அதை அறியாமல்தான் வெளியே எதையெதையோ தேடிப் பிடித்துத் தின்றும், புகைத்தும், அருந்தியும் சிறிது நேர போதையில் ஆழ்த்திக்கொண்டு, அறிவையும் மனதையும் உடலையும் கெடுத்துக்கொள்கிறோம்.

அப்படியல்லாமல், ஆனந்தக் களிப்பைப் பெற நமக்குள் வழியுண்டு. அதைப்பற்றி மிக அழகாகத் திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்:

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே

(திருமந்திரம், மூன்றாம் தந்திரம் 5. பிராணாயாமம், பாடல் 3)

பறவையைவிட வேகமாகச் செல்லும் குதிரை என்பது நமது மூச்சு. அதனை (பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியால் கட்டுப்படுத்தி) அதன்மேல் சவாரி செய்தால், நாம் கள் உண்ணாமலே நமக்குப் பெருங்களிப்பை (பிராணாயாமம்) தரும். கள் உண்டவனோ தள்ளாடி நடப்பான். ஆனால் பிராணாயாமப் பயிற்சி மேற்கொண்டவன் துள்ளித் துள்ளி உற்சாகமாக நடப்பான். போதைப்பொருள் உட்கொண்டவன் சிறிதுநேரம் வானத்தில் பறப்பதுபோல உணர்ந்தாலும், அது இறங்கியவுடன் மிகுந்த சோர்வுக்கும் தளர்ச்சிக்கும் ஆளாவான். ஆனால், பிராணாயாமத்தால் ஏற்படும் களிப்பு ஒருவரிடம் இருக்கும் சோம்பலை நிரந்தரமாக அகற்றிவிடும்.

உள்ளதைத்தான் சொல்கிறார் திருமூலர். ஆனால், உணர்வுடையோர் மட்டுமே அதைப் புரிந்துகொள்வர். புரிந்துகொள்வதுதான் தொடக்கம். பின்னர் அதைக் கற்கவேண்டும். கற்றபின் செய்யவேண்டும்.

அது நம்முள்ளிருக்கும் பேரானந்தத்தின் ஊற்றுக்கண்ணைத் திறக்கும் வழிகளில் ஒன்று.

இன்னும் நிறையப் பலன்கள் உண்டு. இறைவன் சித்தம் இருந்தால் மேலும் பார்க்கலாம்.

No comments: