December 25, 2007

திருவெம்பாவை - 6

திருச்சிற்றம்பலம்

நான் வந்து எழுப்புகிறேன் என்றவளே, எங்கே போனாய்?

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்


'பெண்மானே! நேற்றைக்கு நீ என்ன சொன்னாய்? உங்களை நான் முதலில் வந்து எழுப்புவேன் என்று சொன்னாய் அல்லவா? இப்போது நீ போன இடம் தெரியவில்லையே. உனக்கு வெட்கமாக இல்லையா!

தேவருலகமும் மண்ணுலகமும் பிற உலகங்களில் உள்ளோரும் அறிவதற்கு அரியவன் சிவபெருமான். அவன் தானே வந்து நம்மைக் காத்து அருள்கின்றான். அவனது பாதத்தை வானுலகம் கழலாகச் சூழ்ந்துள்ளது. அப்பேர்ப்பட்ட பாதங்களைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கும் நீ பதில் பேசமாட்டேன் என்கிறாயே. நாங்கள் பாடுவதைக் கேட்டு உனக்கு உடலெல்லாம் உருகிப் போகவில்லையோ?

நமக்கும் பிறருக்கும் தலைவனான சிவனைப் பாட வாராயோ!'

சிறப்புக் குறிப்பு: 'நென்னலே' என்ற சொல் நேற்று என்று பொருள்படும். திருக்குறளில் இச்சொல் 'நெருநல்' என்று பயின்று வருகிறது: 'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு' என்று நிலையாமையைச் சொல்கிறது அந்தக் குறள். 'நென்னே' என்று கன்னடத்திலும் 'இன்னலே' என்று மலையாளத்திலும் இச்சொல் காணப்படுகிறது.

வந்த தோழிமார் 'ஊனே உருகாய்' என்கின்றனர். பக்தியினால் உடலும் உள்ளமும் உருகிப் போகும். 'ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்த செல்வமே, சிவபெருமானே' என்று திருவாசகத்தின் (பிடித்த பத்து) வேறோர் இடத்தில் மாணிக்கவாசகர் கூறுகிறார். உணவும் உறக்கமுமே கதியாக இருப்பவர்களுக்கு உள்ளொளி வருதல் அரிது. அதனால் பாவை நோன்புக் காலத்தில் கொழுப்புச் சத்து மிகுந்த 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம்' என்கிறாள் கோதை நாச்சியார். வள்ளலாரும் 'பசித்திரு, தனித்திரு, விழித்திரு' என்று கூறினார்.

தவசியரின் இயல்பு பற்றிக் கூறவந்த குமர குருபரர்:

துயிற்சுவையும் தூநல்லார் தோள்சுவையும் எல்லாம்
அயிற்சுவையின் ஆகுவ என்றெண்ணி - அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பவர் கொள்பபோல் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பினவர்.

....(நீதிநெறி விளக்கம்-85)

(உறங்கும் சுகமும், மகளிர் கலவிச் சுகமும் உணவைச் சுவைத்து உண்பதால் வருபவை. இதை உணர்ந்ததனால், பிற மனிதரைப் போல வாழ்க்கையில் இடிபட விரும்பாத வீரமுடைய தவசியர் பைத்தியக்காரர்களைப் போல (உணவில் கவனம் செலுத்தாமல்) உணவு உண்ணுவர்.)

இன்னும் வரும்...

No comments: