February 12, 2010

சிவராத்திரிக்கு தேவாரம்

 

நெருப்பின் நிறம் கொண்டவனே! உன் முன்னாலேயே உன்னைப் புகழ்ந்து பேசினால் அது முகஸ்துதி ஆகிவிடும். (அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா?) இந்த மூன்று உலகங்களுக்கும் தந்தையும் தாயும் ஆனவன் நீயல்லவோ! உன்னை நினைத்தபடியேதான் என் உயிர் என்னை விட்டு அகலும். எம்பிரானே! உன்னை நான் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்: அப்படி என் உயிர் பிரிந்த பின்னர் நீ என்னை மறந்துவிடாதே!

முன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம் மூவுலகுக்
கன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே


(திருநாவுக்கரசர், தேவாரம்: 5210)

உன்னையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க (வேண்டும் என்று) நான் விரும்பினாலும், இறையவனே! நீ என்னை விடுவதில்லை. உன்னை நினைக்கத் தொடங்கிய உடனேயே (என் மனதை மாற்றி) மறக்கச் செய்து வேறொன்றன் பின்னால் செல்லும்படிச் செய்துவிடுகிறாய்.

(இதில் விந்தை என்ன தெரியுமா?) உன்னை எப்போதும் நான் மறந்திருந்தாலும், உனக்கு நான் இனியவனாகவே இருக்கிறேன். (இப்படி இருப்பதில்) எனக்குச் சமமானவர் வேறு யாரேனும் இருக்கிறார்களோ!

நின்னையெப் போது நினையவொட் டாய்நீ நினையப்புகில்
பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு வாழி யிறையவனே


(திருநாவுக்கரசர், தேவாரம்: 5211)

திருச்சிற்றம்பலம்.
Posted by Picasa

No comments: