July 21, 2013

அருணாசல அற்புதம் 5: ரமணரின் சம்பாத்தியம்

ஒரு ஊரில் கோடீசுவரர் ஒருவர் இருந்தார். வயது எழுபதுக்கு மேல். அவருக்கு நான்கு மகன்கள். அவர் மிகுந்த பக்திமான். அந்த ஊருக்கு ஒரு மகான் வந்தார். தனவந்தர் அவரைத் தன் வீட்டுக்கு அமுது செய்விக்க அழைத்தார்.

மகானும் தனவந்தர் வீட்டுக்குச் சென்றார். வந்தவருக்குப் பாதபூஜை செய்தபின் சற்றே பேசிக்கொண்டிருந்தார்கள். மகான் நல்ல தபஸ்வி. எப்போதும் ‘அருணாசலம், அருணாசலம்!’ என்று இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தார். அவருக்குத் தம் முன்னே இருப்பவரைப் பற்றி எல்லாமும் அறியும் ஆற்றல் இருந்தது. ஆனாலும், மரியாதை நிமித்தமாகச் செல்வந்தரைப் பற்றிய விவரங்களை விசாரித்தார். முதலில், “அருணாசலம்! நீங்கள் மிகவும் இளமையாகத் தெரிகிறீர்களே, உங்களுக்கு வயது 60 இருக்குமா?” என்று கேட்டார். அதற்குச் செல்வந்தர் தனக்கு வயது ஐந்து என்று கூறினார்! சுற்றியிருந்த எல்லோரும் தனவந்தர், மகானிடமே பொய் சொல்கிறாரே என்று எண்ணி அதிர்ச்சி அடைந்தனர்.

“அருணாசலம்! இறைவன் உங்களுக்கு நிறையச் செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். உங்கள் சொத்தின் மதிப்பு பல கோடி இருக்குமே!” என்றார் மகான். “அப்படி எல்லாம் இல்லை ஐயா. நான் சேர்த்தது என்னமோ இரண்டு லட்சம்தான்” என்றார் செல்வந்தர். இன்னொரு பொய்யா என்று மருகினர் அருகிருந்தோர். இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் செல்வந்தரின் மனைவியும் ஒரு மகனும் வந்து மகானை நமஸ்கரித்தனர்.

“அருணாசலம்! நல்லது. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டார் மகான். “இறைவன் எனக்குக் கொடுத்திருப்பது ஒரே ஒரு பிள்ளைதான்” என்றார் செல்வந்தர். சுற்றியிருந்தவர்கள், ‘இந்த மனிதனுக்கு இவரிடம் இப்படிப் பொய் சொல்ல என்ன நெஞ்சுரம்!’ என்று எண்ணினர். கிளம்பிப் போய்விடலாமா என்றுகூட நினைத்தனர்.

அப்போது மகான் அவரை ஆசிர்வதித்து, “இங்கிருக்கும் எல்லோரும் நீங்கள் என்னிடம் அடுக்கடுக்காகப் பொய் சொல்வதாக எண்ணுகிறார்கள். ஏன், பேசாமல் எழுந்து போய்விடலாமா என்ற எண்ணம்கூட அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் உங்கள் விடைகள் மிகச் சரியானவையே. சற்றே அதை இவர்களுக்கு விளக்கிச் சொல்வோமா?” என்று கூறித் தொடர்ந்தார், “நான் வயதைக் கேட்டபோது ஐந்து என்று கூறினார். ஏன் என்று சொல்லுங்கள்.”

“சுவாமி! நான் உலகில் பிறந்து எழுபத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. உண்பது, உறங்குவது, சுயநலமான வேலைகள் செய்வது என்று அதில் 67 ஆண்டுகள் போய்விட்டன. பக்தி, சமூகத் தொண்டு, இறைப்பணி, பெரியோரைப் போற்றுதல், நல்லவை கேட்டல் என்று இவற்றுக்காகச் செலவழித்தது ஐந்து ஆண்டுகள் மட்டுமே. அதுதான் என் உண்மையான வயது என்று நினைக்கிறேன்” என்றார் செல்வந்தர் மிகப் பணிவுடன்.

“அருணாசலம், அருணாசலம்! உங்கள் சொத்து விவரமும் சொல்லிவிடுங்கள்” என்றார் மகான். “ஐயா, நான் பொன்னும், நிலபுலன்களும் என்று எவ்வளவு குவித்திருக்கிறேன் என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது. எல்லாம் இறைவன் கொடுத்த சொத்துத்தான். ஆனால், ஏழைகள் பசி தீர்க்கவும், உலக நன்மைக்கும், தெய்வப் பணிக்கும் நான் செலவிட்டது இரண்டு லட்சம்தான். அதுதான் நான் இந்த உலகைவிட்டு நீங்கும்போது என்னோடு வரப்போகும் சொத்து. அதையே எனது சொத்து என்று குறிப்பிட்டேன்” என்றார் செல்வந்தர்.

“அருணாசலம்! மிக உண்மை. உங்கள் ஒரே மகன் பற்றியும் கூறிவிடுங்கள்.”

“எனக்குப் பிறந்தவர்கள் நான்கு மகன்கள். ஆனால் நான் சொன்னதைக் கேட்பவன். பெரியோரை மதிப்பவன், தீய வழிக்குப் போகாதவன் இதோ இங்கிருக்கும் ஒருவன்தான். அதனால்தான் எனக்கிருப்பது ஒரு பிள்ளை என்று கூறினேன்” என்றார் செல்வந்தர்.

சேஷாத்ரி சுவாமிகள் ரமணரின் ‘சம்பாத்தியம்’ குறித்துக் கூறியதும் இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய முதலியார் என்று ஒரு ரமண அன்பர் இருந்தார். அவர் தனது வருவாயிலிருந்து ஏராளமாக அன்னதானம் செய்தார். நிறையச் சொத்துக்கள் கொண்டவர். ஆனால் மேலும் மேலும் சம்பாதிப்பதில் காட்டிய தீவிர ஆர்வத்தில் ஒரு சிறிதளவுகூட அவருக்கு ஆன்மீக முயற்சிகளில் இல்லை. சேஷாத்ரி சுவாமிகள் அவரிடம் ஜபம், தியானம் போன்ற ஆன்ம சாதனைகளின் அவசியத்தைப் பலமுறை வற்புறுத்தினார். அவர் ஈடுபாடு காட்டவே இல்லை. சேஷாத்ரி சுவாமிகள் அவரிடம் ஒருமுறை “முதலியார்வாள், இதைக் கேளும். என் இளைய சகோதரனின் வருமானம் பத்தாயிரம் ரூபாய். எனது வருமானமோ ஆயிரம் ரூபாய். நீர் நூறு ரூபாய் சம்பாத்தியமாவது தேடக்கூடாதா?” என்று கேட்டார்.

சுவாமிகள் தனது ‘இளைய சகோதரன்’ என்றது ரமணரை! ‘சம்பாத்தியம்’ என்றது ஆன்ம சக்தியை. தாமே ஞானியாக இருந்தபோதும் அவர் அடக்கத்தோடு தனது சம்பாத்தியத்தைக் குறைத்துக் கூறிக்கொண்டதையும் பார்க்க வேண்டும்.

நாமும் பொழுது விடிந்து பொழுதுபோனால் சம்பாதிக்கவே ஓடுகிறோம், தேடுகிறோம், அலைகிறோம், உடலும் மனமும் களைத்துப் போகிறோம். போகும் வழியில் ஒரு கோவிலைப் பார்த்தால் நெஞ்சைத் தொட்டுக் கொள்கிறோம், சிலர் தம் விரல்களை முத்தமிட்டுக் கொள்வதும் உண்டு! ஆனால் ஐந்து நிமிடமாவது கண்களை மூடி, நம்மையும் இந்தப் பிரபஞ்சத்தையும் படைத்த அந்த எல்லையற்ற பேரருளை நம் மனதுக்குள்ளே எண்ணி, உணர்ந்து, பேரானந்தம் அடைய நமக்கு நேரமில்லை என்கிறோம்.

முதலில் கூறிய செல்வந்தரைப் போல, ஆன்ம பலம் சேர்க்கச் செலவழிக்காத நேரமும், நல்லதற்குச் செலவழிக்காத பணமும், நன்முறையில் வளராத சந்ததியும் நமக்குப் பயன்படாதவை என்பது மட்டுமல்ல. சமுதாயத்துக்கும் கேடுதான். இதைப் புரியவைக்கத்தான் பெரியோர்கள் உலகில் தோன்றி, ‘இப்படி வாழ்வது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம்’ என்று முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்கள்.

“நூறு ரூபாய் சம்பாத்தியமாவது தேடக்கூடாதா?” என்று சேஷாத்ரி சுவாமிகள் கேட்டது நம்மை நோக்கியும்தான்!

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

No comments: