January 09, 2008

திருப்பள்ளியெழுச்சி - 1

திருச்சிற்றம்பலம்

பகுத்தறிவும் மனவுறுதியும்

திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் சேர்ந்து சைவத்தின் ஒன்பதாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருப்பள்ளியெழுச்சியில் வரும் திருப்பெருந்துறை என்பது ஆவுடையார் கோவிலே ஆகும். இங்கேதான் மாணிக்கவாசகர் சிவபெருமானிடமிருந்து உபதேசம் பெற்றது.

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!


'என் வாழ்வின் மூலாதாரப் பொருளான உன்னைப் போற்றுகிறேன். இதோ விடிந்துவிட்டது உன்னுடைய பாதங்கள் எப்படி தாமரைகளைப் போல இருக்கின்றனவோ, அவற்றையே ஒத்திருக்கும் இரண்டு தாமரைப் பூக்களால் உன் பாதங்களைப் பூஜிக்கிறேன்.

'அழகிய உன் திருமுகத்தில் மலர்கின்ற புன்னகையை எமது மனதில் பதித்துக் கொண்டோ ம். உனது திருவடியை வணங்குகிறோம்.

'கமல மலர்கள் மலரும் வளமான குளிர்ந்த நிலங்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவனே! காளைக்கொடி உடையவனே, என்னையும் உடையவனே, எம்பெருமானே! பள்ளியெழுவாயாக.'

சிறப்புப்பொருள்: இறைவன் உறங்குவது என்பது ஏது? ஆனாலும் அவன்மீது கொண்ட அன்பின் மிகுதியால் நாம் அவனுக்கு நிவேதனம் படைக்கிறோம்; பூக்களாலும், நகைகளாலும் அணிசெய்து பார்க்கிறோம்; இரவில் பள்ளியறையில் சேர்க்கிறோம், காலையில் துயிலெழுப்புகிறோம். இவற்றாலெல்லாம் மகிழ்வது இறைவனல்ல, நாம்தான். சிறு பெண்குழந்தைக்குத் தலை பின்னி, தாழம்பூ தைத்து, நெற்றிச் சூட்டி அணிவித்து, பட்டுப்பாவாடை சட்டை போட்டு, திருஷ்டிப் பொட்டு வைத்து அலங்கரிப்பதால் அந்தக் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தாயாருக்கு அதிக ஆனந்தம் ஏற்படுகிறதல்லவா, அதுபோல.

இத்தனை முயற்சிகளும் இறைவனைக் கண்விழிக்கச் செய்வதற்காக அல்ல. நமக்குள்ளே உறைந்திருக்கும் பரமாத்ம தத்துவத்தை விழிக்கச் செய்வதற்கு. சடங்குகளால் நிரம்பிய பூஜையிலிருந்து சாதகன் யோகம், தியானம், சமாதி, முக்தி என்னும் நிலைகளை எய்தவேண்டும்.

இந்தப் பாடலில் தாமரை முக்கிய இடம் வகிக்கிறது. இறைவனின் திருவடித் தாமரைகளை ஒத்திருக்கும் இரண்டு தாமரைகளால் முதலில் பூஜை நடக்கிறது. மீண்டும், திருப்பெருந்துறையின் செழிப்பான வயல்களிலும் அதே தாமரை காணப்படுகின்றது. அவையும் 'சேற்றிதழ்த் தாமரை'யாம். அவை இருப்பதென்னவோ சேற்றில்தான். ஆனால், அவற்றின் இதழ்களில் சேறு படிவதில்லை.

உலக வாழ்க்கையைப் பற்றிய தீவிர அலசலின் காரணமாக அதன் இயல்பை உணர்ந்து கொண்டவனுக்கு விவேகம் வருகிறது. விவேகம் என்பதுதான் உண்மையில் பகுத்தறிவு. 'இது சரி, இது தவறு; இதனால் மனிதன் உயர்கிறான், இது என்னைப் பாவக் குழியில் தள்ளுகிறது' என்று சரியாகப் பகுத்து அறியும் அறிவு. பகுத்தறிவின் காரணமாக 'வைராக்கியம்' வருகிறது. அதாவது, 'நான் என் ஆத்மா, குடும்பம், சமூகம் இவற்றுக்குச் செய்யும் நன்மையே புண்ணியம். இவற்றின் அழிவுக்கும் துன்பத்துக்கும் வழிகோலுவதே பாவம். எனவே எனக்கும் பிறருக்கு நீடித்த இன்பமும் உயர்வும் தரும் சொற்களையே பேசுவேன், செயல்களையே செய்வேன்' என்னும் மன உறுதி வருகிறது. இவ்வாறு தவறு தவிர்க்கும், நன்மை பெருக்கும் அந்த மன உறுதியே வைராக்கியம்.

இவ்வாறு முதலில் விவேகமாகிய பகுத்தறிவும், வைராக்கியமாகிய நன்மன உறுதியும் வந்துவிட்டால் அவன் தன்னைச் சுற்றியிருக்கும் சேற்றில் சிக்கித் தவிக்க மாட்டான். அதிலிருந்தே போஷாக்கை எடுத்துக்கொண்டு, தான் உயர்ந்து, ஆன்மீகத்தில் மலர்ந்து, மணம் வீசி, அந்தச் சேற்றுக்கும் மணம் சேர்ப்பான். இதுதான் 'சேற்றிதழ்த் தாமரை' நமக்குத் தரும் பாடம்.

(அருஞ்சொற்பொருள்: துணைமலர் - இரண்டு மலர்கள்; ஏற்றுயர் கொடி -> ஏறு + உயர் + கொடி - காளையைச் சின்னமாகக் கொண்ட உயர்ந்த கொடி)

இன்னும் வரும்...

No comments: