March 04, 2010
புத்தரின் வாழ்வில்
தவத்தின் எதிரிகள்
கௌதமரின் தவத்தைக் கலைக்க அடுத்து வந்தவன் மாரன். (மாரன்: மறலி-தொன்மையான வேதம் கூறும் அஹி, விருத்ரன், நமூசி, விடாப்பிடியன் என்போர் இவரேயாம் என்று கூறுகிறார்கள் ஆனந்த குமாரஸ்வாமி மற்றும் ஐ.பி. ஹார்னர் தமது 'கோதம புத்தர்' என்ற நூலில்.)
மாரன் காமத்துக்கு மட்டும் தேவனல்ல, மரணத்தை விளைவிப்பவனும் அவனே. மிக இனிமையான குரலில் கௌதமரிடம் அவன் "அன்பிற்கினியவனே! நீ வாழ வேண்டியவன். வாழ்வதன் மூலமே நீ அறத்தை அனுசரிக்க முடியும். வாழ்வில் எதைச் செய்தாலும் சிரமப்படாமல் செய்ய வேண்டும். எவ்வளவு இளைத்துவிட்டாய்! எதற்காக இத்தனை கஷ்டம். சன்னியாச வாழ்க்கையால் எதைச் சாதிக்கப் போகிறாய். மனம் என்பதோ அடங்காத ஒன்று. சொல்வதைக் கேள், சுகமாய் இரு" என்று கூறினான்.
"மாரனே, தீயவை அனைத்துக்கும் தோழனே! எனக்கு ஆசைகாட்டப் பார்க்கிறாயா? நான் எளியவனாக இருக்கலாம். ஆனால், என் குறிக்கோள் மிக உயர்வானது. மரணமே வாழ்வின் முடிவாக இருக்கும் பட்சத்தில் அதைத் தவிர்க்க நான் முயலமாட்டேன். என்னிடம் அஞ்சாமை, விவேகம், உறுதி ஆகியவை உள்ளன. யாராலும் என்னை நிறுத்த முடியாது. அசுரனே! உன்னை நான் வெற்றி காண்பேன்.
உனது பட்டாளத்தின் முதல் வரிசையில் ஆசைகள் என்ற போர்வீரர்களை அனுப்புகிறாய்.
அடுத்த வரிசை சோர்வும், தளர்வும்;
மூன்றாவது வரிசையில் பசி, தாகம்;
நான்காவதோ காமம்;
ஐந்தாவதாகச் சோம்பேறித்தனமும் உறக்கமும்;
சந்தேகங்கள் ஏழாமவை;
எட்டவதாகப் போலித்தனமும் கோபமும்;
இறுதியில் சுய தம்பட்டம், பேராசை, முகஸ்துதி, வீண்கர்வம், மற்றவர்களை மட்டம் தட்டுதல்.
இவையல்லவோ உன் படையின் அணிவகுப்பு? தேவர்களையும் மனிதர்களையும் இந்தப் படைகளால் நீ பணியவைத்திருக்கிறாய். நான் விவேகத்தால் இவற்றை அழிப்பேன். பிறகு நீ மாரனே, என்ன செய்வாய்?” என்று தீரத்துடன் மாரனுக்குச் சவால் விட்டார் கௌதமர்.
கௌதமரின் உறுதியான விடையால் மானபங்கமுற்ற மாரன் சிறிதே தளர்ச்சி அடைந்து விலகினான்.
மாரனின் இரண்டாவது முயற்சி
மாரன் தன் முதல் முயற்சியில் தோல்வி கண்டாலும் விடுவதாக இல்லை. அதிலும் உணவு உட்கொள்ளாத கௌதமர் கிட்டத்தட்ட ஒரு நடமாடும் எலும்புக்கூடாக ஆகிவிட்டதில் அவனுக்கு நம்பிக்கை துளிர்த்தது. நைரஞ்சன நதிக்கரையில் உயிர்போகும் நிலையில் உட்கார்ந்து தவம் செய்யும் கௌதமரிடம் வந்து மீண்டும் வசீகரமான குரலில், “கௌதமரே! வற்றி வாடிப்போய் விட்டீரே. சாவு மிக அருகில் உள்ளது. வாழ்வதில்தான் பயன் உண்டு. பிரம்மசரியத்தைக் கைக்கொண்டு, வேள்வி புரிந்தால் புண்ணியத்தை அடையலாம். இந்தச் சிரமமான முயற்சிகள் எதற்கு?” என்று கேட்டான்.
கௌதமர் அதற்கு விடையாக, “தீயவனே! சுயநலம் கருதியே நீ இங்கு வந்திருக்கிறாய். எனக்குப் புண்ணியம் வேண்டாம். யாருக்கு வேண்டுமோ அவர்களிடம் போய் உன் உபதேசத்தைச் செய்.
“சிரத்தை, தவம், தீவிரம், வைராக்கியம் ஆகியவை என்னிடம் உள்ளன. என்னிடம் நீ வாழ்வைப் பற்றிப் பேசத் துணியாதே.
“நதிகள்கூட வறண்டு போகின்றன. எனது குருதி ஏன் வறளக்கூடாது? ரத்தம் வறண்டால், கபமும் பித்தநீரும் வறண்டுவிடும். என் உடலின் மாமிசம் வற்றிப் போகப் போக, என் அறிவு தெளிவடைகிறது. எனது மனம் ஒருமுகப்படுகிறது. எனது விவேகம் உறுதியாகிறது. மிக அதிகத் துன்பத்துடன் வாழும்போது, எனக்குக் காமம் ஏற்படுவதில்லை. என் தூய்மையைப் பார்த்தாயா?” என்றார்.
மாரனின் அரசுக்கே இது பெரிய சவால். அவனது ஆட்சி அழிக்கப்படலாம். இதை அவன் எதிர்கொண்டாக வேண்டும். தன் துணைவர்களைக் கேட்டபோது கௌதமருடன் போரிடுவதே ஒரே வழி என்று கூறினர். நினைத்தாலே அச்சம் தரும் கொடூரமான தன் படையை அணிவகுத்து வந்தான் மாரன். அவனது படைவீரர்கள் நினைத்த உருவத்தை எடுக்கும் மாயையில் வல்லவர்கள். அவர்களின் கைகளிலும் கால்களிலும் ஆயிரக் கணக்கான சர்ப்பங்கள் சுற்றிக்கொண்டு சீறியவண்ணம் இருந்தன. இடிகள், விற்கள், வேல்கள், முட்சங்கிலிகள், தடிகள், வாட்கள் என்று நினைத்தும் பார்க்கமுடியாத ஆயுதங்களை அவர்கள் ஏந்தி வந்தனர். அவர்கள் கோரமான, கோபமான முகத்தை உடையவர்களாக இருந்தனர். அவர்களின் கனத்த, அகன்ற நாவு வாய்க்கு வெளியே தொங்கியது. யானைத் தந்தம் போலக் கோரைப் பற்கள் இருந்தன. தம் ஆயுதங்களால் தாக்கியது போக அவர்கள் மலைகளையும் மரங்களையும் கூட எடுத்து கௌதமரின் மேல் எறிந்தார்கள்.
கௌதமரின்மேல் எதை எறிந்தாலும் அது பூவாக மாறி அவர்மீது பொழிந்தது.
மாரன் தானே நெருப்பாக மாறி கௌதமர் மீது நெருப்பு மழை பொழிந்தான். பயனில்லை.
மாரன் தானே காற்றாக மாறி கௌதமர் மீது புயலாக வீசினான். பயனில்லை.
வன்முறையால் கௌதமரை வெல்லமுடியாது என்று புரிந்துகொண்டான் மாரன். உடனே அவன் அப்சரசுகளை அனுப்பினான். ஒப்பற்ற அழகும், கலைகளில் தேர்ச்சியும் கொண்ட அவர்கள், தங்களால் இயன்ற அளவு கௌதமரின் மனத்தைக் காம வயப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்தனர். தங்கள் முப்பத்திரண்டு வகை அங்க லாவண்யங்களை மயக்குறும் வண்ணம் வெளிப்படுத்தினர். தேனினும் இனிய குரலில் காதல்மொழி பேசினர். ஓர் ஆடவனைக் கிளர்ச்சியூட்டுவதற்கான ஆயிரம் காமக்கலைகளையும் அவர்கள் கௌதமரின்மேல் பிரயோகித்தனர்.
கௌதம பிட்சு எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருந்ததன் மூலம் மாரனின் ஆட்சியை நிர்மூலமாக்கினார்.
இதைப் பார்த்து தேவர்கள் வியந்து, “கௌதம பிட்சுவைப் பாருங்கள். அவர் பரிசுத்தமானவராகவும் கருணையால் நிரம்பியவராகவும் இருக்கிறார். உலகின் இருள் சூரியக் கதிரின் எதிரே நில்லாததுபோல அவரது விடாமுயற்சியால் அவர் சத்தியத்தை அடைவார். சத்தியம் அவருக்கு ஒளி தரும்” என்று கூறிப் போற்றினார்கள்.
- நான் எழுதிய புத்தம் சரணம் நூலிலிருந்து
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்லா விளக்கமா வாசிக்க தெளிவாக உள்ளது..... நன்றி
Great service
thanks
வெண்பாகளைத் தொகுக்கும் நோக்கில் உங்களுடைய பாக்களை என்னுடைய வலைப்பதிவில் பதிந்து உள்ளேன்.
அன்புடன்
திகழ்
Post a Comment