July 03, 2020

புத்தம் சரணம்: தலையின் விலை


இந்தியாவின் பெரும்பகுதியை வென்று தனது மகத சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துப் பேரரசன் என்று பெயர் பெற்றவன் அசோகன். ஆனால் போரினால் ஏற்படும் பேரழிவு மனதைமாற்ற, அவன் புத்த தர்மத்தைச் சரணடைந்ததோடு, அதனைப் பரப்ப இலங்கைக்குத் தன் மகளையும் மகனையும் அனுப்பினான். அவனைப்பற்றிய கீழ்க்கண்ட சம்பவம் நெஞ்சைத் தொடுவதாகும்:

புத்தபிட்சுக்களை எங்கு பார்த்தாலும் அவர்களது பாதத்தில் தலையை வைத்து வணங்குவதை மாமன்னன் அசோகன் வழக்கமாகக் கொண்டிருந்தான். யசன் என்ற அமைச்சன் ஒருவனுக்கு இது பிடிக்கவில்லை. அவனும் புத்த தர்மத்தைப் புதிதாகக் கைக்கொண்டவன்தான். ஒருநாள் அரசனிடம் 'மன்னர்மன்னா, நீங்கள் இந்தத் துறவியரின் பாதத்தில் உங்கள் தலையை வைத்து வணங்குவது உங்களுக்கு அழகல்ல. அதிலும் குறிப்பாகக் கீழ்ச்சாதியிலிருந்து வந்த துறவிகளுக்கு அத்தனை மரியாதை அவசியமுமில்லை' என்று துணிச்சலாகச் சொல்லிவிட்டான்.

அதைக் கேட்டுக்கொண்ட அசோகன் ஒன்று பேசவில்லை. சிலநாட்கள் கழித்துத் தன் அமைச்சர்களை ஒவ்வொருவராக அழைத்து ஆடு, மாடு, கோழி, ஒட்டகம், யானை என்று இவ்வாறு வெவ்வேறு பிராணிகளின் தலையை விற்பதானால் என்ன விலை கிடைக்கும் என்று அறிந்து வரச் சொன்னான். யசனை அழைத்து ஒரு மனிதத் தலையை விற்கவேண்டும், அதற்கு எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்துவரச் சொன்னான்.

எல்லோரும் அவரவர்களுக்கான பிராணித்தலைக்கான விலையை அறிந்துகொண்டு வந்து கூறினார்கள். யசன் வந்து 'மனிதத்தலையை வாங்கிக்கொள்ள யாரும் தயாரில்லை' என்று கூறினான்.

'எதனால்?'

'அது வெறுக்கத் தக்கது. அதனால் ஒரு பயனும் இல்லை.'

'ஒரு தலை மட்டும்தான் அப்படியா. இல்லை, எல்லா மனிதத் தலைகளுமேவா?'

'எல்லாத் தலைகளும் வெறுக்கத் தக்கவைதாம்'

'என்ன! என் போன்ற பேரரசனின் தலையையும் யாரும் விரும்புவதில்லையா?' என்று கேட்டான் அசோகன்.

பதில் சொல்ல அஞ்சிய யசன் மௌனமாக இருந்தான். 'பயப்படாதே யசா! சொல் உண்மையை' என்று அரசன் கட்டளையிட்டான்.

'ஆமாம் பேரரசே, உங்கள் தலையும் வெறுக்கத் தக்கதே' என்றான் யசன்.

'மெய்தான். வெறும் கர்வத்தாலும் மேட்டிமைத்தனத்தாலும் நீ பிட்சுக்களைப் பணிவதைத் தடுக்கப் பார்க்கிறாய். சும்மா கொடுத்தாலும் யாரும் வாங்கத் தயாராக இல்லாத இந்தத் தலையை அவர்களின் பாதத்தில் வைத்து நான் என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறேன். இதிலே தவறு என்ன வந்துவிட்டது?

'ஒரு துறவியின் ஜாதியைப் பார்க்கிறாயே அல்லது அவரது உயர்வை உன்னால் பார்க்க முடிகிறதா? திருமணத்திற்காக வேண்டுமானால் நீ ஜாதியைக் கேட்டறிந்துகொள்.

'புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? எதிலே ஒன்றுமே இல்லையோ அதிலும் நல்லதைக் காண்பவன் ஞானி என்று கூறியிருக்கிறார். நான் அவரது வார்த்தைகளைக் கடைப்பிடிக்க முயற்சிக்கையில், அதைத் தடுப்பது நீ என்மீது கொண்ட அன்பைக் காண்பிப்பதல்ல. எழுந்தும் விழுந்தும் வணங்கமுடியாமல் என் உடல் ஒரு சவைத்துத் துப்பிய கரும்புச் சக்கையைப்போல நிலத்தில் கிடக்கும்போது அதனால் என்ன பயன்?

'எவனால் சிந்திக்க இயலாதோ அவன் 'நான் மிக உயர்ந்தவன்' என்று கூறிக்கொள்கிறான். இளவரசனோ, பிச்சைக்காரனோ, சதையும் ரத்தமும் எலும்பும் தலையும் எல்லாம் ஒன்றே. ஆடைகளும் ஆபரணங்களுமே அவர்களைப் பிரித்துக் காட்டுவது. ஓர் அறிவாளி ஓர் உடலில் காணும் மெய்யான மேன்மையை இனம் கண்டு அதை வணங்கிப் பணிகிறான்' என்று தெளிவுபடுத்தினான் அசோகன்.

ஆதாரம்: மதுரபாரதி எழுதி கிழக்குப்பதிப்பகம் வெளியிட்ட புத்தம் சரணம்

No comments: