March 04, 2010

நீதிநெறி விளக்கம் - சில செய்யுள்கள்

“ஆஹா! ஸ்கூலுக்குப் போறேனே, ஒரே ஜாலியா இருக்கே” என்று கூறியபடி பள்ளிக்குக் கிளம்பும் குழந்தையை நாம் இதுவரை பார்த்ததில்லை. சரியாக பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில்தான் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, இருமல், ஜுரம் என்று ஏதாவது குழந்தைக்கு வரும். அதிலும் பரிட்சை நாளன்றைக்குக் கேட்கவே வேண்டாம்.

படிக்கத் தொடங்கும் காலத்தில் அது மலைவாழையாக இனிப்பதில்லை. ஆனால், சிரமப்பட்டு, ராப்பகலாகக் கண்விழித்துப் பல ஆண்டுகள் கல்வி கற்று, அது ஒருவனின் நற்குணத்துக்கும் நல்வாழ்க்கைக்கும் ஆதாரமாக அமையும்போது, இன்பம் தருகிறது. மிகத் தாமதமாக. ஆனால் ஒருவன் தொடர்ந்து காம நுகர்ச்சியில் ஊன்றி இருந்தால், அவ்வாறு துய்க்கும் காலத்தில் அது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சி போலத் தோன்றுகிறது. ஒரு சமயம் அதுவும் கைத்துப் போகிறது. அவ்வாறு அலுத்துப் போனபின்னர், அவன் வீண்செய்த நேரமும், சக்தியும் புலப்படுகிறது. காமத்தைக் கட்டுக்குள் வைத்துப் பிறவற்றையும் செய்தவர் தன்னைவிட முன்னே எங்கோ சென்றுவிட்டார் என்பது புரிகிறது. கட்டற்ற காமம் உடல்நலக் கேடுகளைத் தருகிறது.

சுருக்கமாகச் சொன்னால், கல்வி தொடக்கத்தில் துன்பமாகவும், காலக்கிரமத்தில் இன்பமாகவும் இருக்கிறது. வரம்பற்ற காமமோ, முதலில் இன்பம் போலத் தோன்றி, பின்னாளில் மிகப் பெரிய துன்பத்தைத் தருகிறது.

தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும்
மடங்கொன்றறிவகற்றுங் கல்வி - நெடுங்காமம்
முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய்
பிற்பயக்கும் பீழை பெரிது.
(2)

உண்பது இன்பம், உறங்குவது இன்பம். கவிதை இன்பம், காட்சிகள் இன்பம். கற்பது இன்பம், கடவுளை எண்ணி இருப்பதும் இன்பம். மனவாசலைத் திறந்து வைத்தால் ஒருவன் பெறத்தக்க இன்பங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால், சில நிமிடங்களே அனுபவிப்பதான காமம் மனதை ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டால், பிற இன்பங்களை அந்த மனம் அடையாளம்கூடக் காண்பதில்லை. இறையுணர்வு என்கிற பேரின்பப் பெருங்கடலில் திளைத்திருப்பவர் சென்று உலக இன்பம் என்னும் சேற்றுக்குட்டையில் விழுவார்களோ?

சிற்றின்பஞ் சின்னீர தாயினு மஃதுற்றார்
மற்றின்பம் யாவையுங் கைவிடுப - முற்றுந்தாம்
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில்.
87

வெளியே பார்வைக்கு ஒருவன் அனைத்தையும் துறந்துவிட்டவன் போலத் தோன்றுகிறான். ஆனால் அவன் மனமோ ஒவ்வோர் உலகப் பொருளையும் நாடி அலைகிறது. மனத்தால் துறவில்லாத ஒருவன் அணிந்திருக்கும் தவப்போர்வை ஒரு சாதாரண சட்டையளவுக்குக் கூட அவனுக்குப் பாதுகாப்புத் தராது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களில், குறைந்த பட்சம் மெய்யையாவது சட்டை மூடிக் காக்கும். ஆனால் மனத்தளவில் வைராக்கியமில்லாத துறவுப் போர்வையோ அவனது உடலைக்கூடப் போர்த்தாது. (என்றால், பிற புலன்களைப்பற்றிப் பேசவே தேவையில்லை.)

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது.
92

ஒல்லியாக இருக்கும் ஒருவன் விழுந்தால் அவன் அடிபடாமல் தப்பித்துவிடலாம். ஆனால் பருத்த உடலுடையவன் விழுந்தால் அடிபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது. (இறகு போன்று) கனமற்ற பொருள் தடாலென்று விழாது. அப்படியே விழுந்தாலும் நொறுங்கிவிடாது. ஆனால் (பூசணிக்காய் போன்ற) கனத்த, பெரிய உடலைக் கொண்டதன் வீழ்ச்சி தடாலடியாக (ஆரவாரத்தோடு கூடியதாக) இருக்கும் என்பதோடு அந்த வீழ்ச்சி அதற்குப் பெரிய பாதிப்பையும் உண்டாக்கும். (பெரியவர்களாகக் கருதப்படுபவர்களின் வீழ்ச்சியும் பெரிதாகவே இருக்கும்.)

மெலியார் விழினு மொருவாற்றா னுய்ப
வலியார்மற் றொன்றானு முய்யார் - நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமா லுய்யா பிற.
95

நீதிநெறி விளக்கச் செய்யுள்களை இயற்றியவர் குமரகுருபர சுவாமிகள்.

அன்புடன்
மதுரபாரதி

No comments: