June 17, 2020

குரு நானக்ஜீ வாழ்க்கையில்: மருத்துவர் வந்தார்



வளர வளர நானக் தனிமையைத் தேடுவது அதிகமாயிற்று. பல நாட்கள் மவுனமாக தியானத்தில் அமர்ந்துவிடுவான். தனிமையை நாடும் மகனின் போக்கு பெற்றோருக்குக் கவலையைத் தந்தது. உலகைப் பற்றிய அக்கறை இன்மை ஒரு மனநோயாகத் தோன்றத் தொடங்கியது.

அந்த ஊரில் ஹரிதாஸ் என்று ஒரு மனநோய் மருத்துவர் இருந்தார். நானக்கைப் பரிசோதிக்க ஒருநாள் அவரை அழைத்து வந்தனர். ஹரிதாஸ் நானக்கின் நாடியைச் சோதிக்கும் பொருட்டாக அவனது கையைத் தொட்டார். "மருத்துவரே, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான் நானக். "நான் உன் நோய் இன்னதென்று அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன்" என்று விடை கூறினார்.

சிறுவன் சிரித்துவிட்டு கீழ்க்கண்ட ('சபத் கீர்த்தன்' என்று அழைக்கப்படும்) பாடலைக் கூறினான்:

எனக்காக ஒரு மருத்துவர் வந்திருக்கிறார்!
அவர் கையைப் பிடித்து நாடியை உணர்கிறார்.
நாடி என்ன சொல்லமுடியும்?
வலியோ நெஞ்சின் ஆழத்தில்.
மருத்துவரே, உங்களை நலமாக்கிக் கொள்ளுங்கள்,
உங்கள் நோயை முதலில் அறியுங்கள்,
அதன் பின்னர் பிறரது நோயைக் கண்டுபிடிக்கும் 
மருத்துவர் என்று உங்களை அழைத்துக் கொள்ளலாம்.
(மலர் கி வர், மொஹல்லா 1)

"ஓஹோ! எனக்கு உடல்நலமில்லை, மருந்து தேவை என்று நீ நினைக்கிறாயா?" என்று கேட்டார்.

"ஆமாம். உங்கள் ஆன்மாவில் வியாதி. நோயின் பெயர் அஹங்காரம். வாழ்வின் ஆதாரமான கடவுளிடமிருந்து உங்களைப் பிரிப்பது அதுதான்" என்று கூறினார் நானக்.

மேலும் நானக் கூறினார்:

ஒளிமிக்கவனின் திருநாமம் மனிதனிடம் இருந்தால்
அவனது உடல் பொன்னாகும், ஆன்மா தூய்மையடையும்;
நோய்களும் நோவும் அகன்றுவிடும்,
ஓ நானக், அவன் சத்தியத் திருநாமத்தாலே காப்பாற்றப்படுவான்
(மலர் கி வர், மொஹல்லா 1)

வெகுநேரம் நானக்கிடம் பேசிக்கொண்டிருந்த ஹரிதாஸ், தெய்வச் சிறுவனை வணங்கினார். அவனது பெற்றோர்களிடம், "கவலை வேண்டாம். உலகின் நோயை அகற்றும் பிள்ளையை நீங்கள் பெற்றெடுத்திருக்கிறீர்கள்" என்று கூறிவிட்டுப் போனார்.

மதுரபாரதி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘சீக்கிய மதம்’ நூலிலிருந்து...

No comments: