புத்த பிட்சுக்கள் எத்தனை மன உறுதியோடும், தத்துவத்தில் நம்பிக்கையோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் தமது தர்மத்தைப் பரப்பினர் என்பதற்குப் பூரணனின் கதை ஒரு சான்று.
ஒரு தனவந்தரின் சேவையில் தாசிப் பெண்ணொருத்தி இருந்தாள். அவள் தன் எஜமானரிடம் மிகுந்த விசுவாசத்தோடு இருந்து சேவை செய்ததால், அவளது வேண்டுகோளுக்கிணங்கி அந்த தனவந்தர் அவளைத் தன் படுக்கையறைக்குள் அனுமதித்தார். அவர்களுக்குப் பிறந்தவன்தான் பூரணன். அவன் தனது தந்தைவழிப் பாட்டனாரின் வீட்டில் தனது மூன்று அண்ணன்மாருடன் வளர்ந்து வந்தான்.
பூரணன் அறிவிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியதோடு வணிகத்தில் கணக்கின்றிச் சம்பாதித்தான். அவன் கப்பலில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தான். அவனது திறமை அவனை வணிகர் குழாத்தின் தலைவனாக உயர்த்தியது. ஒருமுறை அவன் வெளிநாட்டிற்குச் சென்று கப்பலில் திரும்பும்போது அதில் சிராவஸ்தியிலிருந்து புத்த தர்மத்தைச் சார்ந்த திரிபுஷன், பல்லிகன் இருவரும் அவனோடு அதில் பயணம் செய்தனர். புத்தர் ஞானம் பெற்றவுடன் முதன்முதலாக அவருக்கு அரிசிப் புட்டும் தேனும் கொண்டுபோய்க் கொடுத்தவர்கள் இவர்கள் என்பது நினைவிருக்கலாம்.
இவர்கள் இருவரும் கப்பலில் பயணம் செய்தாலும் வேளைதோறும் தமது தர்மத்தின் கடமைகளைத் தவறாது செய்வதைப் பார்த்தான் பூரணன். அவர்கள் காலையிலும் மாலையிலும் தர்மசூத்திரங்களை ஓதினர், தியானம் செய்தனர், மலர்கள் தூவி நறும்புகை எழுப்பினர். அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது. அவர்களிடம் போய்ப் பூரணன், 'சகோதரர்களே! நீங்கள் யாருடைய மாணாக்கர்கள்? நீங்கள் பின்பற்றும் அறம் யார் படிப்பித்தது?' என்று பலவகையாகக் கேட்டு புத்தரைப் பற்றி அறிந்துகொண்டான்.
கப்பலில் இருந்து இறங்கிச் சிராவஸ்திக்குப் போன கையோடு அவன் அனாதபிண்டிகரைப் பார்த்தான். அவர் பூரணனைச் சாக்கிய முனியிடம் அழைத்துச் சென்றார். சாக்கிய முனி பூரணனின் தயார்நிலையைப் புரிந்துகொண்டு அவனுக்குச் சன்னியாச தீட்சை அளித்தார். அப்போது புத்தர் கூறினார், 'எனக்கு ஒருவர் தரக்கூடிய மிகப் பெரும் பரிசு, அவர் புத்த தர்மத்தை மேற்கொள்வதுதான்.' தியாகமே புத்த தர்மத்தின் தலையாய ஒழுக்கம் என்பதையும் சுருக்கமாகப் பூரணனுக்கு வலியுறுத்தினார்.
அருகிலே சுரோணபரந்தா என்ற ஓரிடம் இருந்தது. அங்கே சற்றும் முன்னேறாத, கொடுமையான தன்மையைக் கொண்டிருந்த காட்டுவாசிகள் வசித்தனர். பூரணன் அங்கு சென்று அவர்களைப் பௌத்தர்களாக மாற்ற விரும்பினான்.
'சுரோணபரந்தாவின் வாசிகள் முரடர்கள், கொலைக்கு அஞ்சாதவர்கள், முன்கோபிகள், வசவுகளை அள்ளித் தெளிப்பவர்கள். பூரணா, உன்னைப் பார்த்தால் அவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு பழிப்பார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டார் புத்தர்.
'பகவ! சுரோணபரந்தாவின் வாசிகள் என் முகத்துக்கு நேராக என்னை ஏசினால், தீய வார்த்தைகளால் பழித்தால், நான் இப்படிக் கருதுவேன்: இந்த சுரோணபரந்தா மக்கள் எத்தனை நல்லவர்கள். இவர்கள் மிக மென்மையானவர்கள். என்னைக் கல்லாலோ கையாலோ அடிக்கவில்லையே'
'ஒருவேளை அவர்கள் உன்னைக் கல்லாலோ கையாலோ அடித்தால் என்ன நினைப்பாய் பூரணா?'
'இவர்கள் எத்தனை மென்மையானவர்கள், கல்லாலும் கையாலும்தான் அடிக்கிறார்கள். என்னைக் கம்பாலோ கத்தியாலோ தாக்கவில்லையே என்று நினைப்பேன்.'
'அவர்கள் உன்னைக் கம்பாலோ கத்தியாலோ தாக்கினால் என்ன நினைப்பாய் பூரணா?'
'இவர்கள் எத்தனை மென்மையானவர்கள், கம்பாலும் கத்தியாலும்தான் தாக்குகிறார்கள். என்னைக் கொன்றுவிட வில்லையே என்று நினைப்பேன்.'
'அவர்கள் உன்னைக் கொல்ல முயற்சித்தால் என்ன நினைப்பாய் பூரணா?'
'பகவ! இந்தச் சுரோணபரந்தாவின் மக்கள் எத்தனை நல்லவர்களும் மென்மையானவர்களும்! துன்பமயமான இந்த உடலை விட்டு எளிதில் நீங்க இவர்கள் உதவி செய்கிறார்களே என்று நினைப்பேன்.'
'நல்லது பூரணா! சுரோணபரந்தாவில் புத்த தர்மத்தைப் பிரசாரம் செய்ய நீயே தகுந்தவன். அதற்கான பொறுமையின் உச்சம் உனக்கே வாய்த்திருக்கிறது. விடுதலை பெற்றுவிட்ட நீ மற்றவர்களையும் விடுவி. மறுகரையை அடைந்துவிட்ட நீ மற்றவர்களையும் கரையேற்று' என்று கூறித் ததாகதர் அவனை ஆசிர்வதித்து அனுப்பிவைத்தார்.
ஆதாரம்: புத்தம் சரணம், கிழக்கு பதிப்பகம் வெளியீடு
1 comment:
Sairam!
Thithiksha pooranathvam is Pooranan. Good work.
Thirumalai.
Post a Comment