December 07, 2016

ஆனந்தரின் அழகு


புத்தர் மெய்ஞானம் அடைந்த அதே வைகாசி பவுர்ணமியன்று பிறந்தவர் ஆனந்தர். புத்தருக்குப் பல துன்பங்களை ஏற்படுத்திய தேவதத்தனின் இளைய சகோதரர்.

புத்தர் இம்முறை கபிலவாஸ்துவுக்கு வந்தபோது அங்கிருந்த ஆனந்தர் புத்தருக்குக் கவரி வீசினார். பின்னர் பாத்ரர், அனிருத்தர் ஆகிய இளவரசர்கள் சன்னியாசம் மேற்கொண்ட அதே சந்தர்ப்பத்தில் ஆனந்தரும் துறவறம் ஏற்றார்.

ஆனந்தரின் முயற்சியால்தான் புத்தரின் வளர்ப்புத் தாயான மஹாபிரஜாபதி தேவி உட்பட்ட ஐந்நூறு பெண்கள் புத்த சங்கத்தில் சேரமுடிந்தது என்றும், பிட்சுணிகளுக்கென்று ஒரு பிரிவு ஏற்பட்டது என்றும் முன்னரே பார்த்தோம்.

ஆனந்தர் மிக்க அழகுள்ள இளைஞர். இது அவருக்குச் சில சங்கடங்களை உண்டாக்கியது. ஒருமுறை அவர் சிராவஸ்தியில் பிட்சை எடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் தாகமாக இருந்தது. வழியில் ஒரு கிணற்றைப் பார்த்தார். அதிலிருந்து ஒரு கிராமத்துப் பெண் நீர் இறைத்துக்கொண்டிருந்தாள்.

'எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடம்மா' என்று ஆனந்தர் கேட்டார்.

'மரியாதைக்குரியவரே, நான் குடியானவப் பெண். உங்களுக்கு எதுவும் கொடுக்கும் தகுதி எனக்கில்லை' என்றாள் ஆனந்தரை அடையாளம் கண்டுகொண்ட அவள்.

'பெண்ணே, நான் கேட்டது தாகத்துக்குத் தண்ணீரே அன்றி உன் குலத்தை அல்ல. ஒரு பிட்சுவுக்கு அத்தகைய வேறுபாடுகள் பொருட்டல்ல.'

ஆனந்தரின் தோற்றமும் அன்பான பேச்சும் அவளை மிகவும் கவர்ந்துவிட்டன. மறுநாள் ஆனந்தர் அதே வழியாகப் போனபோது அவள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஆனந்தருக்கும் சிறிதே சலனம் ஏற்பட்டது. உடனே அவர் மனதில் புத்தரைத் தியானிக்க, மீண்டும் மனவுறுதி ஏற்பட்டது.

அடுத்த நாள் நகரத்துக்குத் திடமான மனதோடு ஆனந்தர் பிட்சைக்குச் சென்றார். இன்றைக்கு அந்தப் பெண் தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். ஆனந்தருக்காகத் தெருவிலேயே காத்திருந்தாள். அவர் வந்ததும் அவரைப் பின் தொடர்ந்தாள். ஆனந்தர் என்ன சொல்லியும் கேட்கவில்லை.

என்ன செய்வதென்று அறியாத ஆனந்தர் புத்த விஹாரத்துக்குத் திரும்பிப் போய், நடந்ததைப் புத்தரிடம் விவரித்தார். தன்னிடம் அந்தப் பெண்ணை அழைத்து வரும்படி புத்தர் கூறினார்.

புத்தர் தன்னைப் பார்க்க விரும்புகிறார் என்ற செய்தி வந்ததும் சற்றே அவள் அதிர்ச்சி அடைந்தாள். ஆனாலும் மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு அவர்முன் போனாள். 'பெண்ணே, ஆனந்தர் ஒரு பிட்சு. நீ அவருக்கு மனைவியாக வேண்டுமென்றால் நீயும் ஒரு வருடகாலம் பிட்சுணியாக இருக்க வேண்டும். சம்மதமா?' என்று புத்தர் கேட்டார்.

'பெரியோனே, எனக்குச் சம்மதம்' என்றாள், புத்தர் இவ்வளவு எளிதில் ஒரு வழியைச் சொன்னதை நம்பமுடியாமல்.

அந்தப் பெண்ணின் பெயர் மாதங்கா. அவள் தன் வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சொல்லித் தனது தாயை அழைத்து வந்தாள். தாய்க்கும் இந்த ஏற்பாட்டில் சந்தோஷம்தான்.

மாதங்கா தன் தலையை மழித்துக்கொண்டு பிட்சுணி ஆனதோடு மட்டுமல்லாமல், தவறாமல் புத்தரின் அறவுரைகளைக் கேட்டுக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு நாள் கழியும் போதும் அவளது மனம் பண்படத் தொடங்கியது. ஆறுமாதங்கள் ஆவதற்குள்ளாகவே காதலின் பின்னே அலைந்த தனது நடத்தை வெட்கப்படத் தக்கது என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

ஆசைகள், வெறுப்பு, மயக்கம், அகந்தை, தீய காட்சி என்ற இந்த ஐந்தையும் தவிர்க்க வேண்டும் என்றும், இவையே துன்பத்துக்குக் காரணம் என்பதையும் புத்தர் எப்போதும் விளக்கிவந்தார். இவற்றை அகற்றும்போதே மனம் தூய்மையாகும், வாழ்வில் அமைதி வரும் என்றும் கூறினார்.

தான் ஆனந்தர்மீது கொண்டிருந்த தீவிர மோகம் ஒருவகைக் குற்றமே என்பதை உணர்ந்த மாதங்கா புத்தரின்முன் ஒருநாள் மண்டியிட்டு, 'ஐயனே, நான் விழிப்படைந்தேன். முன்போல நான் அறியாமையில் இல்லை. அதற்குத் தங்களுக்கு நன்றி கூறுகிறேன். தாங்கள் என்போன்றவர்களுக்காக எவ்வளவு உழைத்து இந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள்! நான் இனி பிட்சுணியாகவே என் வாழ்நாளைக் கழிக்க விரும்புகிறேன்' என்று கூறினாள்.

ஆனந்தருக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய விபத்தை புத்தர் எப்படி மாதங்காவுக்கு நல்ல வழியாக மாற்றினார் என்பது புத்த சங்கத்தினருக்கே ஒரு படிப்பினையாக அமைந்தது.

- புத்தம் சரணம் நூலிலிருந்து, கிழக்கு பதிப்பகம் வெளியீடு

No comments: