February 23, 2010

தேவாரம் - 2

 
சிவராத்திரிக்குத் தேவாரம் எழுதியபின்னர் மனமெங்கும் தேவாரம் நிறைந்துபோனது. குறிப்பாக இந்தப் பனுவல்களின் சுவை தித்தித்தபடியே இருக்கவே, இப்பதிகத்திலிருந்தே தொடரலாம் என்று தோன்றியதும் இறைச் சித்தமே.

திருச்சிற்றம்பலம்.

வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே


வெண்சங்கின் துண்டு ஒன்றைப் போன்ற மண்டையோட்டைக் கையில் ஏந்தியவன்; வெள்ளிக் கம்பியை முறுக்கினாற் போன்று (மார்பில்) விழுந்து ஒளிர்கின்ற முப்புரி நூலை உடையவன்; பரந்த சடாமுடியின் மேலே வெள்ளித் தகடு போன்ற பிறையை அணிந்தவன்; வெண்மையான எலும்பை அணிந்தவன்; வெண்மையான திருநீற்றைத் தனது பவளம்போலும் உடலின் மீது பூசியவன் வேதியனான சிவபெருமான்.

அருஞ்சொற்பொருள்: குழை - சங்கு; துணி - துண்டு; வெள்ளென்பு - வெள்ளெலும்பு.

உடலைத் துறந்துல(கு) ஏழுங் கடந்துலவாத துன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட(ல்) ஆகுங் கனகவண்ணப்
படலைச் சடைப் பரவைத் திரைக் கங்கைப் பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கட் டுணிநெஞ்சமே


பொன் வண்ணமாகிப் பரந்த சடையில் கடலையொத்து அலைவீசும் கங்கையையும், குளிர்ந்த நிலவுத் துண்டத்தையும் வைத்தவனும், மேனியெங்கும் சுடுகாட்டுச் சாம்பரைப் பூசியவனுமான கடவுளுக்கு (சிவபிரானுக்கு) அடிமையாகக் கட்டுண்டு கிட (எனது) நெஞ்சே! (அவ்வாறு கட்டுண்டு கிடப்பாயேயானால், அழிவதாகிய (இந்த உடலை நீத்து) ஏழு உலகங்களையும் கடந்து, வற்றாத துன்பத்தை இயல்பாகக் கொண்ட (உலகியல் வாழ்க்கை என்னும்) கடலைக் கடந்து உய்வு பெற்று சிவசாயுச்சியம் அடைதலுங் கூடும்.

பொருள் விளக்கம்: ஒரு விறகுக் கட்டு இருக்கிறது. அந்தக் கயிற்றை அவிழ்க்க வரவில்லை என்றால், மற்றொரு கயிற்றால் இறுகக் கட்டினால் முதலில் கட்டியிருந்த கயிறு தளரும். அப்போது அவிழ்ப்பது எளிதாகும். அதுபோல, சிவனிடம் மனதை அடிமையாக்கிக் கட்டுண்டால் உலகப் பற்றென்னும் கட்டு நீங்கி விடுதலை பெறலாம். எவன் கட்டுப்பட, கட்டுப்பாட்டுக்கு உட்பட மறுக்கிறானோ, அவனுக்கு மெய்யான விடுதலை கிடைப்பதில்லை.

அருஞ்சொற்பொருள்: பரவை - கடல்; திரை - அலை; உலவாத - வற்றாத.

முழுத்தழன் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்
தெழிற்பெருஞ் சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத்
தொழப்படுந்தேவர்தம்மால் தொழுவிக்குந்தன் றொண்டரையே


நெருப்பனைய தனது உடல்முழுவதும் வெண்ணீற்றைப் பூசியவனும், பொற்குன்றம்போலும் பேரொளி வீசுபவனுமாகிய எமது பிரானை இகழ்கின்றீரோ நீர்! எந்தத் தேவர்களெல்லாம் மனிதராலே தொழப்படுகின்றனரோ, அவர்களே வந்து, தன்னைத் தொழும் தனதடியாரைத் தொழும்படிச் செய்துவிடுவான் எமதிறைவன்.

திருச்சிற்றம்பலம்.

Posted by Picasa

2 comments:

Thirumal said...

// ஒரு விறகுக் கட்டு இருக்கிறது. அந்தக் கயிற்றை அவிழ்க்க வரவில்லை என்றால், மற்றொரு கயிற்றால் இறுகக் கட்டினால் முதலில் கட்டியிருந்த கயிறு தளரும். அப்போது அவிழ்ப்பது எளிதாகும். அதுபோல, சிவனிடம் மனதை அடிமையாக்கிக் கட்டுண்டால் உலகப் பற்றென்னும் கட்டு நீங்கி விடுதலை பெறலாம். //

அழகிய விளக்கம் ஐயா

Madhurabharati said...

இந்த உவமானம் காஞ்சி மகாப்பெரியவர் வேறோரிடத்தில் கூறியது. இங்கே எழுதிவிட்டேன். பெரியவர்கள் சொல்லாதது நாம் புதிதாகச் சொல்ல என்ன உள்ளது!

நன்றி.