June 07, 2015

அருணாசல அற்புதம்-10: பகையறியாத பகவான்



நாம் ஒரு கார் வாங்க விரும்புவதாக வைத்துக்கொள்வோம். மிகவும் அலசி ஆராய்ந்து நமது பட்ஜெட்டுக்கேற்ற, தேவையான வசதிகளை உடைய ஒரு காரையும் தேர்ந்தெடுத்துவிட்டோம். அதற்கு ஒரு வங்கியில் கடன் கேட்கிறோம். அங்கே எண்ணற்ற படிவங்களை நிரப்பி, அவர்கள் கேட்கும் சான்றிதழ்களைக் கொடுத்து, நமக்கு உத்தரவாதம் தருபவர்களைப் பிடித்து, நடையாய் நடந்து கடன்பெறுகிறோம். அந்த வங்கி அதிகாரிமீது கோபம்கூட வருகிறது. அவர் தானாக எதையும் கேட்கவில்லை, வங்கி நிர்ணயித்த டாகுமெண்டுகளைத்தான் கேட்கிறார். ஆனாலும் நமக்கு எரிச்சலாக இருக்கிறது. ஏதோ நமது காருக்கும் நமக்கும் இடையே அவர் ஒரு தடங்கலாக நிற்பதுபோலத் தோன்றுகிறது. ஒருபக்கம் கார்மீதான ஆசை, மறுபக்கம் இந்தக் கடன்வாங்கும் வழிமுறைபற்றிய வெறுப்பு.

விருப்பு-வெறுப்பு, நட்பு-பகை என்று இத்தகைய எதிரெதிர்க் கயிறுகளின் இழுப்பில் சிக்கிக்கொண்டு மனிதன் அல்லாடுகிறான். எது தனது ஆசைக்குக் குறுக்கே வருகிறதோ அதை அவன் அழிக்கவேண்டுமென்று நினைக்கிறான். எந்த ஒன்றின் ஈர்ப்பிலிருந்து மனிதன் தப்பிவிடுகிறானோ அதற்குப்பின் அதனால் வரும் துன்பம் அவனுக்கு இல்லை. அதைத்தான் வள்ளுவரும்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

என்று அழகாகக் கூறினார். விருப்போ வெறுப்போ இல்லாதபோது பகையும் இல்லையென்று ஆகிவிடுகிறது. அங்கே வேற்றுமைகடந்த நேயம் ஒன்றே நிலவுகிறது. இதை பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் வாழ்வில் பல சம்பவங்கள் விளக்குகின்றன.

அப்போது பகவான் குருமூர்த்த மடாலயத்தில் இருந்தார். அதற்கு எதிரே சில புளியமரங்கள் இருந்தன. ஏதாவதொன்றின்கீழ் பகவான் உட்காருவது வழக்கம். அங்கே புளியம்பழங்களைத் திருட ஒருகும்பல் வந்தது. இளம்ரமணரோ பேசாது உட்கார்ந்திருந்தார். துஷ்டர் கும்பல் என்பதால் தாம் வந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போவதைவிட பிறருக்குத் துன்பம் தருவதில் அதிக ஆர்வம். ஒருவன், “டேய், எருக்கஞ்செடி ஒண்ணைப் பிடுங்கிக்கிட்டு வா. எருக்கம்பாலை ஊத்தினாலாவது இவன் வாயைத் தொறந்து பேசுறானான்னு பாப்போம்” என்றான். எருக்கம்பால் மிகவும் விஷத்தன்மை கொண்டது. கண்ணையே குருடாக்கிவிடக் கூடும். வேறொருவராக இருந்தால் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு ஓடியிருப்பார். எதைப்பற்றியும் சிந்தையற்ற பகவான் அதற்கும் அஞ்சாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்த மற்றொருவன், “இவனைப்பற்றி நமக்கென்ன கவலை. அவன்பாட்டுக்கு இருக்கட்டும். நாம் வந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போகலாம்” என்று கூறவே அவர்கள் போய்விட்டனர்.

அதனால்தான் உலகையெல்லாம் வென்றவனையல்ல, தனது புலன்களை வென்றவனையே ‘தீரன்’ என்று சொல்கிறது ஸ்ரீமத் பகவத்கீதை.

ஒரு சமயம் அண்ணாமலைக்குத் தோற்றப்பொலிவும், கல்வியும், வாய்ச்சாதுரியமும் கொண்ட இளந்துறவி ஒருவன் வந்தான். பெயர் பாலானந்தா. தன்னை ஒரு மகாயோகி எனக் கூறிக்கொண்டான். அப்போது பகவான் வயதில் மிகவும் இளையவர். மெய்யான ஞானியான பகவான் தனக்குச் செய்யப்படும் தீங்கைக்கூடப் பொருட்படுத்தாதவர் என்று முன்னர் பார்த்தோம். மௌனியும்கூட. இந்தக் காணற்கரிய குணநலத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தான் பாலானந்தா. பார்ப்போரிடமெல்லாம் ரமணரைத் தனது சீடன் என்று சொல்லிக்கொள்வான். “இந்த பாலசுவாமிக்குத் தின்ன இனிப்பு பட்சணங்கள் கொடுங்கள்” என்று சற்றும் நாணமின்றிக் கேட்பான். “குழந்தாய் வெங்கட்ராமா (அதுதான் ஸ்ரீ ரமணரின் இயற்பெயர்) இதோ இந்தத் தின்பண்டங்களை எடுத்துக்கொள்” என்று ‘தன் சீடனுக்கு’ கட்டளையிடுவான்.

அத்தோடு நிற்கவில்லை. ரமணர்மட்டும் தனியாக இருந்த ஒருநாளில் “நான்தான் உன் குரு என்று சொல்லி எல்லோரிடமும் பணம் பறிப்பேன். இதில் உனக்கென்ன நஷ்டம்? நான் சொல்வதை யாரிடமும் மறுத்துச்சொல்லாதே” என்று வெட்கமின்றிக் கூறினான். இப்படி அவனுடைய அடாவடித்தனமும் அக்கிரமும் பெருகிக்கொண்டே போனது. ஓரிரவு அவர்கள் தங்கியிருந்த விருபாட்ச குகையின் வெளிமுற்றத்திலேயே மலம்கழிக்கும் அளவுக்குப் போய்விட்டது அவனது திமிர். விடியற்காலையில் அவன் கிளம்பிப் போய்விட்டான். குகைக்குள் பாலானந்தாவின் சரிகைக் கரையிட்ட பட்டு அங்கிகள் உட்படப் பல ஆடம்பரமான மாற்றுடைகள் இருந்தன. அங்குவந்த பழனிஸ்வாமி முற்றத்தில் இருந்த அசுத்தத்தை முதலில் கழுவி அகற்றினார். பாலானந்தாவின் உடைகளைத் தூக்கி வெளியே எறிந்தார். பகவானை அழைத்துக்கொண்டு வெளியே போய்விட்டார். போகுமுன் குகையின் வாயிற்கதவைப் பூட்டிவிட்டார்.

வெகுதூரம் சென்று ஒரு தீர்த்தத்தில் பகவான் நீராடினார். இருவரும் திரும்பி வந்தனர். பாலானந்தாவுக்கு ஒரே கோபம். “என்னுடைய ஆடைகளை நீ எவண்டா தொடுவது?” என்று பழனிஸ்வாமி மேல் பாய்ந்தான். “இந்தப் பழனிஸ்வாமியை இந்த க்ஷணமே துரத்து” என்று பகவானுக்குக் கட்டளையிட்டான். ஆனால் பகவான் பதிலே கூறவில்லை. மூர்க்கனான பாலானந்தா தன்வசமிழந்து ரமணர்மீது காறி உமிழ்ந்தான். ரமணரோ, உடனிருந்த பிற சீடர்களோ எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்தனர். இந்தச் செய்தி கீழேயிருந்த பக்தர் ஒருவரின் செவிக்கு எட்டியது. அவர் மலையேறி ஓடோடி வந்தார். “எங்கள் சுவாமிமீது துப்பத் துணிந்த களவாணிப் பயல் எவண்டா?” என்று கூறி பாலானந்தாமீது மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாய்ந்தார். மிகவும் சிரமப்பட்டு அவரை மற்றவர்கள் தடுத்தி நிறுத்தினர்.

தான் எல்லை மீறிவிட்டதை பாலானந்தா உணர்ந்தான். இனி திருவண்ணாமலையில் இருப்பது தனக்கு நல்லதல்ல என்பதைப் புரிந்துகொண்டான். “ஆன்மீகத்துக்கு இந்த அருணாசலம் சரியான இடமல்ல” என்று மிகுந்த திமிரோடு கூறிவிட்டு ரயில் நிலையத்துக்குப் போனான். அப்போது ரயில் மூன்று வகுப்புகள் இருந்த காலம். பயணச்சீட்டுகூட இல்லாமல் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏறி உட்கார்ந்தான். அங்கேயும் அவனது துர்க்குணம் அவனைத் துரத்தியது. அதைப்பற்றிப் பின்னர் பார்ப்போம்.

(தொடரும்)

No comments: