(இன்று சுவாமி விவேகானந்தர் நினைவுநாள்)
அது 1894ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. சுவாமி விவேகானந்தர் சர்வமத மஹாசபையில் பேசுவதற்காக சிகாகோ சென்றிருந்த சமயம். அவருடைய பேச்சில் மயங்கிய அமெரிக்கப் பத்திரிகைகள் அவரைச் ‘சூறாவளித் துறவி’ என்றெல்லாம் வர்ணித்தன. அவர் பேசிய இடத்திலெல்லாம் மக்கள் குவிந்தனர்.
அதே சமயத்தில் அங்கிருந்தவர் ஜான் டி. ராக்ஃபெல்லர். பெட்ரோலியம் எண்ணெயில் பெரும் சொத்துக் குவித்தவர். எச்சில் கையால் காக்காய் ஓட்டாத தனவந்தர். அவருடைய நண்பர் வீட்டில்தான் விவேகானந்தர் தங்கியிருந்தார். நண்பரும் பலமுறை அவருக்கு விவேகானந்தரின் பெருமைகளைச் சொல்லி, தன் வீட்டில் வந்து சந்திக்க அழைத்தார். ஆனால் பணம் குவிப்பதைத் தவிர வேறெதிலும் ஆர்வமில்லாத ராக்ஃபெல்லர் அசட்டையாகவே இருந்தார். பணம் சேர்ந்தபோதிலும் ராக்ஃபெல்லரின் உடல்நலம் குன்றத் தொடங்கியிருந்த சமயம் அது.
ஒருநாள் ராக்ஃபெல்லர் அந்த வீட்டைத் தாண்டிப் போகும்போது, தன்னையறியாத ஏதோவொரு உந்துதலில் வீட்டுக்குள் சென்றார். அங்கே பட்லர் அவரை வரவேற்று உட்காரச் சொன்னார். விவேகானந்தர் உள்ளே வாசிப்பறையில் இருந்தார். பட்லர் கூறிய இடத்தில் உட்காராமல், அறிவித்த பின்னர்தான் உள்ளே செல்லவேண்டுமென்ற மரபை மீறி, ராக்ஃபெல்லர் நேராக விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.
தலையைக் கவிழ்ந்து எதையோ படித்துக்கொண்டிருந்தார் விவேகானந்தர். நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. ராக்ஃபெல்லரை யாரும் இப்படிச் சாமான்யரைப்போல நடத்தியதில்லை. அதில் அவருக்கு அதிர்ச்சிதான். அதைவிடப் பெரிய அதிர்ச்சி அடுத்து வரப்போவதை அவர் அறியவில்லை.
சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்தார் சுவாமிஜி. அதற்குமுன் அவர் ராக்ஃபெல்லரைப் பார்த்ததில்லை. ராக்ஃபெல்லருக்கு மட்டுமே தெரிந்த, அவரைத் தவிர வேறெவருக்குமே தெரிந்திராத சில ரகசியங்களை, அச்சங்களை விவேகானந்தர் அவரிடம் கூறினார். அதைக் கேட்ட ராக்ஃபெல்லருக்கு அதிர்ச்சியாக, அமானுஷ்யமாக இருந்தது. “உங்களுக்கு இவை எப்படித் தெரியும்? யார் கூறினார்கள்?” என்று கேட்டார் ராக்ஃபெல்லர்.
ஒரு புன்னகையோடு, உளறுகிற குழந்தை ஒன்றைப் பார்ப்பதுபோல அவரைப் பார்த்த சுவாமிஜி, “போனது போகட்டும். மகிழ்ச்சியாக இருங்கள். கவலையில் முழுகியிருக்க வேண்டாம்” என்று கூறினார். பின்னர் சுவாமி ஒரு கேள்வி கேட்டார், “உங்களிடம் மற்றவர்களைப் போல் நூறு மடங்கு செல்வம் குவியக் காரணம் நீங்கள் மற்றவர்களைவிட நூறு மடங்கு புத்திசாலி என்பதாலா?”.
யாரும் அவரிடம் இப்படிப் பேசத் துணிந்ததில்லை. ராக்ஃபெல்லர் கூறினார், “நிச்சயம், நான் 100 மடங்கு அதிக புத்திசாலிதான்!”
சுவாமிஜி பேசிப்பேசி அவரிடம் இருக்கும் மிகையான செல்வம் கடவுளால், பிறருக்கு நன்மை செய்யும் பொருட்டாக அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதாக விளக்கினார். “யோசித்துப் பாருங்கள், இந்தச் செல்வத்தை ஏன் பிறரது நன்மைக்குப் பயன்படுத்தக் கூடாது?” என்று கேட்டார்.
ராக்ஃபெல்லருக்கு இந்தக் கேள்வியே கேலிக்குரியதாகத் தோன்றியது. “நான் இந்தச் செல்வத்தைச் சேர்க்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். இதைத் தூக்கிக்கொடுக்கும் எண்ணம் எனக்கில்லை” என்று மிகவும் பணிவோடு கூறிவிட்டு ராக்ஃபெல்லர் போய்விட்டார்.
மூன்று வாரம் போனது.
விவேகானந்தரைப் பார்க்க மீண்டும் வந்தார் ராக்ஃபெல்லர். விவேகானந்தர் முன் ஏதோவொரு காகிதத்தை வீசி எறிந்தார். அதில் ஒரு தொகையை அவர் ஒரு நற்காரியத்துக்குக் கொடுத்திருப்பதாக இருந்தது.
அவர் சுவாமிஜியிடம் “இதை நான் செய்திருக்கிறேன், இப்போது சந்தோஷமா? எனக்கு நன்றி சொல்லுங்கள்” என்றார்.
விவேகானந்தர் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை, சிறிது நேரத்துக்குப் பின் கூறினார், “நீங்களல்லவா எனக்கு நன்றி சொல்லவேண்டும்?”
அப்போதைக்கு ராக்ஃபெல்லர் அங்கிருந்து போய்விட்டார். ஆனால், ஒரு மகானின் தொடர்பு யாரையும் அடியோடு மாற்றிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
1913ஆம் ஆண்டில் அவர் மிகமிகப் பெரிய நிதி ஆதாரத்துடன் சமுதாயத்திற்கு பெரும் நற்பணிகளைச் செய்த ராக்ஃபெல்லர் அறக்கட்டளையைத் தொடங்கினார். இன்றைக்கும் அவருடைய பெயர் அமெரிக்காவில் நினைக்கப்படுகிறது.
(இதையொட்டி பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா ஒரு முக்கியமான தகவலைக் கூறினார். அது பின்னால்.)